யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்து! | ஆர்ப்பாட்டம்

நாள்: 22.06.2026, திங்கள் | நேரம்: மாலை 5 மணி | இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.

யா.ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை
அனைத்து மருத்துவ வசதிகளுடன்
24 மணி நேரமும் சிகிச்சையளிக்கும்
வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த
வேண்டும் ஜனநாயகம்!

ஆர்ப்பாட்டம்

நாள்: 22.06.2026, திங்கள்

நேரம்: மாலை 5 மணி

இடம்: யா.ஒத்தக்கடை, நரசிங்கம் சாலை.

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஒத்தக்கடை ஊராட்சியும், சுற்றியுள்ள பகுதிகளும் மிக வேகமாக விரிவடைந்து வருகிறது. இதற்கேற்ப மக்கள் தொகையும் அதிகரித்து வருகிறது. ஆனால் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இந்த வளர்ச்சிக்கேற்ப தரம் உயர்த்தப்படவில்லை. ஆகவே அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வேண்டும் என்கிற ஏழை, எளிய நடுத்தர வர்க்க மக்களின் தேவையை நிறைவேற்றும் கோரிக்கைக்காக கடந்த 2025 ஜீன் முதல் நாம் போராடி வருகிறோம். இந்தப் போராட்டத்தில் ஒத்தக்கடை மக்கள், மருத்துவமனை பணியாளர்கள், மருத்துவர், மார்க்கெட் வியாபாரிகள், அரசு ஊழியர்கள் என அனைவரின் ஒத்துழைப்பு, ஆதரவையும் பெற்றுள்ளோம். இதன் மூலம் பல வெற்றிகளை அடைந்துள்ளோம்.

மாற்றப்பட்டுள்ளது கேட்பாரற்ற நிலையிலிருந்த மருத்துவமனை சுற்றுப்புறம் சுகாதாரமானதாக, தூய்மையானதாக

ஆரம்ப சுகாதார நிலையத்தின் கொட்டப்பட்டு அருகிலேயே குப்பைகள் துர்நாற்றத்துடன், சுகாதாரக்கேட்டை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. இதையெல்லாம் தூய்மைப்படுத்தி, ஒழுங்குபடுத்த முடியாது என பலரும் நினைத்துக்கொண்டிருந்தனர். மக்கள் அதிகாரக் கழகத் தோழர்கள் பல்வேறு ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் ஒத்துழைப்புடன் களத்திலிறங்கி சுத்தம் செய்தனர். சுத்தம் செய்ததுடன் நின்றுவிடாமல் அதைப் பாதுகாக்க, மீண்டும் குப்பை கொட்டிவிடாமல் தடுக்க பல வாரங்களாக காலை முதல் இரவு வரை காவல்காத்தனர். மக்களிடம் விழிப்புணர்வூட்டி, அறிவுறுத்தியதன் மூலம் இன்று பலரும் ஆச்சரியப்படும் வகையில், பெருமைப்படும் வகையில் குப்பைகள் இல்லாத சுகாதார வளாகமாக மாற்றப்பட்டுள்ளது.

தொடரும் நமது போராட்டம்! மருத்தவமனையை தரம் உயர்த்தும் வரை!

ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தால் பயன்பெறும் மக்களிடம் கருத்துகளைப் பெற்று, மருத்துவமனையின் இடப்பற்றாக்குறை, பணியாளர்கள், மருத்துவமனையின் மருத்துவர், மருந்துகள் பற்றாக்குறை உட்பட இங்குள்ள பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என மாவட்ட அதிகாரிகள் முதல் மாநில முதல்வர் வரை பலமுறை மனுக்கள் அளிக்கப்பட்டது. நிலையறியவும், அதிகாரிகளிடம் பதில் பெறவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பல முறை விண்ணப்பித்து தகவல்கள் பெறப்பட்டது. அதிகாரிகளுக்கு நிர்ப்பந்தம் கொடுக்கப்பட்டது. பிரசுரம், சுவரொட்டிகள், சமூகவலைதளப் பிரச்சாரம் மூலம் பல்லாயிரக்கணக்கான மக்களிடம் இந்தப் பிரச்சாரம் கொண்டுசெல்லப்பட்டது.

சென்ற ஆண்டு ஜூன் முதல் தொடர்ச்சியான இந்தப் போராட்டத்தின் மூலம் ஆட்சியரும், மதுரை மாவட்ட சுகாதார மாவட்ட ஆய்வாளரும் நேரில் வந்து பார்வையிட்டு மருத்துவமனையை தரம் உயர்த்தவும், புதிய கட்டிடம் கட்டவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்துச் சென்றுள்ளனர். கூடுதல் பணியாளர், மருத்துவரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று புதிதாக இன்னொரு மருத்துவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆரம்ப சுகாதார நிலையத்தின் அவல நிலை மாற்றப்பட வேண்டும்!

மருத்துவ பணியாளர்கள் செவிலியர்கள் ஆரம்ப சுகாதார ஆய்வாளர் என 6 பேர் இல்லாத நிலையில் ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருவதாக அரசே தெரிவித்துள்ளது. பிரசவம் செவிலியர்களே பார்ப்பது வாரம்தோறும் பரிசோதனைக்கு வரும் கர்ப்பிணிப்பெண்களை இடவசதியில்லாமல் படிகளில் உட்கார வைப்பது மற்றும் ஸ்கேன் வெளியில்தான் எடுத்துவர வேண்டும். இரவில் விஷக்கடிகளுக்கு மருந்து கிடையாது, நாய்கடிக்கு போதுமான அளவில் மருந்து இல்லை, சர்க்கரை நோயாளிகள் வெறும் வயிற்றில் எடுக்க வேண்டிய இரத்தப்பரிசோதனையை வெளியில்தான் எடுத்துக்கொள்ள வேண்டும், குடிநீர் வசதி இல்லை, வெறும் 50 மீட்டர் தூரத்தில் உள்ள மலைச்சாமிபுரம் மக்களை 10 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாயாண்டிபட்டிக்குப் போகச்சொல்வது என மக்கள் ஏகப்பட்ட புகார்களை தெரிவிக்கின்றனர்.

முன்னேறிய மருத்துவ கட்டமைப்பும், சிகிச்சையும் யாருக்காக?

இந்தியாவிலேயே சுகாதார கட்டமைப்பிலும், மருத்துவ சிகிச்சையிலும் நமது தமிழ்நாடு சிறந்து விளங்குவதாக சொல்லப்படுகிறது. இதற்காக பல்லாயிரம் கோடிகள் ஒதுக்கப்பட்டு புதுப்புது திட்டங்களும் அறிவிக்கப்படுகின்றன. இவையெல்லாம் அறிவிப்புகளிலும் அரசாங்க கோப்புகளில் இருந்தால் மட்டும் போதுமா? மக்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடியதாக இருக்க வேண்டும். முக்கியமாக அரசு மருத்துவமனைகளையே நம்பி இருக்கும் அடிப்படை உழைக்கும் மக்களுக்கும், கிராமப்புற மக்களுக்கும் கிடைப்பதாக இருக்க வேண்டும். நமது நியாயமான, உயிராதாரமான கோரிக்கைக்காக ஒன்றுபடுவோம்! ஒத்தக்கடை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தும்வரை நமது போராட்டத்தைத் தொடர்வோம்!

தமிழக அரசே!

  • ஒத்தக்கடை அரசு மருத்துவமனையை வட்டார தலைமை மருத்துமனையாக தரம் உயர்த்து!
  • ஒத்தக்கடை அரசு மருத்துவமனைக்கு புதிய கட்டிடம் கட்டிக் கொடு!
  • போதுமான பணியாளர்கள், மருத்தவர்கள், மருத்துவ வசதிகளுடன் 24 மணி நேரமும் சிகிச்சையளிக்க நடவடிக்கை எடு!
  • மருத்துவத்துறையை தனியார்மயமாக்கும் மக்கள் விரோத நடவடிக்கைகள், கொள்கைகளை கைவிடு!

மக்கள் அதிகாரக் கழகம்,
மதுரை கிழக்கு மாவட்டம்.
84386 31587

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க