அதானியே நமோ நமஹா!

போதைப் பொருட்கள் கடத்திவரும்போது மாட்டிக்கொண்ட எடுபிடிகள் சிலரைக் கைதுசெய்துவிட்டு, அதானியைக் காப்பாற்றுவதற்கு ‘விசாரணை’ நாடகமாடுகிறார்கள்.

டந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில், தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினரும், சி.பி.எம். கட்சியைச் சேர்ந்தவருமான சு.வெங்கடேசன், போதைப் பொருள் கடத்தல்கள் குறித்து உரையாற்றினார். அப்போது, அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் வெளிநாடுகளிலிருந்து கடத்தப்படும் ஹெராயின் போன்ற விலையுயர்ந்த போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதைப் பற்றி பேசினார். அவர் பேசிக்கொண்டிருக்கும்போதே, மைக் ஆஃப் செய்யப்பட்டது. இவ்வாறு அவரை அவமானப்படுத்தியது குறித்து, எந்த தேசிய ஊடகங்களும் கண்டனம் தெரிவிக்கவில்லை.

நாடாளுமன்ற விவாதங்களின்போது, கொடுக்கப்பட்ட நேர வரம்பு முடிந்தால் வழமையாக எல்லோருக்கும் நேர்வதுதான் சு.வெங்கடேசனுக்கும் நடந்திருக்கிறது என்று யாராவது நினைத்தால் அது தவறு; அதானியைப் பற்றி பேசினார் என்பதற்காகவே அவரது மைக் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மேலும் அதானியைப் பற்றி பேசியதற்காக மைக்கை ஆஃப் செய்து பேச்சுரிமையைப் பறிப்பது நாடாளுமன்றத்தில் முதன்முறையாக நடப்பதுமல்ல.

கடந்த ஆண்டு நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் வி.சி.க. நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன், அதானியின் முந்த்ரா துறைமுகத்தில் நடைபெற்ற போதைப் பொருட்கள் கடத்தல் பற்றி விரிவாகவே அம்பலப்படுத்தினார். “முந்த்ரா துறைமுகத்தைப் போன்று நாட்டின் முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களைத் தனியார்மயப்படுத்துவது இதுபோன்ற தேசவிரோதச் செயல்களுக்கு வழிவகுக்கிறது” என்றும் குற்றஞ்சாட்டினார்.


படிக்க : தாராவி மறுசீரமைப்பு திட்டம்: அதானிக்கு டெண்டர் – உழைக்கும் மக்களை நகரைவிட்டு விரட்ட எத்தனிக்கும் மகாராஷ்டிர அரசு!


அவரது கேள்விக்கு கோபமாக பதிலளித்த நிர்மலா சீதாராமன், “அந்தத் துறைமுகத்தின் பெயர் முந்த்ரா துறைமுகம்தான், தங்களுக்குப் பிடிக்காத தொழிலதிபர்களது பெயரைப் போட்டுக் குறிப்பிடுவது நியாயமில்லை” என்றார்; மேலும் “தனியார்மயத்திற்கும் போதைப் பொருள் கடத்தலுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என்றும், “டெல்லி விமானநிலையத்தில் கூட போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டன; அது பொதுத்துறைதானே” என்றும் அதானிக்கு வக்காளத்து வாங்கிப் பேசினார்.

தான் ஒரு ஆளும்கட்சி அமைச்சர் என்பதையும் மறந்து, ‘பொதுத்துறை நிறுவனங்களில்கூடத்தான் போதைப் பொருட்கள் பிடிபடுகிறது’ என்று பேசியதெல்லாம் கேவலத்தினும் கேவலம்!

நிர்மலா சீதாராமனின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளிக்க முயன்ற திருமாவளவனுக்கு, பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை; இரண்டு, மூன்று நிமிடங்கள் அவர் பேசுவதற்குப் போராடியும், அனுமதி மறுப்பதைக் கூடத் தெரிவிக்காத அவைத்தலைவர், கத்தவைத்து இழிவுபடுத்தினார்.

அதானியின் துறைமுகத்தில் நடந்துள்ள போதைக் கடத்தல் என்பது, ஆளும் கட்சிகளுக்கு எதிராக எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்ற வழக்கமான லாவணிப் பிரச்சினை அல்ல; அப்பட்டமான தேசவிரோதச் செயலாகும்.

2021 செப்டம்பரில் 3,000 கிலோ ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் கைப்பற்றப்பட்டது. இவை, இஸ்லாமிய பயங்கரவாதிகளான தாலிபான்கள் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தானில் இருந்து கடத்திவரப்பட்டவை; மேலும் ஜூன் மாதம் 25,000 கிலோ ஹெராயின் முந்த்ரா துறைமுகத்தில் இருந்து கடத்தப்பட்டதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியது.; கடந்த ஜூலையிலும் 350 கோடி மதிப்புள்ள, 70 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டின் மிகப்பெரிய துறைமுகம் தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தலுக்குப் பயன்படுகிறது; இதுபற்றி கேள்விகேட்டால், ‘என்.ஐ.ஏ விசாரித்துக் கொண்டிருக்கிறது’ என்று பதில் சொல்வதோடு நிறுத்திக் கொள்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன். வழக்கு பதிவுசெய்யப்பட்ட பிறகும், கடத்தல்கள் தொடர்ந்து நடைபெறுவதைப் பார்க்கும்போது, என்.ஐ.ஏ விசாரணை என்பதெல்லாம் வெறும் கண் துடைப்போ என்று கருதவேண்டியிருக்கிறது. போதைப் பொருட்கள் கடத்திவரும்போது மாட்டிக்கொண்ட எடுபிடிகள் சிலரைக் கைதுசெய்துவிட்டு, அதானியைக் காப்பாற்றுவதற்கு ‘விசாரணை’ நாடகமாடுகிறார்கள்.

ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளின் மாஃபியா கும்பல்களால் ஹெராயின் போன்ற போதைப் பொருட்கள் குஜராத்திற்கு கடத்திவரப்பட்டு, அங்கிருந்து பஞ்சாப் கொண்டு செல்லப்படுவதாகவும் அங்கிருந்து நாடுமுழுவதும் விநியோகிக்கப்படுவதாகவும் கூறுகின்றனர் பயங்கரவாத எதிர்ப்புப் படை (Anti-terror Force) அதிகாரிகள்.

நமது நாட்டில், 2018இல் 2.30 கோடியாக இருந்த தடைசெய்யப்பட்ட போதை மருந்துகளைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, தற்போது பலமடங்கு அதிகரித்துள்ளது. போதை மருந்துகளின் பயன்பாடு சர்வதேச சராசரியைவிட இந்தியாவில் மூன்றுமடங்கு அதிகமாக உள்ளது. போதைப் பொருட்களால் சீரழிக்கப்படுபவர்களில் கணிசமானவர்கள் இளைஞர்களாவர். மிசோரம், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் போதைப் பொருட்களின் நுகர்வு மிக அதிகம்.

இம்மாநிலங்களில் போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான முயற்சிகள் எடுத்துவருவதாக ஒரு தோற்றத்தை உருவாக்கியது, அங்கு பா.ஜ.க. செல்வாக்கு பெறுவதற்கான பல்வேறு காரணங்களில் ஒன்றாகும். பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் பி.எஸ்.எஃப் படை விரிவாக்க நடவடிக்கைகளுக்கு பா.ஜ.க. கூறும் காரணம், போதைப் பொருள் கடத்தல்தான்.


படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !


இவையெல்லாம் வெளிவேடம் என்பதைத் திரைகிழித்துக் காட்டியிருக்கிறது, முந்த்ரா துறைமுகம் விவகாரத்தில் பா.ஜ.க.வின் செயல்பாடு. இன்னொருபக்கம், இந்திய எல்லையை ஒட்டி அமைந்திருக்கும் முந்த்ரா துறைமுகம், இந்தியாவின் மிகப்பெரிய சரக்குப் பெட்டகத் துறைமுகமாகும். அங்கு தொடர்ச்சியாக போதைப் பொருட்கள் பிடிபடுவது ஏதேச்சையானதாகப் படவில்லை; அதானிக்கும் சர்வதேச போதைப்பொருள் மாஃபியா கும்பல்களுக்கும் கள்ளக்கூட்டு உள்ளதா என்ற ஐயமும் எழுகிறது; எதிர்வரும் நாட்கள் இதற்கு விடைதரலாம்!

‘தேசப்பாதுகாப்பு’, ‘அந்நிய அச்சுறுத்தல்’ போன்ற பிரச்சாரங்கள் எல்லாம் பாசிஸ்டுகள் தங்கள் நோக்கங்களை ஈடேற்றிக் கொள்வதற்காக கையாளும் தந்திரமே. அவர்களுக்கு தேவைப்படும்போது ‘சீன அபாயம்’ முன்னுக்கு வரும், தேவைப்படாதபோது பேசமாட்டார்கள். இந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில், பெரும்பாலான எதிர்கட்சிகள் ‘சீன ஆக்கிரமிப்பு’ குறித்து பேசவேண்டும் என்று குரலெழுப்பியபோது, பா.ஜ.க. தலைவர்கள் அதைச் சீண்டக்கூட இல்லை. “தேசமாவது, வெங்காயமாவது”.. காவிக் கும்பலுக்கு ராமனே இந்துராஷ்டிரத்தைக் கட்டியமைப்பதற்கான அரசியல் கருவிதான்.

அவர்கள் ஆத்மார்த்தமாக வணங்கும் ஒரே கலியுக நாயகன் அதானி மட்டுமே; அப்படியிருக்க, அதானியை போதைப்பொருள் மாஃபியா என்று சொன்னால், பொறுத்துக் கொள்ளமுடியுமா? அதனால்தான் பொங்கியெழுகிறது காவிக் கும்பல்!


புதிய ஜனநாயகம்
தலையங்கம்
ஜனவரி 2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க