சமீபத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றி இறந்த முகுந்த் வரதராஜனைப் பற்றிய கதை இது.
தீவிரவாதக் கும்பல் காஷ்மீரைக் கைப்பற்ற முயல, மக்களைக் காப்பாற்றி தீவிரவாதிகளைக் கொல்கிறது ‘கருணையே வடிவான’ இந்திய ராணுவம். காஷ்மீரை, இந்திய ராணுவம் தன் துப்பாக்கி முனையில் ‘அமைதிப்படுத்த’ போராடும் இந்த போராட்டத்தில், ராணுவ வீரர்கள் பலர் தங்கள் உயிரைத் தியாகம் செய்கின்றனர்.
இந்த ‘கதையில்’ ராணுவம், வன்முறை, ரத்தம், காஷ்மீர், தீவிரவாதம் என்று மட்டும் காட்டப்பட்டிருந்தால், அது ஹாலிவுட் பாணியில் வரும் சண்டை படமாகவோ, பாகிஸ்தான் தீவிரவாதிகளைப் பிடித்துக் கொண்டு வரும் விஜயகாந்த் படத்தைப் போலவோ சுருங்கிப் போயிருக்கும். இந்த ‘அபாயத்தை’ உணர்ந்த இயக்குநர், இதோடு காதல், குடும்பம், தியாகம் ஆகியவற்றைக் காட்டி, பிரிவு, அன்பு, கண்ணீர் என சம அளவில் இணைத்து இத்திரைப்படத்தில் காட்டி இருப்பதால் இறுதிக்காட்சியில் வரும் மரணம் மற்றும் பிரிவின் துயரத்தில் நம்முடைய கண்ணிலும் கண்ணீர் தளும்புகிறது. அப்படி நம்மையும் அறியாமல் நம் கண்களில் நிறையும் கண்ணீரில் தான் காஷ்மீர் மக்களின் உரிமைக்கான போராட்டம் மறைக்கப்படுகிறது.
காஷ்மீர் மக்கள் தங்கள் சுயநிர்ணய உரிமையைப் பற்றிப் பேசினால் பிரிவினைவாதம். பிரிவு 370ஐ ரத்து செய்த, காஷ்மீர் மக்களின் உரிமைகளைப் பறித்த பாசிச மோடி கும்பலை விமர்சனம் செய்தால் தேசத் துரோகம். தங்கள் பெண்களை வன்புணர்ந்து, இளைஞர்களைச் சுட்டுக் கொல்லும் இந்திய ராணுவத்தின் மீது கல்லெறிந்து எதிர்ப்பை காட்டினால் தீவிரவாதம். ஆட்சிகள் மாறினாலும் இந்த நீதியே இந்திய ஆளும் வர்க்கத்தின் மாறாத நீதியாக என்றென்றும் உள்ளது.
படிக்க: காஷ்மீர் மீது கல்லெறியும் கமல் – மக்கள் அதிகாரம் மருது உடைத்த ரகசியங்கள்
இந்திய ராணுவத்தின் மீது கல்லெறியப்படுவதற்கான பின்னணி குறித்துப் பேசாமல் திட்டமிட்டுக் கடந்து செல்வது, ராஷ்டிரிய ரைபில்ஸ் படைப்பிரிவின் ஜெய் பஜ்ரங்பலி என்கிற இந்துத்துவா கோஷத்தை வலிந்து திணிப்பது ஆகிய ஒரு சில உதாரணங்கள் மூலமாகவே இந்திய ஆளும் வர்க்கத்தின் குரலாய் இத்திரைப்படம் ஒலித்திருப்பதைக் கண்கூடாக நம்மால் காண முடியும். காஷ்மீரில் நடக்கும் அம்மக்களின் சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தைத் தீவிரவாதம் என திரித்தும், இந்து முஸ்லீம் பிரிவினையை உண்டாக்கி முஸ்லீம்கள் நாட்டை துண்டாடுகிறார்கள் என்ற கடைந்தெடுத்த பொய்யைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் இந்திய ஆளும் வர்க்கத்தைத் திரைப்படம் தோலுரிக்காமல் அதன் மேல் தேசப்பற்று எனும் சாயம் பூசுகிறது. இந்த விமர்சனங்கள் இருந்தும் அதைத் தாண்டி, இத்திரைப்படம் 300 கோடி வசூலை எட்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது. அப்படி என்றால் இத்திரைப்படம் மக்கள் மனதில் உண்டாக்கிய தாக்கம் எத்தகையது? அது என்ன வகையானது?
இந்திய ராணுவத்தினருக்கு ‘ஊட்டப்படும்’ தேசப்பற்று போன்றது அல்ல காஷ்மீர் மக்களின் உண்மையான தேசப்பற்று. காஷ்மீரில் துப்பாக்கியை ஏந்தும் ராணுவ வீரருக்கு இருக்கும் அரசியல் புரிதலை விட, தங்கள் கைகளில் கற்களை ஏந்தி நிற்கும் காஷ்மீர் மக்களின் அரசியல் தெளிவானது. அந்த அரசியல் தெளிவு தான் ராணுவத்தின் துப்பாக்கிகளுக்கும், பீரங்கிகளுக்கும் அஞ்சாமல் காஷ்மீர் மக்களைக் கற்களையே ஆயுதமாக ஏந்த வைக்கிறது.
திரைப்படத்தில் ஒரு காட்சியில் முகுந்தின் அப்பா கேட்கிறார், “காஷ்மீரில் சண்டை எப்போது நிற்கும்” என்று. அதற்கு “தெரியல நைனா, பேச வேண்டியவங்க பேசினா நிற்கும்” என்று முகுந்த் பதில் சொல்வதாகக் காட்சி நகர்கிறது. பேச வேண்டியவங்க என்றால் யார்..? இந்த கேள்விக்குப் பதில் சொல்லாமல், அதன் பின்னால் இருக்கும் அரசியலைப் பேசாமல் சந்தர்ப்பவாதமாக நழுவிச் செல்கிறது திரைப்படம். இதன் வழியாகக் கண்மூடித்தனமானதொரு தேசப்பற்றுக்கு அழைத்துச் செல்கிறது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக காங்கிரஸ் முன்னிறுத்திய இதே போலி தேசப்பற்றை, தன்னுடைய பாசிச நடவடிக்கைக்குக் கேடயமாகப் பயன்படுத்திக் கொள்கிறது பாசிச மோடி கும்பல். அம்பானி – அதானி போன்ற கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டை தாரை வார்த்துக் கொடுப்பதற்கும், நாட்டை இந்துராஷ்டிரமாக மாற்றுவதற்கும் பெயர்தான் தேசப்பற்று.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களின் உரிமைகளை மறுப்பதும், பணியில் இருக்கும் ராணுவ வீரர்களின் உணவு, உடை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் ஊழல் செய்வதும்தான் தேசப்பற்று.
படிக்க: ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து வழக்கு: பாசிஸ்டுகளுக்கு பக்கபலமாக நிற்கும் உச்சநீதிமன்றம்!
அக்னிபாத் திட்டத்தைக் கொண்டு வந்து இளைஞர்களின் தேசப்பற்றின் மீது ஒப்பந்தம் போடுவதுதான் தேசப்பற்று. ராணுவத்தினரின் உயிர்த் தியாகங்களை தங்களின் அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்திக் கொள்வதற்குப் பெயர்தான் தேசப்பற்று..
மோடியின் ரபேல் விமான ஊழல் குறித்துப் பேசினால் அது தேசத்திற்கு எதிரானது. அதானியின் ஊழல் குறித்துப் பேசினால் அது தேசத்துக்கு எதிரானது. காஷ்மீரிகளின் உரிமைகளை ரத்து செய்து, பெரு முதலாளிகளுக்குக் காஷ்மீரைத் தூக்கிக் கொடுத்தால் அது தேசப்பற்று. துறைமுகங்களை அதானிகளுக்கும், கடல் வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கும், தாரை வார்த்து ஒக்கிப்புயலில் மீனவன் சாகும்போது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பதற்குப் பெயர் தேசப்பற்று. அன்னிய மூலதனத்தைக் குவித்து தொழிலாளர்களின் உரிமைகளை மறுப்பதற்குப் பெயர்தான் தேசப்பற்று.
இந்த தேசப்பற்று எனும் முகமூடிக்குள் காவியும் – கார்ப்பரேட்டும் ஒளிந்து கொண்டு தமது பாசிச திட்டங்களை நிறைவேற்றிக் கொள்கிறது. ஏகாதிபத்திய, பாசிச காலகட்டத்தில் தேசத்துக்குச் செய்யும் துரோகத்திற்குப் பெயரே தேசப்பற்று!
அரசியல் நீக்கம் செய்யப்பட்ட தேசப்பற்று என்னவாகும்? அது இயல்பாக ஆளும் வர்க்கத்துக்குத்தான் பலனளிக்கும். ஆளுமவரக்கம் அப்படியான தேசப்பற்று உள்ளவர்களைத் தனது ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொண்டு அவர்களையும் அழித்து முகுந்துக்கு சிலை வைத்தது போல் சிலை வைக்கும், கொண்டாடும். இதையே மூலதனமாக்கி ஆளும் வர்க்கத்தின் நலனுக்காக மக்களைத் தியாகம் செய்ய முன்வரச் சொல்லும். இந்த பொய்யான முகமூடியைக் கிழித்தெறிந்து உண்மையான தேசப்பற்றுடன் போராடினால் ஆளும் வர்க்கம் என்ன செய்யும்? மண்ணை நாசமாக்கிய ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து தேசப்பற்றுடன் போராடிய மக்களைச் சுட்டுக் கொன்றது போல் சுட்டுக் கொல்லும். தனது நலனுக்காகச் செத்தால் சிலை வைக்கும் ஆளும் வர்க்கம் மக்களின் நலனுக்காக உயிரிழந்த தியாகிகளுக்கு மணிமண்டபம் கூட அமைக்காது.
இன்று இந்த கட்டமைப்பு முழுவதையும் பாசிசக் கும்பல் சூழ்ந்திருக்கிறது. அது முகுந்த்களின் இறப்பையும், ரெபேக்காக்களின் கண்ணீரையும் காட்டி நமது தேசப்பற்றை விலையாகக் கேட்கிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, இழப்புகளுக்கு அஞ்சாமல் இந்த ஆளும் வர்க்கக் கட்டமைப்பையும், பாசிசக் கும்பலையும் வீழ்த்த, உழைக்கும் மக்களோடு கரம் கோர்ப்பதில்தான் உண்மையான தேசப்பற்று இருக்கிறது.
மக்கள் அதிகாரம்
நெல்லை மண்டலம்
9385353605
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram