கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தைத் தொடங்கியுள்ள அதானி குழுமம் அதன் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. துறைமுகத் திட்டத்தால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என கூறும் 40 கிராமங்களைச் சேர்ந்த மீனவ மக்கள் கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31 வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தங்களுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை நிறைவேறும்வரை போராட்டம் ஓயாது என்றும் உறுதியாக நிற்கின்றனர்.

போராட்டத்தின்போது துறைமுக வாயிலில் போடப்பட்டிருந்த தடுப்புகளை உடைத்துக்கொண்டு துறைமுகத்தை நோக்கி அணிவகுத்து சென்ற மீனவர்கள், கௌதம் அதானியின் உருவ பொம்மையை எரித்தனர். மேலும் சிலர் தங்களின் மீன்பிடி படகுகளைக் கொண்டு கடலுக்குள் இறங்கி கடல்வழியாகவும் துறைமுகத்தை முற்றுகையிட்டனர்.

கடல் – தரை மார்க்கமாக முற்றுகையிட்டதன் விளைவாக துறைமுகத்திற்கு தேவையான கட்டுமானப் பொருட்கள் எடுத்து செல்வது தடுத்து நிறுத்தப்பட்டது. இதனால் தனது கட்டுமானப் பணியினை தற்காலிகமாக நிறுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டது அதானி குழுமம் என்கிறது டௌன் டூ எர்த் (Down to earth) இணையதளம்.

போராட்டக்காரர்களால் தனது துறைமுக ஊழியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், எனவே துறைமுகக் கட்டுமானப் பணியினை முடிக்க துறைமுகத்திற்கு தடையின்றி சென்றுவர சி.ஆர்.பி.எஃப் (CRPF) பாதுகாப்பு வழங்கக் கோரியும் கேரள நீதிமன்றத்தை நாடியது அதானி குழுமம். “கேரள அரசு நாடினால் மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை (CISF) அனுப்ப தயார்” என்று நீதிமன்றம் மனு குறித்தான விசாரணையை கையெடுப்பதற்கு முன்பே, மத்திய அரசு ஆலோசகரிடம் இருந்து அழைப்பு வருகிறது என்றால் எந்தளவு முக்கியமான திட்டம் என்று புரிந்துகொள்ள முடியும்.

விழிஞ்சம் துறைமுகத் திட்டம் மீனவர்களுக்கு மட்டுமல்ல சுற்றுச்சூழலுக்கே பேராபத்து:

கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் அதானி குழுமத்துடன் போடப்பட்ட சலுகை ஒப்பந்தத்தின்படி (Concession Agreement) விழிஞ்சம் துறைமுகத் திட்டம் 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சலுகை திட்டம் என்பது, தனியாரால் தொடங்கப்படும் திட்டத்திற்கு சில ஆண்டுகள் அரசு உதவிகளும்(நிதி), உரிமைகளும் வழங்குவதாகும்.

விழிஞ்சம் துறைமுகம் என்பது இந்தியாவின் முதல் மெகா டிரான்ஸ்ஷிப்மென்ட் கொள்கலன் முனையமாக (Mega Transshipment Container Terminal) இருக்கும். ரூ.7,525 கோடி செலவில் கட்டப்படும் இது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள சர்வதேச கப்பல் வழித்தடங்களுக்கு அருகில் அமைந்துள்ள ஆழ்கடல் துறைமுகம் என்கிறது அதானி போர்ட்ஸ் அண்ட் லாஜிஸ்டிக்ஸ் இணையதளம்.


படிக்க : இலங்கை மின் உற்பத்தி ஒப்பந்தம்: அதானியின் பகற்கொள்ளைக்கு மோடியின் கரசேவை!


இத்துறைமுகத் திட்டத்திற்கென கிட்டத்தட்ட 450 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படுகிறது; 120 ஹெக்டேர் பரப்பளவு கடலின் அடிப்பகுதியை துளைக்க வேண்டும். இத்திட்டத்திற்கு கடற்கரை ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பாணை 2011 அனுமதி வழங்கியபோதே, மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், செயற்பாட்டாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

மேலும் துறைமுகத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் கடல் அரிப்பு ஏற்படும் என்கின்ற சுற்றுச்சூழல் நிபுணர்கள், துறைமுகத்தில் நிறுத்தப்படும் கப்பல்களை, அலைகள் மற்றும் புயல்கள் தாக்காமல் இருக்க கடலலை வரும் திசைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்ஸ் (Breakwaters) கட்டப்படுகிறது. இப்பிரேக்வாட்டர்ஸால் கடல் நீரோட்டத்தின் திசையே மாறியுள்ளது. இதன்விளைவாக அடிக்கடி கடல் சீற்றம், கொந்தளிப்புகள் ஏற்படுவதால் கடலில் விபத்துகளும், சில நேரங்களில் உயிரழிப்புகளும் ஏற்படுகிறது என்கின்றனர். இதனால் மீனவர்கள் கடலுக்குள் செல்லமுடியாத நிலை ஏற்பட்டு அவர்களது வாழ்வாதாரமும் பெரிதும் பாதிக்கப்படுகிறது.

ஏற்கனவே 2019 இல் வலியத்துறை மற்றும் முட்டத்தாரா உள்ளிட்ட மீனவ கிராமங்களில் ஏற்பட்ட கடல் அரிப்பால் வீடுகளை இழந்த 143 குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அதேபோல சங்குமுகம் கடலில் ஏற்பட்ட கடல் அரிப்பால் கடற்கரையும் மக்கள் பயன்படுத்தமுடியாதளவு மோசமாகிவிட்டது என மோங்கபே இந்தியா (Mongabay-India) என்ற இணையதள தரவு கூறுகிறது.

இத்திட்டம் தொடர்ந்தால் மேலும் என்ன விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை விவரிக்கிறார் கோஸ்டல் வாட்ச் (Coastal Watch) என்ற தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினரும் விழிஞ்சம் திட்டத்தை ஆரம்பத்தில் இருந்து எதிர்த்து வருபவருமான ஏ.ஜெ.விஜயன். “திட்டத்தின்படி 3.2 கி.மீ. தூரம் கடற்கரைக்கு செங்குத்தாக பிரேக்வாட்டர்கள் அமைக்கப்பட வேண்டும். தற்போது வெறும் 1 கி.மீ. தூர அளவிற்குதான் பணி முடிந்துள்ளது. இப்போது திட்டத்தை கைவிட வேண்டும். அப்படியின்றி மேலும் தொடர்ந்தால் அதிகளவு கற்கள் தேவைப்படும். கற்களை குவாரிகள் மற்றும் சுரங்கங்களில் இருந்துதான் எடுக்கமுடியும் என்பதால் சுற்றுச்சூழல் மேலும் பாதிப்படையும் அபாயம் உள்ளது.

கடந்த மே மாதம், கற்களை எடுப்பதற்காக குவாரிகளை அமைக்க அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது தேசிய வனவிலங்கு வாரியம். மேற்கு தொடர்ச்சி மலைகள் உள்ள கேரளத்தில், அதிகளவில் மலைசரிவுகள் ஏற்படுவது இயல்பு. ஆனால் இங்கிருக்கும் 30-க்கும் மேற்பட்ட குவாரிகளால் மலைசரிவுகள் அதிகளவில் ஏற்பட்டுள்ளன. இதுபோன்று 2019 இல் ஏற்பட்ட மலைசரிவில் சிக்கி கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்தனர். மேலும் நெய்யாறு மற்றும் பெப்பரா பகுதிகள்தான் திருவனந்தபுரத்திற்கு நீராதாரமாக இருக்கிறது. இங்குள்ள குவாரிகளால் நிலத்தடி நீரும் பெரிதளவில் பாதிக்கப்படும்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

இவை ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்த தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) அறிக்கையோ, “சலுகை ஒப்பந்த காலம் முடிவடையும்போது திட்டத்தின் கட்டுமானத்தால் ரூ.5,608 கோடி வரை கேரள அரசுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கும். இந்த ஒப்பந்த முறை கேரள அரசுக்கு ஆதரவாக இருப்பதற்கு பதிலாக அதானி குழுமத்திற்கு ஆதரவாக தயாரிக்கப்பட்டுள்ளது” என்று எச்சரித்துள்ளது.

***

வேளாண் சட்ட எதிர்ப்புப் போராட்டத்தில் காலிஸ்தானியர்கள் புகுந்துவிட்டார்கள் என்று பாஜக பிரச்சாரம் செய்ததைபோல, “முன்கூட்டியே திட்டமிடப்பட்ட போராட்டம் இது. போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீனவர்கள் மட்டுமல்ல” என விழிஞ்சம் துறைமுகத்திற்கு எதிராக போராடுபவர்களை சாடுகிறார் கேரள முதல்வர் பினராயி விஜயன்.

கேரள மாநில சட்டமன்றத்தில் பேசிய துறைமுகத் துறை அமைச்சர் அகமது தேவர்கோவில், “பல பணிகள் முடிந்துவிட்டதால், விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை தற்போது நிறுத்தமுடியாது. நிறுத்தினால் மாநில அரசுக்கு பெரும் நிதி இழப்பு ஏற்படும்” என்றார்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


ஆனால், “துறைமுக கட்டுமானப் பணிகள் பாதிக்கும் குறைவாகவும்; கடலுக்குள் துளையிடும் பணி 40 சதவிதம் மட்டுமே நிறைவடைந்துள்ளது. இத்திட்டத்தை நிறுத்துவதற்கு இதுவே சரியான தருணம்” என்கிறார் ஏ.ஜெ.விஜயன்.

ஆனால் மீனவர்கள், மக்கள் நலனில் துளியும் அக்கறைக் காட்டாத பினராயி விஜயன், “விழிஞ்சம் துறைமுகத் திட்டத்தை நிறுத்துவது குறித்து இப்போது பரிசீலிக்க முடியாது. இதுபோன்ற திட்டத்தில் பிரச்சினைகள் வருவது இயல்பே. பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு வாடகை வீடு கொடுப்பதைப் பற்றி அரசு பரிசீலித்து வருகிறது” என்றும் “திட்டத்தை கைவிடவேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏற்காது” என்றும் அதானிக்கு வெளிப்படையாக ஆதரவளித்தார்.

ஆக, மீனவர்கள் குடும்பங்கள் வீடு இழந்து வாழ்வாதாரத்தை இழந்தாலும் அதானி துறைமுக திட்டத்தை முடித்தே தீரவேண்டும் என்ற குறிகோளோடு இருக்கிறது கேரள அரசு. இதற்கு வலுசேர்க்கும் விதமாக விழிஞ்சம் துறைமுகத்திற்கு போலீசு பாதுகாப்பு வழங்குமாறு கேரள அரசுக்கு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விழிஞ்சம் அதானி துறைமுகம், சில்வர்லைன் திட்டம் போன்று அடுக்கடுக்காக மக்கள் விரோத, கார்ப்பரேட் நலத் திட்டங்கள் கொண்டுவந்து மக்களை வாட்டி வதைக்கிறது கேரள அரசு.


வேம்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க