“பிரபல ‘ஊடகவியலாளர்’ அர்னாப் கோஸ்வாமி தாக்கப்பட்டார்” என்ற ‘அதிர்ச்சிகரமான’ சம்பவத்திற்கு இந்திய பிரஸ் கவுன்சில் தனது கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது. மேலும் கடந்த வியாழக் கிழமை (23-04-2020) அன்றே இது குறித்து அறிக்கை தருமாறு மராட்டிய அரசின் தலைமைச் செயலரையும் மும்பை போலீசு கமிசனரையும் கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 22, 2020 அன்று இரவில், அர்னாப் கோஸ்வாமி ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் தாம் தனது மனைவியோடு அலுவலகத்தில் இருந்து வீட்டிற்குத் திரும்புகையில் இரண்டு காங்கிரஸ் குண்டர்கள் தமது காரை வழிமறித்து மை பாட்டிலைக் கொண்டு தாக்கிவிட்டு தப்பி ஓட முயற்சித்ததாகவும், தமது பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார் அவர்களை விரட்டிச் சென்று பிடித்ததாகவும் தெரிவித்தார்.

அண்டப்புளுகன் அர்னாப்

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து மும்பை போலீசு விசாரித்து வருகிறது. இந்நிலையில்தான் தாக்குதல் நடந்த அடுத்த நாளே இந்திய பிரஸ் கவுன்சில் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், “இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனும், பத்திரிகையாளர்கள் உட்பட அனைவருக்கும் தங்களது கருத்தைத் தெரிவிக்க உரிமை உள்ளது. அது பலருக்கும் ஏற்புடையதாக இல்லாத போதும், அத்தகைய ஒரு குரலை நெறிக்க யாருக்கும் எந்த அதிகாரமும் கிடையாது. இந்தத் தாக்குதலை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டிக்கிறது. மேலும் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை மாநில அரசு கைது செய்து, நீதியின் முன் நிறுத்தும் என்று கவுன்சில் எதிர்பார்க்கிறது” என்று தெரிவித்துள்ளது.

இந்திய பிரஸ் கவுன்சிலைப் பொருத்தவரை பிரஸ் கவுன்சில் சட்டம் 1978-ன் படி, அதன் அதிகாரம் செய்தித்தாள்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் ஆகியவற்றின் மீதுமட்டுமே செல்லத்தக்கது ஆகும். எனில் ஒரு தொலைக்காட்சி ஊடகத்தின் உரிமையாளர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலுக்கு இந்திய பிரஸ் கவுன்சில் அக்கறை செலுத்துவதன் காரணம் என்ன?

கருத்துரிமைக்கு ஒரு ஆபத்து என்றால் பிரஸ் கவுன்சில் களமிறங்குவது நியாயம் தானே? கடந்த சில ஆண்டுகளாகவே பல பத்திரிகையாளர்கள், அரசாலும், பிற நபர்களாலும் குறிவைக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு தாக்கப்பட்ட போதெல்லாம் பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை. அப்படியே வாயைத் திறந்தாலும், பத்திரிகையாளர் மீதான தாக்குதலைக் கண்டித்து பரவலாகப் போராட்டங்கள் நடத்தப்பட்ட பின்னர் மட்டும்தான் வாயைத் திறந்திருக்கிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் பிரச்சினையில் தப்லிகி ஜமாத் கூட்டத்தைக் காரணம் காட்டி மதவெறுப்புப் பிரச்சாரங்கள் நடத்தப்படுவதற்கு ஊடகங்கள் துணைபோவதை தடுத்து நிறுத்தக் கூறி உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. அந்த வழக்கில் பதிலளித்த உச்சநீதிமன்றம், ஊடகங்களைத் தங்களால் கட்டிப்போட முடியாது என்றும், இது தொடர்பாக பிரஸ் கவுன்சிலையும் இவ்வழக்கிற்குட்படுத்துமாறும், அதன் பின்னர், இவ்வழக்கை விசாரிப்பதாகவும் மனுதாரர்களிடம் தெரிவித்தது.

படிக்க:
♦ தமிழகம் தழுவிய அளவில் நடைபெற்ற “வீட்டிலிருந்தும் குரல் எழுப்புவோம்” நிகழ்வு ! படங்கள் !
♦ விமானப் பயணத்தில் அர்னாப் கோஸ்வாமியை ‘வெச்சு செய்த’ குனால் காம்ரா !

இதற்கு மறுநாளே இந்திய பிரஸ் கவுன்சில், “மின் ஊடகங்கள், தொலைக்காட்சி செய்தி சேனல்கள், சமூக வலைத்தளங்கள் போன்றவை இந்திய பிரஸ் கவுன்சிலின் அதிகார வரம்புக்குள் வராதவை…” என்று விளக்கமளித்து அந்த வழக்கிலிருந்து நழுவிக் கொண்டது. ஆனால் இப்போது அர்னாப் கோஸ்வாமி பிரச்சினைக்கு மட்டும் தானாக முன் வந்து அறிக்கை விடுகிறது. இது இந்திய பிரஸ் கவுன்சிலின் சார்புநிலையை அப்பட்டமாகக் காட்டுகிறது.

இந்திய பிரஸ் கவுன்சில் இவ்வாறு நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. பத்திரிகை நடத்தையின் விதிமுறைகளை மீறி பல்வேறு அச்சு ஊடகங்கள் தவறிழைக்கும் போது அது குறித்து வாயைத் திறக்காத பிசிஐ, கொல்கத்தாவிலிருந்து வெளிவரும் ஆங்கில இதழான தி டெலிகிராப் நாளிதழிற்கு சமீபத்தில் ஒரு கண்டன நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

“இதைச் செய்தது கோவிட் அல்ல கோவிந்த்” (Kovind, not Covid, did it) – என்ற தலைப்பில் முதல் பக்க தலைப்புச் செய்தியை வெளியிட்டிருந்தது, “தி டெலிகிராப்” நாளிதழ். முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்-க்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கிய செய்தியை விமர்சனப்பூர்வமாக அவ்வாறு தலைப்பிட்டு வெளியிட்டிருந்தது. இதைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாத இந்திய பிரஸ் கவுன்சில், பத்திரிகை நடத்தை விதிமுறையை மீறியதாகக் கூறி அப்பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் தப்லிகி ஜமாத் விவகாரத்தில் பொய்ச் செய்திகளையும் தவறான தகவல்களையும் பரப்பி, பத்திரிகை நடத்தை விதிமுறைகளை மீறிய பிற பத்திரிகைகளை இந்திய பிரஸ் கவுன்சில் கண்டுகொள்ளவுமில்லை, அவ்விவகாரத்தில் தலையிட்டு அதைத் தடுத்து நிறுத்தவும் இல்லை.

இந்தியில் பெருமளவில் விநியோகிக்கப்படும் பத்திரிகையான “அமர் உஜாலா”வில், “சஹரன்பூரில் உள்ள தனிப்படுத்துதல் முகாமில் இருக்கும் தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள், அசைவ உணவுகள் வேண்டும் என பிடிவாதம் பிடித்தார்கள்; திறந்தவெளியில் மலம் கழித்தார்கள்” என்ற பொய்ச் செய்தி முதல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது. இச்செய்தியை அப்பகுதி போலீசே மறுத்தது. அதே போல, “டைனிக் ஜாக்ரன்” என்ற பத்திரிகையின் மீரட் பதிப்பில் மதவெறுப்பைத் தூண்டும் விதமான விளம்பரம் வந்திருந்தது. அப்போதெல்லாம் இந்திய பிரஸ் கவுன்சில் வாயைத் திறக்கவில்லை.

பத்திரிகைகளைக் கண்டிப்பதற்கும் எச்சரிப்பதற்கும் இந்திய பிரஸ் கவுன்சிலுக்கு பத்திரிகை கவுன்சில் சட்டம் – 1978, முழு அதிகாரத்தை வழங்கியிருக்கிறது. ஆனாலும் வாய் திறக்கவில்லை.

சமீபத்தில், இதே பிரஸ் கவுன்சிலின் வரம்புக்குக் கீழ் வரும் “தி இந்து” பத்திரிகையின் பத்திரிகையாளர் உட்பட மூன்று பத்திரிகையாளர்கள் மீது காஷ்மீரில் ஊபா சட்டம் பாய்ந்த போதுகூட இந்திய பிரஸ் கவுன்சில் கருத்துச் சுதந்திரம் குறித்து மூச்சுக்கூட விடவில்லை.

இதற்கு முன்னர், ஜம்மு – காஷ்மீர் சிறப்பு அதிகாரம் ரத்து செய்யப்பட்ட விவகாரத்தில் தொலைதொடர்புக் கட்டுப்பாடுகளை விலக்க வேண்டும் என்றும் பத்திரிகையாளர்களை அனைத்து பகுதிக்கும் அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி, காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் செயல் ஆசிரியர் அனுராதா பாஷின் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அந்த சமயத்தில் இந்த வழக்கில் தாமாக முன்வந்து தனது கருத்தையும் கேட்க வேண்டும் என கோரிக்கை விடுத்தது இந்திய பிரஸ் கவுன்சில். நீதிமன்றமும் அனுமதி வழங்கியது.

அதனைத் தொடர்ந்து பிசிஐ சமர்ப்பித்த மனுவில், “காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்புக் கட்டுபாடுகள் இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான்; எனவே கட்டுபாடுகள் தொடரலாம்” என்று குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

நடந்திருக்கும் இந்தச் சம்பவங்கள் அனைத்தும் ஒரு விசயத்தை மட்டும் உறுதிப்படுத்துகின்றன. கருத்துச் சுதந்திரத்தைவிட தனது எஜமானர்களின் மனத் திருப்திதான் முக்கியம் என்ற வகையில்தான் ஆளும் காவி பாசிச கும்பலுக்குச் சேவை செய்து வருகிறது இந்திய பிரஸ் கவுன்சில்.

நந்தன்
செய்தி ஆதாரம், நன்றி :  த வயர். 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க