ரண்டாண்டுகளுக்கு முன்பு உட்கட்டிட வடிவமைப்பாளர் ஒருவரையும் அவரது வயது முதிர்ந்த தாயாரையும் தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் ரிபப்ளிக் டிவி அர்னாப் கோஷ்வாமியை இன்று (04-11-2020) கைது செய்திருக்கிறது மும்பை போலீசு.

அர்னாப் கோஷ்வாமியின் ரிபப்ளிக் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு கடந்த 2018-ம் ஆண்டில் உட்கட்டிட வடிவமைப்பு வேலைகளைச் செய்து கொடுத்த கன்கார்ட் டிசைன் என்ற நிறுவனத்தின் உரிமையாளரான அன்வே நாயக் என்பவருக்குக் கொடுக்க வேண்டிய ரூ.83 லட்சம் கட்டணத்தைத் தராமல் அர்னாப் கோஷ்வாமி ஏமாற்றியிருக்கிறார்.

தொடர்ந்து தமக்கு வரவேண்டிய பணம் தரப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 05-ம் தேதியன்று தமது வீட்டில் தனது தாயாருடன் தற்கொலை செய்து கொண்டார். அர்னாப் தனக்குத் தர வேண்டிய ரூ. 83 லட்சத்தை தரவில்லை என்றும் அதன் காரணமாக ஏற்பட்டிருக்கும் பணச்சிக்கலில் இருந்து மீள வழியின்றி தற்கொலை செய்து கொள்வதாகவும் கடிதம் எழுதிவைத்துவிட்டு அன்வே நாயக்கும் அவரது தாயாரும் தற்கொலை செய்திருக்கின்றனர்.

படிக்க :
♦ ரிபப்ளிக் டிவி : அர்னாப் கோஸ்வாமியின் டி.ஆர்.பி. தில்லுமுல்லு !
♦ அயோக்கியர் அர்னாப் கோஸ்வாமிக்காக களமிறங்கும் பிரஸ் கவுன்சில் !

இந்த வழக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் வழக்கு போலீசால் இழுத்து மூடப்பட்டது. இதனையொட்டி, கடந்த மே மாதம் அன்வே நாயக்கின் மனைவி தமது சமூக வலைத்தளத்தில் தன் கணவரின் தற்கொலை மீதான விசாரணையில் மாநில அரசின் பாராமுகத்தைச் சுட்டிக்காட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதனையொட்டி, 2020-ம் ஆண்டு மே 26, 2020 அன்று மராட்டியத்தின் உள்துறை அமைச்சர், இந்த விவகாரத்தை மாநில சிஐடி விசாரணைக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில்தான் தற்போது ‘சவுண்டு சங்கி’ அர்னாப் கோஷ்வாமியைக் கைது செய்திருக்கிறது போலீசு.

0-0-0

துவக்கத்தில் டைம்ஸ்-நவ் தொலைக்காட்சியில் பணிபுரிந்த போது, ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பலுக்கு சிறப்பாக சேவை செய்ததற்காக அர்னாப் கோஷ்வாமிக்குக் கிடைத்த பம்பர் பரிசுதான் ரிபப்ளிக் டிவி. ரிபப்ளிக் டிவி துவங்கப்பட்ட பின்னர், ஆர்.எஸ்.எஸ். – பாஜக பாசிஸ்டுகளின் நிகழ்ச்சி நிரலுக்கான ஊடக கோயபல்ஸ் வேலையை தங்குதடையின்றி செய்து வந்தார் அர்னாப் கோஷ்வாமி.

மத்தியில் தமது எஜமானனின் ஆட்சி இருக்கையில், அதுவும் ஜனநாயக வடிவத்தில் ஒரு பாசிச ஆட்சி நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கையில் அர்னாப் கோஷ்வாமி எதற்கும் அஞ்சாத ‘சிங்கமாய்’ வலம் வந்தார்.

மக்களுக்காக போராடிய சமூகச் செயற்பாட்டாளர்கள் போலி மோதல் கொலைகளில் கொல்லப்படும்போதும், பொய் வழக்குகளில் கருப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படும்போதும், அச்செயற்பாட்டாளர்கள் மீது அவதூறுகளையும் வெறுப்பையும் அள்ளிவீசும் வேலையைச் செய்துவந்தார் அர்னாப் கோஷ்வாமி.

தொலைக்காட்சியைப் பார்க்கும் மக்களை ஏமாற்றுவதற்கு பச்சைப் பொய்களை ஒருபக்கம் அவிழ்த்துவிட்டுக் கொண்டே, மறுபுறத்தில் தமக்கு விளம்பரமளிக்கும் நிறுவனங்களையும் ஏய்த்து வந்துள்ளார் அர்னாப் கோஷ்வாமி.

ஊடக பார்வையாளர்களின் எண்ணிக்கையை அளவிடும் அளவீடான டி.ஆர்.பி (TRP) மதிப்பீட்டை வைத்துதான் அந்தந்த ஊடகங்களின் விளம்பர மதிப்பு அமையும். அதிக டி.ஆர்.பி ரேட்டிங் உள்ள ஊடகங்களுக்கு அதிகமான கட்டணம் செலுத்தவும் விளம்பரதாரர்கள் முன்வருவார்கள்.

அண்டப்புளுகன் அர்னாப்

ரிபப்ளிக் டிவி, தமது விளம்பர வருவாயைப் பெருக்கிக்கொள்ள டி.ஆர்.பி. ரேட்டிங்கில் மோசடி செய்து தனது மதிப்பை அதிகரித்துக் காட்டுவதற்காக மோசடி செய்து வந்தது சமீபத்தில் அம்பலமானது. இது தொடர்பாக இந்த மோசடியில் ஈடுபட்ட ரிபப்ளிக் தொலைக்காட்சி மீதும் அர்னாப் மீதும் வழக்கு பதிவு செய்திருந்தது மும்பை போலீசு.

இது சுஷாந்த் சிங் ராஜ்புட் மரண விவகாரத்தில் தாம் மும்பை போலீசு மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று குற்றம் சாட்டினார் அர்னாப் கோஷ்வாமி.

தற்போது இரண்டாண்டுகளாக தூங்கிக் கொண்டிருந்த தற்கொலைக்குத் தூண்டிய வழக்கு மீண்டும் தூசிதட்டப்பட்டு அர்னாப் கோஷ்வாமி கைது செய்யப்பட்டிருப்பதும், மும்பை போலீசின் பழிவாங்கும் நடவடிக்கை என்கிறது ரிபப்ளிக் தொலைக்காட்சி.

சமூகச் செயல்பாட்டுப் பணிகளில் ஈடுபட்ட கவுதம் நவ்லகா உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலன் சார்ந்த பத்திரிகையாளர்களின் கைதுக்குக் கண்டனம் கூடத் தெரிவிக்காத பல பத்திரிகையாளர் அமைப்புகளும் இந்தக் கைதை கருத்து சுதந்திரத்தை பறிக்கும் செயல் என்று கூறி கண்டனம் தெரிவித்திருக்கின்றன.

கைது செய்யப்பட்டிருப்பது பணமோசடி செய்து அதன் காரணமாக இருவரை தற்கொலையை நோக்கி தள்ளிய குற்றத்திற்காகத்தான். இதில் பத்திரிக்கை சுதந்திரம் எங்கிருந்து வந்தது?

மோடியின் கடந்த ஆறாண்டு கால ஆட்சியில், பத்திரிகை சுதந்திரம் என்பது ‘மயிராக’ மதிக்கப்பட்டுவரும் நிலையில், அப்போதெல்லாம் வாய் திறவாமல், இருவரை தற்கொலைக்குத் தள்ளிய ஒரு கிரிமினல் குற்ற வழக்கில் எடுக்கப்பட்ட கைது நடவடிக்கையை கருத்துச் சுதந்திரத்துக்கு அச்சுறுத்தல் என பூச்சாண்டி காட்டுகிறது வலதுசாரி கும்பல்.

அர்னாபின் கைதுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் கங்கனா ரனாவத் வரை அனைவரும் கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். மராட்டிய அரசின் இந்த நடவடிக்கை பழிவாங்கும் செயல் என்றும், இது எமெர்ஜென்சி காலகட்டத்தை நினைவுபடுத்துவதாகவும் அமித்ஷா கூறியிருப்பதுதான் நகைச்சுவையின் உச்சகட்டம். மோடியின் இன்றைய பாசிச ஆட்சியின் முன்னே எமெர்ஜென்சியெல்லாம் ‘பச்சா’ தான்.

ஆர்.எஸ்.எஸ்-இன் இந்துராஷ்டிர சித்தாந்தத்தையே மராட்டியத்தில் சிவசேனா நடைமுறைப்படுத்தி வந்தாலும், மாநிலத்தில் ஆட்சியைத் தக்க வைக்க, ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக-வின் மக்கள் விரோத நடவடிக்கைகளையும், மாநில உரிமைகளைப் பறிக்கும் நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டிய அவசியமும் இருக்கிறது. சங்க பரிவாரக் கும்பலுக்கும் இது தெரியாமல் இல்லை. ஆனாலும் மாநிலத்தில் ஆட்சியைக் குறுக்குவழியில் கைப்பற்ற அர்னாப் கோஷ்வாமி, கங்கனா ரனாவத் உள்ளிட்டவர்களை வைத்து பல்வேறு பிராயத்தனங்களை செய்துவந்தது.

1970-களிலேயே மராட்டியத்தில் இந்துத்துவ மற்றும் மராட்டிய தேசிய வெறியை முன்வைத்து ஆட்சியதிகாரத்திற்கு வந்த சிவசேனா, தனது பேட்டைக்குள் தான் தான் ரவுடி என்பதை சங்க பரிவாரக் கும்பலுக்கு புரிய வைக்க முயற்சிக்கிறது. அதில் ஒரு நடவடிக்கைதான் அர்னாப் கோஷ்வாமியின் கைது நடவடிக்கை !

சரண்
செய்தி ஆதாரம் :
என்.டி.டி.வி

பிழை திருத்தம் : கட்டுரை திருத்தப்பட்டுள்ளது. வெளியிட்ட சமயத்தில் அர்னாப் தர வேண்டிய தொகை ரூ. 5.4 கோடி ரூபாய் என தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அது ரூ. 83 இலட்சம் எனத் திருத்தப்பட்டது. மேலும் இந்த வழக்கு நிலுவையில் வைக்கப்படவில்லை. மாறாக போலீசால் இழுத்து மூடப்பட்டது என்ற தகவலும் திருத்தப்பட்டுள்ளது. பிபிசி தமிழ் இணையதளத்தில் வெளியிடப்பட்ட கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்த தவறான தகவலின் அடிப்படையில் அவ்வாறு வெளியிடப்பட்டிருந்தது. தவறான தகவலை ஓரிருமுறை சரிபார்க்காமல் வெளியிட்டதற்கு வருந்துகிறோம். மீண்டும் இத்தகைய தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்கிறோம். நன்றி !

2 மறுமொழிகள்

  1. பத்தி 2 : 5.4 கோடி. பத்தி 4 : 83 லட்சம். பின்குறிப்பில் சுயவிமர்சனம்.

    எது தான் உண்மை நண்பர்களே?

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க