பாஜக அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதமாக போராடி வருகிறார்கள். சட்டங்களை திருத்துகிறோம் என மத்திய அரசு கூறினாலும் அதை ஏற்க விவசாயிகள் தயாராக இல்லை. சட்டங்களை நீக்கும்வரை தொடர்ந்து போராடுவோம் எனக் கூறிவருகிறார்கள்.

பஞ்சாப், அரியானா, இராஜஸ்தான் விவசாயிகள் பெரும்பான்மையாகப் பங்கேற்கும் இந்தப் போராட்டத்தில் மராட்டியம் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லி போராட்ட களத்துக்கு சென்றுகொண்டிருக்கிறார்கள்.

ஒரு பக்கம் போராடும் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே இன்னொரு புறம் அவர்களை பிரிவினை கோரும் காலிஸ்தானிகள் எனவும் தீவிரவாதிகள் எனவும் போராட்ட களத்துக்குள் மாவோயிஸ்டுகள் புகுந்துவிட்டனர் எனவும் பாஜகவினர் கூறிவருகின்றனர்.  இந்த அவதூறுகளை விவசாயிகள் மறுத்துவரும் நிலையில், இப்போது ஊரை ஏமாற்ற பாஜக புதிய வழிகளில் முயற்சிக்கிறது.

அண்மையில் புதிய வேளாண் சட்டங்களால் பஞ்சாப் விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக பஞ்சாப் பாஜக விளம்பர போஸ்டர் வெளியிட்டிருந்தது. ஆனால், அந்த விளம்பரத்தில் இடம்பெற்றிருந்த விவசாயி, வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடி வருகிறார்.  ஹார்ப் ஃபார்மர் (Harp Farmer) என்ற பெயரில் சமூக ஊடகங்களில் இயங்கிவரும் விவசாயியின் சமூக ஊடக பக்கத்திலிருந்து ஒரு படத்தை திருடியுள்ளது பாஜக.

இதைக் கண்டுபிடித்த அந்த பஞ்சாப் விவசாயி, விவசாயிகளுக்கு ஆதரவாக சிங்கூ எல்லையில் போராடிவரும் தனது படத்தை, பாஜக வெட்கமில்லாமல் பயன்படுத்தியுள்ளதாக அம்பலப்படுத்தினார். அவருடைய பேட்டி சில செய்தி தொலைக்காட்சிகளில் வெளியானது.

இந்த நிலையில் பாஜக-வின் திருட்டை நியாயப்படுத்த ஓபன் இந்தியா (Opindia) என்ற காவி ஆதரவு இணையதளம், ஹார்ப் ஃபார்மர் ஒரு நடிகர் எனவும் அவர் விற்ற ஒரு படத்தைத்தான் பாஜக பயன்படுத்தியுள்ளதாகவும் ஒரு கட்டுரை தீட்டியுள்ளது. ஹார்ப் ஃபார்மர் கணக்கிலிருந்து பல படங்களை எடுத்து, அவதூறான அடைமொழிகளுடன் ஓபன் இந்தியா வெளியிட்டு, அவர் விவசாயில் இல்லை என நிறுவ முயன்றுள்ளது.

பிபிசி-க்கு பேட்டியளித்த ஹார்ப் ஃபார்மர், ‘பாஜக பயன்படுத்திய படம் எடுத்து 6-7 ஆண்டுகள் ஆகியிருக்கும். என் நண்பன் எடுத்த படத்தை என்னுடைய சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தேன். சில நாட்களுக்கு முன் ஒரு பம்ப் நிறுவன விளம்பரத்தில் பயன்படுத்தியிருந்தார்கள். தேர்தலின்போது காங்கிரஸ் கட்சியும்கூட அந்தப் படத்தை பயன்படுத்தியிருந்தது. ஆனால், அந்தப் படத்தை நான் ஸ்டாக் இமேஜுக்கு விற்கவில்லை’  எனக் கூறியுள்ளார்.

“முதலில் அவர்கள் பஞ்சாபி விவசாயிகளை காலிஸ்தானிகள் என்றார்கள். பிறகு தீவிரவாதிகள் என்றார்கள். அவையெல்லாம் தோற்றுப்போன நிலையில், பஞ்சாபி விவசாயிகள் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டும் பரப்புரையில் இறங்கியிருக்கிறார்கள்” என பாஜகவினரை காட்டமாக விமர்சித்துள்ளார் ஹார்ப் ஃபார்மர்.

போராடுகிறவர்களை  ‘தீவிரவாதிகள்’, ‘அர்பன் நக்சல்கள்’ ‘மாவோயிஸ்டுகள்’ ‘பிரிவினைவாதிகள்’ என தொடர்ந்து அவதூறு செய்வதையே  காவி கும்பல் பிழைப்பாகக் கொண்டுள்ளது. இந்த முறை காவிக் கும்பலின் பொய்யை போராட்ட களத்திலிருந்து அம்பலப்படுத்தியிருக்கிறார் இந்த பஞ்சாப் விவசாயி.

கலைமதி
நன்றி: நியூஸ் க்ளிக்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க