The Nation wants to Know” – டைம்ஸ் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் நடுத்தரவர்க்கத்தின் உச்சிமண்டை முடியைச் சிலிர்க்கச் செய்த அர்னாப் கோஸ்வாமியின் இந்தப் பேரிரைச்சலை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது.

ரோஜா’ திரைப்படத்தில் பற்றி எரியும் தேசியக் கொடியை, அரவிந்த் சாமி உருண்டு சென்று அணைத்து பெரிய திரையில் ஏற்படுத்திய ‘தேசபக்த’ உணர்ச்சியை, ஐந்தே வார்த்தைகளால் சின்னத் திரையில் ஏற்படுத்தியவர் அர்னாப் கோஸ்வாமி. அந்த அர்னாப் கோஸ்வாமியின் ‘தேசபக்தி’ தற்போது உலகுக்கே தெரியவந்து சந்தி சிரிக்கிறது.

அர்னாப் கோஸ்வாமி நடத்தி வரும் ரிபப்ளிக் தொலைக்காட்சியின் பார்வையாளர் கணக்கீட்டுப் புள்ளியை அதிகரிக்க “ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வுக் கவுன்சில்”ன் (BARC) முன்னாள் தலைவர் பார்த்தோ தாஸ்குப்தாவுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் பார்த்தோ தாஸ்குப்தாவைக் கைது செய்தது மும்பை போலீசு. அந்த வழக்கில் கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்கையில் பார்த்தோ தாஸ்குப்தாவின் வாட்சப் உரையாடல்களையும் ஆவணங்களாக சேர்த்துள்ளது.

அந்த வாட்சப் உரையாடல்கள் வீதிக்கு வந்ததன் விளைவாக அர்னாப் கோஷ்வாமியின் தேசபக்த முகமூடி கிழிந்துள்ளதோடு மட்டுமல்லாமல், பாசிஸ்ட்டுகளின் ஆட்சி எந்த அளவிற்கு தமது பாசிச நடவடிக்கைகளுக்கு ஊடகங்களோடு இயைந்து செயல்படுகின்றன என்பதையும் அம்பலப்படுத்தியுள்ளது.

படிக்க :
♦ ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !

♦ அர்னாப் கைதும் பா.ஜ.க-வின் கண்ணீரும் : கேலிச்சித்திரங்கள்

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர், நடந்த புல்வாமா தாக்குதல் குறித்து எதிர்கட்சிகள் உள்ளிட்டு பலரும் பல்வேறு சந்தேகங்களை எழுப்பினர். அப்போதெல்லாம் எதிர்க்கட்சியினருக்கும், சந்தேகம் கேட்டவர்களுக்கும் தேச விரோத முத்திரை குத்தி, நமக்கெல்லாம் காதில் இரத்தம் வரும் அளவிற்கு தேசபக்த வகுப்பெடுத்தவர் நமது அர்னாப் தான்.

இந்தத் தாக்குதல் நடந்து சரியாக ஒரு மணிநேரத்தில் ஒரு வாட்சப் செய்தியை பார்த்தோ தாஸ் குப்தாவிற்கு அனுப்புகிறார் அர்னாப் கோஸ்வாமி. “காஷ்மீரில் இந்த ஆண்டிலேயே மிகப்பெரிய தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில், சம்பவ இடத்திற்கு சென்ற ஒரே சேனல்” என்று குறிப்பிடுகிறார்.

அடுத்த ஒன்றரை மணிநேரத்தில் அனுப்பும் மற்றொரு வாட்சப் செய்தியில், “இந்தத் தாக்குதல் மூலம் நாம் தாறுமாறாக ஜெயித்திருக்கிறோம்” என்று குறிப்பிடுகிறார்.

தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங் ஏறுவதற்காக, 40 இராணுவ வீரர்களை பலி கொண்ட ஒரு தாக்குதல் பயன்பட்டிருக்கிறது என்று யாரேனும் ஒரு மனிதன் மகிழ்ச்சியடைய முடியுமா? சம்பவ இடத்தில் இருந்து தமது சேனல் தான் முதலில் செய்தி தந்ததையும், இந்தத் தாக்குதல் தமக்கு தாறுமாறான வெற்றி என்றும் ஒரு மனிதனால் கூற முடியுமா? அர்னாப் போன்ற “தேச பக்தர்களால்” முடியும்.

அதைவிட, தாக்குதல் நடந்து 20 நிமிடத்தில் அங்கு அர்னாப்பின் ரிபப்ளிக் தொலைக்காட்சி சென்றிருக்கிறது என்பதே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. 20நிமிடத்தில் ஒளிபரப்புச் சாதனங்களை தயார் செய்வதே கடினம் தான். ஆனால் நிகழ்வு நடந்த இடத்திற்கு அந்த நேரத்திற்குள் ரிபப்ளிக் டிவி சென்றிருக்கிறது எனில், தாக்குதல் நடத்தப்பட இருப்பது அர்னாபிற்கு முன்கூட்டியே தெரியுமா ? என்ற கேள்வியும் இயல்பாக எழுகிறது.

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக எனக் கூறி பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள தீவிரவாதிகளின் முகாம்களை இரவோடு இரவாகத் தாக்கி அழித்ததாகவும், அதில் பல பாகிஸ்தான் தீவிரவாதிகள் இறந்ததாகவும் இந்திய அரசு தெரிவித்தது. இந்தத் தாக்குதல் நடவடிக்கை பயங்கர ரகசியமாக வைக்கப்பட்டு நடத்தப்பட்டதாகத் தெரிவித்தது மோடி அரசு.

அப்படி ரகசியமாக நடத்தப்பட்டதாகச் சொல்லப்படும் இந்தப் பதிலடி தாக்குதல் குறித்து அர்னாப் கோஷ்வாமி மூன்று நாட்களுக்கு முன்பே பார்த்தோ தாஸ் குப்தாவிடம் தெரிவித்திருப்பது இந்த வாட்சப் உரையாடல்களில் அம்பலமாகியிருக்கிறது.

இது குறித்து, விரைவில் பெரிய சம்பவம் ஒன்று நடக்கவிருப்பதாக பார்த்தோ தாஸ்குப்தாவிடம் அர்னாப் தெரிவிக்கிறார். அதற்கு தாஸ்குப்தா, “தாவூத்தா” என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் பதிலளிக்கையில், “ இல்லை சார், பாகிஸ்தான். இந்த முறை பெரிய சம்பவம் நடத்தப்படும். அதே நேரம் காஷ்மீர் மீதும் பெரிய சம்பவம் நிகழ்த்தப்படும். மக்கள் மகிழும் வகையில் பாகிஸ்தான் மீது தாக்குதல் தொடுப்பதில் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.” என்கிறார்.

பாலகோட் தாக்குதலுக்கு ஒரு நாளுக்குப் பிறகு தாஸ் குப்தா, இதுதான் நீங்கள் கூறியதா என்று கேட்கிறார். அதற்கு அர்னாப் கோஸ்வாமி இன்னும் நிறைய வரவிருக்கிறது என்று கூறுகிறார். இன்னும் நிறைய வரவிருப்பதகாத அர்னாப் கூறுவதும் காஷ்மீர் மீதான பெரிய சம்பவம் என்பதும், காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து பறிப்பு என்பதாகப் புரிந்துகொள்ளலாம்.

அரசாங்கத்தால் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த ஒரு தாக்குதல் – இரகசிய இராணுவ நடவடிக்கை மூன்று நாட்களுக்கு முன்பே ஒரு ஊடக நிறுவனத்திற்கு தெரிந்திருக்கிறது.

புல்வாமா பயங்கரவாத தாக்குதலும், பாலக்கோட் பதில் தாக்குதலும்தான் மோடி மற்றும் சங்கப் பரிவாரத்தின் தேர்தல் பிரச்சார ஆயுதங்களாக இருந்தன. இத்தாக்குதல்கள் தொடர்பான எதிர்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் கேள்விகளுக்கு இன்று வரை மோடி அரசு முறையான பதிலளிக்கவில்லை. தற்போது வெளியாகியிருக்கும் அர்னாப் பார்த்தோ தாஸ் குப்தாவின் உரையாடல்கள் அவற்றுக்குப் பதிலளிக்கின்றன. இத்தாக்குதல்கள் அனைத்தும் திட்டமிடப்பட்ட நாடகமாக இருப்பதற்கான சாத்தியத்தை நமக்கு எடுத்துக்காட்டுகின்றன.

அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி தாக்குதல் நடந்த 20 நிமிடத்தில் ‘ஸ்பாட்டுக்கு’ சென்றதன் ரகசியமும், 3 நாட்களுக்கு முன்னரே பாலகோட் தாக்குதல் குறித்து அர்னாபுக்குத் தெரியவந்ததன் ரகசியமும், ‘முறையாக’ விசாரிக்கப்பட்டால், 40 இராணுவ வீரர்களின் உயிர்ப்பலிக்குக் காரணமான கும்பலைக் கையும் களவுமாகப் பிடிக்க முடியும்.

ஆனால் யார் விசாரிப்பது ? இந்த வாட்சப் உரையாடல்களின் மூலம் தேசத்தின் பாதுகாப்பு கேலிக் கூத்தானது அம்பலமானாலும் உச்சநீதிமன்றத்தின் கண்களில் மட்டும் அது படவே இல்லை போலும். தொட்டதற்கெல்லாம் தானாக முன்வந்து (Suo Motto) வழக்குப் பதிவு செய்யும் உச்சநீதிமன்றம் போலீசின் புனையப்பட்ட ஆதாரமற்ற கட்டுக்கதைகளுக்காக பல பத்து சமூக செயற்பாட்டாளர்களுக்குப் பிணை மறுக்கும் அதே உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தை அப்படியே கடந்து சென்றிருக்கிறது.

படிக்க :
♦ அர்னாப் கோஷ்வாமி கைது : சிவசேனா கொடுத்த ஷாக் !!

♦ அலிகார் பல்கலையில் அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி குண்டர் படை அட்டூழியம் ! மாணவர்கள் மீது தேசதுரோக வழக்கு !

காஷ்மீரில் பிரிவு 370 நீக்கம் குறித்து அமித்ஷா அறிவிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்பாக பார்த்தோ தாஸ் குப்தாவும், அர்னாப் கோஸ்வாமியும் வாட்சப்பில் அது குறித்து பேசுகின்றனர். “அந்தச் செய்தியும் நம்முடையதுதான்” என்று குதூகலிக்கிறார் அர்னாப் கோஸ்வாமி.

சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் போன்று காஷ்மீர் மக்கள் மீது தொடுக்கப்பட்ட ஒரு தாக்குதல், அம்மாநிலத்தின் அரசியல் கட்சிகளுக்குக் கூடத் தெரியாமல் ஒரு ஊடகத் தரகனுக்குத் தெரிந்திருப்பதுதான் இந்திய ஜனநாயகத்தின் இலட்சணம்.

வெளியான இந்த வாட்சப் உரையாடல்களில், அர்னாப் கோஸ்வாமி டி.ஆர்.பி ரேட்டிங்கில் தனது சேனலை மேலே கொண்டுவர பார்த்தோ தாஸ் குப்தாவின் உதவியைக் கேட்பதும், BARC-ல் தனது பதவிக்காலம் முடிந்ததும் பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு அர்னாப்பிடம் பார்த்தோ தாஸ்குப்தா அடிபோடுவதும் என பரஸ்பர ‘உதவிகள்’ செய்யப்பட்டிருப்பது அம்பலமாகியிருக்கிறது.

அதிகாரவர்க்கத்தினருக்கு இடையிலான தரகர்களாக ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் செயல்படுவது ஏற்கெனவே அம்பலமான ஒன்றுதான். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில் சிக்கிய நீரா ராடியா டேப், ஊடகங்கள் குறித்த புனித பிம்பத்தை முதலில் உடைத்தது. அன்று, தரகு வேலை பார்ப்பது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு, “இதுதான் ஊடக தர்மம் என்று அதற்கு புதிய இலக்கணம் எழுதினார் பர்கா தத். இன்று அதற்கான பகிரங்கமான ஆதாரமாக வெளிவந்திருக்கிறது அர்னாபின் இந்த வாட்சப் உரையாடல்கள்.

This slideshow requires JavaScript.

பிரதம மந்திரி அலுவலகத்தில் ஊடக ஆலோசகர் பதவிக்கு தன்னை நியமிக்கப் பரிந்துரைக்குமாறு பார்த்தோ தாஸ் குப்தா அர்னாப்பிடம் கேட்டதற்கு ஒரு நாளைக்கு முன்னர்தான், அர்னாப் கோஷ்வாமி AS –ஐ சந்திக்கப் போவதாக அவரிடம் வாட்சப்பில் கூறியிருக்கிறார். பிரதம மந்திரி அலுவலகத்தில் ஆதிக்கம் செலுத்தவல்ல நபர்தான் அந்த AS என்பதை அனுமானிக்க முடிகிறது. இவர்களது உரையாடலில் பல இடங்களில் AS வந்து செல்கிறார்.

செய்தி ஒளிபரப்பாளர்கள் சங்கத்தின் புதிய தலைவராக ரஜத் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்த மற்றொரு வாட்சப் உரையாடலில், “ ‘மோட்டா பாய்’ன் ஆதிக்கம் அங்கு செல்லுபடியாகவில்லை” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனில் பாஜகவின் மோட்டா பாய் (பெரியண்ணன்) யார் ?

பாஜகவில் யார் அவ்வளவு சக்தி வாய்ந்தவர் என்று பாஜககாரர்கள் யாரைக் கேட்டாலும் அமித்ஷா என்று கூறிவிடுவார்கள். எனில், இந்த AS மற்றும் மோட்டா பாய் போன்ற குறியீடுகள் ஏன் Amit Shah-வைக் குறிப்பனவாக எடுத்துக்கொள்ள முடியாது ?

அரசாங்கத்தின் இலவச டிடிஎச் சேவையில் தமது சேனலைச் சேர்க்க, செலுத்த வேண்டிய ரு.52 கோடியை செலுத்தாமல் ரிபப்ளிக் டீவி முறைகேடு செய்திருப்பதாக, கடந்த 2017-ம் ஆண்டு, ஜூலை 7-ம் தேதி தூர்தர்ஷன் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சரகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளது.

படிக்க :
♦ கொரோனா தடுப்பூசி : சோதனைச்சாலை எலிகளாக்கப்பட்ட மக்கள்
♦ வேளாண் சட்டங்கள் நிறுத்திவைப்பு : உச்சநீதிமன்றத்தின் நரித்தனமும் மிரட்டலும் !

இந்தக் கடிதம் குறித்து பார்த்தோ தாஸ் குப்தா வாட்சப்பில் அர்னாப் கோஷ்வாமியிடம், “ரிபப்ளிக் தொலைக்காட்சி குறித்து சில புகார்கள் அமைச்சரவைக்கு வந்துள்ளன. அவை எங்களுக்கு அனுப்பப்படக் கூடும் என ஒரு இணைச் செயலர் கூறினார். ஆனால் அது எப்போதும் வரப் போவதில்லை என்று நினைக்கிறேன்.” என்று கூறுகிறார்.

அதற்கு அர்னாப், “அந்த இலவச டிஷ் டிவி விவகாரம் தானே, ரத்தோர் என்னிடம் அதுகுறித்துக் கூறினார். மேலும் அதனை அவர் புறந் தள்ளிவிட்டார்.” என்று கூறுகிறார். இங்கு குறிப்பிடப்படும் ரத்தோர், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் சிங் ரத்தோராகத் தான் இருக்க முடியும். ஒரு துறைக்கு வரும் புகாரைப் புறந்தள்ளும் அதிகாரம் அந்தத் துறையின் அமைச்சருக்குத்தானே இருக்க முடியும்?

ஒரு தொலைகாட்சி குறித்து வரும் புகாரை அந்த தொலைக்காட்சிக்குத் தெரிவிப்பது அமைச்சரகத்தின் ஊழியர்களோ, அரசுத்துறை அதிகாரிகளோ அல்ல, ஒரு அமைச்சரே தெரிவிக்கிறார். அதோடு அவரே அந்தப் புகாரையும் புறந்தள்ளுகிறார்.

இதை அர்னாப் என்ற தனிநபரோ அல்லது ரிபப்ளிக் டிவி என்ற தனி ஒரு நிறுவனமோ சம்பந்தப்பட்ட பிரச்சினையாக சுருக்கிப் பார்த்துவிட முடியாது.

தற்போது வெளியாகியிருக்கும் வாட்சப் உரையாடல்கள், அர்னாப் மோடி அரசுக்கு இடையிலான உறவை மட்டும் அம்பலப்படுத்தியிருக்கின்றது. ஆனால் ஜீ நியூஸ், .பி.பி நியூஸ் என இன்னும் அம்பலப்படாத மோடியின் அடிவருடி ஊடகங்கள் எத்தனையோ ? நமக்குத் தெரியாது.

மோடி உள்ளிட்ட பாசிஸ்டுகள் அனைவரும் மக்கள் மீதான தங்களது தாக்குதல்களை வெறுமனே போலீசு மற்றும் இராணுவத்தின் துணையோடு மட்டும் அமல்படுத்துவதில்லை. மக்களின் ஒரு பிரிவினரின் அங்கீகாரத்தோடு தான் அமல்படுத்துகின்றனர். இந்த விசயத்தில் மக்களின் மத்தியில் அரசுக்கு ஆதரவாக ஒரு பொதுக்கருத்தை உருவாக்க ஊடகங்கள் என்றுமே பாசிஸ்ட்டுகளுக்கு உதவி வந்துள்ளன. ஹிட்லர் முதல் மோடி வரை நமக்கு எண்ணிலடங்காத உதாரணங்கள் இருக்கின்றன.

இந்தியாவைப் பொறுத்தவரையில், பாசிச மோடி அரசின் திடீர் தாக்குதல்களான பணமதிப்பழிப்பு, எல்லை பயங்கரவாதப் பூச்சாண்டிகள், காஷ்மீர் தனிச்சிறப்பு அந்தஸ்த்து நீக்கம், பாபர் மசூதி இடிப்பு வழக்கு, சி..., புலம்பெயர் தொழிலாளர்களை நாடோடிகளாக்கியது, வேளாண் மசோதா என அனைத்திலும் பெரும்பாலான ஊடகங்கள் மோடி அரசுடன் இணைந்து ஒத்து ஊதியிருக்கின்றன. மக்களைப் பிரிப்பதில் பெரும் பங்காற்றியிருக்கின்றன.

மோடியின் பாசிச ஆட்சியின் கீழ் மேற்கூறிய தாக்குதல்கள் மக்கள் மீது தொடுக்கப்பட்ட பின்னர், மோடி ஆதரவு ஊடகங்கள் அதற்கு முட்டுக் கொடுப்பதாகவே வெளிப்புறத்தில் நமக்கு ஒரு தோற்றம் தெரிகிறது. ஆனால், தற்போது அம்பலமாகியிருக்கும் அர்னாப் வாட்சப் உரையாடல்கள் நமக்கு வேறு ஒரு கோணத்தை சுட்டிக் காட்டியிருக்கின்றன.

அதாவது, மக்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படும் முன்னரே மோடியின் பாசிச அரசு ‘உரிய’ வழிமுறைகளில் ஊடகங்களுக்கு அவர்களுக்கான பாத்திரத்தை தெளிவாக விளக்கியிருக்கிறது என்பதையே இந்த உரையாடல்கள் காட்டுகின்றன.

மக்களிடம் பாசிஸ்டுகளுக்கான ஆதரவைத் தக்க வைப்பதற்கு ஏற்ற வகையில், பாசிஸ்ட்டுகள் முன்னெடுக்கும், மத வெறி, தேசிய வெறி உள்ளிட்ட ஆயுதங்களை கணிசமான கால இடைவெளியில் மக்கள் மனதில் தூவி வளர்க்கும் வேலையை திட்டமிட்ட வகையில் மோடி ஆதரவு ஊடகங்கள் செய்து வந்திருக்கின்றன.

இப்படிப்பட்ட இழிதொழிலைச் செய்வதற்கு பல மோடி ஆதரவு ஊடகங்களும் தயாராக இருப்பதைத்தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் கோப்ராபோஸ்ட் இணையதளம் வெளிக் கொணர்ந்த மறைபுலனாய்வு நடவடிக்கை அம்பலப்படுத்தியது.

என்.., போலீசு, சி.பி.., அமலாக்கத்துறை, நீதித்துறை என அனைத்தும் பாசிச ஆட்சியாளர்களுக்குத் துணை நிற்பதை பல்வேறு தருணங்களில் கண்கூடாகப் பார்த்துவிட்டோம்.

ஊடகங்களைப் பொறுத்தவரையில், பெரும்பாலானவை மோடி அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவான மனநிலையில் மக்களை இருத்திவைக்கச் செய்வதற்கும், மோடி அரசின் நடவடிக்கைகளை ஆதரிக்கும் வகையில் கட்டுக்கதைகளைக் கட்டுவதற்கும், முன் தயாரிப்போடு செயல்பட்டு வந்திருக்கின்றன என்பதையே தற்போதைய வாட்சப் உரையாடல் காட்டுகிறது.

தற்போது நம் முன் அம்பலமாகி நிற்பது அர்னாப் கோஸ்வாமி மட்டுமல்ல – பாசிசம் நீடித்து நிலைப்பதற்கான மக்கள் அடித்தளத்தை உருவாக்கிக் கொடுக்கும் ஊடகங்களின் பாத்திரமும் தான் !!


சரண்
நன்றி : The Wire, Newslaundry

7 மறுமொழிகள்

  1. பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சொல்லை வேதவாக்காக நினைக்கும் உங்களை போன்றவர்களுக்கு ஒரு கேள்வி.

    புல்வாமா தாக்குதல் உங்களின் பாக்கிஸ்தான் கூட்டாளிகள் நடத்திய தாக்குதல் தானே, காஷ்மீர் பயங்கரவாதிகளால் அநியாயமாக கொல்லப்பட்ட ராணுவ வீரர்களின் மரணத்திற்கு பழி வாங்கும் நடவடிக்கையை தானே இந்தியா அரசு எடுத்தது, இதில் எங்கே பாசிசம் உள்ளது என்று நீங்களும் உங்களின் பிரதமர் இம்ரான் காணும் சொல்ல முடியுமா ?

    பாக்கிஸ்தான் பயங்கரவாதிகளால் எங்கள் ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டால் எங்கள் நாடு எதுவுமே செய்யாமல் அமைதியாக இருக்க வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்களா ?

    அர்னாப் செய்தது இன்வெஸ்டிக்டிவ் ஜௌர்னலிசம் அர்னாப் மட்டும் அல்ல பல பத்திரிகையாளர்களும் செய்கின்ற செயல் தான் இது.

    அவர் செய்தியை முன் கூட்டியே தர வேண்டும் என்ற ஆர்வத்தில் பல சௌர்ஸ்கள் வைத்து இருக்கிறார், நீங்கள் உட்பட பலரும் செய்யும் செயல் தானே..

    இதில் கவலை அளிக்கும் விஷயம் அர்னாப் போல் பாக்கிஸ்தான் சீனா உளவாளிகளை இதே காரியத்தை செய்ய கூடும், அது தான் கவலை அளிக்கும் விஷயம்.

    • //அர்னாப் செய்தது இன்வெஸ்டிக்டிவ் ஜௌர்னலிசம் அர்னாப் மட்டும் அல்ல பல பத்திரிகையாளர்களும் செய்கின்ற செயல் தான் இது.//

      ஜெளர்னலிசம் என்பது அர்னாப் போன்றோருக்கும் பயன்படாத வார்த்தை, அர்னாப் செய்வது தில்லு முள்ளு என்பது அவர் வாட்ஸ் அஃப் மூலமே அம்பலமான பிறகு ஏன் அர்னாபிற்கா வரிஞ்சி கட்டிக்கொண்டு வருகிறீர்கள்.

      அர்னாப்பின் தில்லு முள்ளுக்கள் அவரின் நெருக்கிய நண்பரின் மூலமாகவே அம்பலமானது. பாக்கிஸ்தானில் இருந்து வந்து ஆரும் அம்பலப்படுத்தவில்லை.

      அர்னாபின் தில்லு முள்ளு ஆதாரங்கள் பற்றி விவாதிப்போமா?

      • இந்திய பிரதருக்கு எதிராக பாசிசம் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுவது வினவு கூட்டங்கள் பிரதமர் இம்ரான் கான்

        நேற்று பாக்கிஸ்தான் அரசும் பத்திரிகைகளும் எழுதியதை தான் இன்று வினவு வெளியிட்டு இருக்கிறது. வார்த்தைகள் கூட மாறவில்லை

          • அர்னாபை விட இந்திய கம்யூனிஸ்ட்களின் தில்லு முள்ளு அய்யோக்கியத்தனங்கள் கம்யூனிசத்தின் பெயரால் அவர்கள் இந்த நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் செய்த துரோகங்களை பற்றி நான் விவாதிக்க விரும்புகிறேன்.

    • //அவர் செய்தியை முன் கூட்டியே தர வேண்டும் என்ற ஆர்வத்தில் பல சௌர்ஸ்கள் வைத்து இருக்கிறார், நீங்கள் உட்பட பலரும் செய்யும் செயல் தானே..//

      முன் கூட்டியே தர வேண்டும் என்ற ஆர்வம் ஏன் வருகிறது டிஆர்பி-க்குதானே !

      சரி! ஆர்வம் வந்தால் செய்திகளின் விவரங்களை வைத்து தானே பேசுவார்கள், ஆனால், அர்னாப் போன்றோர் ஆர்வத்தில் அதிகாரிகளிடமே நேரடியாக பேசி தகவல்களை வாங்கும் சிறப்பு அந்தஸ்து பெற்றிருக்கார் போலும்….

      ஆனால், ஒரு நாம் என்ன கேட்டாலும் ஒரே பதில் பாகிஸ்தான் கைக்கூலி ! இதைத்தவிர உங்களிடம் இருந்து வேறு எதை எதிர்ப்பார்க்க முடியும்.

  2. உங்களுக்கு இருப்பது சீனா பற்று எங்களுக்கு இருப்பது இந்திய பற்று நாங்கள் வாழும் மண்ணை நேசிக்கிறோம், உங்களை போன்றவர்கள் சீனா பாக்கிஸ்தான் வாடிகன் சவூதி மண்ணை நேசிக்கிறீர்கள்..

    நேர்மையாக பார்த்தால் உங்களை போன்றவர்களுக்கு தான் பாசிச வக்கிர மனநிலை உள்ளது. அதை மறைக்க மக்களுக்காக பேசுகிறோம் என்று பொய் வேஷம் போட்டு ஊரை ஏமாற்றி கொண்டு இருக்கிறீர்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க