வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்தியுள்ள பேச்சுவார்த்தை எவ்வித முடிவும் எட்டப்படாமல் இழுபறியில் முடிந்துள்ளது. தங்களது உரிமைகளுக்காகப் போராடும் விவசாயிகளை மேலும் மேலும் சோர்வுக்கும் விரக்திக்கும் உள்ளாக்கும் வேலையை மத்திய மோடி அரசு தொடர்ந்து செய்து வருகிறது.

மத்திய அரசு கடந்த செப்டெம்பர் மாதம் அவசர அவசரமாக நிறைவேற்றிய வேளாண் திருத்தச் சட்டங்களை எதிர்த்து கடந்த 47 நாட்களாக தொடர்ந்து டெல்லியின் ஐந்து எல்லைப் பகுதிகளிலும் முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ டெல்லியில் போராடும் ‘காலிஸ்தானி’ தான் பாஜக-வின் மகிழ்ச்சியான விவசாயியாம் !

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் அறைகூவல் விடுத்த டெல்லி சலோ பேரணிக்கு செவி சாய்த்து கிளம்பிய பஞ்சாப், அரியானா, ராஜஸ்தான், .பி, .பி மாநில விவசாயிகளை அந்தந்த மாநில எல்லைகளில் வைத்து முடக்க நினைத்தது மத்திய அரசு.

பாஜக ஆளும் மாநிலங்களான, அரியானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஆளும் அரசுகள் ஏவிய ஒடுக்குமுறைகளைத் தகர்த்தெறிந்து விட்டு டெல்லி நோக்கித் திரண்டனர் விவசாயிகள்.

மத்தியில் ஆளும் பாஜக அரசின் அனைத்து வகையான வஞ்சக சமரசங்களையும் ஏற்க மறுத்து கடந்த 47 நாட்களாக கடுங்குளிரிலும், மழையிலும் விடாமல் நின்று போராடி வருகிறார்கள் விவசாயிகள்.

இந்நிலையில் இதுவரை விவசாயிகளிடம் 8 முறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ள மத்திய அரசு இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது சாத்தியமற்றது என்பதையே திரும்பத் திரும்ப ஒரே புராணமாகப் பாடி வருகிறது.

ஜியோவை புறக்கணிக்கும் விவசாயிகள்

சமீபத்தில் நடந்த எட்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் வேளாண் சட்டங்களை திரும்பவாங்க முடியாது என்றும், நீதிமன்றத்தின் வசம் இந்த விவகாரத்தை விடுவதுதான் சிறந்தது என்றும் மத்திய அரசு கூறியுள்ளதாக விவசாயி சங்க பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

விவசாய சங்கத் தலைவரான ஹன்னன் மொல்லா இது குறித்துக் கூறுகையில், இதற்காக மரணம் வரை சண்டையிடத் தயாராக உள்ளோம். நீதிமன்றத்திற்குச் செல்வது ஒரு வழிமுறையல்ல என்றார். அடுத்தகட்ட போராட்டம் குறித்து விவசாயிகள் சங்கம் ஜனவரி 11 –ல் (இன்று) முடிவெடுக்கும் என்றும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.

பேச்சுவார்த்தையைப் புறக்கணிப்பதன் மூலமும், விவாயிகளைப் போராட்டத்தில் இருந்து தடுப்பதன் மூலமும், விவசாயிகளை தொடர்ச்சியாக ஏமாற்றிவரும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசாங்கம் பிரச்சினையை நீதிமன்றத்தில் தீர்க்கச் சொல்கிறது” என்கிறார் அனைத்திந்திய கிசான் சங்கர்ஷ் ஒருங்கிணைப்புக் கமிட்டியின் (AIKSCC) கவிதா குருகந்தி.

உச்சநீதிமன்றத்திற்கு செல்வது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள கவிதா குருகந்தி, ”உச்சநீதிமன்றம் ஏற்கெனவே விவசாயிகளை போராட்டக் களத்தில் இருந்து வெளியேற்றுவது பற்றி குறிப்பிடுகையில், போராடுவது விவசாயிகளின் ஜனநாயக உரிமை என்று தெரிவித்துள்ளது. மேலும் இந்த வேளாண் சட்டங்களின் அரசியல் சாசன செல்லுபடித்தன்மை அதாவது, மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ள ஒரு விவகாரத்தில் மத்திய அரசு சட்டம் நிறைவேற்ற முடியுமா? முடியாதா? என்பது மற்றொரு விவகாரம். இவ்விவகாரத்தில் செல்லுபடியாகும் என்றோ, செல்லுபடியாகாது என்றோ எந்தப் பதிலை நீதிமன்றம் அளித்தாலும், அது இப்பிரச்சினையை தீர்க்கப் போவதில்லை.

ஏனெனில் விவசாயிகள் இச்சட்டங்களின் அரசியல் சாசனத்தன்மை குறித்துக் கேள்வி எழுப்பவில்லை. இந்த வகையான கொள்கைத் திசைவழி மற்றும் சட்டம் குறித்துத்தான் கேள்வி எழுப்புகிறார்கள். இவ்விவகாரம், கொள்கை அடிப்படையிலானதாகப் பார்க்கப் படவேண்டியதே தவிர, அரசியல்சாசனத்தின் அடிப்படையிலான பிரச்சினையாக பார்க்கப்பட வேண்டியது அல்ல. உச்சநீதிமன்றம் என்ன சொன்னாலும், இச்சட்டங்கள் திரும்பப் பெறப்படும் வரை விவசாய சங்கங்கள் தங்கள் முடிவை மாற்றிக் கொள்வதில்லை என்பதில் தெளிவாக இருக்கின்றன” என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு விவசாயிகள் சங்கத் தலைவரான ஜோகிந்தர் சிங் உக்ரஹான் இதுகுறித்துக் கூறுகையில், “மத்திய அரசு விவசாயிகளின் பலத்தை சோதித்துப் பார்க்கிறது. நாங்கள் பணியப் போவது இல்லை. நாங்கள் லோஹ்ரி (ஜனவரி 13) திருவிழாவையும், பைசாகி (ஏப்ரல் 14) திருவிழாவையும் இங்குதான் கொண்டாடுவோம் போலத் தெரிகிறது” என்று குறிப்பிடுகிறார்.

இப்படி பேச்சுவார்த்தைகள் இழுபறியில் நீடித்திருக்கும் சூழலில், குடியரசு தினத்தன்று டெல்லிக்குள் நுழைய இருப்பதாக விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து ஜோகிந்தர் சிங் கூறுகையில், “ ஜனவரி 26-ம் நாள் அன்று அனைத்து தடுப்பரண்களையும் தகர்த்தெறிந்துவிட்டு டெல்லிக்குள் நுழைவோம் என இந்த அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுக்கிறோம். எங்கள் மீது அவர்கள் தடியடி நடத்தலாம். துப்பாக்கிச்சூடு நடத்தலாம். நாங்கள் அது குறித்து கவலைப்படப் போவதில்லை. எங்களது இறுதி ஆட்டத்தை அவர்களோடு ஆடப் போகிறோம். ஜனவரி 26-ம் தேதி என்ன நடந்தாலும் அது அர்சாங்கத்தின் பொறுப்பு, அவர்கள்தான் அதற்குப் பழிகூறப்பட வேண்டும். ” என்றார்.

படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ விவசாயிகள் போராட்டத்தை திட்டமிட்டு கொச்சைப்படுத்தும் பி.ஜே.பி ட்ரோல்கள் !

போராடும் விவசாயிகள் இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது எனத் தயாராகிவிட்டனர். பாசிச மோடி அரசோ, இதனைக் கண்டுகொள்ளத் தயாராக இல்லை. மத்திய அமைச்சர்களும், பாஜக தலைவர்களும் விவசாயிகள் போராட்டம் குறித்து திமிரெடுத்துப் பேசுவது குறையவில்லை.

வெவ்வேறு வழிமுறைகளில் விவசாயிகள் போராட்டத்தை சீர்குலைக்க சதி வேலைகளைச் செய்ய முனைகிறது மோடி அரசு. சட்டரீதியான போராட்டமாக இதனை மாற்றி நீர்த்துப் போகச் செய்ய முனைகிறது. கைமீறிச் செல்லும்போது இப்போராட்டங்களை வன்முறை கொண்டு ஒடுக்கவும் தயாராக உள்ளது.

குஜராத்தில் ஜனநாயகத்தை மலமள்ளும் காகிதமாக மதித்து 2002 கலவரத்தை நடத்தி முடித்த மோடி இந்தியாவின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் உரிமைகளையும் காலில் போட்டு மிதித்திருக்கும் மோடி அமெரிக்காவில் தம்மையொத்த வலதுசாரி வெறியர்கள் அந்நாட்டின் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து அதகளம் செய்ததை சமீபத்தில் கண்டித்து அறிக்கைவிட்டார் மோடி.

சட்டவிரோதப் போராட்டங்களின் மூலம் ஜனநாயகத்தின் மாண்புகளை அழிக்க அனுமதிக்க முடியாது” என அமெரிக்க வன்முறையைக் கண்டிக்கிறார் மோடி. இது விவசாயிகள் போராட்டத்தைக் குறிவைத்துக் கூறப்பட்ட வாசகங்கள்தான். சட்டவிரோதமாக கலவரம் நடத்தி ஆட்சிக்கு வந்தவர்தான் இந்த மோடி. டிரம்பும் மோடியின் உயிர் நண்பர்தான். ஹிட்லர் முசோலினியைப் போல, மோடி டிரம்ப் என்பது எடுப்பான ஜோடிதான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லியை அலறச் செய்யும் விவசாயிகள் !

ஆனாலும் மோடி “ஜனநாயகத்திற்காகக்” குரல் கொடுக்கிறார்; டிரம்பின் ஆதரவாளர்களுக்கு எதிராக குரல் கொடுக்கிறார் என்றால் அதற்குக் காரணமில்லாமல் இல்லை. விவசாயிகளின் உறுதியைக் கண்டுணர்ந்துள்ள மோடி தலைமையிலான பாசிசக் கும்பல், விவசாயிகளை வில்லன்களாகக் காட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளை விரைவில் செய்யத் துவங்கும். அதற்கான சமிக்ஞைதான் அமெரிக்க வன்முறை குறித்த மோடியின் கருத்து.

இதனை முறியடிக்க வேண்டுமெனில், நெருப்பை அணைக்க அடிக்கொள்ளியை பிடுங்கி எடுக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. வேளாண் சட்டத்தை எந்த கார்ப்பரேட்டுகளின் ஏவலுக்குப் பணிந்து அவசர அவசரமாக நிறைவேற்றி அதற்காக சொந்த நாட்டு விவசாயிகளைக் கொல்வதற்கும் தயாராக இருக்கிறதோ, அந்தக் கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைத்தால்தான் அவர்களது ஏவலாளியாகச் செயல்படும் மோடி அரசை இறங்கிவரச் செய்ய முடியும். வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வைக்கமுடியும்.

இதற்கு நல்ல ஒரு உதாரணத்தையும் நமக்கு இந்த விவசாயிகள் போராட்டம் எடுத்துக் காட்டியுள்ளது. வேளாண் பொருட்கள் சந்தையில் நுழைந்துள்ள அதானி , அம்பானியின் பொருட்களைப் புறக்கணிப்போம் என விவசாயிகள் கொடுத்த அறைகூவல் முகேஷ் அம்பானியை பொறிகலங்கச் செய்ததை சமீபத்தில் கண்டோம்.

ஜியோ தொலைபேசி இணைப்பைக் கைவிடுமாறும், ரிலையன்ஸ் பொருட்களை புறக்கணிக்குமாறும் விவசாயிகள் அறைகூவல் விடுத்தனர். பஞ்சாபில் பல ரிலையன்ஸ் டவர்கள் சேதமாக்கப்பட்டன. அரண்டு போன முகேஷ் அம்பானி அவசர அவசரமாக, தனக்கு எதிராக ஏர்டெல், வி.. உள்ளிட்ட தொலை தொடர்பு நிறுவனங்கள் சதி செய்வதாகக் கூறினார். மேலும் தாம் வேளாண் சந்தையில் எவ்வித முதலீடும் செய்யவில்லை என்றும் தன்னிலை விளக்கம் அளித்ததோடு, கோர்ட்டிலும் இதனைத் தெரிவித்தார்.

வேளாண் சந்தையில், குளிரூட்டப்பட்ட சேமிப்புக்கலன்கள் தொடங்கி, ஆண்ட்ராய்ட் செயலிகள் வரை முதலீடு செய்துள்ள யோக்கியர்’ முகேஷ் அம்பானி, இப்படி ஒரு பொய்யைச் சொல்ல வேண்டிய அவசியத்தை உருவாக்கியது, அம்பானியின் உயிராதாரமான உள்நாட்டுச் சந்தையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்தான்.

வேளாண் சட்டங்களின் அடிக்கொல்லி கார்ப்பரேட்கள் தான். அந்த அடிக்கொல்லியை அகற்றுவது என்பது விவசாயிகள் மட்டுமே செய்யக் கூடிய காரியம் அல்ல. நாம் அனைவரும் ஒன்றிணைந்து செய்யக் கூடிய காரியம் அது. வேளாண் சட்டத்தின் பின் நிற்கும் கார்ப்பரேட் கும்பலின் சந்தையின் மீதான தாக்குதல்தான் அவர்களை அதிரச் செய்யும் ஒரே வழி. கார்ப்பரேட் அடிக்கொல்லியை பிடுங்கிவிட்டால், வேளாண் சட்டங்கள் தானாக அணைந்துவிடும் !


சரண்

நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க