விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர்.

0

திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்திற்கு எதிரான கேரள மீனவர்களின் போராட்டம் 100-வது நாளை எட்டியுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 27 அன்று மீனவர்கள் மீன்பிடி படகுக்கு தீ வைத்தும், போலீஸ் தடுப்புகளை கடலில் வீசியும் போராட்டத்தை தீவிரப்படுத்தினர். பெண்கள் உட்பட நூற்றுக்கணக்கான மீனவர்கள் சாலை வழியாகவும், கடல் வழியாகவும் அப்பகுதிக்கு வந்து, திட்டப்பகுதியின் கேட்டின் பூட்டை உடைத்து, முழக்கங்களை எழுப்பினர்.

கடலோர கிராமங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, லத்தீன் பேராலயத்தின் கீழ் உள்ள முதலைப்பொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஏராளமான மீனவர்கள் படகுகளில் வந்து போராட்டம் நடத்தினார்கள்.

எரியும் படகைக் காட்டி, போராட்டக்காரர்களில் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தங்கள் நிலையை அதிகாரிகளுக்குப் புரிய வைக்க வேறுவழி இல்லை. கடற்கரை இல்லை என்றால் வாழ்வு இல்லை, வாழ்வாதாரத்திற்கு தீ வைக்கிறோம், துறைமுகம் வந்தால் கடற்கரையை என்றென்றும் இழக்க நேரிடும், என்றார்.

மற்றொரு மீனவர், உள்ளூர் மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான மண்ணெண்ணெய் மானியம் கிடைக்காததை சுட்டிக்காட்டி, அண்டை மாநிலமான தமிழகம்போல் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

போராட்டத்தில் பங்கேற்ற ஆண்களும், பெண்களும் தங்களது கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை பின்வாங்கப் போவதில்லை என எச்சரித்தனர். பெண்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், இது மீனவர்களின் பிழைப்பு பிரச்சினை என்பதால் தாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்தனர். “அழிவை எதிர்கொள்ளும் விலங்குகள் மற்றும் தாவரங்களைப் பற்றி மட்டுமே நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், தற்போது இந்த பகுதி மீனவர்களாகிய நாங்கள், மாநில அரசின் அலட்சியப் போக்கால் அழிந்து வருகிறோம்” என்று ஒரு பெண் கூறினார்.

100-க்கும் மேற்பட்ட மீன்பிடி படகுகள் வரவிருக்கும் துறைமுகத்திற்குச் சென்றன, ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் போலீஸ் தடுப்புகளை உடைத்து, நிலப்பகுதியிலிருந்து திட்டப் பகுதிக்குள் அணிவகுத்து, மாநில அரசு மற்றும் நிறுவனத்திற்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.

மீனவர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானதையடுத்து, கட்டுமான பணி நடைபெற்றுவரும் துறைமுகம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ரூ.7,525 கோடியில் அதானி விழிஞ்சம் போர்ட் பிரைவேட் லிமிடெட், கேரள அரசு மற்றும் அதானிகளின் பொது-தனியார் பங்காளித்துவத்தின் கீழ் உருவாக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட உடைப்பினால் ஏற்பட்ட கரையோர அரிப்பினால் வீடுகள் இழந்ததால், அருகிலுள்ள மீனவ கிராமங்களில் உள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளனர்.

அதானி துறைமுகத்தால் உருவாக்கப்படும் – அருகிலுள்ள முள்ளூரில் உள்ள பல்நோக்கு துறைமுகத்தின் பிரதான நுழைவாயிலுக்கு வெளியே ஏராளமான மக்கள் சில மாதங்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான இத்திட்டம் தொடர்பாக, கட்டுமானப் பணியை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்பு குறித்து ஆய்வு நடத்த வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தினர். விழிஞ்சம் துறைமுகத்தின் ஒரு பகுதியான செயற்கைக் கடல் சுவர்கள், விஞ்ஞானப் பூர்வமற்ற கட்டுமானம் ஆகியவை கடலோர அரிப்பு அதிகரித்து வருவதற்கு ஒரு காரணம் என்று போராடும் மக்கள் குற்றம் சாட்டினர்.

ஜூலை 20 அன்று தொடர்ந்து போராட்டம் தொடங்கப்பட்டது மற்றும் ஆகஸ்ட் 16 அன்று தீவிரமடைந்தது, எதிர்ப்பாளர்கள் துறைமுகத்திற்கு செல்லும் ஒரே சாலையை மறித்து, கற்கள் மற்றும் சிமென்ட் போன்ற மூலப்பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிகளை நிறுத்தி அனைத்து கட்டுமானப் பணிகளையும் நிறுத்தினர்.

கடல்வளத்தையும் மீனவர்களையும் அழிக்கு வகையில் வரவிருக்கும் அதானியின் துறைமுகத்தை எதிர்த்து கேளர மீனவமக்கள் 100 நாட்களை கடந்து வீரம் செறிந்த போராட்டத்தை மேற்கொள்கின்றனர். இயற்கை வளங்களை சூறையாடும் கார்ப்பரேட் முதலாளி அதானிக்கு எதிரான இந்த போராட்டத்தை நாட்டுமக்கள் அனைவரும் ஆதரிக்க வேண்டும்.

காளி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க