privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

முகப்புசெய்திஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

ஹுண்டாய் தொழிலாளர் போராட்டம் வெல்க!

-

சென்னையிலுள்ள ஹுண்டாய் ஆலையில் கடந்த வாரமஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தரத்தொழிலாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். பெரும்பான்மையான நிரந்தரத்தொழிலாளர்கள் சி.பி.எம் மின் ஹுண்டாய் மோட்டார் யூனியன் (HMU) சங்கத்தில் உள்ளனர்.

ஹுண்டாயில் மொத்தம் பதினோராயிரத்து ஐநூறு தொழிலாளிகள் பணிபுரிகிறார்கள்.  அதில் வெறும் ஆயிரத்து ஐநூறு பேர் மட்டுமே  நிரந்தரத் தொழிலாளிகள். மிச்சமுள்ளவர்கள் அனைவரும் தற்காலிக, ஒப்பந்த தொழிலாளர்கள். ஹுண்டாயின் கொடூரமான உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக இந்த தொழிலாளர்கள் கடந்து பத்தாண்டுகளாக நூற்றுக்கணக்கான போராட்டங்களை நடத்தியுள்ளனர்.  ஆனால் அனைத்து போராட்டங்களும் சங்கத்தின் பலவீனம் காரணமாக நிர்வாகத்தால் முறியடிக்கப்பட்டது.

தொழிலாளிகள் ஒன்றாக இணைந்துவிடக்கூடாது என்பதற்காக நிர்வாகம் பல்வேறு சதிவேலைகளில் ஈடுபடுகிறது. தொழிலாளிகள் மத்தியிலேயே கருங்காலிகளை உருவாக்கி வைத்திருக்கிறது. மற்றொரு புறம் தொழிலாளிகளும் அரசியல் புரிதலோடு ஒரே சங்கத்தின் கீழ் இணையாமல் பாட்டாளி வர்க்க கண்ணோட்டமின்றி பல்வேறு துரோகச் சங்கங்களில் பிளவுபட்டுள்ளனர். ஆலையிலுள்ள சங்கங்களில் நிர்வாகத்தின் சங்கமும் ஒன்று. மேலும் அது மட்டும் தான் அங்கீகரிக்கப்பட்ட சங்கமும் ஆகும்.  அந்த கைக்கூலி சங்கத்திலும் நூற்றுக்கணக்கான தொழிலாளிகள் அடிமை மனோபாவத்தோடு இணைந்திருக்கிறார்கள்.

பத்தாயிரத்திற்கு மேற்பட்ட தொழிலாளிகள் வேலை செய்யும் இவ்வாலையில் தொழிலாளர்கள் சம்பந்தமாக நிர்வாகம் என்ன பேசுவதாக இருந்தாலும் சில நூறு பேரை கொண்ட தனது அடிவருடி சங்கத்தோடு தான் பேசும். தற்போது நிரந்தரத் தொழிலாளர்கள் போராடுவதற்கு காரணம் என்னவென்றால் பல ஆயிரக்கணக்கான தொழிலாளிகள் அமைப்பாக திரண்டிருக்கும் பிற சங்கங்களிடம் கலந்தாலோசிக்காமல், நிர்வாகத்திடம் சோரம் போன கருங்காலிகளை உறுப்பினர்களாக கொண்ட சங்கத்தோடு மட்டும் நிர்வாகம் ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட்டுக்கொண்டிருக்கிறது. இதை கண்டித்தும், இதற்கு முன்பு வேலை நீக்கம் செய்யப்பட்ட இருபத்தி ஏழு நிரந்தரத்தொழிலாளிகளை மீண்டும் பணியில் அமர்த்த வலியுறுத்தியும், தமது சங்கத்தை அங்கீகரிக்க வலியுறுத்தியும் தான் கடந்த மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் நடைபெற்று வருகிறது.

இந்த வேலை நிறுத்தம் எப்படி நடக்கிறது ?  தொழிலாளிகள் ஆலைக்கு உள்ளேயும் இல்லை,  ஆலைக்கு வெளியேயும் இல்லை ! இதற்கு முன்பாவது ஆலையின் வாயிலில் பந்தல் போட்டு அமர்ந்திருப்பார்கள். தற்போது அதற்கும் அனுமதி இல்லை. திருப்பெதும்புதூர், இருங்காட்டுக்கோட்டை பகுதிகளில் இது போன்ற போராட்டங்களை நடத்த புதிதாக தடை விதிக்கப்பட்டுள்ளது !

இந்த போராட்டத்திற்கு முன்பு இதே ஆலையைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளிகள் சரியாக ஒரு மாதத்திற்கு முன்பு ஒரு போராட்டத்தை நடத்தினர். அவர்கள் அனைவரும் டி.வி.எஸ் லாஜிஸ்டிக்கால் ஹுண்டாய்க்கு சப்ளை செய்யப்படுகின்ற ஒப்பந்தத் தொழிலாளிகள். அவர்கள் போராடிய போது  தற்போது போராடுகின்ற நிரத்தரத் தொழிலாளர்கள் அவர்களுக்கு பெயரளவில் ஆதரவு தெரிவித்துவிட்டு உள்ளே சென்று உற்பத்தியை தொடர்ந்தார்கள். இப்போது நிரந்தரத் தொழிலாளிகள் போராடுகிறார்கள். ஒப்பந்தத் தொழிலாளிகளோ உள்ளே இருக்கிறார்கள். அவர்களுடைய செயல் சரியானது அல்ல என்பது ஒரு புறம் இருக்கட்டும். அன்று ஒப்பந்தத் தொழிலாளிகள் போராடிக் கொண்டிருந்த போது நிரந்தரத் தொழிலாளிகளும் ஆலைக்குள் செல்லாமல் உற்பத்தியை நிறுத்திவிட்டு அவர்களுடைய போராட்டப் பந்தலில் அமர்ந்திருந்தால் இன்று ஒப்பந்தத் தொழிலாளிகள் உள்ளே இருந்திருக்க மாட்டார்கள்.

இருவரையும் சுரண்டுவது ஒரே முதலாளி, இரு பிரிவு தொழிலாளிகள் எதிர்த்து போராடுவதும் ஒரே முதலாளியை தான் என்கிற போது இருவருடைய போராட்டத்தையும் தனித்தனியே நடத்துமாறு சொல்லிக்கொடுப்பது யார் ?  அது யார் என்பதையும், அது சரியா என்பதையும் இரு பிரிவு தொழிலாளர்களும் தான் யோசிக்க வேண்டும். அவ்வாறு பரிசீலித்து தமக்குள் ஒரே வர்க்கமாக இணையும் போது தொழிலாளி வர்க்கத்தால் ஹுண்டாயை மண்டியிட வைக்க முடியும். மாறாக தனித்தனியே பிரிந்து கிடக்கும் வரை கூடுதலான ஒடுக்குமுறையும்,சுரண்டலும், கருகாலி சங்கங்களும் தான் வளரும். ஆனால் புரட்சிகரமான தொழிலாளி வர்க்கத்தை பிரித்து வைத்திருக்கும் நிர்வாகத்தையும் துரோக சங்கங்களின் தலைமையையும் தகர்த்தெரிந்துவிட்டு தொழிலாளி வர்க்கம் ஒன்று சேர்ந்தே தீரும்.