விவசாயிகளைப் பெரிதும் பாதிக்கக்கூடிய, அவர்களைக் கலந்து ஆலோசிக்காமலேயே அவர்கள் மீது அழுந்த திணிக்கப்பட்டிருக்கும் மூன்று வேளாண் சட்டங்களையும் நீக்கக் கோரி நடந்து வரும் போராட்டம் இரண்டாவது மாதத்தை எட்டிவிட்டது. இது வரலாற்று முக்கியத்துவமிக்கது. வெறும் குறைந்தபட்ச ஆதார விலை பற்றியது மட்டுமல்ல, இப்போராட்டம். பொதுக் கொள்முதல் மற்றும் உணவுப் பொருள் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுக் கட்டமைப்பின் எதிர்காலம் பற்றியதுமாகும்.

நாட்டின் தானியக் களஞ்சியமான வட இந்தியாவின் உணவுப் பொருள் உற்பத்திப் பொருளாதாரரீதியாகத் தாக்குப்பிடிப்பதை உத்தரவாதப்படுத்தாமல், பொதுக் கொள்முதல் மற்றும் விநியோக முறை தொடர்வதை உத்தரவாதப்படுத்த முடியாது. (இக்கட்டமைப்பு பல்வேறு குறைபாடுகளைக் கொண்டிருந்தாலும், இதுதான் நாட்டின் மக்கள் தொகையில் பெரும்பாலோருக்குக் குறைந்தபட்ச உணவுப் பாதுகாப்பை வழங்கக் கூடியதாக உள்ளது)

காலனிய காலத்தை மீண்டும் உருவாக்குதல்

அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் நாடுகளை உள்ளடக்கிய வடக்கத்திய தொழிற்துறை நாடுகள், தத்தமது நாடுகளைச் சேர்ந்த நுகர்வோருக்குத் தேவைப்படும் அளவிற்கு வெப்ப மண்டல, துணை வெப்ப மண்டலப் பயிர்களை விளைவிக்க இயலாத அதேசமயத்தில், அந்நாடுகளிடம் பால் பொருட்களும், தானியங்களும் மலைபோல் உபரியாகக் குவிந்துள்ளன. அந்நாடுகளில் நிலவும் தட்பவெப்பச் சூழல் காரணமாக, அவர்களது ஒற்றைப் பயிர் நிலங்களில் இவற்றைத் தவிர வேறு எதுவும் விளையாது என்பதால், அந்நாடுகள் இந்த உபரியை விற்றுத் தீர்க்க ஏற்றுமதிச் சந்தையைக் கண்டுபிடித்தாக வேண்டும்.

(இதற்காக) வளரும் நாடுகள் தமது சொந்த பொதுக் கொள்முதல் முறையைக் கைவிட்டுத் தமக்குத் தேவையான உணவுப் பொருட்களை முன்னேறிய நாடுகளிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும், அதோடு, இந்தத் தொழிற்துறை நாடுகளால் விளைவிக்க முடியாத, அதேசமயம் அந்நாடுகளுக்குத் தேவைப்படும் பயிர்களை உற்பத்தி செய்து ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் அந்நாடுகள் தமது உணவுப் பொருள் உற்பத்தி செய்யும் நிலங்களை ஏற்றுமதிப் பயிர்களை விளைவிக்கக் கூடிய ஒப்பந்த விவசாயத்திற்கு மாற வேண்டும் என்றும் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தொழிற்துறை நாடுகள் வளரும் நாடுகளை இடைவிடாது தொடர்ச்சியாக நிர்பந்தித்து வருகின்றன. சுருங்கச் சொன்னால், காலனிய காலத்தில் நிலவிய பொருளாதாரச் சூழ்நிலையை மீண்டும் உருவாக்கி விட அந்நாடுகள் விரும்புகின்றன.

படிக்க : 
காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !
♦ மோடி அரசு: சர்க்கரை ஆலை அதிபர்களின் கூலிப்படை!

ஆசியாவின் பிலிப்பைன்ஸ் தொடங்கி ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா வரையிலும் பல பத்துக்கணக்கான நாடுகள் இந்த நிர்பந்தத்திற்கு அடிபணிந்தன. அமெரிக்காவும் ஐரோப்பிய யூனியன் நாடுகளும் தமது தானியங்களை எத்தனால் உற்பத்திக்குப் பெருமளவு திருப்பிவிட்ட அடுத்த ஒரு சில மாதங்களிலேயே, 2007-ம் ஆண்டின் இறுதியில் உலகச் சந்தையில் தானியங்களின் விலைகள் மும்மடங்காக உயர்ந்ததால், (மேற்குலக நாடுகளின் நிர்பந்தத்திற்குப் பணிந்து போன) மேற்கண்ட வளரும் நாடுகள் அதற்குரிய விலையைத் தந்தன. இறக்குமதியைச் சார்ந்து நின்ற 37 நாடுகளில் உணவுக் கலகங்கள் வெடித்ததோடு, அந்நாடுகளின் நகர்ப்புற ஏழைகள் கடுமையான பஞ்சப் பராரி நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

வளரும் நாடுகளின் உணவுப் பாதுகாப்பை உலகச் சந்தையிடம் ஒப்படைத்துவிடும் அளவிற்கு, அவ்விடயம் மிகவும் சாதாரணமானது அல்ல என்றபோதும், உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தும் அந்நாடுகளின் தானிய பொதுக் கொள்முதல்-சேமிப்பின் மீது இடைவிடாத தாக்குதல் தொடுப்பது தொடர்ந்தே வருகிறது. ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பு, இந்தியா இந்த அபாயத்தில் சிக்கிக் கொள்வதிலிருந்து ஏறத்தாழ தப்பித்துக் கொண்டது. 2008-க்கு முந்தைய ஆறு ஆண்டுகளாக மெய்யாகவே தேங்கிப் போயிருந்த கொள்முதல் விலைகள் குறிப்பிடத்தக்க அளவிற்கு உயர்த்தப்பட்டன.

பஞ்சாபில் தேங்கிப் போயிருந்த உணவு தானிய உற்பத்தி, பொருளாதாரம் சற்று முன்னேற்றம் அடைந்ததால், மீண்டும் வளர்ச்சி கண்டது. ஆனால், “வறுமைக் கோட்டுக்குக் கீழான” குடும்ப அட்டைகளைப் பெற முடியாதவாறு உண்மையான ஏழைகளுள் பலர் ஒதுக்கி வைக்கப்பட்டதாலும்; 2016 பணமதிப்பழிப்பு நடவடிக்கையும், அதனைத் தொடர்ந்து வந்த 2020 பெருந்தொற்று நோயும் உருவாக்கிய வேலைவாய்ப்பற்ற நிலையும் தற்போது ஒட்டுமொத்த நுகர்வை வரலாற்றில் காணாத அளவிற்குச் சுருக்கிவிட்டதாலும், (உற்பத்தி வளர்ச்சியடைந்த அளவிற்கு) உணவு தானியங்களை (ஏழைகள்) எடுத்துக் கொள்வதில் பெரிய முன்னேற்றம் காணப்படவில்லை.

நியாயமற்ற வர்த்தகச் சூழல்

எவ்விதமான காரணமும் இசைவும் இன்றி, நியாயமற்ற வர்த்தகத்திற்குள்,  சர்வதேச சந்தை விலையின் ஏற்றத் தாழ்வுகளுக்குள் நமது விவசாயிகள் தள்ளப்பட்டதோடு , அவை அவர்களை மீளமுடியாத கடன் வலைக்குள்ளும் துயரத்திலும் மூழ்கடித்தன. இதன் காரணமாக பஞ்சாபில் ஒரே கிராமத்தில் மட்டும் 59 விவசாயிகள் தற்கொலைக்கு தள்ளப்பட்ட அவலம் நேர்ந்தது. வடக்கத்திய தொழிற்துறை நாடுகளுடனான வர்த்தகம் நியாயமற்றதுதான்.

ஏனென்றால், அத்தொழிற்துறை நாடுகள் 1990-களின் மத்தியிலேயே தத்தமது நாடுகளில் வழங்கப்பட்டு வந்த ஆதரவு விலை நடவடிக்கைகளை, தமது விவசாயிகளுக்கு நேரடியாகவே பணம் வழங்கும் பிரம்மாண்டமான மானியங்களாக மாற்றிக் கொண்டதோடு, தமது சுயநலத்திற்குப் பயன்தரத்தக்க வகையில் அத்தகைய மானியங்களை எள்ளளவும் குறைக்கக் கோர முடியாத கடப்பாடுகளாகக் குறிப்பிட்டு விவசாய ஒப்பந்தத்தையும் உருவாக்கிக் கொண்டன.

மற்ற வளரும் நாடுகளோடு சேர்ந்து இந்தியாவும் இதன் பின்விளைவுகளைப் பற்றி அறியாமல் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அமெரிக்காவைப் பொருத்தவரை, அந்நாடு தனது இருபது இலட்சத்து இருபதாயிரம் விவசாயிகளுக்குக் கொடுக்கும் மானியம் என்பது, அந்நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் உற்பத்தி மதிப்பில் பாதிக்கும் மேலானது என்றாலும், அம்மானியம் அந்நாட்டின் பட்ஜெட் மதிப்பில் ஒரு சதவீதம்தான். இந்தியாவைப் பொருத்தவரை, நமது நாட்டின் 12 கோடி விவசாயிகளுக்கு, நமது நாட்டின் மொத்த விவசாய விளைபொருள் மதிப்பில் கால் பகுதியை மானியமாக அளிக்க வேண்டுமென்றால், மைய அரசு தனது பட்ஜெட்டில் ஏறத்தாழ 50 சதவீதத்தை இதற்காக ஒதுக்க வேண்டியிருக்கும். இது பொருளாதாரரீதியாகச் சாத்தியமற்றது என்பதோடு, நிர்வாகரீதியாக ஒரு பேய்க்கனவாகும்.

நியாயமான விலை குறித்த பிரச்சினை இது

சில்லறைத்தனமான பண உதவிகள் எதனையும் தாங்கள் விரும்பவில்லை என்பதை விவசாயிகள் மிகச் சரியாகவே தெளிவுபடுத்திவிட்டனர். நாட்டிற்காகத் தாங்கள் விளைவிக்கும் உயிராதாரமான பயிர்களுக்குச் செய்யப்படும் செலவுகளை ஈடுசெய்யக்கூடிய, பகட்டில்லாத எளிமையான வாழ்க்கையை வாழ்வதற்குத் தேவையான வருமானத்தைத் தரக்கூடிய நியாயமான விலை கிடைப்பதைத்தான் அவர்கள் கோருகிறார்கள். இந்தியச் சூழ்நிலையில், குறைந்தபட்ச ஆதார விலைதான் உண்மையில் நடைமுறை சாத்தியமானது. பஞ்சாபில் நிலத்தடி நீர் மட்டம் சரிந்துகொண்டே செல்வது உண்மையான பிரச்சினைதான் என்றபோதும், இதற்கான தீர்வு, அரிசி உற்பத்தியைப் பாதிக்காத, அதேசமயம் தண்ணீர்ப் பயன்பாட்டைச் சிக்கனமாக்கக்கூடிய, முன்னேறிய விவசாயத் தொழில்நுட்பங்களைப் பயன்பாட்டிற்குக் கொண்டுவருவதுதான். தலைவலியைக் குணப்படுத்துவதற்குத் தலையை வெட்டிக்கொள்ள முடியாதுதானே!

துல்லியமாகச் சொன்னால், பயிர்களுக்கு நிர்ணயிக்கப்படும் ஆதார விலைதான் உண்மையான பிரச்சினையாகும். அதனை, முன்னேறிய நாடுகள் தன்னிச்சையாகவும் அபத்தங்கள் நிறைந்த கணக்கீடுகளின் அடிப்படையிலும் விவசாய ஒப்பந்தத்தில் உள்நோக்கத்தோடு முன்வைத்துள்ளன. 1986-88-ம் ஆண்டில் உலகச் சந்தையில் ஒரு விவசாய விளைபொருளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டுதான் ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் என்ற முகாந்திரத்தைக் கொண்டு அமெரிக்கா மே 2018-ல் உலக வர்த்தகக் கழகத்தில் இந்தியாவிற்கு எதிராகப் புகார் ஒன்றைக் கொடுத்தது.

அப்பொழுது (1986-88) ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.12.50 தான். இதனை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் 2013-14 ஆம் ஆண்டில் ஒரு குவிண்டால் அரிசி மற்றும் கோதுமைக்கான குறைந்தபட்ச ஆதார விலையை முறையே ரூ.235, ரூ.354 ஆகத்தான் நிர்ணயிக்க முடியும். ஆனால், அவ்வாண்டில் அரிசிக்கும் கோதுமைக்கும் நிர்ணயிக்கப்பட்ட ஆதார விலை முறையே ரூ.1,348, ரூ.1,386. அமெரிக்காவின் புகார்படி பார்த்தால் ஒரு குவிண்டாலுக்கு ஏறத்தாழ ஆயிரம் ரூபாய் அதிகம். இந்த அபத்தமான கணக்கீடைக் கொண்டு அவ்வாண்டில் இந்தியாவில் விளைந்த மொத்த அரிசி, கோதுமை ஆகியவற்றின் மதிப்பைவிட, அரிசிக்கு 77 சதவீதம் அதிகமாகவும் கோதுமைக்கு 67 சதவீதம் அதிகமாகவும் ஆதார விலை அளிக்கப்பட்டிருப்பதாக இந்தியா மீது புகார் கொடுத்த அமெரிக்கா, இவ்வுயர்வு, 1986-88 ஆம் ஆண்டில் உலகச் சந்தையில் நிலவிய சராசரி விலையைவிட 10 சதவீதம் கூடுதலாக ஆதார விலையை நிர்ணயிக்கலாம் என்ற உலக வர்த்தகக் கழகத்தின் விதிகளுக்கு முரணானது என வாதிட்டது.

படிக்க :
♦ விவசாயிகள் வாழ்வை அழிக்கும் G-9 வாழை விவசாயம் !
♦ பி.டி. கத்திரிக்காய், இது முத்தாது… குத்தும் !!

அமெரிக்கா, இது தொடர்பாக மேலும் பல புதிய கேள்விகளை இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்தியாவிற்கு அனுப்பி வைத்திருக்கிறது. எளிதில் ஏமாறக்கூடிய வளரும் நாடுகளுக்குப் பெரிய நன்மைகள் கிடைக்காத வகையில் அறக்கேடான, அபத்தமான விதிகள் விவசாய ஒப்பந்தத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன. மிகக் குறைந்த விலையில் விவசாய விளைபொருட்களை உற்பத்தி செய்யும் நாடுகளுள் இந்தியாவும் ஒன்று. 2013-14 ஆம் ஆண்டில் ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.60.50 என்றிருந்ததைக் கணக்கில் கொண்டால், அன்று தரப்பட்ட ஆதார விலை உலகச் சந்தையில் நிலவிய விலையைவிட மிகக் குறைவானதாகும் என்பதோடு, அந்த ஆதார விலையின் உண்மை மதிப்பு பூஜ்யத்திற்குக் கீழானதாகும்.

சரியான மதிப்பீடு

சர்வதேச நுகர்வில் தற்போது ஏற்பட்டிருக்கும் சுருக்கம் என்பது அரிசி, கோதுமையின் விலைகள் வரலாறு காணாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துவிட்டதையும்; முன்னேறிய நாடுகள் தமது விவசாயத்திற்கு வழங்கிவரும் மானியங்கள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்திருப்பதையும்; அந்நாடுகள் தமது விளைபொருட்களை நமது சந்தைகளில் கொட்டுவதற்கு எதையும் செய்யக்கூடிய அவர்களது வெறித்தனம் தீவிரம் அடைந்திருப்பதையும் எடுத்துக்காட்டுகிறது. தாம் எதிர்க்கும் இப்புதிய வேளாண் சட்டங்களால் பலனடையும் திறன் கொண்டவை உள்நாட்டு நிறுவனங்கள்தான் என்பதை நமது போராடும் விவசாயிகள் மிகச் சரியாக அடையாளம் காட்டியிருக்கும் அதேசமயம், அந்நிய வேளாண் தொழிற்கழகங்களும் மீப்பெரும் அபாயகரமானவைதான்.

பஞ்சாபிலும் அரியானாவிலும் அந்திய வேளாண் தொழிற்கழங்களோடு போட்டுக்கொள்ளப்பட்ட ஒப்பந்த விவசாயத்தின் இலாப நட்டங்களை விவசாயிகள் ஏற்கெனவே அனுபவித்திருக்கின்றனர். தமக்கு உகந்தது என்றால் ஒப்புக்கொள்ளப்பட்ட விலையைத் தரவும் ஒப்புக்கொள்ளப்பட்ட கொள்முதலைச் செய்யவும் மறுத்து பின்வாங்கிக் கொள்ளும் முகமற்ற, அதிகாரம் படைத்த தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களோடு தாம் வியாபாரம் செய்ய விரும்பவில்லை என்பதை அவர்கள் தெளிவாகவே கூறிவருகிறார்கள்.

பணம் வழங்குவதில் தாமதம் மற்றும் செயல் திறமையற்ற தன்மை உள்ளிட்ட குறைபாடுகள் இருந்தாலும், குறைந்தபட்ச ஆதார விலையில் அடிப்படையில் அரசின் முகவர்களிடம் விற்பதைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள். இப்புதிய சட்டங்கள் சந்தையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்த்தி, இந்திய மற்றும் அந்நிய நிறுவனங்களைச் சந்தையில் நுழைய அனுமதிப்பதால், பொதுக் கொள்முதல் மற்றும் குறைந்தபட்ச ஆதார விலை என்ற கட்டமைப்பே சீர்குலைந்துவிடும் என அவர்கள் எண்ணுவது மிகச் சரியானதுதான்.

பசுமை ஆற்றலை முன்னிலைப்படுத்துவது

வடக்கத்திய நாடுகளிடமிருந்து மானியம் அளிக்கப்பட்ட தானியங்களை இறக்குமதி செய்வது இந்திய ஏழை நுகர்வோருக்குப் பலன் அளிக்கும் என இந்தியாவைச் சேர்ந்த பல அறிவுத்துறையினரும் வாதிட்டு வருகின்றனர். முன்னேறிய நாடுகளில் பசுமை ஆற்றலுக்கு ஆதரவாகவும் எத்தனால் உற்பத்திக்கு மென்மேலும் அதிக தானியங்களை ஒதுக்க வேண்டும் என்றும் பலம் வாய்ந்த குரல்கள் ஒலிப்பதை இவர்கள் மறந்துவிடுகின்றனர்.

தொடக்கத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் தானியங்களை இறக்குமதி செய்வதை இன்று அனுமதித்தால், அது நமது விவசாயிகளை மட்டும் நாசமாக்கிவிடாது. இறக்குமதியை நம்பியிருக்குமாறு தள்ளப்பட்ட பல்வேறு வளரும் நாடுகள் அனுபவித்ததைப் போன்ற, விலை உயர்வு மற்றும் நகர்ப்புற வறுமைத் துயர் ஆகிய சூழ்நிலைக்கும் விரைவாகவே வழி வகுக்கும். கடினமாக உழைக்கும் நமது விவசாயிகள் மற்றும் வறிய நுகர்வோர் ஆகியோர் மீது அக்கறை கொண்டுள்ள எவரும், உள்நாட்டு மற்றும் அந்நிய தொழிற்துறை மேட்டுக்குடிகளின் சூழ்ச்சிகளுக்கு எதிரான விவசாயிகளின் கோரிக்கைகளைக் கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்.


கட்டுரையாளர்: உத்சா பட்நாயக்
தமிழாக்கம் :  அறிவு

நன்றி : ஆங்கில இந்து, டிசம்பர் 30, 2020

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க