குப்புறத் தள்ளிய குதிரை குழியும் பறித்த கதையாக, ஊரடங்கால் தமது விளைபொருட்களை விற்க முடியாமல் பெரும் நட்டத்தைச் சந்தித்த இந்திய விவசாயிகள் மீது வேளாண் சந்தை சீர்திருத்தம் என்ற பெயரில் அடுத்த இடியை இறக்கியிருக்கிறது, மோடி அரசு.

அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் இவைதான் மோடி அரசால் அவசர அவசரமாக அறிவிக்கப்பட்டிருக்கும் சீர்திருத்தங்கள்.

அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தில் கொண்டுவரப்பட்டிருக்கும் சீர்திருத்தத்தின் முக்கிய இலக்கு ரேஷன் பொருள் விநியோகம்தான்.

உணவுப் பொருட்கள் பதுக்கப்படுவதையும், செயற்கையாக விலை உயர்த்தப்படுவதையும் தடுக்கும் நோக்கில் 1955 கொண்டுவரப்பட்டு, இன்றுவரை நடைமுறையில் இருந்துவரும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திலிருந்து வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பயறு வகைகள் ஆகியவற்றுக்கு விலக்கு அளித்து அச்சட்டம் திருத்தப்பட்டிருக்கிறது. இத்திருத்தத்தால், உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள், ஏற்றுமதியாளர்கள், பெருவியாபாரிகள் உள்ளிட்டோர் இனி இவ்வுணவுப் பொருட்களை எவ்விதக் கட்டுப்பாடும் இன்றித் தமது தேவைக்கு அல்லது உற்பத்தித் திறனுக்கு ஏற்ப வாங்கிச் சேமித்து வைத்துக் கொள்ள முடியும்.

பஞ்சம் அல்லது தேசியப் பேரிடர் ஏற்படும் காலங்களில் இத்திருத்தம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும் எனக் கூறப்பட்டாலும், அத்தகைய நெருக்கடியான காலங்களிலும்கூட ஏற்றுமதியாளர்கள் மற்றும் உணவு பதப்படுத்தும் தொழில் நிறுவனங்கள் மீது எவ்விதமான கட்டுப்பாடும் விதிக்கப்படாது என்றும் தெளிவுபடுத்தியிருக்கிறது, மைய அரசு.

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சட்டத்திலிருந்து வெறும் ஆறு உணவுப் பொருட்களுக்குத்தானே விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என இந்தத் திருத்தத்தை எளிதாகக் கடந்துபோய்விட முடியாது. வட இந்திய ஏழைகள் மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தைப் பொருத்தவரை சப்பாத்தியோடு வெங்காயமும் உருளைக்கிழங்கும்தான் அவர்களின் அன்றாட உணவு. தமிழகத்திலும்கூட கஞ்சிக்குத் தொட்டுக்கொள்ள வெங்காயம் இருந்தால் போதுமானது. இத்தகைய சாமானிய மக்களின் உணவுப் பொருளான வெங்காயம் இத்திருத்தத்தின் மூலம் சந்தை சூதாடிகளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.

எண்ணெய் வித்துக்கள் உற்பத்தியில் இந்தியா இன்னமும் தன்னிறைவு அடையவில்லை. எண்ணெய் வித்துக்கள் மற்றும் சமையல் எண்ணெய் தேவைக்கு இந்தியா பெரிதும் இறக்குமதியைத்தான் சார்ந்து இருக்கிறது. இந்நிலையில் அவையிரண்டும் அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்திலிருந்து விலக்கப்பட்டிருப்பதன் விளைவு எதிர்மறையாகவே அமையும்.

வேளாண் உற்பத்திப் பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம், வேளாண் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதை ஒழுங்குபடுத்தும் மாநில அரசுகளின் அதிகாரத்தை ஏறத்தாழ ரத்து செய்துவிட்டிருக்கிறது. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை, ஒரே நாடு ஒரே கல்வித் திட்டம் என்ற வரிசையில் ஒரே நாடு ஒரே வேளாண் சந்தை என்பதை முன்னிறுத்துகிறது, இந்த அவசரச் சட்டம்.

இந்திய விவசாயிகள் தமது பகுதியிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தின் மூலம்தான் தமது விளைபொருட்களை விற்க முடியும் என்ற கட்டுப்பாடை அடியோடு ரத்து செய்யும் இந்த அவசரச் சட்டம், இனி, விவசாயிகள் தமது விளைபொருட்களை ஒழுங்குமுறை விற்பனைக் கூட வரம்புகள், மாநில வரம்புகளையும் தாண்டி இந்தியாவின் எந்தப் பகுதியிலும் விற்றுக் கொள்ளும் சுதந்திரத்தைப் பெறுவதாகப் பீற்றிக் கொள்கிறது. தமது விளைபொருட்களுக்கு எங்கு நல்ல விலை கிடைக்கிறதோ அங்கே விற்றுக் கொள்ளும் வாய்ப்பை இச்சட்டம் விவசாயிகளுக்கு வழங்குவதால், அவர்களின் வருமானம் அதிகரிக்கும் என ஆருடம் கூறுகிறது.

தமது விளைபொருட்களுக்கு உள்ளூரிலேயே கட்டுபடியாகக்கூடிய விலை கிடைப்பதை உத்தரவாதப்படுத்துங்கள் என விவசாயிகள் கோரிவரும் வேளையில், மோடியோ நல்ல விலை கிடைக்க அகில இந்திய சந்தைக்கு வாருங்கள் என அழைக்கிறார். தேவனின் ராஜ்ஜியம் நெருங்கி வருவதாகக் கூறி ஆறுதல்படுத்தும் மத போதனைக்கும் மோடியின் தேசிய அழைப்புக்கும் வேறுபாடு உண்டா?
தானிய வியாபாரிகள் உள்ளூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பதிவு செய்திருக்க வேண்டும், மாநில அரசு வழங்கும் உரிமத்தைப் பெற்றிருக்க வேண்டும் என்ற கட்டுப்பாடுகளையும் ரத்து செய்யும் இந்த அவசரச் சட்டம், பான் கார்டை மட்டுமே ஒரே உரிமமாக அங்கீகரிக்கிறது. பான் கார்டு வைத்திருக்கும் எந்தவொரு தானிய வியாபாரியும் இந்தியாவின் எந்தவொரு பகுதியைச் சேர்ந்த விவசாயிடமிருந்தும் நேரடியாகவே தானியங்களைக் கொள்முதல் செய்துகொள்ள அனுமதிக்கிறது, இந்த அவசரச் சட்டம். பா.ஜ.க.வின் உறுப்பினர் அட்டை வைத்திருந்தால் போதும் எனச் சொல்லாமல் விட்டாரே மோடி, அதுவரையில் விவசாயிகள் தப்பித்தார்கள்.

விவசாயிகளுக்கான விலை உத்தரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் என்ற நீளமான பெயர் கொண்ட இந்தச் சட்டத்தைச் சுருக்கமாக இரண்டே வார்த்தைகளில் சொன்னால், அதன் பெயர் ஒப்பந்த விவசாயச் சட்டம். பல்வேறு மாநில அரசுகளும் ஒப்பந்த விவசாயத்திற்கெனத் தனித்தனி சட்டங்களை இயற்றியிருக்கும் நிலையில், அவற்றுக்கெல்லாம் மேலான மத்திய சட்டமாக இதனை இயற்றியிருக்கும் மோடி அரசு, இதற்கு ஏற்றபடி மாநில அரசுகள் தமது சட்டங்களைத் திருத்த வேண்டும் எனக் கட்டளையிட்டிருக்கிறது.

***

பொருளாதார நெருக்கடியாலும், கரோனா பரவலைக் காட்டித் திணிக்கப்பட்ட ஊரடங்காலும் பாதிக்கப்பட்டிருக்கும் குறு, சிறு, நடுத்தர விவசாயிகள் யாரும் இந்த வகையான சீர்திருத்தங்களைக் கோரவில்லை. மாறாக, அவர்கள் அடுத்த பட்டத்திற்கான வேளாண் நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு நிதியுதவி கோரினார்கள். கடன் தள்ளுபடி கோரினார்கள். மிக முக்கியமாக, அரசின் தானியக் கொள்முதலை அதிகரிக்கக் கோரினார்கள். எம்.எஸ்.சுவாமிநாதன் அறிக்கையின்படி, விளைபொருட்களுக்கு 50 சதவீத இலாபம் தரும்படிக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.

அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்யக் கோரி பல்வேறு விவசாயிகள் சங்கத்தினர் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

மோடி அரசு அறிவித்திருக்கும் 20 இலட்சம் கோடி ரூபாய் பெறுமான பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் விவசாயிகளின் இக்கோரிக்கைகளுள் ஒன்றுகூட இடம் பெறவில்லை. விவசாயக் கடன் அட்டை மூலம் கடன் பெற இரண்டு இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, உணவுப் பொருட்களைச் சேமித்து வைக்கவும், பதப்படுத்தி வைக்கவுமான உள்கட்டுமான திட்டங்களுக்கு ஒரு இலட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு மற்றும் இந்த மூன்று அவசரச் சட்டங்கள் இவைதான் மோடி அறிவித்திருக்கும் விவசாய மீட்பு நடவடிக்கைகள்.

இவற்றுக்கு அப்பால், நெல், கோதுமை உள்ளிட்ட பயிர்களுக்கு இந்த ஆண்டிற்கான குறைந்தபட்ச ஆதார விலை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன்படி ஏ கிரேடு நெல்லுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச ஆதார விலை ரூ.1,888/ இந்த விலை கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது (ரூ.1,835) ஐம்பத்து மூன்று ரூபாய் மட்டுமே அதிகம். அதாவது, ஒரு கிலோ நெல்லுக்கு 53 பைசா உயர்த்தப்பட்டிருக்கிறது. நெல் விவசாயத்திற்கான உள்ளீடு பொருட்களின் விலையும், மற்ற விலைவாசியும் கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த அளவுக்குத்தான் உயர்ந்திருக்கிறதா?

நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக 2,400 ரூபாய் தர வேண்டும் எனத் தமிழக விவசாயிகள் கோரி வரும் நிலையில், அதனைவிட 5௦௦ ரூபாய் குறைவாக ஆதார விலையை நிர்ணயம் செய்துவிட்டு, 2022 ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போவதாகத் தம்பட்டம் அடித்துவருகிறார், மோடி. கேப்பையிலிருந்து நெய் வடியப் போகிறதாம், நம்புங்கள் மக்களே!

நெல், கோதுமை உள்ளிட்ட 24 வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை மைய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், நெல், கோதுமையைத் தவிர மற்ற வேளாண் பொருட்களை இந்திய உணவுக் கழகம் நேரடியாகக் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வதில்லை. இவையிரண்டிலும்கூட விளைச்சல் முழுவதையும் அரசு கொள்முதல் செய்வது கிடையாது. வேளாண் பொருட்களை, அரசைவிடத் தனியார்தான் அதிகளவில் கொள்முதல் செய்து இருப்பு வைத்துக் கொள்வது நடைமுறையில் உள்ளது.

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படுவதன் நோக்கம், அந்த விலைக்குக் கீழாக வேளாண் பொருட்களைத் தனியார் கொள்முதல் செய்யக்கூடாது என்பதுதான். எனினும், விவசாயிகளின் அனுபவம் எதிர்மறையாகத்தான் இருந்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் 24 வேளாண் பொருட்களுக்கே, வெளிச் சந்தையில் அவ்விலை கிடைப்பது குதிரைக் கொம்புதான் எனும்போது, மற்ற விளைபொருட்களைப் பற்றிச் சொல்லத் தேவையில்லை.

இவ்வாறான நிலையில் எந்த வகையான சீர்திருத்தங்களை மைய அரசு மேற்கொண்டிருக்க வேண்டும்? குறைந்தபட்சமாக, விவசாயிகள் கோரி வருகிறபடி 50 சதவீதம் இலாபம் தரத்தக்க வகையில் வேளாண் பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்திருக்க வேண்டும். நெல், கோதுமை மட்டுமின்றி, மற்றைய அத்தியாவசிய உணவுப் பொருட்களையும் கொள்முதல் செய்வதற்கும் விநியோகம் செய்வதற்கும் ஏற்றபடி இந்திய உணவுக் கழகத்தின் கட்டமைப்பையும் விதிகளையும் மாற்றி அமைத்திருக்க வேண்டும். அரசு நிர்ணயிக்கும் அல்லது விவசாயிகள் தீர்மானிக்கும் விலை வெளிச்சந்தையில் கிடைப்பதை உத்தரவாதம் செய்யக்கூடிய கண்காணிப்பு அமைப்புகளை உருவாக்கியிருக்க வேண்டும். குறிப்பாக, இத்தகைய அமைப்புகளில் விவசாயிகளின் பிரதிநிதிகளுக்கு அதிகாரம் அளிக்கக்கூடிய சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். இந்த வகையான சீர்திருத்தங்கள்தான் விவசாயிகளின் வருமானத்தை உத்தரவாதப்படுத்துவதோடு, இந்திய மக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை வழங்கும்.

இவற்றுக்கு மாறாக, மோடி அரசு கொண்டுவந்திருக்கும் வேளாண் சந்தை சீர்திருத்தங்கள், விவசாயியின் வயிற்றில் அடித்துக் கொள்முதல் செய்து வரும் தனியாரின் நேர்மையற்ற வர்த்தக நடவடிக்கைகளைச் சட்டபூர்வமாக்கவே பயன்படும். மேலும், பதுக்கல், கள்ள வியாபாரத்தின் மூலம் உணவுப் பொருட்களின் விலைகளைச் செயற்கையாக உயர்த்திப் பொதுமக்களைக் கொள்ளையடிப்பதற்கும் தனியாருக்கு முழுச் சுதந்திரம் வழங்கும்.

***

ந்தச் சீர்திருத்தங்களால் விவசாய அடிக்கட்டுமான திட்டங்களில் குறிப்பாக, குளிர்பதனக் கிடங்குகளை அமைப்பது உள்ளிட்டவற்றில் தனியார் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் மூலதனமிட முன்வருவார்கள். அதனால், விவசாய விளைபொருட்களைச் சேமித்து வைத்து, நல்ல விலை கிடைக்கும் நேரத்தில் விற்பனை செய்யும் வாய்ப்பு விவசாயிகளுக்குக் கிடைப்பதோடு, அவர்களது விளைபொருட்கள் அழுகி வீணாவது தடுக்கப்படும் என்ற தேன் தடவிய வாதங்களாலும் இத்தனியார்மய அபாயம் மூடிமறைக்கப்படுகிறது.

ஒவ்வொரு பட்ஜெட்டிலும்கூடக் குளிர்பதனக் கிடங்குகளை உருவாக்குவது உள்ளிட்ட விவசாய அடிக்கட்டுமான திட்டங்கள் குறித்துப் பேசப்பட்டாலும், அவையெல்லாம் சம்பிரதாயமான பட்ஜெட் உரை என்பதைத் தாண்டி நடைமுறையில் ஒரு குண்டுமணி அளவிற்குக்கூட விவசாயிகளுக்குப் பலன் அளிக்கவில்லை.

உருவாக்கப்பட்டிருக்கும் குளிர்பதனக் கிடங்கு, சேமிப்புக் கிடங்குகளெல்லாம் வியாபாரிகளுக்குத்தான் பெருமளவு பயன்படுகிறதேயொழிய, விவசாயிகளுக்குப் பயனளிக்கவில்லை என்கிறார், தமிழகத்தைச் சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதி தூரன் நம்பி.

விவசாயத் துறையில் தனியார் பங்களிப்பை ஈர்க்கும் நோக்கில் செய்யப்படும் சீர்திருத்தங்கள் அனைத்தும் ஏற்கெனவே இருப்பதையும் அழிப்பதாகவே முடிகின்றன எனக் குறிப்பிடும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் துறையைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் ஹிமான்சு, இதற்கு உதாரணமாக பீகார் அனுபவத்தை எடுத்துக்காட்டுகிறார்.

2006 ஆண்டிலேயே வேளாண் பொருட்கள் விற்பனை கமிட்டிக் கூடங்களையும், அது தொடர்பான சட்டங்களையும் ரத்து செய்த பீகார் அரசு, அந்த இடத்தைத் தனியார் முதலீடு நிரப்பும் என நியாயப்படுத்தியது. இதன் பின் கடந்த பதினான்கு ஆண்டுகளில் நடந்தது என்னவென்றால், புதிய சந்தைகள் எதையும் தனியார் உருவாக்கவில்லை என்பதோடு, பீகார் மாநில அரசால் நடத்தப்பட்டு வந்த 54 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களும் முறையான பராமரிப்பு இன்றிச் சிதலமடைந்தன. இது மட்டுமின்றி, 54 ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களின் வழியாக அரசிற்குக் கிடைத்து வந்த வருமானமும் நின்றுபோனது. இதனால், இவ்வருமானத்தின் மூலம் கிராமப்புற சாலைகளைப் பராமரிப்பது உள்ளிட்ட விவசாயம் சார்ந்த அடிக்கட்டுமானத் திட்டங்களைச் செயல்படுத்துவதும் முற்றிலுமாக முடங்கிப் போனது.

இன்னொருபுறத்தில், கள்ளச் சந்தைக்கு இணையான எவ்வித விதிமுறைகளுக்கும் கட்டுப்படாத சட்டவிரோதமான தனியார் சந்தைகள் பீகார் எங்கும் பெருகியதோடு, அச்சந்தைகளை நடத்துகின்ற அரசியல் ஆதரவு பெற்ற மாஃபியா கும்பலால் விவசாயிகளும், வர்த்தகர்களும் சந்தைக் கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிக்கப்படுவது நடைமுறைக்கு வந்தது என்கிறார் ஹிமான்சு. (இந்து, மே 25, 2020)

பீகார் அரசு வேளாண் பொருட்கள் விற்பனைக் கூடங்களைக் கைகழுவிய பிறகு, அம்மாநிலத்தின் காய்கறிகள் மற்றும் பழச் சந்தை முற்றிலுமாகத் தனியார் கைக்குச் சென்றுவிட்டதாகவும்; அம்மாநில விவசாயிகளிடமிருந்து குறைந்தபட்ச ஆதார விலைக்கும் குறைவாக வேளாண் விளைபொருட்களைக் கொள்முதல் செய்யும் தனியார் வியாபாரிகள், அப்பொருட்களை பஞ்சாப், அரியானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்பதாகவும் குறிப்பிடுகிறார், அகமதாபாத், இந்திய மேலாண்மைக் கழகப் பேராசிரியர் சுக்பால் சிங். (பிரண்ட்லைன், ஜூன் 19, 2020)

பீகார் அனுபவத்திலிருந்து பார்த்தால், மோடி அறிவித்திருக்கும் சீர்திருத்தங்களால் தனியார் முதலீடு வருகிறதோ இல்லையோ, தனியார் கொள்ளை சட்டபூர்வமாகவும், சட்டவிரோதமாகவும் பெருகும்; தனியார் முதலாளிகளாலும், அரசியல் மாஃபியாக்களாலும் விவசாயிகள் சுரண்டப்படுவது இரட்டிப்பாகும் என நிச்சயமாகக் கூற முடியும்.

***

னியார்மயம் நடைமுறைக்கு வந்த காலந்தொட்டே அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டத்தையும், நெல், கோதுமை உள்ளிட்ட 24 விவசாய விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்பட்டு வருவதையும் முற்றிலுமாகக் கைவிட வேண்டுமென மேற்குலக ஏகபோக உணவுக் கழகங்களும், இந்தியத் தரகு முதலாளிகளும், ஏற்றுமதியாளர்களும் கோரி வந்தனர். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகவே இவற்றைக் கைவிடுவதற்கு இந்திய ஆளும் வர்க்கமும், ஆட்சியாளர்களும் பல்வேறு வழிகளில் முயன்று வந்தனர்.

மோடி பிரதமராகப் பதவியேற்ற பிறகு, நாடெங்கும் ஒரே வேளாண் சந்தையை உருவாக்கும் திட்டத்தோடு வேளாண் விளைபொருள் மற்றும் கால்நடை விற்பனை மாதிரிச் சட்டத்தை 2017 ஆண்டு கொண்டு வந்தார். அதனைத் தொடர்ந்து ஒப்பந்த விவசாயம் மற்றும் சேவைகள் சட்டத்தை மாநில அரசுகள் இயற்ற வேண்டுமென நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. மேலும், மாநில ஒழுங்குமுறை விற்பனைக் கூட வரம்புகளைப் புறந்தள்ளக்கூடிய வகையில் மின்னணு தேசிய விவசாய சந்தை கட்டமைப்பு உருவாக்கப்பட்டது.

காங்கிரசு, தனது 2019 ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையில் வேளாண் பொருள் விற்பனைக் கூடச் சட்டத்தை ரத்து செய்வது; வேளாண் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் மாநிலங்களுக்கு இடையே வர்த்தகம் செய்வது ஆகியவற்றில் காணப்படும் தடைகளை நீக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்தது. காங்கிரசு அளித்த வாக்குறுதிகளை ஆட்சியைப் பிடித்த மோடி நிறைவேற்றிக் கொடுத்திருக்கிறார்.
தனித்தனியான இந்த மூன்று சட்டங்களின் நோக்கம் ஒன்றுதான். அதாவது, உணவுப் பொருட்கள் உற்பத்தி, அப்பொருட்களுக்கான விலை நிர்ணயம் மற்றும் கொள்முதல், சேமிப்பு ஆகியவற்றைத் தீர்மானிப்பதிலிருந்து அரசு படிப்படியாக விலகிக்கொண்டு, அப்பொறுப்பை கார்ப்பரேட் உணவுக் கழகங்கள், ஏற்றுமதியாளர்களிடம் ஒப்படைப்பதுதான்.

நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தித் தரக் கோரி கும்பகோணம் நகரில் காவிரி பாதுகாப்பு விவசாயிகள் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டம். (கோப்புப் படம்)

ஒவ்வொரு பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையின் பின்னும் அரசு தனது சமூகப் பொறுப்புகளிலிருந்து கழண்டு கொள்வதைக் கடந்த முப்பதாண்டுகளாகப் பார்த்து வருகிறோம். இந்த வேளாண் சீர்திருத்தங்களின் விளைவும் அதுவாகத்தான் இருக்கும். குறிப்பாக, நெல்லையும் கோதுமையையும் இந்திய உணவுக் கழகம் கொள்முதல் செய்து இருப்பு வைப்பது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, இறுதியில் கைகழுவிவிடும் நிலை ஏற்படும். வேளாண் விளைபொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்துவரும் அரசின் நடைமுறை கைவிடப்படும். இவை இரண்டும் உலக வர்த்தகக் கழகத்தின் நிகழ்ச்சி நிரலில் ஏற்கெனவே இருந்து வருவதை நினைவில் கொண்டால், இந்தச் சீர்திருத்தங்கள் தற்போதுள்ள உணவுப் பாதுகாப்பையும், விலைக் கட்டுப்பாடையும் முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவதை நோக்கித்தான் செல்லும்.

பஞ்சம் அல்லது தேசியப் பேரிடர் ஏற்படும் காலங்களில் இத்திருத்தம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்படும் எனக் கூறப்படுவதெல்லாம் பம்மாத்துதான். ஊரடங்கு காலத்தில் சமையல் எண்ணெய் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலைகள் உயர்ந்தபோது, மோடியின் கைகள் எதைப் பறித்துக் கொண்டிருந்தன? அத்தியாவசிய உணவுப் பொருள் சட்டம் நடைமுறையில் இருக்கும்போதே இதுதான் நிலைமை என்றால், இச்சட்டத் திருத்தத்தால் உணவுப் பொருட்களின் விலைகள் எந்தளவிற்கு உயரக்கூடும் என்பதை எண்ணிப் பார்ப்பதே நடுக்கமூட்டுவதாக உள்ளது.
எனவே, இந்த அவசரச் சட்டங்கள் விவசாயிகளுக்கும் ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருட்களை நம்பிவாழும் ஏழைகளுக்கும் மட்டும் பாதகமாக அமையப் போவதில்லை. அரசின் கட்டுப்பாடின்றி உணவுப் பொருட்களின் விலையைத் தனியார் மட்டுமே தீர்மானிக்கும் நிலை ஏற்படும்போது நடுத்தர மக்களும்கூடப் பாதிக்கப்படும் நிலைமை கண்டிப்பாக உருவாகும்.

பணமதிப்பழிப்பு நடவடிக்கை போலவே, ஊரடங்கு போலவே, இந்த மூன்று சீர்திருத்தங்களையும் மோடி அரசு அவசரச் சட்டங்களாக அறிவித்து நடைமுறைக்குக் கொண்டுவந்துவிட்டது. நாடாளுமன்றம், மாநிலங்களின் உரிமை ஆகியவற்றையெல்லாம் மோடி ஒரு பொருட்டாக மதிப்பதில்லை என்பதற்கு இந்த அவசரச் சட்டங்கள் இன்னுமொரு எடுத்துக்காட்டு. அதிகாரத் திமிரும் முதலாளித்துவ இலாப வெறியும் கொண்ட ஒரு பாசிஸ்டின் கையில் நாடு சிக்கிக்கொண்டிருப்பதை இந்த அவசரச் சட்டங்களின் அமலாக்கம் எடுத்துக்காட்டுகிறது.

இன்று நம்முன் உள்ள பிரச்சினை மோடியின் தலைமையில் அதிகாரத்தில் அமர்ந்துள்ள இந்த கார்ப்பரேட் பாசிச கும்பலை எப்படித் தோற்கடிப்பது என்பது மட்டுமல்ல. மக்களுக்கு எதிரான தனியார்மயம் என்ற பொருளாதாரக் கொள்கையை எப்படித் தோற்கடிப்பது, அதற்கு மாற்றாக எதை முன்வைப்பது என்பதும்தான்.
பா.ஜ.க. மட்டுமின்றி, காங்கிரசு உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளும் தனியார்மயத்தை ஆதரிக்கும் கட்சிகளாகவே உள்ளன. எனவே, அடுத்துவரும் தேர்தலோ, இந்தக் கட்சிக்கு மாற்றாக அந்தக் கட்சிக்கு வாக்களிப்பதோ, தனியார்மயம் உருவாக்கியுள்ள துயரங்களுக்கு நிரந்தரமான தீர்வாக, மாற்றாக இருக்க முடியாது.

மாறாக, உழைக்கும் மக்களுக்குப் பொருளுற்பத்தியிலும், அதன் விலையை நிர்ணயம் செய்வதிலும், விநியோகத்திலும் அதிகாரம் அளிக்கக்கூடிய ஒரு புதிய சமூக, பொருளாதார, அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது மட்டும்தான் இதற்கு ஒரே தீர்வு. அத்தகைய கட்டமைப்பை மந்திரத்தால் அல்ல, உழைக்கும் மக்கள் அமைப்பாகத் திரண்டு போராடுவதன் வழியாகத்தான் உருவாக்க முடியும்.

– ரஹீம்
புதிய ஜனநாயகம், ஜூலை 2020.

1 மறுமொழி

  1. எல்லாமே தனியாறே பார்த்து கொண்டால் அரசு என்னதான் வேலை செய்யும்.எதையும் நிர்வகிக்க திறமை இல்லையென்றால் கம்முனு பதவி விலகிட வே ன்ன்டியது தானே…

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க