த்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் மாபெரும் போராட்டத்தை விவசாயிகள் நடத்திக்கொண்டு வருகிறார்கள். இவர்களுக்கு நாடு முழுவதுமுள்ள ஓய்வு பெற்ற இராணுவ வீரர்கள், மருத்துவர்கள் என பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கைக்காக அறிஞர்கள் பலரும் தாங்கள் பெற்ற விருதுகளையும் திருப்பி அளித்து வருகிறார்கள்.

வேளாண் சட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று தொடங்கிய விவசாயிகளின் இந்தப் போராட்டமானது, தற்போது அதானி குழுமத்தின் பொருட்களை புறக்கணிப்போம் என்ற தனியார்மய எதிர்ப்புப் போராட்டமாக பரிணமித்துள்ளது.

இப்படி சமூக மாற்றத்தை நோக்கி நகர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தினைக் கண்டு அஞ்சி நடுங்கும் பாஜக, போராட்டத்திற்கு பெருகும் ஆதரவினை தடுக்க முடியாததால், நரித்தனமாக போராடும் விவசாயிகளின் மீதான வெறுப்பு பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை தற்போது நடந்துவரும் போராட்டத்துடன் தொடர்புப்படுத்தி, சமூக வலைதளங்களில் பரப்பிக் கொண்டு வருகிறது.

படிக்க :
♦ டிசம்பர் 14 : பாஜக அலுவலகங்களை முற்றுகையிடுவோம் – விவசாயிகள் சங்கம் அறைகூவல் !
♦ அரியானா பாஜக கூட்டணி அரசை உலுக்கும் விவசாயிகள் போராட்டம் !

போராட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த டிசம்பர் 8-ம் தேதி நாடு தழுவிய பாரத் பந்தினை அறிவித்தார்கள் விவசாயிகள். அன்றைய தினத்தில் எடுக்கப்பட்டது என்று சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவியது.

அப்படி பகிரப்பட்ட ஒரு புகைப்படத்தில், ‘தெருவின் நாலா புறமும் காய்கறி பழங்கள் சிதறியிருப்பதை’ நாம் பார்க்க முடியும். இது விவசாயிகள் அறிவித்திருந்த பாரத் பந்த் அன்று எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும், விவசாயிகளின் பாரத் பந்திற்கு வியாபாரிகள் யாரும் ஆதரவு தெரிவிக்கவில்லை என்ற கோபத்தினால் ஆத்திரமடைந்த விவசாயிகள், வியாபாரிகள் மீது நடத்திய வன்முறை வெறியாட்டம் என்றும் இப்புகைப்படமானது சமூக வலைதளத்தில் வைரலாக பரப்பப்பட்டது.

இதனை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த புஷ்பேந்திரகுல்ஷ்ரேத் என்பவர், “கல்வியறிவற்றவர்களே (விவசாயிகளே) இதுதான் உங்கள் பாரத் பந்தா? ஏழைகளின் உணவினை வீணாக்க உங்களுக்கு வெட்கமாக இல்லையா? உங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்காததால், எந்தளவிற்கு கீழ்த்தரமான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தினை பகிர்ந்த மேலும் சிலர், “விவசாயிகள் என்ற போர்வையில் பாரத் பந்திற்கு அழைப்புவிடுத்த துரோகிகள்” என்று பதிவிட்டிருக்கிறார்கள். இது முகநூலிலும், ட்விட்டரிலும் அதிகளவில் பரப்பப்பட்டு, விவசாயிகள் மீதான வெறுப்பு பிரச்சாரத்தை அதிகளவில் தூண்டியது.

உண்மையில் இது டிசம்பர் 8 ஆம் தேதி எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்ற உண்மை நிலவரத்தை ஆல்ட் நியூஸ் டாட் இன் (Alt news.in) என்ற இணையதளம் வெளியிட்டுள்ள தரவுகளில் இருந்து பார்க்கலாம்.

இது மே 5, 2020 அன்று அதாவது கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் தெளிவாகியுள்ளது. இதற்கு ஒரு ஆதாரம், காங்கிரஸ் கட்சியின் ஊடகக் குழு உறுப்பினரான சுரேந்திர ராஜ்புத் தனது ட்விட்டர் பக்கத்தில், “கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கையில், அரசாங்கத்தின் முழு பாதுகாப்புடன் சாராயக் கடை இயங்கிக் கொண்டு வருகிறது. ஆனால் அதே நேரத்தில் மக்களின் அத்தியாவசிய தேவையான காய்கறி பழங்களை விற்ற வியாபாரிகள் மீது அரசு தனது வன்முறை வெறியாட்டத்தைக் கட்டவிழ்த்துள்ளது” என்று இந்த புகைப்படத்தை மே 5, 2020 அன்று வெளியிட்டுள்ளார்.

 

இரண்டாவது ஆதாரம், இந்தப் படத்திலுள்ள ஒரு வாகனத்தின் நம்பர் பிளேட்டில், WB என்று குறிப்பிட்டுள்ளது. கடைகளின் பெயர் பலகைகளிலும் வங்காள மொழியில் எழுதப்பட்டிருப்பதை கவனிக்கலாம். இதுகுறித்த ஒரு பதிவும் வங்காள மொழியில் பகிரப்பட்டிருக்கிறது. எனவே இந்தப் புகைப்படத்திற்கும் தற்போது டெல்லியில் நடந்து வரும் போராட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நிரூபணமாகியுள்ளது.

இது போன்று போராட்டத்திற்கு சிறிதும் தொடர்பில்லாத பழைய படங்களை போராட்டத்தின் போது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் என்று பகிரப்பட்டு வருகிறது.

இதில், முதல் புகைப்படத்தில் ஒருவர் வாகனம் ஒன்றினை சேதப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. இது பாரத் பந்த் அன்று நடத்தப்பட்ட வன்முறை என்ற பொய்யான செய்தியும் பரப்பப்பட்டு வருகிறது.

செப்டம்பர் 10, 2018 அன்று தி அவுட்லுக் இணையத்தில் வெளியான கட்டுரை ஒன்றில் இப்புகைப்படம் இடம் பெற்றிருக்கிறது. இந்தப் படத்தில் இருக்கும் நபர் ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர் என்றும் எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து அக்கட்சி நடத்திய போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்றும் உண்மை தெரியவருகிறது.

இரண்டாவது புகைப்படத்தில் கொடியுடன் இருக்கும் இருவர், இருசக்கர வாகனத்தில் வருபவர்களை தாக்கும்படியான காட்சி இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு அதே அவுட்லுக் இணையத்தில் வெளியானது. எரிவாயு விலைவாசி உயர்வு மற்றும் பணமதிப்பு இழப்பை எதிர்த்து காங்கிரஸ் மற்றும் இதர கட்சிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது புவனேஷ்வரில் எடுக்கப்பட்ட புகைப்படம் இது.

மூன்றாவது மற்றும் ஐந்தாவது படங்களில், பிரதான சாலை ஒன்றில் வாகனத்தை மறித்து கற்களையும் தடியையும் கொண்டு தாக்கும் காட்சியைப் பார்க்கலாம். இந்தப் படமும் 2018 ஆம் ஆண்டு ஜன் அதிகார் கட்சியின் ஆதரவாளர்கள், எரிவாயு விலைவாசி உயர்வை கண்டித்து பாட்னாவில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம். எனவே இதற்கும் தற்போது நடந்துவரும் விவசாயப் போராட்டத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை என்று தெளிவாக நிரூபணமாகிறது.

நான்காவது படத்தில் லாரிகள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காட்சியினை காணமுடியும். ஆனால் இது ஜூலை 27, 2018 ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த வேலை நிறுத்தப்போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அப்போது டி.என்.ஏ என்ற இணையத்தளத்தில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த ஐந்து படங்களையும் பாஜக தலைவரான கபில் மிஸ்ராவால் ஆதரிக்கப்படும் இணையதளமான Kreately-யில் கட்டுரையாகவே வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த கட்டுரையை சம்பந்த் சரஸ்வத் என்பவர் எழுதியிருக்கிறார். அதில், “பாரத் பந்த் என்பதே தேச விரோதம். பாரத் பந்திற்கு அழைப்பு விடுத்தவர்களையும், அதற்கு ஆதரவு தெரிவித்தவர்களையும் கண்டு நான் அவமானப்படுகிறேன்” என்று எழுதியிருக்கிறார்.

படிக்க :
♦ மிரட்டும் பாஜக : தமிழகத்திலும் வருகிறது என்.ஐ.ஏ கிளை !
♦ பாஜகவை விமர்சித்த ராகுல் பஜாஜ் மீது சமூக ஊடகங்களில் காவி ட்ரோல் படை தாக்குதல் !

இப்படி விவசாயப் போராட்டத்திற்கு துளியும் சம்பந்தமில்லாத பழைய புகைப்படங்களை பி.ஜே.பி.யின் ஐ.டி. விங் பரப்புவதோடு மட்டுமல்லாமல், விவசாயிகள் எதிர்ப்புப் பிரச்சாரத்தை வெறிகொண்டு செய்து வருகிறது.  விஷயங்களை தவறாக சித்தரிப்பது, மாற்று கருத்துக்களை விமர்சிப்பது, பேச்சு – எழுத்து சுதந்திரத்தினை ட்ரோல்கள் மூலம் ஒடுக்குவது என்பதனை ஒரு வழக்கமாகவே செய்து வருகிறது.

தீவிர வலதுசாரி குழுக்கள், ஆளும் பாஜக அரசுக்கு எதிராகச் சமூக ஊடகங்களில் கருத்துத் தெரிவிப்பவர்களை எப்படி எதிர்கொள்கிறது? என்பதையும் எப்படி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒரு மாய அலையை சமூக ஊடகங்களில் உண்டாக்கி வருகிறது? என்பதையும், எப்படி பல ட்விட்டர் கணக்குகள் பெண்கள் மற்றும் ஊடகவியலாளர்களைக் கொச்சைப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன? என்பதையும் இந்தச் செயலை செய்வதற்காக இளைஞர்கள் எப்படி மூளைச்சலவை செய்யப்படுகிறார்கள் என்பதையும், ”நான் ஒரு ட்ரோல்” என்ற புத்தகத்தின் ஆசிரியரும், பத்திரிக்கையாளருமான சுவாதி சதுர்வேதி நன்றாக விளக்கியிருப்பார்.

தற்போது பாஜக-வின் இத்தகைய சமூக வலைத்தளக் கணக்குகள் தங்களது உரிமைகளுக்காக போராடிக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. பாசிஸ்டுகளின் ஆட்சிக்கு என்றும் கோயபல்ஸ்கள் தான் ஆதாரமாக இருந்துள்ளனர். இன்று அந்த வேலையை சமூக வலைத்தளங்கள் மூலம் கூலிப்படையை அமர்த்தி செய்து வருகிறது பாஜக !


ஷர்மி
நன்றி : Alt News

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க