கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் துறைமுக திட்டத்திற்கு எதிராக 100 நாட்களை கடந்து மீனவர்கள் துறைமுக பணிகளை நிறுத்த வேண்டும், கடலோர பாதிப்புகளை ஆய்வு செய்ய வேண்டும் முதலிய ஏழு அம்ச கோரிக்கைகளை முன் வைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் கடந்த நவம்பர் 1 ஆம் தேதி மீனவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு எதிராக பாஜகவும் சி.பி.எம் கைகோர்த்துக் கொண்டு ஒரு பேரணியை கலந்துக்கொண்டுள்ளனர்.

‘save vizhinjam port action council’ சார்பாக நடத்தப்பட்ட இந்த பேரணியில் சி.பி.ஐ(எம்) கட்சியின் மாவட்டச் செயலர் அனவூர் நாகப்பன் மற்றும் பா.ஜ.க-வின் மாவட்டத் தலைவர் வி.வி.ராஜேஷ் ஆகியோர் கலந்துக் கொண்டு இந்த திட்டத்திற்கு நாங்கள் ஆதரவு தருகிறோம் என்று கூறியுள்ளனர். மேலும் சி.பி.ஐ(எம்)-யைச் சேர்ந்த நாகப்பன் என்பவர் ‘பெயரிடப்படாத குழுக்களின் உள்நோக்கங்களால் போராட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது’ என கூறியுள்ளார்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத் திட்டம்: அதானிக்கு சேவகம் செய்யும் கேரள அரசு!

ஆனால் உழைக்கும் மக்கள் உண்மையில் எதற்காக போராடுகிறார்கள் என்பதை முதலில் தெரிந்துக் கொள்வோம். கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியின் தலைமையிலான அரசு, திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் சுமார் ரூ.7525 கோடி மதிப்பீட்டில் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை தொடங்கியது.

கேரள அரசின் இத்திட்டமானது அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) என்ற அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. இந்த துறைமுக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.7525 கோடியில் அதானி நிறுவனமானது வெறும் ரூ.2454 கோடி மட்டுமே முதலீடு செய்யும் என்றும், மீதமுள்ள தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஒப்பந்தமிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த திட்டமானது அரசுக்கு பெரும் இழப்பை தரும் என்று 2017 ஆம் ஆண்டு கேரள சட்டமன்றத்தில் தக்கல் செய்யப்பட்ட தலைமை கணக்காளரின் அறிக்கை கூறியுள்ளது.

மேலும் இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே மீனவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக துறைமுக கட்டுமானப் பணிகளால் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடல் அரிப்பினால் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளனர். அவர்கள் இப்போது தங்கள் சொந்த வீடுகளில் இருந்து விரட்டியடிக்கப்பட்டு வாடகை வீடுகளிலும், உறவினர்கள் வீடுகளிலும் தஞ்சமடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் மீனவர்கள் தாங்கள் வழக்கமாக மீன் பிடிக்கும் எல்லைப் பகுதிகளில் மீன்கள் கிடைக்காததால் ஆழ்கடலுக்கு செல்ல வேண்டியதாக உள்ளது. இதனால் அவர்களுக்கு படகுகளுக்கான எரிபொருளின் தேவையும் பெருமளவு அதிகரித்துள்ளது.

இதனால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது ஒருபுறம் இருக்க, தாங்கள் வாழுமிடத்தை விட்டும் விரட்டியடிக்கப்படுவதை உணர்ந்த மக்கள் துறைமுக திட்டத்தை நிறுத்தக் கோரியும் படகுகளுக்கான எரிபொருளுக்கு மானியம் வழங்க கோரியும், கேரள அரசுக்கு எதிராகவும் துறைமுக பணிகளுக்கெதிராகவும் போர்க்கொடி ஏந்தியுள்ளனர். இந்த போராட்டங்களினால் துறைமுக பணி பாதிக்கப்பட கூடாது என உயர்நீதிமன்றமும் மீனவர்களின் போராட்டத்திற்கு எதிராக உத்தரவிட்டுள்ளது.

ஒருபுறம் ஆளும் வர்க்கங்களுக்கு சேவை செய்யும் அரசானது, அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (Public Private Partnership – PPP) திட்டங்கள் என்ற பெயரில் மக்கள் பணத்தை தனியாருக்கு தாரைவார்க்கும் அதே வேளையில் மக்களை வாழ கூட வழியின்றி நிர்மூலமாக்கியும் வருகிறது.

இத்தகைய மக்கள் விரோத திட்டத்தை, தற்போது உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையிலான அரசும் துறைமுக திட்டத்தால் பொருளாதாரம் பெருகும் என கூறி மக்களை ஏய்த்துக் கொண்டு எவ்வித தயக்கமோ, கூச்சமோ இன்றி தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. உண்மையில் இவர்கள் கூறும் பொருளாதார முன்னேற்றம் என்பது மக்களுக்கானது அல்ல கார்ப்பரேட்டுகளுக்கானது. அதனால் தான் அரசுக்கு பெரும் இழப்பைத் தரும் திட்டம் என்றாலும் இதை நடைமுறைப்படுத்த இவ்வளவு மும்முரமாக செயல்படுகிறார்கள்.

படிக்க : விழிஞ்சம் துறைமுகத்திட்டம்: தீவிரமடையும் அதானிக்கு எதிரான கேரள மீனவ மக்களின் போராட்டம் !

தற்போது எல்லவாற்றிக்கும் மேலாக ஒரு படி போய் இத்துறைமுக திட்டம் தொடர்பான விளக்கக் கூட்டங்களிலும், துறைமுக திட்டத்திற்கான ஆதரவு பிரச்சாரங்களிலும் சி.பி.ஐ(எம்) கட்சியினர், பா.ஜா.க-வினருடன் கூட்டாக பங்கேற்பது மட்டுமல்லாமல் போராடும் மக்களை கலவரக்காரர்கள் என்றும், இவர்கள் விழிஞ்சம் பகுதில் பெரும் வன்முறையை உண்டாக்க சதி செய்கின்றனர் எனவும் உளறிக் கொட்டுகின்றனர்.

சி.பி.ஐ(எம்) தங்களின் அரசியல் பிழைப்பும், அவர்களது எஜமானர்களான கார்ப்பரேட்களின் நலனுமே முக்கியமே தவிர மக்கள் நலன் அல்ல அதற்காக நாங்கள் பாசிசிட்டுகளான பா.ஜ.க-வுடன் கூட கூட்டு வைப்போம் என தரம் தாழ்ந்து போய்க்கொண்டிருக்கிறது.

இன்னும் எத்தனை முறை இவர்களின் மக்கள் விரோத கொள்கைகளை-செயல்களை அம்பலப்படுத்தினாலும், கார்ப்பரேட் மற்றும் பாசிஸ்ட்டுகளுடன் கூட்டு வைத்துக் கொள்வார்கள் இவர்கள்.

அரசு, நீதிமன்றம், போலிசு போன்ற அளும் வர்க்கத்திற்கு சேவை செய்யும் எந்த நிறுவனங்களும் மக்கள் போராட்டங்களுக்கு ஆதாரவாக செயல்படாது என்பது நாம் அறிந்ததே. இந்நிலையில் ஆளும் வர்க்கங்களை எதிர்த்து போரடும் மீனவ மக்கள் போராட்டத்தில் அனைத்து உழக்கும் மக்களையும் இணைத்து, உண்மையான மக்கள் போராட்டம் இந்த ஆளும் வர்க்கங்களை என்ன செய்யும் என்பதை அவர்களுக்கு காட்டுவது மட்டுமே இதற்கு நிரந்தர தீர்வு தரக்கூடியதாக இருக்கும். அவ்வாறில்லாமல் கார்ப்ரேட் நல அரசின் ஒடுக்குமுறையிலும், கார்ப்ரேட்டுகளின் சுரண்டல்களில் இருந்தும் நம் மீள்வது என்பது சாத்தியமற்றதே.

கதிர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க