privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஇந்தியாகாஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

காஷ்மீர் : இராணுவத்தின் அத்துமீறலை அம்பலப்படுத்திய ஷெஹ்லா ரஷித் மீது வழக்கு !

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகுக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருபவர்களை மிரட்டுகின்றனர்.

-

காஷ்மீரில் சிறப்பு சட்டப் பிரிவு 370 நீக்கப்பட்ட பின், தெருக்கள் தோறும் நிறுத்தப்பட்டிருக்கும் இராணுவம் பல்வேறு மனித உரிமை மீறல்களைச் செய்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வருகிறார்கள். அங்கே சென்று வந்த உண்மையறியும் குழு, சிறுவர்களையும்கூட இராணுவப் படையினர் கைது செய்வதாகக் குற்றம்சாட்டியது.

Shehla Rashid
ஷெஹ்லா ரஷீத்

காஷ்மீர் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்த ஷெஹ்லா ரஷீத் காஷ்மீரில் மனித உரிமை மீறல்கள் நடப்பதாக தனது டிவிட்டர் பக்கத்தில் எழுதியிருந்தார்.

“ஆயுதமேந்திய படைகள் இரவில் வீட்டிற்குள் நுழைந்து, சிறுவர்களை அழைத்துச் செல்கிறது. வீட்டை நாசம் செய்கிறது. உணவுப் பொருட்களை வேண்டுமென்றே கீழே சிந்தி, அரிசியுடன் எண்ணெயை கலப்பது போன்ற செயல்களில் ஈடுபடுகிறது” என்றும்

“சோபியனின் இராணுவ கேம்புக்கு அழைக்கப்பட்ட நான்கு பேர் சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்டனர். அவர்கள் அலறுவதை அந்தப் பகுதி முழுவதும் பரப்பும் வகையில் அருகே மைக்கை பொருத்தியிருக்கிறார்கள். இது அந்த முழு பகுதியையும் அச்சமடைய வைத்தது” என்றும் காஷ்மீர் நிலைமை குறித்து அவர் டிவிட்டரில் எழுதியிருந்தார்.

ஷெஹ்லா ரஷீத்தின் குற்றச்சாட்டுக்கு உடனடியாக இராணுவம் மறுப்பு தெரிவித்து ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்துக்கு அறிக்கை கொடுத்தது. மக்களை தூண்டக்கூடிய சக்திகள் இதுபோன்ற பொய்ச்செய்திகளைப் பரப்புவதாக இராணுவம் தெரிவித்தது.

இராணுவத்தின் விளக்கத்துக்கு எதிர்வினையாற்றியுள்ள ஷெஹ்லா, “இந்திய இராணுவம் பக்க சார்பற்ற விசாரணை நடத்தட்டும். நான் அவர்களுடன் தொடர்புடைய விசயத்தை பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

படிக்க:
மோடி அரசாங்கத்தின் காஷ்மீர் மீதான ஆக்கிரமிப்பு : பு.ஜ.மா.லெ. கட்சி கண்டனம் !
♦ காஷ்மீர் : உரிமைப் பறிப்புக்கு எதிராக வழக்கறிஞர்கள் கூட்டறிக்கை !

காஷ்மீரில் என்ன நடக்கிறது என்பதை வெளியுலகக்குக் காட்ட மறுக்கும் மோடி அரசின் கைக்கூலிகள் காஷ்மீரில் நடக்கும் அத்துமீறல்களை வெளிக்கொண்டு வருபவர்களை கடுமையாக மிரட்டிக் கொண்டிருக்கிறது. தொடர்ச்சியாக ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய அலாக் அலோக் ஸ்ரீவத்சவா என்ற வழக்கறிஞர் ஷெஹ்லா ரஷீத் மீது குற்ற வழக்கு பதிந்துள்ளார்.

போதாதென்று, ட்விட்டரில் உள்ள காவி ட்ரோல் படை ஷெஹ்லாவை கைது செய்ய வேண்டும் என தொடர்ச்சியாக எழுதியது. #ArrestShehlaRashid என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்ட் செய்தது. ஊடக காவிப் படைத் தலைவனான அர்னாப் கோஸ்வாமி தனது ரிபப்ளிக் டிவியில் ஷெஹ்லா ரஷீத் மீது தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பினார்.

காஷ்மீரின் அரசியல்வாதிகள், அரசியல் செயல்பாட்டாளர்கள், முன்னாள் முதலமைச்சர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் 12 நாட்களாக சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். இரண்டு ஆண்டுகள் விசாரணை இல்லாமல் சிறையில் அடைக்கக்கூடிய பொது பாதுகாப்பு சட்டத்தில் மக்கள் கைது செய்யப்படுகின்றனர். 4000 பேர் இதுவரை கைதாகியுள்ளதாக ஏ.எஃப்.பி செய்தி கூறுகிறது.

இவையெல்லாம் ஒட்டுமொத்த உலகமும் அறியும்படி இந்திய அரசு செய்யும் அத்துமீறல்கள். ‘காஷ்மீர் நமதே’ என வெட்கமில்லாமல் கத்தும் காவி ட்ரோல் படைக்கு, மனித உரிமை மீறல் பற்றியோ, அத்துமீறல் பற்றியோ அக்கறை இல்லை. அதற்காக குரல் எழுப்புகிறவர்களை மிரட்டுகிற ஆட்டு மந்தைக் கூட்டம் அது…

கலைமதி
நன்றி:  ஹஃபிங்டன் போஸ்ட் 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க