ஸ்.பி.ஐ வங்கித் தலைவரை கையோடு அழைத்துச் சென்று அதானிக்கு ஆஸ்திரேலியாவில் 7500 கோடி செலவில் நிலக்கரி சுரங்கம் வாங்கிக் கொடுத்தது, காட்டுப்பள்ளி துறைமுகம் விரிவாக்கம், இனயம் துறைமுகம்  உருவாக்க அனுமதி, அதானியின் மின் உற்பத்தி ஏகபோகத்திற்காக கொண்டுவரப்பட்ட உதய்மின் திட்டம் உள்ளிட்டவற்றால் அதானியை ஆசியாவின் நம்பர் ஒன்  பணக்காரராக்கிய மோடி தனது கைங்கரியத்தை இலங்கையிலும் செய்திருக்கிறார்.

கடந்த மார்ச் 2022-இல்,  இலங்கை வடக்கு மாகாணத்தின் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில்  500 கோடி டாலர் முதலீட்டில் காற்றாலை மற்றும் சூரிய சக்தி ஆகிய புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதற்காக  அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது இலங்கை மின்சார வாரியம் (Ceylon Electricity Board (CEB)). எந்தவித சட்டபூர்வ ஏல வழிமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாகவே இவ்வொப்பந்தத்தை அதானி குழுமத்திற்கு வழங்கியிருக்கிறது இலங்கை அரசு.

அதானி குழுமத்திற்கு இவ்வொப்பந்தம் கிடைத்தது குறித்து, கடந்த ஜூன் 10-ஆம் தேதி இலங்கையின் பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழு (Committee on Public Enterprises (COPE) இலங்கை மின்சார வாரியத் தலைவரான எம்.எம்.சி. ஃபெர்டினாண்டோவிடம் விசாரணை நடத்தியது.  இதில் பல ‘தேவரகசியங்கள்’ வெளியே கசிந்தன. அரசு நிறுவனங்களில் ஏற்படும் முறைகேடுகளை விசாரணை செய்வது மற்றும் வெளிக்கொணர்வது இக்குழுவின் வேலையாகும்.


படிக்க : ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம்! | மாநாடு அறிவிப்பு !


பொது முயற்சியாண்மைக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவிடம் பதிலளித்த ஃபெர்டினாண்டோ, “இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச அதானி குழுமத்திற்கு அனுமதி வழங்க தன்னைப் பணித்தார். இது குறித்து, நவம்பர் 16, 2021 அன்று நடந்த சந்திப்பின் போது, ஏற்கனவே அனுமதியளிக்கப்பட்ட நேரடி அந்நிய மூதலீடு என்ற அடிப்படையில் மன்னார் மற்றும் பூநேரி ஆகிய பகுதிகளில் காற்றாலை மற்றும் சூரியசக்தி ஆகியவற்றின் மூலம் 500 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க  அதானி குழுமத்திற்கு அனுமதியளிக்க வலியுறுத்தினார். இதனடிப்படையில், நவம்பர் 25, 2021 தேதியிட்ட கடிதத்தை இலங்கை நிதியமைச்சகத்தின் கருவூலச் செயலாளரான எஸ்.ஆர். அடிகலாவிற்கு அனுப்பினேன். இவ்விவகாரத்தை அதிபரே பார்த்துக் கொள்வதாகக் கூறியதால்தான், அதானி குழுமத்திற்கு ஒப்பந்தம் கிடைப்பதற்கு தேவையானவற்றை செய்யுமாறு கருவூலச் செயலாளாருக்கு கடிதம் எழுதினேன்” என்று ரகசியங்களை போட்டுடைத்திருக்கிறார்.

ஃ பெர்டினாண்டோ  பேசிய வீடியோ சமூக வலைதளங்களில்  பெருமளவில் பகிரப்பட்டு இலங்கை அரசியலில் பெரும் சூறாவளியைக் கிளப்பியிருக்கிறது. இவ்வீடியோ வெளிவந்தவுடன், அதிபர் கோத்தபய, “ எந்தவொரு தனிநபருக்கும் அல்லது நிறுவனத்துக்கும் ஒப்பந்தம் வழங்க நான் அங்கீகரித்ததாகக் கூறுவதை திட்டவட்டமாக மறுக்கிறேன்” என்று ட்வீட் செய்தார். இதையடுத்து, பசிக்களைப்பாலும், மன அழுத்தத்தாலும் ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கால் அவ்வாறு கூறியதாக அந்தர் பல்டியடித்தார் ஃபெர்டினாண்டோ . இறுதியில், கடந்த ஜூன் 15 அன்று ‘தனிப்பட்ட காரணங்களுக்காக’ மின்சார வாரிய தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்தார் ஃபெர்டினாண்டோ.

அதே நாளில் ஃபெர்டினாண்டினோவின் விலகலை ஏற்றுக் கொண்டதாகவும், புதிய தலைவராக நலிந்த இளங்கோ கோன் பதவியேற்க உள்ளதாகவும் இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்வீட்டரில் அறிவித்தார்.

அதானிக்கு எதிராக பதாகைகளைத் தாங்கி நின்று போராடும் இலங்கை மக்கள்.

கடந்த ஆண்டு அக்டோபரில் அதானி இலங்கை சென்ற போதே இவ்வொப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. அதிபர் கோத்தபய மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பிறகு, தனது சொந்த ஹெலிகாப்டர் மூலம் மின் உற்பத்தி தொடங்கவிருக்கும் மன்னாரை அதானி பார்வையிட்டார். அப்பொழுதே இவ்விவகாரம் இலங்கை அரசியலில் விவாதப் பொருளாகியது.

அதானியின் இலங்கை பயணத்திற்கு பிறகு, கடந்த ஆண்டு டிசம்பரில் 1 பில்லியன் டாலர் முதலீட்டில் 1000 மெகாவாட் திறன் கொண்ட முதல் காற்றாலைத் திட்டத்தை மன்னார் பகுதியிலும், இரண்டாவது காற்றாலை திட்டத்தை பூநேரி பகுதியிலும் அமைக்க இலங்கை முதலீட்டாளர்  வாரியத்திடமும் (Board of Investments of Sri Lanka), இலங்கை மின்சார வாரியத்திடமும் அதானி குழுமம் அனுமதி கோரியிருந்தது குறிப்பிடத்தக்கது.

அதானி குழுமம் அனுமதி கோருவதற்கு முன்பே டெல்ஃப் தீவு, அனலை தீவு, நைனா தீவு ஆகிய இடங்களில் 12 மில்லியன் டாலர் முதலீட்டில் கலப்பு மின் உற்பத்தி மையங்கள் அமைக்க சீன நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடியின் அழுத்தத்தால், ஏல முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சீன நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்தங்களைக் கடந்த ஆண்டு ரத்து செய்து, தற்போது அதானி குழுமத்துடன் ஒப்பந்தம் போட்டிருக்கிறது இலங்கை அரசு. சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்ததற்கு, சர்வதேச நிதி நிறுவனத்தின் கடன் உதவியால் இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த திட்டமிட்டிருந்ததாகவும், அதற்காக ஏல முறையில் சீன நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்ததாகவும் கூறியிருந்தார், அன்றைய அரசுத்துறை விவகாரங்களுக்கான அமைச்சர் துமிந்த திசனாயகே. ஆனால் இந்திய அரசு 75 சதவீத மானியம் வழங்குவதாகக் கூறியதால் சீன நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டதாக கூறியிருக்கிறார் திசனாயகே.

சட்டவிரோதமாக அதானி குழுமத்திற்கு வழங்கப்பட்ட இவ்வொப்பந்தத்தை இலங்கையின் எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்க்கின்றன. இவ்வொப்பந்தத்தின் மூலம் ராஜபக்ச அரசு, மோடியின் நண்பருக்கு கொல்லைப்புற வழியாக அனுமதியளித்திருப்பதாக குற்றம் சுமத்துகின்றன.

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பைத் துளியும் பொருட்படுத்தாமல், இலங்கையின் மின்சார நெருக்கடியை சாதகமாக்கிக் கொண்டு இலங்கை மின்சார சட்டம் 2009-இல் திருத்தத்தைக் கொண்டு வந்து அதானியின் கொல்லைப்புற நுழைவை  சட்டப்பூர்வமாக்கியிருக்கிறது, இலங்கையின் கோத்தபய-ரணில் அரசு.  இத்திருத்தத்திற்கு 120 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவாகவும், 36 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்திருக்கின்றனர், 13 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் வெளிநடப்பு செய்திருக்கின்றனர்.

இச்சட்டத்திருத்தத்தில், மின்சார சட்டம் 2009 பகுதி 8-இல் இருந்த, “மின் உற்பத்தி செய்கிற எந்த ஒரு நபரும் ஏல முறையில் பங்கேற்க வேண்டும் என்ற விதிமுறையை ரத்து செய்து, ஏல முறையில் எந்த ஒரு நபரும் பங்கு பெறலாம் என்று திருத்தப்பட்டிருக்கிறது”. இதன் மூலம் மின் உற்பத்தி நிறுவனங்கள் ஏல முறையில் பங்கேற்றாக வேண்டிய கட்டாயமில்லை. அதானி குழுமம் போல் ஏல முறையில் பங்கேற்காமல், இலங்கை அரசு விரும்பும் ஒருவருக்கு  ஒப்பந்தத்தை வழங்க முடியும்.

இலங்கையின் உடனடி  ‘வளர்ச்சி’க்கு இச்சட்டத்திருத்தம் இன்றியமையாதது என்று கூறியிருக்கிறார், காஞ்சன விஜேசேகர.  இச்சட்டத்திருத்தத்தால் இலங்கையில் முதலீடுகள் அதிகரிக்கும் எனக் கூறுவதன் மூலம் விஜேசேகரவும் கார்ப்பரேட் சேவையே வளர்ச்சி என்கிற நிதியமைச்சர் நிர்மலாவுடன் ஒத்திசைகிறார். இலங்கையின் பிரதமர் ரணிலும் இச்சட்டத்திருத்தத்தை வரவேற்று மோடியை மிஞ்சிய ஏகாதிபத்திய அடிவருடி என்று நிரூபித்துக் கொண்டுள்ளார்.

இலங்கையின் எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, காலிமுகத் திடலில் போராடும் மக்கள், இலங்கையின் மின்சாரத் துறை ஊழியர்கள் மற்றும் இலங்கையின் மின் உற்பத்தி முதலாளிகளின் கூட்டமைப்பான புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கழகத்தினரும் இச்சட்டத்திருத்தத்திற்கும், ஏல முறை ஒழிக்கப்பட்டதற்கும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றனர்.

இச்சட்டத் திருத்தம் கொண்டுவந்த உடனேயே மின்சாரத்துறை ஊழியர்கள் காலவரையற்றப் போராட்டம் அறிவித்தனர். அதிபர் கோத்தபயவோ, “மின்சாரம் இன்றியாமையாத சேவை” என்று அறிவித்ததால் ஊழியர்களது  போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. எனினும் கோத்தபய-வுக்கு எதிராக காலிமுகத் திடலில் போராடும் மக்கள் இந்திய தூதரகத்தின் முன்பும், அதிபர் கோத்தபய அலுவலக வாசலின் முன்பும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.


படிக்க : கடந்த ஆண்டில் மட்டும் 49 பில்லியன் டாலர் சொத்து சேர்த்த அதானி !


மின்சாரம் இன்றியமையாதது என்று அதிபர் கூறிக் கொண்டிருக்கும் போது, கடும் மின் தட்டுப்பாட்டால் இருளில் தவித்துக் கொண்டிருக்கும் இலங்கை மக்களோ அதானிக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கின்றனர். ‘அதானியை நிறுத்து’ (#StopAdani) என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் ட்ரெண்டிங் ஆனதே இதற்கு ஒரு சான்று.

மேலும், தலைநகர் கொழும்புவில் உள்ள மெஜஸ்டிக் பகுதியில் போராடிய மக்கள் “அதானியை நிறுத்து”,  “இலங்கையிலிருந்து வெளியேறு” என முழக்கங்கள் எழுப்பினர். “வெளிநாட்டைச் சேர்ந்த அதானிக்கு ஏன் இலங்கையின் மின் திட்டங்களை டெண்டர்கூட விடாமல் கொடுக்க வேண்டும்? அப்படிக் கொடுப்பதால், நம் நாட்டின் வளங்கள் சுரண்டப்படும். மேலும், நம் நாட்டின் மின்சார உற்பத்தி முறையும் சீர்குலைந்துவிடும்; இது இலங்கையின் எதிர்காலத்துக்கு நல்லதல்ல; அதானி குழுமம் இலங்கையில் கால்பதிக்கக் கூடாது!”  என்கின்றனர் போராடும் மக்கள்.

அதானிக்கு எதிராகத் தொடங்கியுள்ள இந்தச் சிறுபொறி, இலங்கையின் எதிர்கால நம்பிக்கையின் கீற்று. எனினும், இக்கார்ப்பரேட் எதிர்ப்புப் போராட்டத்தை இலங்கையை மேலாதிக்கம் செய்யத் துடிக்கும் இந்தியாவுக்கு எதிராகவும், அமெரிக்க, சீன மேலாதிக்கத்திற்கு எதிராகவும் வளர்த்தெடுக்க வேண்டியிருக்கிறது.


அப்பு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க