ர்நாடக மாநிலத்தின் தலைநகரான பெங்களூருக்கு  50 கிலோ மீட்டர் அருகில் பிடாடி எனும் இடத்தில் அமைந்துள்ள டொயோட்டா கார் உற்பத்தி ஆலையில், அந்த ஆலையைச் சேர்ந்த தொழிலாளர்கள் கடந்த நவம்பர் 09 ஆம் தேதி முதல் நிர்வாகத்தின் லாபவெறியையும் தொழிலாளர்கள் மீதான அடக்குமுறைகளையும் கண்டித்து கிட்டத்தட்ட ஒரு மாதமாக தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டு உற்பத்திக் கிளைகளை கொண்ட இந்த ஆலையில் 6,500 தொழிலாளர்கள் பணிபுரிகிறார்கள். இதில் 3,460 பேர் தொழிற்சங்கமாக திரண்டுள்ள தொழிலாளர்கள். ஒருநாளைக்கு தோராயமாக 300 கார்கள் வரையிலும் மாதத்திற்கு சுமார் 80,000 கார்களை உற்பத்தி செய்கிறார்கள் தொழிலாளர்கள். லாபவெறி அடங்காத டொயோட்டா ஆலை நிர்வாகம் இதனை 1 இலட்சமாக உயர்த்த வேண்டும் என அறிவித்ததையடுத்து சங்கமாக திரண்டுள்ள தொழிலாளர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். இதன் காரணமாக தொழிற்சங்கத் தலைவரான (TKMEU) உமேஷ் கவுடா ஆலூரை பணியிடை நீக்கம் செய்து தனது பழிவாங்கும் நடவடிக்கையை தொடங்கியது நிர்வாகம்.

படிக்க :
♦ தொழிலாளிகளை கசக்கும் டொயோட்டாவின் இலாப வெறி !
♦ ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

நிர்வாகத்தின் இச்செயலைக் கண்டித்து நவம்பர் 9 முதல் வேலைநிறுத்தத்தை தொடங்கியிருக்கிறார்கள் தொழிலாளர்கள். அடுத்த நாளே ஆலை இழுத்துமூடப்படுகிறது. வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 39 தொழிலாளர்களை (‘ஒழுங்கீன செயல்களுக்காக’ என்று சொல்லி) பணியிடை நீக்கம் செய்து அச்சுறுத்தியிருக்கிறது நிர்வாகம். கர்நாடக மாநிலத்தை ஆளும் பா.ஜ.க. அரசு தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை தடைசெய்து தனது கார்ப்பரேட் விசுவாசத்தை காண்பிக்கிறது. இவை அனைத்திற்கும் அஞ்சாமல் தொடர்ச்சியாக போராடிவருகிறார்கள் தொழிலாளர்கள்.

இதுகுறித்து, பிரசன்ன குமார் எனும் தொழிற்சங்கத் தலைவர் கூறுகையில் “80,000 கார்களை தாயாரித்த நிலையில் தற்போது ஒருலட்சம் கார்களை தயாரிக்க நிர்வாகம் நெருக்கடி கொடுத்து வருகிறது. 8 மணி நேரத்தில் சிறுநீர்  கழிக்கச் சென்றால் கூட அது குற்றமாக பார்க்கப்படுகிறது, பணியின் போது நடந்தால், அமர்ந்தால், ஏன் மூச்சுவிட்டால் கூட குற்றம் என்று ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது” என்கிறார்.

மூன்று நிமிடத்திற்கு ஒரு கார் தயாரிப்பு என்ற விகிதத்தை 2.5 நிமிடத்திற்கு ஒரு கார் என்ற வகையில் தயாரிக்கச் சொல்கிறது டொயோட்டா ஆலை நிர்வாகம். ஏற்கெனவே கனநேர இடைவெளியின்றி பணிபுரியும் தொழிலாளர்கள், மேலும் மேலும் அதிகரிக்கப்படும் லைன் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாது என்ற நிலையில்தான் இந்தப் போராட்டம் தொடங்கியுள்ளது.

புதிய தாராளவாத ஆட்சியின் கீழ் முதலாளித்துவத்தின் லாபவெறிக்கு டொயோட்டா ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய தொழிலாளி வர்க்கமே கொத்தடிமையாக மாற்றப்படுகிறது என்பது தான் உண்மை. தொழிற்சங்கம், கூட்டுபேர உரிமை ஆகியவற்றை ஒழிப்பது, 8 மணிநேர வேலையை 12 மணிநேரமாக மாற்றுவது, NEEM, FTE முறையை அமுல்படுத்தி “நிரந்தர தொழிலாளி” என்பதையே அழிப்பது ஆகியவற்றின் மூலம் தனது ‘கார்ப்பரேட் கரசேவையை’ செவ்வனே செய்கிறது பா.ஜ.க. அரசு.

விவசாயிகளின் வாழ்வாதாரம் பறிக்கப்படுவதும், தொழிலாளர்கள் கசக்கிப் பிழியப் படுவதும் கார்ப்பரேட்டுகளின் நலனுக்காகத்தான் எனும் போது, இந்த அரசு நமக்கானதா இல்லை கார்ப்பரேட்டுகளுக்கானதா என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.  நமக்கான அரசை உருவாக்குவது குறித்து சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்கிறது !


பால்ராஜ்
செய்தி ஆதாரம்: WSWS

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க