privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

காஷ்மீர் : மோடிக்கு சொம்படிக்கும் இந்திய பிரஸ் கவுன்சில் !

“அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் ‘பி’ டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” பி.சி.ஐ-யின் செயல்பாட்டை பத்திரிக்கையாளர்கள் கண்டித்துள்ளனர்.

-

ம்மு – காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்பு கட்டுபாடுகளை முடிவுக்குக் கொண்டுவருமாறு உச்சநீதிமன்றத்தில் காஷ்மீர் டைம்ஸ் நாளிதழின் செயல் ஆசிரியர் அனுராதா பாஷின் சமீபத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் தம்மை தலையிட அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றத்தில் பி.சி.ஐ (இந்திய பிரஸ் கவுன்சில்) கோரியுள்ளது.

இதுகுறித்து தனது மனுவில் குறிப்பிட்டுள்ள பி.சி.ஐ., காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள தொலைதொடர்புக் கட்டுபாடுகள் இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கையில் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதான் என்று கூறியிருக்கிறது. இந்திய ஊடகங்களின் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக இருப்பதாக சொல்லிக் கொள்ளும் பிசிஐ-யின் நிலையே இதுதான்.

பாஷினின் மனுவைப் பரிசீலிக்கையில், ஊடகங்களின் சுதந்திரம் மற்றும் ‘தேசத்தின் நலன்’ ஆகிய இரண்டையும் கருத்தில் கொண்டு, தமது கருத்துக்களை முன்வைக்கவும் அனுமதிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் கோரியுள்ளது பிசிஐ.

pci-Chairman-CK-prasad
பிசிஐ-யின் தலைவர் சந்திரமௌலி குமார் பிரசாத்

அரசியல் சாசன சட்டத்தின் எந்த ஒரு முக்கியமான பிரிவையும் மீறியதாக பாஷினின் மனுவில் குறிப்பிடப்படவில்லை என்று தனது மனுவில் குறிப்பிட்டிருக்கிறது பி.சி.ஐ.

முன்னதாக கடந்த ஆகஸ்ட் 10 அன்று பாஷின் உச்சநீதிமன்றத்தில் பதிவு செய்த ரிட் மனுவில், தொலைதொடர்பு, இணையம் உள்ளிட்டவை தடை செய்யப்பட்டதன் மூலம் காஷ்மீரில் ஊடக சுதந்திரம் தடுக்கப்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அதே போல, பத்திரிகையாளர்களும், ஊடகவியலாளர்களும் காஷ்மீர் முழுவதும் செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளையும் நீக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தடைகள், ஊடகங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகள் குறித்து செய்தி அனுப்புவதைத் தடுக்கும் வகையில் பத்திரிகை சுதந்திரத்தை மறைமுகமாக இருட்டடிப்பு செய்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

பி.சி.ஐ. உறுப்பினர்கள் இருவரிடம் இது குறித்து ‘தி வயர்’ இணையதளம் கேட்டபோது, அவர்கள் பி.சி.ஐ-யின் இந்த அறிவிப்பு குறித்துத் தமது அதிர்ச்சியைத் தெரிவித்தனர். பி.சி.ஐ-யின் இந்த மனு குறித்து தங்களுக்குத் தகவல்கூட எதுவும் தரப்படவில்லை என்று கூறியிருக்கின்றனர்.

படிக்க:
காஷ்மீர் : ‘இது எமெர்ஜன்சி அல்ல’ – ஐ.ஏ.எஸ் அதிகாரி பதவி விலகல் !
♦ காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

இவர்கள் இருவரில் ஒருவர் சமீபத்தில்தான், ஸ்ரீநகரில் செய்திநிறுவனங்கள் கூட சுதந்திரமாக செய்தியைப் பதிவு செய்ய முடிவதிலை என்பதை பி.சி.ஐ-யின் தலைவர் நீதிபதி சி.கே.பிரசாத்-தின் கவனத்திற்கு கொண்டுவந்திருக்கிறார். மற்றொருவர், ஜம்மு காஷ்மீரின் பத்திரிகைகளிளோ இணையதளங்களோ கடந்த இரண்டுவாரமாக புதியதாக செய்திகள் வெளியிடப்படாதது குறித்து பிசிஐ தலைவரின் கவனத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

பிசிஐ-யின் மற்றொரு உறுப்பினர் இதுகுறித்துக் கூறுகையில், “ பிசிஐ சமர்ப்பித்திருக்கும் இந்த தலையிடல் மனுவில் உள்ள வார்த்தைகள் மிகவும் ஆபத்தானவை. பி.சி.ஐ.-யின் சந்திப்புகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் எந்த முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், பி.சி.ஐ-யின் தலைவர் அதன் உறுப்பினர்களின் அங்கீகரிப்பைப் பெற்றிருக்க வேண்டும் என விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அவர் உறுப்பினர்களிடம் இது குறித்த எவ்விதத் தகவலும் தெரிவிக்கவில்லை” என்று குறிப்பிடுகிறார்.

sawant
பிசிஐ-யின் முன்னாள் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சாவந்த்

இதுகுறித்து பி.சி.ஐ-யின் முன்னாள் தலைவரும் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான சாவந்த் கூறுகையில் இது துரதிர்ஷ்டமானதும், எதிர்பாராததுமாகும் என்றார். மேலும் பிரிவு 370-ஐ நீக்குவதற்கு அரசு எடுத்த முடிவு சட்டவிரோதமானதாகும் என்று குறிப்பிட்டுள்ளார். “ஒட்டுமொத்த காஷ்மீரிகளையும் இந்தியாவிற்கு எதிராகத் திரும்பச் செய்வதில் பாகிஸ்தானும் பயங்கரவாதிகளும் கடந்த 70 ஆண்டுகளாக சாதிக்க முடியாததை அரசாங்கத்தின் இந்த ஒரு நடவடிக்கை நிறைவேற்றியிருக்கிறது. இது பாகிஸ்தானுக்கான வெற்றியும், இந்தியாவிற்கான தோல்வியுமாகும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.

மேலும், “இது ஒரு தவறான சாகசமாகும்; நாம் இதனை சரிசெய்ய வேண்டியது இருக்கலாம், ஆனால் காஷ்மீரிகளின் நம்பிக்கை இழப்பு என்ற சேதாரம் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுவிட்டது. அதை மீட்டெடுப்பது கடினம்” என்கிறார் சாவந்த்.

அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள தொலைதொடர்பு, இணையத் தடை ஆகியவை குறித்துப் பேசுகையில், அது காஷ்மீரிகளின் குரலை ஒடுக்கும் செயலாகும் என்றும் இது பிரச்சினையை இன்னும் தீவிரப்படுத்தும் என்றும் கூறியிருக்கிறார். தாம் எடுத்துவரும் நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை என்பதால்தான் எதிர்க்கட்சிகளைக்கூட அங்கு செல்ல விடாமல் அரசு தடுக்கிறது. இது அங்கு சட்ட ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே காட்டுகிறது என்கிறார்.

“நானும், ஒட்டுமொத்த இந்தியர்களும் அச்சம் கொள்ள வேண்டியது என்னவென்றால், மக்களின் மீதான இந்த ஒடுக்குமுறை அவர்களை தீவிரவாதத்தை நோக்கித் தள்ளும். இப்போது அங்கு சூழல் அமைதியாக இருப்பதாகத் தெரிந்தாலும், அது புயலுக்கு முந்தைய அமைதி” என்கிறார் சாவந்த்.

பி.சி.ஐ-யின் இந்த முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பல்வேறு பத்திரிகையாளர்கள், பத்திரிகையாளர் சங்கங்கள் என மொத்தம் 74 பேர் தங்களது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளனர். தங்களது கண்டன அறிக்கையில், “ அரசாங்கத்தின் அறிவிப்புக்கு தலையாட்டும்விதமாகவும், அரசாங்கத்தின் பி டீம் போல இந்தச் செயல்பாடு இருப்பதாகவும்” தங்களது கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

பாஜக அரசின் எடுபிடியாக செயல்பட்டிருக்கும் பி.சி.ஐ தலைவர், இந்தக் கண்டனங்களுக்கெல்லாம் மசிவார் என்று எதிர்பார்க்க முடியுமா? அனைத்தையும் உதிர்த்தவர்களுக்கு வெறும் சொற்களால் ஆன கண்டனங்களால் தோல் உரைக்கவா போகிறது ?

– நந்தன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க