ங்கில இந்து செய்திதாளில் வெளியான செய்தியின்படி, ஜனநாயக் ஜனதா பார்ட்டியிலிருந்து (ஜேஜேபி – JJP) ஐந்து சட்டமன்ற உறுப்பினர்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். மேலும், புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

பர்வாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோகி ராம் சீஹக், நர்நாந்த் சட்டமன்ற உறுப்பினர் ராம்குமார் கவுதம், ஜூலானா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமர்ஜீத் தண்டா மற்றும் ஷாபாத் சட்டமன்ற உறுப்பினர் ராம்கரன் காலா ஆகியோர் விவசாயிகள் போராட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளனர். மேலும், அந்த விவசாயிகளுக்கு எதிராக வைக்கப்படும் பொருத்தமற்ற கருத்துக்கள் மற்றும் அந்த இயக்கத்தை கொச்சைப்படுத்த முயற்சிக்கும் அவதூறுகளையும் எதிர்த்துப் பேசினர்.

படிக்க :
♦ கர்நாடகா : டொயோட்டாவின் லாபவெறிக்கு எதிராக தொழிலாளர்கள் தொடர் போராட்டம் !
பாஜக மாநிலங்களில் அமல்படுத்தப்படும் பசுப் பாதுகாப்பு சட்டங்கள் !

“விவசாயிகள் மக்களுக்கு உணவளிக்க தானியங்களை உருவாக்கிக் கொண்டிருக்கிற அதே நேரத்தில், அவர்களுடைய பிள்ளைகளோ நாட்டின் எல்லையை காத்துக் கொண்டிருக்கின்றனர். போராடுகின்ற விவசாயிகளை பற்றி பொருத்தமற்ற மோசமான கருத்துக்களை தெரிவிக்கின்ற அரசியல் தலைவர்கள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்,” என்றார், ராம்குமார் கவுதம். மேலும், மத்திய அரசு குறைந்த பட்ச ஆதார விலை தொடர்வதை உத்திரவாதப்படுத்த வேண்டும் என்றார்.

கடந்த வாரம், தாத்ரி தொகுதி சுயட்சை சட்டமன்ற உறுப்பினர் சோம்பிர் சங்க்வானும், தான் பொறுப்பு வகித்த கால்நடை வளர்ச்சி வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்திருந்தார். மேலும் “ இந்த விவசாயிகள் விரோத அரசாங்கத்திற்குத்” தான் கொடுத்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றார். “விவசாயிகளின் மீது இரக்கப்படுவதற்கு பதிலாக, டெல்லியை நோக்கி பேரணியாக செல்லும் விவசாயிகளின் போராட்டத்தை நிறுத்த கண்ணீர் புகை குண்டுகள், தண்ணீர் பீரங்கி வகைகளையும் பயன்படுத்துகிறது. இது போன்ற ஒரு அரசாங்கத்திற்கு நான் ஆதரவு கொடுப்பதை தொடர முடியாது’’ என்றார் அவர்.

அக்டோபர் மாதத்தில், ஜேஜேபி ஹிசாரின் பர்வாலா தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோகி ராம் சிஹாக் அரியானா வீட்டு வசதி வாரியத்தின் தலைவராக தனக்கு கிடைக்க இருந்த புதிய பதவியை ஏற்கமறுத்தார். ”இந்த அரசாங்கம் போராடுகின்ற விவசாயிகளோடு பேச்சுவார்த்தை நடத்தத் தவறிவிட்டது. ஒரு விவசாயியின் மகனாக, இந்த சட்டத்தால் வர இருக்கிற துன்ப துயரங்களை நான் அறிவேன்” என்று இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் கூறினார்.

துஷ்யந்த் சவுதாலா (ஜே.ஜே.பி) உடன் கூட்டணி பேசி முடித்த திருப்தியில் அமித்ஷா

“எனது தொகுதியின் மக்கள் என்னை பதவி விலக கோரினால் உடனடியாக நான் ராஜினாமா செய்வேன். இந்த பதவியானது பர்வாலா மக்களால் எனக்கு கொடுக்கப்பட்டது, எந்த கட்சியாலும் கொடுக்கப்பட்டது அல்ல. விவசாயிகளின் கோரிக்கை நிறைவேற்றப்படும்வரை அது அமைச்சர் பதவியோ, வாரிய தலைவரோ எதுவாக இருந்தாலும் ஏற்கமாட்டேன்”, என்றார் சிஹக்.

கட்சியில் ஏற்பட்டுள்ள சமீபத்திய இந்த மாற்றங்களுக்கு ஜேஜேபி செய்தி தொடர்பாளர், பதில் அளிக்கையில், எங்கள் கட்சியின் தேசிய செயலாளர் அஜய் சவுதாலா விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும் மற்றும் டெல்லி பேரணியின் போது போடப்பட்ட வழக்குகளை திறும்ப பெற வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைத்திருந்தார் என்று கூறினார்.

”போராட்டத்தை சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரிப்பது என்பது அந்த விவகாரத்தில் கட்சியின் நிலைப்பாட்டை பொறுத்தது. இது ஒருபுறமிருக்க, அவர்கள் கட்சியிடம் எந்த அறிவிப்பும் செய்யவில்லை. ராஜினாமா செய்வதாகவும் கூறவில்லை. அரியானாவில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை எல்லா கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரிக்கின்றனர்” என்றார் ஜேஜேபி செய்தித் தொடர்பாளரான தீப் கமல் சாஹரன்.

டிசம்பர் 9 அன்று, விவசாய சங்கங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையே நடக்கும் ஆறாவது சுற்று பேச்சுவார்த்தை நேர்மறையான விளைவு ஏற்படும் வகையில் இருக்கும் என்று இந்து பத்திரிகையிடம் கூறினார், கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சவ்தாலா. மேலும் அவர், தங்கள் கட்சியும், அதன் 10 சட்டமன்ற உறுப்பினர்களும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிப்பதாக கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஜேஜேபி யின் மூத்த தலைவர்களும் துணை முதலமைச்சர் துஷ்யந்த் சவ்தாலாவும் மத்திய அமைச்சர்களிடம் விவசாயிகளுக்கு ஆதரவாக பேசியுள்ளார்கள், மேலும், எல்லா கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் விவசாயிகள் போராட்டத்தை ஆதரிப்பதால் யாரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஜேஜேபியை பொறுத்தவரை, விவசாயிகளும், காப்( நாட்டாமை) களும்தான் மிகவும் முக்கியமானவர்கள். காப்-களின் முடிவுகள்தான் எல்லாவற்றையும் விட உயர்வானது’’ என்று அவர் கூறினார்.

ஜேஜேபி விவசாயிகளிடமிருந்து அதிக ஆதரவை பெற்றுவரும் கட்சி. அது, இப்போது கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண்சட்டத்தால் ஒரு நிலைப்பாடு எடுக்க வேண்டிய நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அக்டோபரில், 17 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் சிஸ்ராவில் துஷ்யந்த் சவ்தாலா மற்றும் மின்சாரதுறை அமைச்சர் ரஞ்சித் சிங்கையும் ராஜினாமா செய்யக்கோரி ஒரு தர்ணா நடத்தினர்.

படிக்க :
♦ குற்றவியல் சட்டத் திருத்தம் : மறுகாலனியாதிக்கத்துக்கு ஏற்ப மறுவார்ப்பு !
♦ கார்ப்பரேட்டுகள் வங்கி தொடங்குவதற்கான பரிந்துரை : பின்புலம் என்ன? || AIBEA

விவசாயிகளுக்கு துரோகம் செய்துவிட்டதற்காக காங்கிரசு கட்சியும் ஜேஜேபியை விமர்சித்தது. ‘’அவர்கள் பிஜேபிக்கு எதிரான விவசாயிகளிடம் ஓட்டுகேட்டு, கடன் தள்ளுபடி என வாக்குறுதி கொடுத்தனர். ஆனால், இன்று விவசாயிகள் தண்ணீர் பீரங்கிகளையும், கண்ணீர் புகைகுண்டுகளையும் சாலைகளில் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், ஜேஜேபி கட்சி அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்கிறது’’ என்று கடந்தவாரம் கூறினார், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜிவாலா.

ஜேஜேபி கட்சியானது 2019 சட்டமன்ற தேர்தலில் பிஜேபி க்கு எதிராக போட்டியிட்டிருந்தது. ஆனால், தேர்தல் முடிவுக்கு பின்னர் அக்கட்சி பிஜேபியுடன் கூட்டணி அமைத்தது.

அரியானா காங்கிரஸ் தலைவர் குமாரி செல்ஜா, “ஜேஜேபி கடந்த ஆண்டு பாஜகவுக்கு ஆதரவளித்ததன் மூலம் விவசாயிகளுக்கு துரோகம் இழைத்துவிட்டது” என்றார். இப்போது, ஜேஜேபி கட்சி பிஜேபி அரசாங்கத்திற்கு அளிக்கும் ஆதரவிலிருந்து வாபஸ் வாங்கவும், அரியானா மக்கள் பக்கம் நிற்கவும் ஒரு வாய்ப்பை பெற்றிருக்கிறது என்றார்.

எதிர்கட்சி தலைவர் புபிந்தர் சிங்க் ஹூடாவும், ஜேஜேபி மற்றும் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர்கள் பிஜேபி அரசாங்கத்திற்கு கொடுக்கும் அவர்களின் ஆதரவை வாபஸ் வாங்க வேண்டும் என அழைப்பு விடுத்தார். “இது போன்ற தலைவர்கள் விவசாயிகளின் நலன்களை விட அதிகாரத்தை அதிகம் நேசிக்கின்றனர்” என்றார் அவர்.

தமிழாக்கம் : முத்துக்குமார்
நன்றி : The Wire

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க