இந்தியாவில் இன்னோவா கார்களை உற்பத்தி செய்யும் டொயோட்டா கிர்லோஸ்கர் நிறுவனம் சுமார் 4,200 தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்தி அவர்களுடைய வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகிலுள்ள பிடதியில் சுமார் 432 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருக்கும் டொயோட்டா தொழிற்சாலையில் மொத்தம் 6,500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். தொழிலாளர்கள் ஒற்றுமையை பிரிக்கும் நோக்கத்துடனும் குறைந்த கூலியில் வேலை வாங்கும் நோக்கத்துடனும் 4,200 நிரந்தரத் தொழிலாளர்களுடன் 1,500 ஒப்பந்த தொழிலாளர்கள், 800 பயிற்சியாளர்களையும் உற்பத்தியில் ஈடுபடுத்துகிறது நிர்வாகம். நிரந்தரத் தொழிலாளர்கள் மட்டும் டொயோட்டா கிர்லோஸ்கர் தொழிற்சங்கமாக திரண்டிருக்கிறார்கள்.
டொயோட்டாவின் நிரந்தரத் தொழிலாளிகளுக்கு அடிப்படை ஊதியமாக ரூ 16,000-ம், சராசரி மாத ஊதியமாக ரூ 25,500-ம் வழங்கும் நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு சொற்ப கூலியாக ரூ 8000-ம், பயிற்சியாளர்களுக்கு ரூ 6000-ம் மட்டும் தந்து சுரண்டுகிறது. இந்த அடிப்படையில் டொயோட்டா நிறுவனத்தின் மொத்த ஊதியச் செலவு மாத விற்பனை வருவாயில் 2%-ஐ விடக் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு மார்ச் மாதம் வழங்கப்படும் வருடாந்திர ஊதிய உயர்வாக இவ்வாண்டு மாத சம்பளத்தை சராசரி ரூ 8,500 உயர்த்த வேண்டுமென சென்ற ஆண்டு மார்ச் மாதமே தொழிற்சங்கம் கோரிக்கை வைத்தது. ரூ 2,400 மட்டுமே தர முடியுமென நிர்வாகம் கூறியது. கடந்த 11 மாதங்களாக நிர்வாகத்துடன் 48 முறைக்கும் மேல் – 8 முறைக்கும் மேல் தொழிலாளர் உதவி ஆணையர் முன்னிலையில் – நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.
பலகட்ட பேச்சுவார்த்தைகளில் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கையை சராசரி ரூ 4,000 உயர்வு என குறைத்துக் கொண்டனர். ஆனால், ரூ 3,050 மட்டுமே ஊதிய உயர்வு தருவதாக பிடிவாதம் பிடித்தது நிர்வாகம். சென்ற நிதியாண்டில் கொடுக்கப்பட்ட அதே ஊதிய உயர்வையே தாங்கள் கோருவதாகவும், இச்சராசரி உயர்வு வழங்கப்பட்டாலும் கூட 4,200 தொழிலாளர்களில் 20% பேர் மட்டுமே அதிகபட்சமான ரூ 3,050 ஐ பெறுவார்கள் எனவும், 80% பேர் வரை பணி அனுபவத்தின் அடிப்படையில் குறைவான உயர்வையே பெறுவார்கள் என்பதால், சென்ற ஆண்டின் உயர்வான ரூ 4,000-ஐ இவ்வாண்டுக்கும் வழங்கும்படி தொழிலாளர்கள் கோரி வருகின்றனர்.

ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக தொழிற்சாலையின் உற்பத்தியை 1.6 லட்சம் கார்களிலிருந்து 2.1 லட்சமாக (33% அதிகரிப்பு) உயர்த்தியிருக்கிறது டொயோட்டா. உற்பத்தி அதிகரிப்பின் காரணமாக மிக மோசமான பணியிடச்சூழல் நிலவுவதாகவும், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக சில தொழிலாளிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும், சிலர் வேலையை விட்டு சென்று விட்டதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். தொழிலாளர்களை கசக்கிப் பிழிந்து தனது விற்பனை வருவாயையும், லாபத்தையும் மேலும் மேலும் பெருக்கி வருகிறது டொயோட்டா. ஆனால், பணவீக்க வீத அளவுக்கு கூட ஊதிய உயர்வு கொடுக்காமல் தொழிலாளர்களின் உண்மையான சம்பளத்தை மேலும் குறைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 10, 28 ஆகிய நாட்களில் தொழிற்சங்கம் அடையாள வேலைநிறுத்தம் நடத்தியது. இதையடுத்து தொழிலாளர் ஆணையருக்கும், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்திற்கும் முன் அறிவிப்பு செய்ய வேண்டும் என்ற சட்டபூர்வமான விதிமுறைகளை மதிக்காமல், மார்ச் 16 முதல் தொழிற்சங்கத்தில் இருக்கும் நிரந்தர தொழிலாளர்களுக்கு மட்டும் லாக்அவுட் அறிவித்து உற்பத்தியை நிறுத்தியது நிர்வாகம். ஆனால், 1,600 ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும், 800 பயிற்சியாளர்களுக்கும் லாக் அவுட் அறிவிக்காமல் அவர்களை சட்ட விரோதமாக உற்பத்தியில் ஈடுபடுத்த முயற்சித்ததை தொழிலாளர்கள் அம்பலப்படுத்தினர்.
25 நாட்களில் தொழிலாளர்களின் போராட்ட நடவடிக்கைகளால் 2,000 கார்கள் வரை உற்பத்தி குறைந்ததால் இழப்பு ஏற்பட்டதாகவும், மாருதி தொழிற்சாலையைப் போல் நிர்வாக ஊழியர்களுக்கு தொழிலாளர்கள் மூலம் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகவும் புலம்பியது. அதாவது தொழிலாளர்கள் வேலை செய்யா விட்டால் உற்பத்தி இல்லை என்பதுதான் நிதர்சனம் என்றாலும் தொழிலாளர்களின் குறைந்தபட்ச உரிமைகளைக் கூட மதிக்காமல் அவர்களை மிரட்டி பணிய வைக்க முயற்சிக்கிறது நிர்வாகம்.

இப்பிரச்சனையில் அரசு தலையிட வேண்டும் என கோரிக்கை வைத்து பெங்களூரில் போராட்டம் நடத்தப்பட்டதை அடுத்து கர்நாடக மாநில தொழிலாளர் துறை அமைச்சர் முன்னிலையில் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டதாக சொல்லி தொழிற்சாலையில் உற்பத்தியை தொடங்கப் போவதாக நிர்வாகம் அறிவித்தது. ஆனால், தொழிலாளர்கள் வேலைக்கு திரும்பும் முன்னர் மன்னிப்பு கடிதமும், இனி இம்மாதிரியான போராட்டங்களில் ஈடுபடுவதில்லை என உறுதிமொழி கடிதமும் தரவேண்டுமென பிடிவாதம் பிடித்தது.
சட்ட விதி முறைகளை துளியும் மதிக்காத நிர்வாகம், தொழிலாளிகளை வன்முறையாளர்களாக முத்திரை குத்தி உற்பத்தியை நிறுத்தியதுடன், அவ்வுற்பத்தி நிறுத்ததிற்கும் தொழிலாளர்களையே பொறுப்பாக்குகிறது. மேலும் தொழிற்சங்கத்தை சேர்ந்த முன்னணியாளர்கள் 17 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்தது. நிர்வாகத்தின் முதன்மையான நோக்கம் தொழிற்சங்கத்தை முடக்கி, தொழிலாளர்களின் போராட்ட உணர்வை முறியடிப்பதே.
தொழிலாளிகள் மன்னிப்பு கடிதம் எழுதித்தர முடியாதெனவும், அனைவரையும் நிபந்தனையற்ற முறையில் வேலைக்கு சேர்த்துக் கொள்ள வேண்டுமெனவும் போராடி வருகின்றனர். ஆனால், தற்போது புதிதாக வேலைக்கு அமர்த்திய சுமார் 1,000 ஒப்பந்தத் தொழிலாளர்களையும், பயிற்சியாளர்களையும் சட்டவிரோதமாக ஈடுபடுத்தி பகுதியளவில் உற்பத்தியை தொடங்கியுள்ளது டொயோட்டா.
பேச்சுவார்த்தையின் போது, தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக (அதாவது, ஜப்பானுக்கு அள்ளிச் செல்லும் லாப வீதம் முன்பை விட சிறிது குறைந்திருக்கலாம்), சம்பள விகிதத்தை உயர்த்த முடியாதென கூறிய நிர்வாகத்திடம் நிறுவனத்தின் வரவு-செலவு ஆண்டறிக்கையை தொழிற்சங்கம் கேட்டதற்கு, “தனியார் பங்கு நிறுவனம் (பிரைவேட்-லிமிட்டெட் கம்பெனி)” என்பதால் ஆண்டறிக்கையை தரமுடியாது என திமிர்த்தனமாக பதிலளித்துள்ளது.

1997-ல் தொடங்கப்பட்ட டொயோட்டா கிர்லோஸ்கர் கார் உற்பத்தி நிறுவனத்தில் ஜப்பானின் டொயோட்டா நிறுவனம் 89% பங்குகளும், இந்தியாவின் கிர்லோஸ்கர் நிறுவனம் 11% பங்குகளும் கொண்டுள்ளன. டொயோட்டா போன்ற நிறுவனங்கள் தனது விற்பனைக்கான கார்களை குறைந்த செலவில் உற்பத்தி செய்வதற்காக இந்தியாவிலும் பிற மூன்றாம் உலக நாடுகளிலும் தொழிற்சாலைகளை தொடங்கி பெரும் லாபத்தை குவிக்கின்றன. ஆனால், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச அடிப்படை ஊதியம் கூட கொடுக்க மறுத்து, வேலை நிறுத்தம், லாக் அவுட், வேலை நீக்கம் என்று அவர்களது உரிமைகளை பறித்து அடாவடிகள் செய்கின்றன.
டொயோட்டா மட்டுமின்றி மாருதி சுசுகி, ஹோண்டா போன்ற நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு சங்கமாக திரளும் உரிமை உட்பட எந்த அடிப்படை உரிமையையும் அங்கீகரிப்பதில்லை. இந்தியாவில் மட்டுமின்றி உலகெங்கிலும் இந்நிறுவனங்களில் மோசமான பணியிடச்சூழல், அதிக வேலைப்பளு மற்றும் மன அழுத்தத்தின் காரணமாக விபத்துக்கள் பலமடங்கு அதிகரித்துள்ளதுடன், தற்கொலைகளும் அதிகரித்துள்ளன. உழைப்பிற்கும், உற்பத்திக்கும் இலக்கணமாக ஜப்பானிய வழிமுறை (Japanese way) என்று பீற்றிக்கொள்ளப்படுவதற்கு பின்னால் இம்மாதிரியான தொழிலாளர்களின் மீதான ஒடுக்குமுறை தான் உள்ளது.
முன்னதாக 2006-லும் டொயோட்டா இதே போல் 15 நாட்களுக்கும் மேல் கம்பெனியை மூடி தொழிலாளர்களை நெருக்குதலுக்குள்ளாக்கியது. அதற்காக இன்று வரை நிர்வாகத்தின் மீது எந்த வித நடவடிக்கையையும் எடுக்காத அரசு மற்றும் தொழிலாளர் துறை ஒரு புறமும், தீர்வை எட்டாத கையறு நிலை மறுபுறமும், சட்டவாத நடவடிக்கைகளிலும், ஓட்டுக் கட்சிகளிடமும் இதற்கான தீர்வு இல்லை என்பதை தொழிலாளர்கள் தமது சொந்த அனுபவத்தினூடாக உணரச் செய்துள்ளன.
டொயோட்டா தொழிற்சங்கத்தினர் தமது உரிமைகளுக்காக தொடர்ந்து போராட்டங்களை முன்னெடுப்பதோடு, நாட்டின் பிற பகுதிகளின் தொழிலாளர்களுடன் இணைந்து போராடுவதுதான் தமது உரிமைகளை தக்க வைத்துக் கொள்ள ஒரே வழி. வடக்கே மாருதி நிறுவனத்தில் துவங்கிய போராட்டம் இப்போது தெற்கே பெங்களூருவை எட்டியிருக்கிறது. மறுகாலனியாக்க சுரண்டலுக்கு எதிரான இப்போராட்டம் மற்ற பிரிவு தொழிலாளிகளையும் கவரும் போது முதலாளிகளின் திமிர் முறியடிக்கப்படும். கூடவே பன்னாட்டு நிறுவனங்களுக்கு கொடி பிடிக்கும் அரசும் அதனுடைய நிர்வாக-நீதி அமைப்புகளும் கேள்வி கேட்கப்படும். தொழிலாளிகளை சுரண்டுவது இனி பகற்கனவு என்பதையே டொயோட்டா தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது.
– மார்ட்டின்.
மேலும் படிக்க
- Wage issue: Toyota workers seek Karnataka govt’s intervention
- Toyota resumes production at Bidadi plants
- After Honda & Maruti Suzuki, Toyota faces labour unrest in India; are Japanese cos insensitive?
- Toyota blames workers stir for production loss of 2,000 units
- Toyota Kirloskar Motor shuts its car plants near Bangalore due to ‘grave threat to management safety’