னித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்ததற்காக சர்வதேச இராணுவ தீர்ப்பாயம் ஜூலியஸ் ஸ்ட்ரைச்சர் (Julius Streicher) என்ற நாசி இனவெறி ஊடகக்காரரை குற்றவாளி என தீர்ப்பளித்து, 1946-ம் ஆண்டு தூக்கிலிட்டது.

தனது தீர்ப்பில் இப்படி கூறியது நீதிமன்றம்.. “மாதத்திற்கு மாதம், வாரத்துக்கு வாரம் தனது உரைகள் மற்றும் கட்டுரைகள் மூலம்,  யூத எதிர்ப்பு வைரஸை ஜெர்மானியர்களின் மனதில் பரப்பினார். மேலும் ஜெர்மானிய மக்களை தீவிரமான துன்புறுத்தலில் ஈடுபடத் தூண்டினார். 1935-ம் ஆண்டில் 600,000 பிரதிகளை எட்டிய டெர் ஸ்டர்மர்-ன்(Der Stürmer) ஒவ்வொரு இதழும் இதுபோன்ற கட்டுரைகளால் நிரப்பப்பட்டிருந்தது. அவை பெரும்பாலும் மோசமானவையாகவும் அருவருப்பூட்டுபவையாகவும் இருந்தன”

இந்தியாவில் இந்துத்துவ பாசிச அரசின் ஊதுகுழல்களாக இருக்கும் பெரும்பான்மை ஊடகங்கள் ஒவ்வொரு நாளும் மனித இனத்திற்கு எதிரான வெறுப்பு எனும் கொடிய வைரஸை பரப்பிக் கொண்டிருக்கின்றன. ஒடுக்குதலுக்கு உள்ளாகும் மதப் பிரிவினருக்கு எதிராக அவதூறு செய்வது, அரசின் பாசிச நடவடிக்கைகளை விமர்சிப்பவர்களை ‘தீவிரவாதிகளாக’ சித்தரிப்பது, ஆளும் அரசின் அரசியல் லாபங்களுக்காக ஒன்றுமில்லாத மரணங்களை பெரும் சதித்திட்டமாக சித்தரித்து குழப்பத்தை உண்டாக்குவது என ஒவ்வொரு நாளும் வெறுப்பில் திளைக்கின்றன இந்த ஊடகங்கள். இந்த வெறுப்பை உமிழும் ஊடகங்களின் முன்னோடியான அர்னாப் கோஸ்வாமி, தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகள் என்னும் டி. ஆர். பி மோசடியில் சிக்கியுள்ளார்.

நடிகர் சுசாந்த் சிங்கின் தற்கொலையை வைத்து மராட்டிய மாநிலத்தை ஆளும் சிவசேனை – காங்கிரஸ் கூட்டணி அரசை கவிழ்க்கவும் பீகார் தேர்தலில் ஆதாயம் தேடவும் பா.ஜ.க முனைந்தது. பா.ஜ.க போட்டுக்கொடுத்த இந்தத் திட்டத்தை செயல்படுத்த 24 நேரமும் உழைத்தன பாசிசத்தின் பாதந்தாங்கி ஊடகங்கள். பதவிக்காக தன்னுடைய இனவெறுப்பை தற்காலிகமாக கைவிட்டுள்ள சிவசேனை அரசாங்கம், பங்காளிகளின் சதியை முறியடிக்கும் வேலையில் இறங்கியது.

படிக்க :
♦ குஜராத் மாடல் அரதப் பழசு ! உ.பி. மாடல் தான் புத்தம் புதுசு !
♦ பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : இந்து ராஷ்டிரத்தின் முன்னறிவிப்பு | தோழர் சுரேசு சக்தி

அதன் ஒருபகுதியாகத்தான் அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவியின் டி.ஆர்.பி மோசடி வெளிக் கொண்டுவரப்பட்டுள்ளது. தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளை கண்காணிக்கும், பார்-ஓ-மீட்டரை நிறுவி பராமரிக்கும் ஹன்சா ரிசர்ச் குரூப் பிரைவேட் லிமிடெட்  நிறுவனம் டி.ஆர்.பி மோசடியில் ஈடுபட்டதாக ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி மற்றும் பாக்ஸ் சினிமா ஆகிய மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் மீது மும்பை போலீசில் புகார் அளித்திருக்கிறது.

குறிப்பிட்ட சேரிப்பகுதிகளில் ஸ்மார்ட் டிவி வசதியும் மாதந்தோறும் கணிசமான தொகையையும் கொடுத்துவிட்டு, பாரோ மீட்டரை நிறுவி விடுவார்கள். ஒரு பாரோ மீட்டர், 20 ஆயிரம் டிவி பார்வையாளர்களின் மதிப்பீட்டுக்கு இணையானதாக கணக்கிடப்படப்படுகிறது. இப்படி முறைகேடான வழியில் கிடைக்கும் தொலைக்காட்சி மதிப்பீட்டு புள்ளிகளைக் கொண்டு, ‘நாங்கள்தான் நம்பர் 1, தேசம் எங்களுடைய குரலைத்தான் கேட்கிறது’ என கூறிக்கொண்டு திரிந்திருக்கிறார் அர்னாப்.

செப்டம்பர் இறுதி வாரத்தில் ரிபப்ளிக் ஆங்கில செய்தி சானல் 5056 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள டைம்ஸ் நவ் செய்தி சானல் 1872 புள்ளிகளை பெற்றுள்ளது. இரண்டாம் இடத்துக்கும் முதல் இடத்துக்குமான வித்தியாசத்தை அதிகப்படுத்த ரிபள்டிக் டிவிக்கு டி.ஆர்.பி மோசடிகள் உதவியிருக்கலாம். முதல் இடம் என்ற சுயவிளம்பரம் மேலும் அதிக ‘உண்மையான’ பார்வையாளர்களை பெற்றுத்தரும், விளம்பர வருவாயும் அதிகரிக்கும்.

அண்டப்புளுகன் அர்னாப்

முறைகேட்டில் ஈடுபட்ட இரண்டு மராத்தி சானல்களின் உரிமையாளர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். ரிபப்ளிக் டிவி மோசடியில் ஈடுபட்டது உறுதியாகியுள்ளதாக மும்பை போலீசு ஒப்புக்கொண்டாலும், நிறுவனத்தின் பிரதிநிதிகளை அழைத்து விசாரணை மட்டும் நடத்திக் கொண்டிருக்கிறது பங்காளிகளை மிரட்டினால் மட்டும் போதும் என சிவசேனை அரசாங்கம் கருதுவதால் மேலதிக நடவடிக்கைக்கும் வாய்ப்பிருக்காது என நம்பலாம். சங்கபரிவாரத்தின் தலைமையிலான பாசிச மத்திய அரசின் ஆதரவோடு இயங்கும் அர்னாப் கோஸ்வாமியை, மைய அரசின் கீழ் இயங்கும் ஒரு மாநில அரசாங்கத்தால் எதுவும் செய்துமுடியாது.

சங்க பரிவாரத்தின் செயல்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொறியின் ஒரு அங்கமாகவே அர்னாப் கோஷ்வாமியும், அவரது ரிபப்ளிக் டிவியும் உருவாக்கப்பட்டிருக்கின்றனர். உதாரணத்திற்கு, சமீபத்தில் அர்னாப் தனது பிரைம் டைம் விவாதத்தில் பேசிய இரண்டு தலைப்புகளை எடுத்துக் கொள்ளலாம்.

முதலாவது பாகிஸ்தான் உளவு அமைப்பிடம் பணம் பெற்றதாக சிறை தண்டனை விதிக்கப்பட்ட சையது குலாம் நபி ஃபை என்பவரை பத்திரிகையாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான கவுதம் நவ்லாகா ‘பல முறை’ சந்தித்து அறிவுஜீவிகளை அரசாங்கத்துக்கு எதிராக திரட்ட திட்டமிட்டதாக தேசிய புலனாய்வு முகமையின் குற்றச்சாட்டை ஒட்டிய விவாதம்.

பாக்நக்ஸல் என்ற ஹேஷ் டேக்குடன் குற்றம்சாட்டும் தரப்பில் அரசு தரப்பு அடிபொடிகள் நால்வரும் குற்றத்தை மறுக்கும் தரப்பில் இருவரும் பங்கேற்றனர். குற்றத்தை மறுக்கும் தரப்பின் விளக்கங்கள் எதையும் ரிபப்ளிக் டிவி தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிரவில்லை. குற்றம்சாட்டும் தரப்பின் அவதூறுகளை தீர்ப்பாகவே எழுதி, அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பரப்பியிருக்கிறது.

மற்றொரு தலைப்பு: அஸ்ஸாமில் உள்ள மதரஸாக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அந்த மாநில அரசாங்கம் நிறுத்தியது தொடர்பான விவாதம். இந்துமத கோயில்களின் கட்டுமானத்துக்காக பல ஆயிரம் கோடி மக்களின் வரிப்பணம் செலவிடப்படும் நிலையில், அஸ்ஸாம் மதரஸாக்களுக்கு ஒதுக்கப்படும் நிதி நிறுத்தப்பட்டது குறித்து விவாதிக்கிறார் அர்னாப். ஒரு மாநிலத்தின் முடிவை, பிற மாநிலங்களுக்கும் திணிக்க வேண்டும் என்பதும் சிறுபான்மை மதங்களுக்கு எந்தவித சலுகைகளும் தரப்படக்கூடாது என்பதை வலியுறுத்துவதே அந்த விவாதத்தின் நோக்கம்.

ஊடக விவாதம் என்ற பெயரில் பாசிச பாஜக அரசின் இந்துத்துவ சார்பு கருத்துத் திணிப்புகளை அர்னாப்பின் ரிபப்ளிக் டிவி உள்ளிட்ட தொலைக்காட்சிகள் தொடர்ந்து செய்துவருகின்றன. சங்கபரிவாரங்களின் கனவான இந்துத்துவ இந்தியாவிற்கு மக்களை தயார்படுத்தும் இந்த ஊடகங்களின் அரசியலை புரிந்துகொண்டு அம்பலப்படுத்துவதே நாம் உடனடியாக செய்ய வேண்டிய செயலாகும். ஏனெனில், வெறுப்பை விதைப்பது மனித குல விரோத செயல் என்பதை பாசிஸ்டுகள் ஒருபோதும் உணரப்போவதில்லை.


அனிதா
செய்தி ஆதாரம்: தி வயர் #1, தி வயர் #2