ஜம்மு காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை ரத்துசெய்து அம்மாநில மக்களை வாயடைக்கும் விதமாக அவசரநிலை போன்றதொரு சூழலை ஏற்படுத்தியுள்ளது மத்திய அரசு. கடந்த இருபது நாட்களாக தொடர்ந்து வரும் அரசின் அத்துமீறலை எதிர்க்கும் விதமாக கேரள மாநிலத்திலிருந்து தேர்வான இந்திய ஆட்சிப்பணி அதிகாரி கண்ணன் கோபிநாத் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
“அனைத்து மக்களின் அடிப்படை உரிமைகளை தடை செய்துவிட்டு, யாரும் எதையும் சொல்லக்கூடாது என்பதற்கு இது ஒன்றும் ஏமன் அல்ல; 1970-ம் அல்ல!” என தனது ராஜினாமா குறித்து த வயர் இணையதளத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார் கண்ணன்.
“முழு பிராந்தியமும் அனைத்து கட்டுப்பாடுகளாலும் முடக்கப்பட்டு இருபது நாட்களாகின்றன. இதைப் பார்த்து என்னால் அமைதியாக இருக்க முடியவில்லை. நான் பேச வேண்டுமென்றால் என்னுடைய ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்; அதற்காகத்தான் ராஜினாமா செய்தேன்” என்கிறார்.
அருணாச்சல்-கோவா-மிசோரம் யூனியன் பிரதேசங்களில் 2012-ம் ஆண்டு பணியைத் தொடங்கிய கண்ணன், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்ட பின்னர், அங்கேயும் பணிக்காக சென்றிருக்க முடியும். தற்சமயம் தாத்ரா மற்றும் நகர் ஹவேலி அரசில் பணியாற்றிக்கொண்டிருந்த அவர், தனது பதவி விலகல் கடிதத்தை ஆகஸ்டு 21-ம் தேதி அளித்திருந்தார்.
இந்தச் செய்தி கேரள ஊடகங்களில் பரவியது. “என்னுடைய விலகல் கடிதம் ஏற்றுக்கொள்ளப்படும்வரை பேசக்கூடாது என்றுதான் இருந்தேன். என்னுடைய சகாக்கள் சிலர் இந்த விசயத்தை கசியவிட்டதன் காரணமாக அது கேரள ஊடகங்களில் வெளியானது” என்கிறார்.
படிக்க:
♦ தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! அச்சுநூல்
♦ முடக்கப்பட்ட காஷ்மீர் பள்ளத்தாக்கு : படக் கட்டுரை
வெளிப்புற ஆக்கிரமிப்பு அல்லது ஆயுதமேந்திய கிளர்ச்சி நிலை வரும்போது, அவசரநிலை (அனைத்து சுதந்திரத்தையும் ரத்து செய்யலாம்)யை பிரகடனப்படுத்தலாம் என அரசியலமைப்பு அனுமதித்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் உள் குழப்பம் ஏற்படக்கூடும் என்பதாலேயே மக்களின் சுதந்திரம் முடக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 44-வது பிரிவு ‘உள் குழப்பம்’ அவசரநிலையை பிரகடனப்படுத்த போதுமானது அல்ல என்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறார் கண்ணன்.
“இங்கு அவசரநிலை பிரகடனப்படுத்தப்படவில்லை என்பது உண்மைதான். ஆனால், அனைத்து உத்தரவுகளும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மூலம் அமலாக்கச் சொல்கிறார்கள். நீதித்துறையிடமிருந்து நிவாரணங்கள் பெறுவதிலிருந்து மக்கள் தடுக்கப்படவில்லை என்றபோதும், நீதிமன்றங்கள் செயல்படத்தயாராக இல்லை” என்கிற கண்ணன், கடந்த ஜனவரி மாதம் தனது ஐஏஎஸ் பதவியிலிருந்து விலகிய ஷா ஃபைசல் கைது செய்யப்பட்டதில் நீதிமன்றம் நடந்துகொண்ட விதம் தன்னை பாதித்ததாக தெரிவிக்கிறார்.
ஷா ஃபைசல் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஆகஸ்ட்டு 19-ம் தேதி ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுபோன்ற மனுக்கள் உடனடியாக விசாரிக்கப்படுவதே வழக்கம். ஆனால், இந்த மனு செப்டம்பர் 3-ம் தேதி விசாரிக்கப்பட உள்ளதாக நீதிமன்றம் சொன்னதை குறிப்பிடுகிறார் கண்ணன்.
ஆட்சிப்பணி அதிகாரிகள், தாம் சொல்வதை நடைமுறைப்படுத்துகிறவர்களாக மட்டுமே இருக்க வேண்டும் என அரசியல்வாதிகள் எதிர்ப்பார்ப்பதாகவும் எது சரி தவறு என அலசி முடிவெடுப்பது குறித்து அவர்கள் அக்கறை கொள்ளவில்லை எனவும் அவர் வருத்தம் கொள்கிறார்.
“செய்திதாள் நடத்துகிறவராக நான் இருந்திருந்தால், வெறுமனே ‘20’ என்று மட்டுமே தலைப்பு வைத்திருப்பேன். ஏனெனில் காஷ்மீர் மக்களின் சுதந்திரத்தின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருபது நாட்கள் ஆகின்றன”.
பணியிலிருந்து விலகியபின் என்ன செய்யப்போகிறீர்கள் எனக் கேட்டபோது, “நான் அதுபற்றி இதுவரை சிந்திக்கவில்லை. ஆனால், இருபது ஆண்டுகள் கழித்து நாட்டின் ஒரு பகுதி மீது மெய்நிகர் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது நீங்கள் என்ன செய்துகொண்டிருந்தீர்கள் எனக் கேட்டால், நான் ஐ.ஏ.எஸ் பதவியிலிருந்து விலகினேன் எனச் சொல்வேன்” என்கிறார்.
மத்திய அரசின் எதேச்சதிகார திட்டங்களை நடைமுறைப்படுத்தும் அதிகாரியாக இருப்பதை விரும்பாத இவரைப் போன்றவர்களின் அறவுணர்வு பாராட்டக்கூடியது. அதோடு, மக்களாகிய நாம் யார் பக்கம் நிற்க வேண்டும், பாசிசத்தின் பக்கமா அல்லது அதை எதிர்த்தா என்பதையும் நமக்கு சுட்டிக்காட்டியிருக்கிறார் கண்ணன்.
அனிதா
நன்றி: த வயர்
உண்மையான மக்கள் சேவகர்களை மோடி அரசு இழந்துகொண்டிருக்கிறது. அவர்களுக்குத் தேவை பிழைப்புவாதப் பொறுக்கிகளும், சொன்னதைச் செய்யக்கூடிய அடிமைகளுமே. வாழ்க, பாரத தேசம்!