அதானியின் துறைமுகத் திட்டத்திற்கு எதிராக கேரளாவில் மீனவர்கள் போராடிவருவதை நாம் அனைவரும் அறிவோம்.
அதானியின் துறைமுகத் திட்டத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் விழிஞ்சம் மற்றும் திருவனந்தபுரம் மாவட்ட மீனவர்கள், “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட போது எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்பு பணிகளில் ஈடுபட்டோம், ஏராளமான உயிர்களை காப்பாற்றினோம், அதற்கு அரசு எங்களுக்கு கொடுக்கும் பரிசு இதுதானா?” எனக் கேட்கின்றனர்.
அதானி குழுமத்திற்கும், கேரள அரசுக்குமிடையே 2015-ல் ஒப்பந்தமாகி கட்டப்பட்டுவரும் விழிஞ்சம் சர்வதேச பல்நோக்கு துறைமுகத் திட்டத்தால் ஏற்படும் கடலரிப்பால் 56,000 மீனவ குடும்பங்கள் பாதிக்கப்படும் என்கிறார்கள் போராட்டக்குழுவினர். விழிஞ்சம் அருகிலுள்ள கோட்டூர்புரத்தில் மட்டும் 5,000 குடும்பங்களின் வாழ்வாதாரம் அழிவுக்குள்ளாகும்.
திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய நாள் முதலே கடலரிப்பும், பாதிப்பும் அதிகமாகி பல குடும்பங்கள் வீடுகளை இழந்துவிட்டனர். இத்திட்டத்திற்கு எதிராக மீனவர்கள் 7 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து போராடி வந்த நிலையில் போராட்டத்தில் வன்முறை வெடித்ததாக 3000 பேர் மீது வழக்கு பதிவுசெய்துள்ளது போலீசு. இதனிடையில் நடந்த பேச்சுவார்த்தையின் அடிப்படையில் போராட்டக்குழுவினர் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர்.
அதானி விழிஞ்சம் துறைமுகத்திட்டம் அறிவியலடிப்படையிலானது அல்ல என்கின்றனர் போராட்டக்குழுவினர். கேரள சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையும் 2015-ல் போடப்பட்ட ஒப்பந்தம் கேரளத்தின் நலனை பாதுகாப்பதாக இல்லை என்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்தபோது அதானி குழுமத்துடனான துறைமுக ஒப்பந்தத்தை வழிப்பறிக்கொள்ளை, இதில் ஊழல் நடந்துள்ளது என்று எதிர்த்த சி.பி.எம் கட்சி, ஆட்சியை கைப்பற்றிய பிறகு, “துறைமுக கட்டுமானப் பணிகளை நிறுத்த முடியாது, போராடுபவர்கள் மாநிலத்தின் வளர்ச்சிக்கு எதிரானவர்கள்” என்கிறது. இதற்கும் மேலேபோய் அதானி குழுமம் துறைமுகத் திட்டப்பணியை பாதுகாக்க நடத்தப்பட்ட பேரணியில் சி.பி.எம் மாவட்ட செயலரும், பி.ஜே.பி மாவட்ட செயலாளரும் ஒன்றாக அணிவகுக்கிறார்கள்.
சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்ட தலைமைக் கணக்காளரின் அறிக்கையிலுள்ள ஒப்பந்த விபரங்கள், கருத்துகளிலிருந்து இத்திட்டத்தால் அதானி குழுமத்திற்கே லாபம், அதானி குழுமம் நலன் காக்கவே இந்த துறைமுகத்திட்டம் என்பது தெளிவாக தெரிகிறது். திட்டத்தை அமல்படுத்த தொடங்கிய 2015 முதல் அதிகரிக்கும் கடலரிப்பால் ஏற்படும் பாதிப்புகள் திட்டம் முழுமையாக அமல்படுத்தப்பட்டால் ஏற்படப்போகும் மோசமான அழிவுகள் பற்றி கண்முன்னே உணர்த்துகின்றன.
இருந்தும் மக்கள்நலன், தேச நலன் என்று பேசும் கட்சிகள் தாம் நேசிப்பதாகக் கூறும் மக்களின் வாழ்க்கை தம் கண்முன்னே அழிவதைப்பற்றி கவலைகொள்ளாமல், கார்ப்பரேட் கொள்ளைக்கு துணைபோவதை நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடுவதாக கூறுவதெப்படி? – வாழ்க்கையை பாதுகாக்க போராடும் மீனவர்களை ஒடுக்குவதும், வளர்ச்சித் திட்டத்தை சீர்குலைக்கும் சதிகாரர்களாக அவர்களை சித்தரிப்பதும் எப்படி? – இது தேச நலன், மக்கள் நலன் என்று பேசிக்கொண்டு, இந்த போர்வையால் தங்களை மறைத்துக்கொண்டு கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வது என்பதுதான்.
நாட்டையும், மக்களையும், கம்யூனிசத்தையும் நேசிக்கும் ஒவ்வொருவரும் தம் கண்முன்னே நடைபெறும் நிகழ்வுகளை விருப்பு, வெறுப்பின்றி பரிசீலித்து உணர்வதன் மூலமே உண்மையின் பக்கம் நிற்பதையும், தாம் சரியான இடத்தில் நிற்பதையும் உறுதிப்படுத்த முடியும். இதன் மூலமே மக்களின் போராட்டங்கள் மேலும் வலுப்பெற முடியும். மக்களின் எதிரிகளான காவி-கார்ப்பரேட் பாசிஸ்டுகளை வீழ்த்த முடியும்.
சி.பி.ஐ(எம்) தோழர்களுக்கு பத்து கேள்விகள்!
01.ஆர்.எஸ்எஸ்-பி.ஜே.பி.யினர் பாசிஸ்டுகள், மக்கள் நலனுக்கு எதிரானவர்கள், அவர்களுக்கெதிரான சக்திகள் ஒன்று திரள வேண்டும் என்று கூறிவிட்டு, விழிஞ்சம் மக்களின் போராட்டத்திற்கெதிராக பா.ஜ.க பாசிஸ்டுகளுடன் கைகோர்த்து நிற்பது ஏன்?
02.விழிஞ்சம் மக்கள் போராட்டம் போலவே, கார்ப்பரேட் கம்பெனிக்கு எதிராக, தங்கள் நிலம், வாழ்வாதாரத்திற்காக, போராடிய நந்திகிராம் மக்களின் போராட்டத்தை கடுமையாக அடக்கியதால்தான் மேற்குவங்க மக்களிடம் செல்வாக்கிழந்து முப்பது ஆண்டுக்கு மேல் ஆட்சியில் இருந்த சி.பி.ஐ(எம்) கூட்டணி ஆட்சி முடிவுக்கு வந்தது என்பதை யாராவது மறுக்க முடியுமா?
03.தங்கள் வாழ்வுரிமைக்காக விழிஞ்சம் துறைமுகத்திட்டத்தை எதிர்த்த மீனவர்களின் போராட்டத்தை “வெளிநாட்டு சதி”, “வளர்ச்சிக்கெதிராக திட்டமிட்டு சதி செய்பவர்கள்” என்றெல்லாம் இழிவுபடுத்துவது – அதானி, அம்பானியே எங்கள் கூட்டாளி, மீனவப் பாட்டாளிகள் எங்கள் பகையாளிகள் என்று முழங்குவதற்கு சமமல்லவா!
04.உம்மன் சாண்டி ஆட்சியின்போது போடப்பட்ட அதானியின் விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை வழிப்பறிக்கொள்ளை, அநீதியானது என எதிர்த்த சி.பி.எம் கட்சி, தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஒப்பந்தத்தை இரத்து செய்யாமல், ஒப்பந்தத்திலிருந்து பின்வாங்க மாட்டோம் என உறுதியாக அமல்படுத்துவதன் காரணம் என்ன?
05.அதானியின் துறைமுகத்திட்டத்தை கைவிடமுடியாது. கைவிட்டால் கேரளாவின் நம்பகத்தன்மை போய்விடும் என்கிறார் முதல்வர் பினராயி விஜயன். அப்படியானால் அதானி, அம்பானியின் நம்பிக்கைதான் முக்கியம். மீனவர்கள், கடலோர மக்களின் நம்பிக்கை, வாழ்க்கை பற்றி கவலையில்லை என்பது தானே!
06.சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கையின்படி இத்திட்டம் கேரளத்தின் நலனை பாதுகாக்கவில்லை, இழப்பையே தரும் என்றால் உண்மையில் இத்திட்டத்தால் யார் லாபமடைவது, அதானியா? கேரள மக்களா?
07.கேரளாவில் நூற்றுக்கணக்கில் கம்யூனிஸ்டு தொண்டர்கள் ஆர்.எஸ்,எஸ்-பி.ஜே.பி குண்டர்களால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் தொண்டர்களின் உணர்வு, வலியை அலட்சியமாக புறக்கணித்து, கடந்த நவம்பர் 1-ம் தேதி அதானி துறைமுகத் திட்டத்திற்கு ஆதரவாக பி.ஜே.பி-யினருடன் பேரணியில் கைகோர்க்க வைத்தது, சொந்த அணிகளுக்கு இழைத்த பச்சை துரோகமல்லவா?
படிக்க : உச்சநீதிமன்றத்தை விஞ்சும் யெச்சூரியின் கார்ப்பரேட் சேவை !
08.எதிர் கட்சியாக இருந்தால் கார்ப்பரேட்டுகளை எதிர்ப்பது ஆட்சியில் இருந்தால் கார்ப்பரேட் கொள்ளைக்கான திட்டங்களை அமல்படுத்தி மக்களை ஒடுக்குவது – இது உழைக்கும் மக்களுக்கு செய்யும் துரோகமில்லையா?
09.போராடும் மக்களின் கோரிக்கைகளில் ஒன்றான நிபுணர்கள், மீனவர்கள் அடங்கிய குழுவின் மூலம் திட்டத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் என்ற நியாயமான மக்களின் கோரிக்கையை உடனே அமல்படுத்தாதது ஏன்? மக்கள் வாழ்க்கை, சுற்றுச்சூழல் அழிவெல்லாம் பெரிதல்ல என்பதைத்தவிர இதற்கு வேறென்ன பொருள்?
10.அதானி துறைமுகத் திட்டத்திற்கான செலவில் வெறும் 33 சதவீதமே அதானியின் பங்கு, மீதம் 67 சதவீதம் மக்களின் வரிப்பணம் செலவிடப்படுகிறது. ஆனாலும் துறைமுக நிர்வாகமும், 40 வருட லாபமும் அதானிக்கு! மக்களின் வாழ்வாதாரம், வரிப்பணத்தை அதானிக்கு தாரைவார்த்துக் கொண்டு பொதுத்துறையை தனியார்மயமாக்காதே என முழங்குவது எதற்காக?
அம்பானியும் அதானியும் மோடியின் நண்பர்கள் என்கிறார் யெச்சூரி! அதே அதானியை கொண்டு கம்பெனியை தொடங்குகிறது சி.பி.ஐ(எம்). இந்த துரோகத்திற்கு எதிராக சி.பி.ஐ(எம்) தோழர்கள் போராட வேண்டும்.
ராஜன்