Wednesday, December 11, 2024
முகப்புஉலகம்அமெரிக்காகாட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !

காட்டாமணக்கின் பெயரில் ஒரு ஏகாதிபத்திய சதி !

-

மாற்றுப் பயிர் – மாற்று எரிபொருள்:
ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் ஏகாதிபத்திய சதி!

காட்டாமணக்கு சாலையோரங்களில் கேட்பாரின்றி வளரும் புதர்செடி. கிராமங்களில் இதனை வேலியாக நட்டு வைப்பதுண்டு. அதன் நச்சுத் தன்மையை ஆடுமாடுகள் கூட அறிந்திருப்பதால், இச்செடியை முகர்ந்து கூட பார்க்காமல் விலகிச் சென்று விடும். அப்பேர்ப்பட்ட நச்சுச் செடியான காட்டாமணக்கைப் பயிரிட்டு பணம் சம்பாதியுங்கள் என்ற ஆட்சியாளர்கள் விளம்பரப்படுத்தி வருகின்றனர்.

Jatropha
காட்டாமணக்கு

மயிலாடுதுறையை சவூதி அரேபியாவாக மாற்றிக் காட்டப் போவதாக தேர்தல் வாக்குறுதி அளித்த மைய அமைச்சர் மணிசங்கர் அய்யர், நெல் பயிரிடுவதை விட்டு மாற்றுப் பயிர் முறைக்கு மாறச் சொல்லி விவசாயிகளுக்கு உபதேசிக்கிறார். 2004-ஆம் ஆண்டிலேயே தஞ்சை மாவட்டத்தில் மக்காச்சோளமும், காட்டாமணக்கும் பயிரிட்டு விவசாயத்தை முன்னேற்றத் திட்டம் தீட்டினார், அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா. வேளாண் விஞ்ஞானியான எம்.எஸ்.சுவாமிநாதன், காட்டாமணக்கும் மக்கா சோளமும் பயிரிட்டு ஏற்றுமதி செய்ய சிறப்பு விவசாய மண்டலங்களை நிறுவ வேண்டும் என்று ஆலோசனை கூறுகிறார்.

விவசாயத்தையும் விவசாயிகளையும் முன்னேற்றி விடுவதில் ஆட்சியாளர்களும் அறிவாளிகளும் இவ்வளவு அக்கறை காட்டுகிறார்களே; ஒருவேளை, நாட்டு மக்களாகிய நாம்தான் இன்னமும் பத்தாம்பசலித்தனமாக இருக்கிறோமோ என்று எண்ணிக் கொண்டோம். அது ஒருபுறமிருக்கட்டும். ஆட்சியாளர்களும் வேளாண் விஞ்ஞானிகளும் எதற்காக காட்டாமணக்கைப் பயிரிடச் சொல்கிறார்கள்? காட்டாமணக்கு பயிரிட்டால் ஏழை விவசாயி எப்படி குபேரனாக முடியும்?

நாம் சமையலுக்குப் பயன்படுத்தும் பாம் ஆயிலையும், காட்டாமணக்கு விதையிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய், சோயா எண்ணெய், புங்கை எண்ணெய் முதலானவற்றை டீசலில் 5% வரை கலந்து எரிபொருளாகப் பயன்புடுத்தலாம். இதனை “பயோடீசல்” என்கின்றனர். இதுதவிர பெட்ரோல், டீசல் ஆகிய எரிபொருட்களில் எத்தனால் எனப்படும் எரிசாராயத்தைக் கலந்து பயன்படுத்துகின்றனர். எரிசாராயத்தை உருவாக்க கரும்பு, மக்காச்சோளம், சர்க்கரை வள்ளிக் கிழங்கு ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. இந்த மாற்று வகை எரிபொருட்கள் தாவரங்களிலிருந்து உருவாக்கப்படுவதால் இவற்றை “உயிர்ம எரிபொருட்கள்” (Bio-Fuel) என்கின்றனர்.

இத்தகைய உயிர்ம எரிபொருட்களுக்கும் பயோ டீசலுக்குமான தேவை உலகெங்கும் அதிகரித்துள்ளது. திடீரென இதற்கான தேவை அதிகரிக்கக் காரணம் என்ன?

ஆண்டுதோறும் பூமியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே போகிறது. வரைமுறையின்றி நிலக்கரி, பெட்ரோலியப் பொருட்களை எரித்து வருவதால்; அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் விளைவாக உலகம் மேலும் மேலும் வெப்பமடைந்து கொண்டே போகிறது. இதன் விளைவாக, வட துருவத்திலும் தென் துருவத்திலும் உள்ள நிரந்தரப் பனிப் பாளங்கள் உருகத் தொடங்கி கடலை நோக்கி வேகமாக ஓடுகின்றன. இதனால் கடல் மட்டம் வேகமாக உயர்ந்து பல சிறிய தீவுகள் கடலில் மூழ்கி அழிந்து போகும்; வளிமண்டல வெப்பநிலை உயர்வால் வறட்சியும் வெள்ளமும் அடுத்தடுத்து நிகழும்; காடுகள் பற்றியெரியும்; வளிமண்டலம் எங்கும் புகைமயமாகும்; பல கோடி உயிரிச் சிற்றினங்கள் முதல் மனிதன் வரை அழிய நேரிடும்.

Biofuelஇப்பேரழிவைத் தடுக்க, பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்; அல்லது அவை வெளியேற்றும் கரிம வாயுக்களின் அளவையாவது மட்டுப்படுத்த வேண்டும் என்ற சுற்றுச்சூழல்வாதிகள் எச்சரித்து வருகின்றனர். புவி வெப்பநிலை அதிகரிப்புக்கும் சுற்றுச்சூழல் நஞ்சாகி பேரழிவின் விளம்பில் உலகம் தத்தளித்துக் கொண்டிருப்பதற்கும் ஏகாதிபத்தியங்களின் இலாபவெறி கொண்ட உற்பத்தி முறையும் போர்வெறியுமே முதன்மையான காரணம். சுற்றுச்சூழலால் நஞ்சாகிப் பேரழிவுக்குள் தள்ளப்பட்டுள்ள உலகைச் சீரமைக்க, ஏகாதிபத்திய நலனுக்கேற்ப ஏழை நாடுகளில் காடு வளர்ப்புத் திட்டங்களைச் செயல்படுத்திய ஏகாதிபத்தியங்கள், நச்சுச் சூழலிலிருந்து உலகைக் காப்பதில் தாங்கள் அக்கறை கொண்டிருப்பது போல் நாடகமாடின. இப்போது, பயோ டீசல் மற்றும் உயிர்ம எரிபொருட்களைக் கொண்டு, கரிம வாயுக்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தப் போவதாகக் கிளம்பியுள்ளன.

அமெரிக்க அதிபர் புஷ் தனது 2007-ஆம் ஆண்டின் அரசுக் கொள்கை உரையில், எரிபொருளுக்காக பிற நாடுகளை அமெரிக்கா சார்ந்திருக்கும் நிலையை மாற்ற “பத்துக்கு 20” என்ற திட்டத்தைக் குறிப்பிட்டார். அதாவது, 2010ஆம் ஆண்டுக்குள் அமெரிக்கா 20% வரை தனது பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்றார். இதற்காக, உயிர்ம எரிபொருட்களைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ஐரோப்பிய ஒன்றியமும் 2007 மார்ச்சில் நடந்த மாநாட்டில், போக்குவரத்துத் துறையில் உயிர்ம எரிபொருள் பயன்பாட்டை 2020-க்குள் 10% அளவுக்கு உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது. இந்தப் பின்னணியில்தான், “சுற்றுச் சூழலைப் பாதுகாப்போம்; புவி வெம்பலைத் தணிப்போம்; உயிர்ம எரிபொருளைப் பயன்படுத்துவேம்; காட்டாமணக்கைப் பயிரிடுவோம்” என்ற கூச்சல் ஆரவாரமாக எழுப்பப்படுகிறது.

புவி வெம்பலைத் தணித்து சுற்றுச் சூழலைப் பாதுகாப்பதற்கான நல்ல திட்டம் போலத் தோற்றமளித்தாலும், இதன் பின்னணியில் ஏழை நாடுகளைச் சுடுகாடாக்கும் மிகப் பெரிய ஏகாதிபத்திய சதி அரங்கேறி வருகிறது. இத்தகைய மாற்றுப் பயிர் மாற்று எரிபொருள் திட்டம் ஏகாதிபத்தியங்களின் அன்புக் கட்டளைப்படி உலகின் பல ஏழை நாடுகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றின் அனுபவம் என்ன?

மெக்சிகோ நாட்டில், அமெரிக்காவின் எரிசாராயத் தேவைக்காக இனிப்புச் சோளப் பயிரின் சாகுபடி பரப்பு அதிகரித்ததால், வெள்ளைச் சோளம் உற்பத்தி குறைந்தது. வெள்ளைச் சோளத்திலிருந்துதான் மெக்சிக மக்களின் அன்றாட உணவாகிய “டார்ட்டில்லாஸ்” தயாரிக்கப்படுகின்றது. எரிசாராயத்துக்கான இனிப்புச் சோள சாகுபடியானது இன்று “டார்ட்டில்லாஸ்”இன் விலையை 37%க்கு உயர்த்தி விட்டது. அடிப்படை உணவின் தட்டுப்பாடு விலையேற்றத்தால் மெக்சிகோ உழைக்கும் மக்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

air-pollution-delhiதென்னமெரிக்காவிலுள்ள பிரேசில் நாட்டில் அமெரிக்கத் தேவைக்காக விளைநிலங்களில் கரும்பும் இனிப்புச் சோளமும் பெருமளவில் பயிர் செய்யப்படுகிறது. அவற்றின் விளைபரப்பை அதிகரிக்க, ஏறத்தாழ 9 கோடி ஏக்கர் அளவுக்கு மழைக்காடுகளான அமேசான் காடுகள் அழிக்கப்பட்டு விட்டன. இன்னும் 15 கோடி ஏக்கர் காடுகளை அழிக்க அந்நாட்டின் “முற்போக்கு’ அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்காவுக்கான ஏற்றுமதி அதிகரித்ததும், தட்டுப்பாடு காரணமாக 2006-இல் பிரேசில் நாட்டில் சர்க்கரை விலை இரண்டு மடங்கு அதிகரித்தது.

பாமாயில் எனப்படும் பனை எண்ணெயை ஐரோப்பிய நாடுகள் டீசலுடன் கலந்து எரிப்பதால் மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் எண்ணெய்ப் பனை சாகுபடிக்காக காடுகள் தொடர்ந்து அழிக்கப்பட்டு வருகின்றன. உற்பத்தியாகும் பாமாயில் 40%க்கு மேல் எரிபொருளுக்காக ஏற்றுமதி செய்யப்படுவதால், சமையலுக்கான பாமாயில் தட்டுப்பாடு காரணமாக விலையேறி விட்டது.

பிரேசிலில் இறைச்சித் தொழிலுக்கு உறுதுணையாகப் பயிரிடப்பட்டு வந்த சோயாபீன்ஸ், இன்று மாற்று எரிபொருளாக (எண்ணெயாக) மாற்றப்படுவதால், அந்நாட்டின் ஒட்டுமொத்த சோயா சாகுபடியே அமெரிக்காவுக்காக ஒதுக்கப்பட்டு விட்டது. இதன் விளைவாக பிரேசிலில் பன்றி மற்றும் கோழி வளர்ப்புத் தொழில் பெரும் நெருக்கடியில் சிக்கி வீழ்ச்சியடைந்து வருகிறது. ஆடுமாடுகளின் மேய்ச்சலுக்கான நிலங்களும் ஆக்கிரமிக்கப்பட்டு சோயா பண்ணைகளாக மாற்றப்பட்டு விட்டதால் ஏழைநடுத்தர விவசாயிகள் ஆடுமாடுகளைக் கூட வளர்க்க முடியாமல் தத்தளிக்கின்றனர். “நேற்று வரை சோயா எங்களுக்கு வாழ்வளித்த பயிர்; இன்று அது எங்கள் வாழ்வைப் பறிக்க வந்துள்ள கொலைகாரப் பயிர்” என்று குமுறுகிறார்கள் பிரேசில் விவசாயிகள்.

இந்த உண்மைகள் ஒருபுறமிருக்க, உலகின் பல ஏழை நாடுகளின் உணவுத் தட்டுப்பாடும் பட்டினிச் சாவுகளுக்கான பேரபாயம் இந்த மாற்றப் பயிர் மாற்று எரிபொருள் திட்டத்தால் உருவாகியுள்ளது. உலகெங்கிலுமுள்ள நிலங்களில் ஏறத்தாழ 40% பரப்பளவுக்கு பாரம்பரிய விவசாயம் நடந்து வருகிறது. இந்த விளைநிலங்களிலிருந்துதான் மாற்று எரிபொருள் மாற்றுப் பயிருக்கான நிலத்தை ஒதுக்க முடியும். அமெரிக்காவின் கனவுத் திட்டமான “பத்துக்கு 20” திட்டத்தில் பாதியளவுக்கு நிறைவேற்ற, அதாவது, அந்நாடு 10% அளவுக்கு மாற்று எரிபொருளைப் பயன்படுத்த வேண்டுமானால், உலகெங்கிலுமுள்ள விவசாய நிலங்களில் மூன்றில் ஒரு பங்கு நிலங்கள், உணவு தானிய உற்பத்தியைக் கைவிட்டாக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொன்னால், உலக மக்களில் மூன்றில் ஒரு பங்கினர் பட்டினி கிடக்க வேண்டும்!

palm-oil
பாமாயில் பண்ணைக்காக அழிக்கப்படும் இந்தோனேசிய காடுகள்

ஒரு கார் டாங்கில் ஊற்றப்படும் எரிசாராயத்தை உருவாக்கத் தேவையான உணவு தானியத்தைக் (சோளம்) கொண்டு ஒரு வருடத்துக்கு ஒரு மனிதனின் பசியைப் போக்க முடியும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. பல கோடி டன் உணவு தானியங்கள் கார்களில் ஊற்றப்படும் எரிசாராயமாக மாறும் என்றால், எஞ்சியிருக்கும் உணவு தானியங்களுக்காக உலகெங்குமுள்ள ஏழை மக்கள் அடித்துக் கொள்ளும் அபாய நிலை உருவாகும். எனவேதான், மார்ச் 2007-இல் அமெரிக்க அதிபர் புஷ் மாற்று எரிபொருள் குறித்த “பத்துக்கு 20” திட்டத்தை அறிவித்தவுடனேயே, அமெரிக்க எதிர்ப்பாளரான கியூபா நாட்டின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ, “இத்திட்டத்தின் மூலம் மனித இனப் படுகொலைகளை அமெரிக்கா உலகமயமாக்கியுள்ளது” என்று சாடினார்.

உயிர்ம எரிபொருளுக்குத் தரப்படும் முக்கியத்துவத்தின் பின்னணியில் இன்று ஏழை நாடுகளின் உணவுப் பாதுகாப்பு ஊசலாடிக் கொண்டிருக்கிறது. வசதி படைத்தவர்களின் சொகுசுக் கார்கள் சாலைகளில் சறுக்கிக் கொண்டு ஓடுவதற்காகவும், ஏகாதிபத்திய நாடுகளின் எரிபொருள் தாகம் தீர்வதற்காகவும், ஏழை நாடுகள் பட்டினிச் சாவை நோக்கித் தள்ளப்பட்டு வருகின்றன. இந்தியாவின் உணவுப் பாதுகாப்பு ஏற்பாடுகளையும் பெயரளவிலான சுயசார்பையும் ஒழித்துக் கட்டும் இந்த ஏகாதிபத்திய சதிக்கு மைய மாநில அரசுகள் விசுவாசமாகச் சேவை செய்து வருகின்றன.

தமிழக அரசு 2004-ஆம் ஆண்டிலேயே கரும்பாலைகளில் வடிக்கப்படும் சாராயத்தின் அளவைக் கூட்டிக் கொள்ளவும், புதிதாக வடிப்பாலைகள் நிறுவி எத்தனால் உற்பத்தியைப் பெருக்கிக் கொள்ளவும் அனுமதி அளித்துள்ளது. பயோ டீசல் உற்பத்திக்கு 5% வரிவிலக்கு அளித்துள்ளது. ஆந்திர அரசு, அம்மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் காட்டாமணக்கு மற்றும் காட்டாமணக்கு வகையைச் சேர்ந்த “ஜெட்ரோபா” முதலானவற்றைப் பயிரிட பல சலுகைகளை அறிவித்துள்ளது. பல வங்கிகள் இம்மாற்று எரிபொருள் உற்பத்திக்குக் கடன் வழங்குகின்றன. தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெரியார்புரா, ஆர்.எஸ்.எஸ்.புரா முதலான பெருந்தொண்டு நிறுவனங்களும் உயிர்ம எரிபொருள் திட்டங்களை விவசாயப் பகுதிகளில் செயல்படுத்தி வருகின்றன.

சுற்றுச் சூழலைக் காப்பது என்ற பெயரில் கொண்டு வரப்பட்டுள்ள உயிர்ம எரிபொருட்களால் சுற்றுச் சூழல் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுமா? இது குறித்து இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகள் அனைத்தும் இதற்கு நேரெதிரான முடிவுகளையே வெளியிட்டுள்ளன.

எரிசாராயம் கலந்த பெட்ரோல் வெளியிடும் கரிம வாயுக்களின் பருமம் ஒப்பீட்டளவில் குறைவு என்பது உண்மைதான். ஆனால், எரிசாராயத்துக்காக வளர்க்கப்படும் கரும்பு, இனிப்புச் சோளம் ஆகியவற்றுக்கு இடப்படும் பூச்சி மருந்துகள் உரங்கள்; கரும்பை ஆலையில் அரைத்து சாராயம் வடிக்கும் வரை எரிபொருள்கள் வெளியேற்றும் கரிம வாயுக்கள்; எரிசாராயத்தை விற்பனை நிலையம் வரை கொண்டு செல்லும் வாகனங்கள் வெளியேற்றும் புகை என ஒட்டு மொத்த கரிமவாயுக்களின் பருமத்தைக் கணக்கிட்டால் எல்லா கழுதையும் ஒன்றுதான்.

brazil-deforestation
அழிக்கப்படும் அமேசான் காடுகள்

மேலும், மாற்றுப் பயிர் சாகுபடியானது சுற்றுச் சூழலைக் காப்பதற்கு மாறாக, பல நாடுகளில் சுற்றுச்சூழலையே நஞ்சாக்கி விட்டுள்ளதற்கு ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தென்னமெரிக்காவில், அமெரிக்காவின் எரிபொருள் பசிக்காக தொடர்ந்து காடுகள் அழிக்கப்படுவதால், பூமி வெம்பல் மேலும் தீவிரமாகி விட்டது. அங்குள்ள ஆண்டேஸ் மலைத் தொடரின் பனி சூழ்ந்த சிகரங்கள் உருகத் தொடங்கி விட்டன. இந்தோனேஷியா முழுவதும் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் தேவைக்காக எண்ணெய்ப் பனையும் காட்டாமணக்கும் காடுகளை அழித்து பயிரிடப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் சீர்கேட்டில் அந்நாடு உலகின் மூன்றாவது இடத்தை எட்டி விட்டது.

மாற்று எரிபொருளுக்காக காடுகள் அழிக்கப்படாமலிருந்தால், அந்தக் காடுகளே சுற்றுச்சூழலைக் காப்பதில் மாற்று எரிபொருளை விட முன்னணியில் இருந்திருக்கும் என்கின்றனர் நிபுணர்கள். உயிர்ம எரிபொருளை உற்பத்தி செய்யப் பயிரிடப்படும் மாற்றுப் பயிர்களின் அமோக விளைச்சலுக்காகக் கொட்டப்படும் உரமும் பூச்சிக் கொல்லிகளும் பெட்ரோலியப் பொருட்கள்தான். பெட்ரோலியப் பயன்பாட்டைக் குறைப்பதாகக் கூறிக் கொண்டு நிலத்தையும் நீரையும் அதே பெட்ரோலியப் பொருட்களால் நஞ்சாக்குவது எப்பேர்பட்ட புத்திசாலித்தனம்! மேலும், ஏகாதிபத்தியங்களின் எரிபொருள் தாகத்திற்காக காட்டாமணக்கு, ஜெட்ரோபா, சோயா, சோளம் என ஒற்றைப் பயிர் முறைக்கு நிலம் மாற்றப்பட்டால் நிலம் மலடாகிப் போகாதா?

பாரம்பரிய விவசாயத்தை நாசமாக்கி, மராமத்துப் பணிகளை அறவே புறக்கணித்து, தனது வணிகத் தேவைக்காக பருத்தி, அவுரி முதலானவற்றைக் கட்டாயமாகப் பயிரிட வைத்து பெரும் உணவுப் பஞ்சத்தை விளைவித்து, நமது முன்னோர்களைக் காவு கொண்டது அன்றைய காலனியாதிக்கம். இன்று, தனியார்மய தாராளமயத் தாக்குதலால் விவசாயத்தைத் திவாலாக்கி, ஏகாதிபத்திய தேவைக்காக காட்டாமணக்கையும் இனிப்புச் சோளத்தையும் உற்பத்தி செய்யும் நாடாக இந்தியாவை மாற்றி, உணவுக்காக நிரந்தரமாகக் கையேந்தும் நிலைக்கு நாட்டை தள்ளிவிட்டுள்ளது மறுகாலனியாதிக்கம். அன்று, கட்டபொம்மன் கோட்டையை இடித்த வெள்ளைக்காரன் அந்த இடத்தில் எள்ளையும் ஆமணக்கையும் விதைத்தான். இன்று, உணவுக்கான விவசாயத்தை ஒழித்து கள்ளியையும் காட்டாமணக்கையும் விதைக்கின்றன அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள். மாற்று எரிபொருள் எனும் வஞ்சக வலை விரித்து ஆதிக்கம் செய்யக் கிளம்பியுள்ள ஏகாதிபத்திய சதியை அம்பலப்படுத்தி முறியடிப்பதும், விவசாயிகளை ஓரணியில் திரட்டிப் போராடுவதுமே புரட்சிகர ஜனநாயக சக்திகளின் இன்றைய அவசரக் கடமையாகியுள்ளது.

இரணியன், புதிய ஜனநாயகம், ஜூலை 2007.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க