புது தில்லியைச் சேர்ந்த பத்திரிகையாளர் சுவாதி சதுர்வேதிக்கு தொடர்ச்சியாக விடுக்கப்படும் கொலை மிரட்டல் குறித்த தனது கவலையை இந்திய அரசுக்கு கடிதமாக எழுதியிருக்கிறது ஐக்கிய நாடுகள் சபை. ஐ.நா. வின் ஐந்து சிறப்பு பதிவாளர்கள் இந்தக் கடிதத்தை எழுதியுள்ளனர். சுவாதி சதுர்வேதி தமது பதிவுகளில் இந்த அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சித்ததற்காக இந்த மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 11, 2018 அன்று எழுதப்பட்ட இந்தக் கடிதத்தில், “போலீசிடம் புகார் கொடுத்த பின்பும், போலீசு வெளிப்படையாகவே எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது” குறித்து தமது கவலையைத் தெரிவித்துள்ளனர்
’என்.டி.டி.வி’ மற்றும் ‘தி வயர்’ இணையதளங்களில் பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் பணியாற்றி வரும் சுவாதி சதுர்வேதி, பாஜக-வின் இணைய ட்ரோல்களை அம்பலப்படுத்தி “I AM A TROLL” என்ற நூலை எழுதியிருந்தார். இந்நூலுக்காக அவருக்கு “எல்லை கடந்த பத்திரிகையாளர்கள்” (Reporters Without Borders) என்ற அமைப்பின் சார்பாக கடந்த 2018-ம் ஆண்டு நவம்பரில் பத்திரிகை சுதந்திர விருது வழங்கப்பட்டது.
குறிப்பாக, இந்த விருது வழங்கப்பட்டதை அடுத்து அவரது டிவிட்டர் பக்கத்தில் அவருக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டலை அந்தக் கடிதத்தில் சுட்டிக் காட்டியுள்ளனர். அந்த மிரட்டலை விடுத்தவர் தனது டிவிட்டை நீக்கி விட்டாலும், அதனை ‘ஸ்க்ரீன் சாட்’ எடுத்து ஆவணப்படுத்தியிருக்கிறார் சுவாதி சதுர்வேதி.
ஒருநாள் கழித்து, டில்லியின் வசந் விகார் போலீசு நிலையத்தில் இந்த கொலை மிரட்டல் குறித்தும் அவருக்குத் தொடர்ச்சியாக கொடுக்கப்படும் பாலியல் வன்முறை மிரட்டல்கள் குறித்தும் சுவாதி சதுர்வேதி புகாரளித்து அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
ஆனால், “இந்த புகாரின் மீது எந்த வகையான விசாரணையையும் இதுவரை போலீசு துவங்கவில்லை” என ஐ.நா பிரதிநிதிகள், அந்தக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். அக்லக் கொலை வழக்கு விவகாரத்தில் சங்கிகளின் விருப்பத்திற்கு எதிராக நேர்மையாக விசாரணை நடத்திய ‘குற்றத்திற்காகவே’ போலீசு அதிகாரி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட கதைகளையெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் போலீசு அதிகாரிகள், பாஜக இணைய ட்ரோல்களை விசாரிக்கத் துணிந்து விடுவார்களா என்ன ?
படிக்க:
♦ கேரளாவில் முசுலீம் மாணவர்கள் குடியரசு தினத்தை புறக்கணித்தனரா ? சங்கிகளின் ட்ரோல் அம்பலம் !
♦ மொத்தக் கொடுமையும் நாட்டை ஆள்கிறது | துரை சண்முகம்
மதக் கலவரத்தை தூண்டும் விதமாகவும், இணையத்தில் பெண் பத்திரிகையாளர்கள் மீது பாலியல் ரீதியான தாக்குதல்களைத் தொடுக்கும் விதமாகவும் செயல்படும் இணைய ட்ரால்கள் குறித்த சுவாதி சதுர்வேதியின் இரண்டாண்டு ஆய்வுகளை பற்றி ‘பிரட் இந்தியா’ என்ற ஊடகம் நேர்காணல் எடுத்து காணொளியாக வெளியிட்டது. அக்காணொளி மிகவும் வைரலாக இணையதளத்தில் பரவிய பின்னர் சுவாதி சதுர்வேதி தொடர்ச்சியான பாலியல் வன்முறை மிரட்டல்கள் உள்ளிட்டு பல்வேறு மிரட்டல்களைச் சந்தித்தார் என்பது குறித்தும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஆளும் பாஜக அரசு தனக்கு எதிராக கருத்துத் தெரிவிக்கும் பிரபலங்களைப் பற்றி தனது சமூக வலைத்தள தன்னார்வலர்களைக் கொண்டு மோசமான செய்திகளை பரப்புகிறது என்பதையும் அந்தக் கடிதம் சுட்டிக் காட்டியுள்ளது. பாஜக-வைச் சேர்ந்த உறுப்பினர்கள் மட்டுமின்றி பலதரப்பட்ட அடிப்படைவாதிகள் சமூக வலைத்தளங்களில் பல்வேறு விதமான வெறுப்புக் கருத்துக்களையும், வன்முறை, பாலின ரீதியான வன்முறை, பெண்களுக்கு எதிரான பாரபட்சம் மற்றும் பெண்களின் மனித உரிமைகளைப் பறிக்கும் விதமான கருத்துக்களை பரப்புவது குறித்தும் அக்கடிதத்தில் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்துமே சர்வதேசச் சட்டத்திற்கு முரணாக இருப்பதையும், மனிதர்களின் உயிர்வாழும் உரிமை, ஒன்றிணையும் உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றைப் பறிக்கும் விதமாக இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது. உள்ளூர் சட்டத்தையே மதிக்காத கும்பலிடம் சர்வதேச சட்டம் பற்றி பாடம் எடுத்து என்ன பயன்?
வாழ்க்கை மற்றும் மனித உரிமைகளுக்கு ஏற்படும் அபாயம் குறித்து விவரங்கள் கேட்டுக் கொள்ள தங்களுக்கு மனித உரிமைகள் கவுன்சில் அளித்துள்ள அவசியமான வழிகாட்டுதல்களைச் சுட்டிக்காட்டி,”மிரட்டல்கள் குறித்து உடனடியாக விசாரணை செய்து, சுவாதி சதுர்வேதியின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு” அக்கடிதத்தில் அரசாங்கத்தைக் கேட்டுள்ளனர்.
ஸ்வாதி சதுர்வேதிக்கு விடுக்கப்படும் கொலை மிரட்டல்களின் பாங்கு, பெங்களூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கௌரி லங்கேஷுக்கு விடுக்கப்பட்ட கொலை மிரட்டல்களை ஒத்ததாகவே இருக்கிறது என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே கௌரி லங்கேஷ் படுகொலை குறித்துத் தாம் எழுதிய கடிதத்திற்கும் அரசாங்கத்திடமிருந்து எவ்வித பதிலும் வரவில்லை என்பதை சுட்டிக் காட்டியுள்ளது அக்கடிதம். கவுரி லங்கேஷின் படுகொலையைக் கைகொட்டிக் கொண்டாடிய கும்பலின் தலைமையிலான அரசிடமே, அதற்கு விளக்கம் கேட்டால் எப்படி பதில் கிடைக்கும் ?
இவ்விவகாரம் தொடர்பாக நடைபெற்ற விசாரணை குறித்த இந்திய அரசாங்கத்தின் அக்கறை குறித்தும், அதே சமயத்தில் சுவாதி சதுர்வேதி போன்றவர்களுக்கு எதிராக மிரட்டல் விடுக்கும் இந்து அடிப்படைவாத கும்பல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அக்கடிதத்தில் விளக்கம் கேட்டுள்ளனர்.
இந்தக் கடிதத்திற்கு பதில் விளக்கக் கடிதம் எதிர்பார்ப்பதும், மாட்டுக் கொம்பில் பாலை எதிர்பார்ப்பதும் ஒன்றுதான் என்பது அவர்களுக்கு கவுரி லங்கேஷ் கொலை விவகாரத்திலேயே தெரிந்திருக்கும். நாட்டு மக்களிடமிருந்து பாஜக கும்பல் தனிமைப்படுத்தப்படும் வரை ஐ.நா.சபை கடிதம் மட்டும் என்ன செய்து விடும்?
– நந்தன்
செய்தி ஆதாரம் : தி வயர்