மத்திய அரசால் இயற்றப்பட்ட வேளாண் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதை நிறுத்தி வைக்க இன்று (12-01-2021) உத்தரவிட்டிருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே தேங்கி நிற்கும் பேச்சுவார்த்தையை நடத்தி தீர்வு காண்பதற்காக கமிட்டி ஒன்றையும் ஏற்படுத்தியிருக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, ஏ.எஸ். போபண்ணா, ராமசுப்பிரமணியம் ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, இன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடிவருவது தொடர்பான வழக்கில் மேற்கண்ட உத்தரவை வழங்கியுள்ளது.
இதற்கு முன்னரே, கடந்த திங்கள்கிழமை (11-01-2021) அன்று விவசாயிகள் போராட்டத்தைக் கையாளுவதில் “விளைவுதரும் நடவடிக்கைகள்” எதையும் எடுக்காமல் இருக்கும் மத்திய அரசை உச்சநீதிமன்றம் கண்டித்தது. இது குறித்து இன்று (12-01-2020) தாம் முக்கிய முடிவெடுக்கவிருப்பதாகவும் தெரிவித்திருந்தது.
படிக்க :
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
அந்த வகையில் இன்று இந்த சட்டத்தை நிறுத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. மேலும் விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்த ஒரு கமிட்டி ஒன்றை அமைத்தும், அக்கமிட்டியில் இடம்பெறக்கூடிய நபர்களை முன்மொழிந்தும், அக்கமிட்டிக்கு இருதரப்பும் ஒத்துழைக்குமாறும் உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத்தின் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைக்க உத்தரவிட்டதையும் இதற்கு முன்னர் நேற்று மோடி அரசை ‘கண்டித்ததையும்’ சுட்டிக் காட்டி பலரும் இதை ஒரு தற்காலிக வெற்றியாகவோ, அல்லது மோடி அரசுக்கு ஒரு பின்னடைவாகவோ கருதுகின்றனர்.
ஆனால், விவசாயிகள் பிரச்சினை தொடர்பான விவகாரத்தில் இந்த இரண்டு நாட்களில் (ஜன. 11,12 – 2021) உச்சநீதிமன்றத்தின் திருவாயிலிருந்து உதிர்ந்த முத்துக்களில் இருந்து இவ்விவகாரத்தைப் பரிசீலித்தாலே இது திட்டமிட்ட நரித்தனம் என்பது புரியவரும்.
பேச்சுவார்த்தை நடத்த உச்சநீதிமன்றம் அமைப்பதாகச் சொன்ன கமிட்டியில் இடம்பெற்றிருப்பவர்கள், விவசாய பொருளாதார அறிஞர் அஷோக் குலாட்டி, பாரதிய கிஷான் சங்கத்தின் பூபிந்தர் சிங் மண், சேத்கரி சங்க்தனாவைச் சேர்ந்த அனில் கான்வாட் மற்றும் பிரமோத் குமார் ஜோஷி ஆகியோர்தான். இவர்களில் பெரும்பான்மையினர் இதற்கு முன்னர் வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்கள் என்று தி வயர் இணையதளம் கூறுகிறது.
வேளாண் சட்டங்களை வெளிப்படையாக ஆதரித்தவர்களை வைத்து ஒரு கமிட்டி போடுவேன்; அவர்கள்தான் மத்தியஸ்தம் செய்வார்கள். அதனை நீ ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று கூறுவது எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் ?
கடந்த 11-01-2021 அன்று உச்சநீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணையில் விவசாய சங்கங்களின் சார்பாக ஆஜரான வழக்கறிஞரிடம், “ நாங்கள் போராட்டங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நீதிமன்றம் போராட்டங்களை நெறிப்பதாகப் புரிந்து கொள்ளவேண்டாம். ஆனால் நாங்கள் கேட்கிறோம். இந்தச் சட்டங்கள் நிறுத்திவைக்கப்பட்டால், மக்களின் விருப்பத்தைக் கணக்கில் கொண்டு போராட்டத் தளத்தை மாற்றிக் கொள்வீர்களா?” என்று கேட்டுள்ளார் தலைமை நீதிபதி போப்டே.
அதாவது மக்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் போராட்டத்தை நடத்திக் கொள்ளவேண்டுமாம். இப்போது விவசாயிகளின் போராட்டக் களத்தை மாற்ற வேண்டும் என்று எந்த குடிமக்கள் வந்து போராட்டம் நடத்தினர் ? வேளாண் சட்டத்திற்கு ஆதரவாக போராட்டமும், பொதுக்கூட்டமும் நடத்தி அடி வாங்கியதும், விவசாயிகளின் போராட்டத்தை மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறி வழக்கு தொடுத்ததும் சங்கிகள் மட்டும்தான்.
ஆனால் நீதிபதிகளுக்கு ‘மக்களின்’ தேவைக்காக டெல்லி முற்றுகையை விவசாயிகள் கைவிட வேண்டுமாம்! எந்த மக்கள் ? வேறு யார் கார்ப்பரேட் மக்கள்தான்.
அடுத்ததாக, மக்களால் “தேர்ந்தெடுக்கப்பட்ட” அரசு இயற்றிய ஒரு சட்டத்தை நீதிமன்றத்தால் தன்னிச்சையாக நிறுத்தி வைக்க முடியுமா? அது அரசியல் சாசன சட்டத்திற்கு விரோதமானது என நிறுவினால்தான் ஒரு சட்டத்தை செல்லாததாக அறிவிக்க முடியும். அப்படியில்லாத சூழலில் சட்டத்தை நிறுத்தி வைப்பது என்பது சாத்தியமற்ற ஒன்று.
படிக்க :
♦ வேளாண் சட்டத்தினை அமல்படுத்தத் துடிக்கும் மோடி அரசு !
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?
அப்படி சட்டப்படி சாத்தியமற்ற ஒன்றை அவசர அவசரமாக உச்சநீதிமன்றம் செய்ய வேண்டிய அவசியம் என்ன ?
விவசாயிகள் சங்கம் ஜனவரி 26-ம் தேதி டெல்லிக்குள் நுழையப் போவதாக அறிவித்திருந்தது. பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், உ.பி, ம.பி ஆகிய மாநிலங்களில் உள்ள ஆண், பெண் விவசாயிகள், கூலி விவசாய தொழிலாளர்கள் தங்கள் குழந்தைகளுடன், வீட்டில் உள்ள முதியவர்களுடன் கூட்டம் கூட்டமாகப் பங்கெடுத்து நடத்தப்போகும் இந்த டெல்லி நுழைவுப் போராட்ட அறிவிப்பு, மத்திய அரசுக்கு ஒரு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.
விவசாயிகள் போராட்டத்தை பிற போராட்டங்களைப் போல சிறு துப்பாக்கிச் சூடு நடத்தியோ, சங்க பரிவாரக் கும்பலை வைத்து கலவரம் விளைவித்தோ கலைத்து விடமுடியாது என்பதை பாஜக அரசு நன்கு உணர்ந்துள்ளது. அதே நேரத்தில் தனது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக இயற்றப்பட்ட இந்த வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவும் முடியாது. விவசாயிகளும் விடாப்பிடியாக இருக்கின்றனர்.
ஆகவே விவசாயிகளின் போராட்டத்தைக் கலைக்க, இப்போராட்டங்களுக்கு எதிராக மக்கள் மனநிலையை மாற்றும் வகையில் பிரச்சாரம் செய்யத் துவங்கியது. குறிப்பாக பல்வேறு அவதூறுகளைப் பரப்பியது.
முதலில், இச்சட்டம் விவசாயிகளுக்கு ஆதரவானது என்றும், விவசாயிகள் புரிந்து கொள்ளாமல், எதிர்கட்சிகளின் சதிக்கு ஆட்படக்கூடாது என்றும் மோடி நீலிக் கண்ணீர் வடித்து வந்தார்.
அதன் பின்னர், விவசாயிகள் போராட்டத்தில் காலிஸ்தான் தீவிரவாதிகளும், தடை செய்யப்பட்ட அமைப்புகளும் ஊடுறுவிவிட்டதாக சங்க பரிவாரக் கும்பல் சமூக வலைத்தளங்களிலும், மோடி ஆதரவு ஊடகங்களிலும் கருத்துக்களைப் பரப்பத் துவங்கின. ஆனால் அதுவும் மக்கள் மத்தியில் எவ்விதத்திலும் எடுபடவில்லை.
தற்போது நீதிமன்றத்தின் மூலமாக, விவசாயிகளுக்கு எதிரான கருத்துக்கள் மக்கள் மத்தியில் உருவாக்கும் வேலையைத் துவக்கியிருக்கிறது. வெளிப்படையாகவே வேளாண் சட்டங்களை ஆதரித்தவர்களை வைத்து உச்சநீதிமன்றம் ஒரு கமிட்டியை அமைத்துள்ளதோடு, “பிரச்சினையை தீர்க்க உண்மையாக விரும்புவோர், தற்போது அமைக்கப்பட்டுள்ள கமிட்டியை ஏற்றுக் கொள்வார்கள்” என்றும் கூறியிருக்கிறது. இது ஒரு அப்பட்டமான மிரட்டல் அல்லவா ?
“நீ என்னோடு இல்லையெனில், எதிரியோடு இருக்கிறாய்” என்ற ஜார்ஜ் புஷ்–இன் வார்த்தைகளை நீதிமன்றம் விவசாயிகளைப் பார்த்து தற்போது கூறியிருக்கிறது. இவர்கள் அமைத்த கமிட்டியை ஏற்றால்தான் பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்புவோராம். கமிட்டியில் இருப்பவர்களின் யோக்கியதையைக் கொண்டு கேள்வி எழுப்பினால், பிரச்சினையை உண்மையாக தீர்க்க விரும்பாதவராம்.
உச்சநீதிமன்றமும், மோடி அரசும் உருவாக்க விரும்பும் பிம்பம் அதுதான். “விவசாயிகள் உள்நோக்கத்தோடு மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தி அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் போராடுகிறார்கள். உச்சநீதிமன்றம் வேளாண் சட்டங்களை நிறுத்தி வைத்தும் போராட்டத்தைக் கைவிடாமல் நீடிக்கிறார்கள்” என்ற சிந்தனையை சாதாரண மக்களின் மனதில் ஏற்படுத்துவதற்கான முன்னடி வேலைகள்தான் உச்சநீதிமன்றத்தின் இன்றைய உத்தரவுகள்.
விவசாயிகள் இந்த விசயத்தில் தற்போது வரை, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாமல் தங்களது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என்று உரக்கக் கூறியிருக்கின்றனர். விவசாயிகளை நிலைகுலையச் செய்யும் ஆளும் வர்க்கம் மற்றும் அதிகார வர்க்கத்தின் இத்தகைய தாக்குதல்களின் தாக்கத்தில் இருந்து விவசாயிகளைக் காக்க வேண்டும்.
அதற்கு நாம் அனைவரும் தொழிலாளர்களாக, ஐ.டி. ஊழியர்களாக, மாணவர்களாக, சிறு வியாபாரிகளாக, சிறு தொழில்முனைவோராக நம் அனைவரின் மீதும் சுரண்டலைத் திணிக்கும் கார்ப்பரேட் கும்பலுக்கு எதிரான போரைத் துவங்க வேண்டும்.
வேளாண் சட்டங்களால் பயனடையத் துடிக்கும் அம்பானி, அதானி உள்ளிட்ட கார்ப்பரேட்டுகளை ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கும் போராட்டத்தைத் துவங்க வேண்டும். கார்ப்பரேட் எஜமானர்கள் பணிந்துவிட்டால், அவர்களின் ஏவலாளிகளும் ஏவலாளிகளின் கைப்பாவைகளும் தாமாக அடங்கி விடுவார்கள். இதுதான் நமக்கு உணவிடும் விவசாயிகளை காக்க நம் முன் இருக்கும் ஒரே தீர்வு !
சரண்
செய்தி ஆதாரம் : The Wire, The Wire