மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறக் கோரி, ஒன்றரைக் கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். ஜனவரி 26 குடியரசு தினத்தன்று பீரங்கிப் பேரணிக்கு இணையாக டிராக்டர் பேரணி நடத்தப்போவதாகவும் 2024 மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் வரையில் போராடப்போவதாகவும் விவசாயிகள் உறுதியுடன் அறிவித்துள்ள சூழலில், இதை எப்படிக் கலைப்பது என்று தெரியாமல் திணறிவருகிறது மோடி அரசு.

போராட்டக் களத்திலிருந்து பெண்களையும் குழந்தைகளையும் முதியவர்களையும் வெளியேறுமாறு கூறி விவசாயிகளின் மேல் அக்கறைப்படுவதாகக் காட்டிக்கொண்டது உச்சநீதிமன்றம்.பெண்களை வீட்டிற்குள் அடங்கியிருக்க வேண்டியவர்களாகக் காட்டும் உச்சநீதிமன்றத்தின் ஆணாதிக்கத் திமிர் சமூக வலைத்தளங்களில் அடித்துப் பெயர்க்கப்பட்டது.

தாமாக முன் வந்து, வேளாண் சட்ட ஆதரவாளர்களைக் கொண்ட ஒரு கமிட்டியை அமைத்து, விவசாயிகள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக வேண்டும் என்றும், முற்றுகையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்றும் ”பணிவான” மிரட்டலோடு கேட்டது. விவசாயிகள் அக்கமிட்டி குறித்து அதன் முகத்திலேயே காறி உமிழ்ந்துவிட்டனர்.

இப்படி பல வகைகளில் மோடி அரசு போராடும் விவசாயிகள்  மீது தாக்குதல் தொடுக்க நியாயம் கற்பிக்கும் வகையிலான அனைத்து வேலைகளையும் நைச்சியமாகச் செய்து வருகிறது உச்சநீதிமன்றம்.

படிக்க :
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக அனைத்து பெண்கள் கூட்டமைப்பு ஆளுநர் மாளிகை முற்றுகை !

♦ சர்வதேச நோக்கில் விவசாயிகள் போராட்டத்தின் முக்கியத்துவம் !

உச்சநீதிமன்றத்தின் இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்கையில், கடந்த 2020 – டிசம்பர் 31-ம் தேதியன்று சி.பி.எம் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி தனது சொந்த வலைத்தளத்தில் எழுதியிருக்கும் கட்டுரையோ உச்சநீதிமன்றத்தின் கார்ப்பரேட் சேவையை விஞ்சுமளவிற்கு இருக்கிறது.

இக்கட்டுரையில் “இந்தப் போராட்டத்தின் கோரிக்கைகள் நியாயமானவை, பகுத்தறிவுள்ள எந்த அரசாங்கமும் இதை ஏற்றுக்கொள்ளும்.” என்று இந்தப் போராட்டத்தின் அவசியம் குறித்து எழுதியுள்ள சீத்தாராம் யெச்சூரி, இந்தப் பிரச்சினைக்கான தீர்வாக விவசாயிகளே முன் வைக்காத ஒன்றை முன் வைக்கிறார்.

“எல்லோரும் கேட்பது ஒன்றுதான். இந்த மூன்று வேளாண் சட்டங்களும் இப்போது திரும்பப் பெறப்பட வேண்டும். பின்னர் விவசாயிகள், விவசாய சங்கங்கள், கார்ப்பரேட்டுகள், அனைத்து பங்குதாரர்களிடமும் விவாதித்து புதிய சட்டங்களை வடிவமைத்து நாடாளுமன்றத்தில் விவாதித்து அதை நிறைவேற்ற வேண்டும்.” (அழுத்தம் எம்முடையது) என்கிறார் யெச்சூரி.

மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்திதான் விவசாயிகள் போராடுகிறார்களே ஒழிய, புதிய சட்டங்கள் தங்களுக்கு வேண்டும் என யாரும் கோரவில்லை. அப்படியிருக்கும்போது புதிய வேளாண் சட்டங்களை யாருக்காக, எதற்காக இயற்ற வேண்டும் என்கிறார் யெச்சூரி ?

அதற்கான பதில் அடுத்த வரியில் வருகிறது. இந்தப் புதிய சட்டத்தை விவசாயிகள், விவசாய சங்கங்கள் மட்டுமின்றி கார்ப்பரேட்டுகள் உள்ளிட்ட அனைத்துப் பங்குதாரர்களையும் உள்ளடக்கி விவாதம் நடத்தி வடிவமைக்க வேண்டும் என்கிறார்.

இந்த மூன்று வேளாண் சட்டங்களும் நடைமுறைக்கு வந்தால் தாங்கள் கார்ப்பரேட்டுகளிடம் கொத்தடிமைகளாக்கப்படுவோம் என்பதையும் இச்சட்டங்கள் வேளாண்துறையையே கார்ப்பரேட்டுகளிடம் முற்றாக தாரைவார்க்கிறது என்பதையும் உணர்ந்துதான் விவசாயிகள் போராடி வருகிறார்கள். மோடியின் உருவ பொம்மையுடன் அம்பானி, அதானி உருவ பொம்மையையும் சேர்த்துக் கொளுத்துகிறார்கள். அம்பானியின் ஜியோ நிறுவனத்தைப் புறக்கணிக்கிறார்கள்.

இப்படியிருக்கும் போது, “கார்ப்பரேட்டுகளையும் உள்ளடக்கி” ஒரு விவாதம் நடத்தி ‘சுமூகமாக’ பிரச்சனையை தீர்க்க சொல்கிறார் யெச்சூரி. பிரச்சினைக்குள் தலையைக் காட்டாமல் ஒதுங்கியிருந்த கார்ப்பரேட்டுகளைத் தங்களது அனுபவத்தில் இருந்து அடையாளம் கண்டு, வீதியில் நிறுத்தியிருக்கும் விவசாயிகளின் வர்க்க உணர்வை விட சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரின் வர்க்க உணர்வு பின் தங்கியுள்ளது மட்டுமல்ல. சமரசவாத, தாராளவாத கருத்தாக்கத்துக்குள் புதைந்து போய் இருக்கிறது.

மாபெரும் கார்ப்பரேட் மதயானைகளுக்கு முன்னர் விவசாயிகளை எறும்புகளைப் போல நிற்க வைக்கின்றன இச்சட்டங்கள். ஆனால் யெச்சூரியோ கார்ப்பரேட்டுகளையும் விவசாயிகளையும் ஒரே மேசையில் உட்காரவைத்துப் பேசி முடிவெடுக்க வேண்டும் என்கிறார். தோழரின் ‘ஜனநாயக உணர்வையும்’ ‘வர்க்க உணர்வையும்’ நினைத்தால் நமக்கே புல்லரிக்கிறது.

படிக்க :
♦ அம்பலமானது அர்னாப் மட்டுமல்ல ! பாசிசத்தின் ஊடகக் கூட்டும்தான் !
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

மேற்கு வங்கத்தில் டாடாவின் நேனோ ஆலைக்காக விவசாய நிலத்தை கையகப்படுத்தியதோடு, அதை எதிர்த்துப் போராடிய சிங்கூர் விவசாயிகளை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்ற பின்னர் இன்று வரை மேற்குவங்கத்தில் எழுந்து நின்று மூச்சுக் கூட விட முடியாத அளவிற்கு அடி வாங்கியிருந்தும், மக்களின் வாழ்வு ‘உய்ய’ கார்ப்பரேட்களின் தயவைக் காத்து நிற்பதைக் கைவிடத் தயாராக இல்லை என்பதையே யெச்சூரியின் இந்தக் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக சி.பி.எம். கட்சியின் விவசாய அமைப்புகளும், தொழிலாளர் அமைப்புகளும் பெருமளவில் வீதியில் இறங்கி பாசிச மோடி அரசுக்கு எதிராகவும், கார்ப்பரேட் கொள்ளைகளுக்கு எதிராகவும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தங்களது உயிரை துச்சமாக மதித்து போராடும் விவசாயிகளோடு உடன் நிற்கின்றனர்.

அப்படிப்பட்ட தியாக உணர்வும் போராட்ட உணர்வும் கொண்ட இலட்சக்கணக்கான தோழர்களை அணிகளாகக் கொண்ட கட்சியின், தலைமைப் பொறுப்பில் இருப்பவரது சிந்தனையின் வலதுசாரி சரிவை விட அதைக் கண்டு கொள்ளாமல் கண்டிக்காமல் இருக்கும் கட்சியின் நிலைதான் மேலும் அபாயகரமானது.


தீரன்

செய்தி ஆதாரம்
: Frontierweekly

4 மறுமொழிகள்

 1. விவசாயிகள் நீதிமன்றத்தை நிராகரித்ததை போல யெச்சூரியையும் நிராகரிக்க வேண்டும்.

 2. //கார்ப்பரேட்டுகளைத் தங்களது அனுபவத்தில் இருந்து அடையாளம் கண்டு, வீதியில் நிறுத்தியிருக்கும் விவசாயிகளின் வர்க்க உணர்வை விட சி.பி.எம். கட்சியின் பொதுச் செயலாளரின் வர்க்க உணர்வு பின் தங்கியுள்ளது மட்டுமல்ல. //

  பாட்டாளி வர்க்க உணர்வு பின் தங்கியிருக்கிறது என்று இல்லாத ஒன்றை சொல்ல வேண்டாம் வினவு! அவருக்கு முதலாளி வர்க்கத்திற்கு சேவை செய்யும் உணர்வு மேலாக இருக்கிறது என்று சொல்லலாம்.

 3. //சமரசவாத, தாராளவாத கருத்தாக்கத்துக்குள் புதைந்து போய் இருக்கிறது//

  இதற்கு பெயர் சமரசவாதம் அல்ல. அதற்கும் மேல்…. துரோகச் சிந்தனை!

  //கட்சியின், தலைமைப் பொறுப்பில் இருப்பவரது சிந்தனையின் வலதுசாரி சரிவை விட அதைக் கண்டு கொள்ளாமல் கண்டிக்காமல் இருக்கும் கட்சியின் நிலைதான் மேலும் அபாயகரமானது.//

  இப்போது தான் சரிந்ததா என்ன ! தலைமையின் நிலை எப்போதுமே இவை தானே.

 4. சி.பி.எம் கட்சியின் நேர்மையான அணிகளே உங்கள் தலைமையின் துரோகச் சிந்தனைக்கு எதிராக போராட வேண்டியது நீங்கள் தான் !

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க