ரோனா ஊரடங்கு முற்றிலுமாக விலக்கப்படாத நிலையிலேயே வேளாண் விளைபொருள் சட்டத் திருத்தம், அத்தியாவசியப் பொருட்கள் சட்டத் திருத்தம், தொழிலாளர் நலச் சட்டத் திருத்தம் மற்றும் புதிய கல்விக் கொள்கை ஆகியவற்றை நிறைவேற்றிய மோடி அரசு, அதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கிய கிரிமினல் சட்டத் தொகுப்பையும் திருத்த முனைந்திருக்கிறது.

கிரிமினல் சட்டங்களைத் திருத்தும் பொறுப்பு இந்திய சட்ட ஆணையத்திடம் ஒப்படைக்கப்படுவதுதான் வழமையான நடைமுறை. இதற்கு முன் செய்யப்பட்ட திருத்தங்கள் அனைத்தும் இந்திய சட்ட ஆணையம் அளித்த பரிந்துரைகளை பரிசீலித்த பிறகுதான் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால், இம்முறையோ இந்திய சட்ட ஆணையம் புறக்கணிக்கப்பட்டு, டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரன்பீர் சிங் தலைமையில் ஐந்து பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்திருக்கும் மோடி அரசு, ஆறு மாதங்களுக்குள் அறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டுமென்று அக்குழுவிற்குக் கெடுவும் விதித்திருக்கிறது.

இக்குழு 300-க்கும் மேற்பட்ட கேள்விகள் அடங்கிய கேள்விப் பட்டியலை ஆங்கிலத்தில் வெளியிட்டு, ஒவ்வொரு கேள்விக்கும் 200 வார்த்தைகளுக்கு மிகாமல் தங்களுடைய கருத்தைத் தெரிவிக்க வேண்டும் என்று தமது இணையதளத்தில் அறிவித்திருக்கிறது.

படிக்க :
♦ மோடியின் கருப்பு சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் !
♦ ஊபா – ஆள்தூக்கி ஒடுக்குமுறைச் சட்டத்தின் பொன் விழா

மைய அரசின் இந்நடவடிக்கைக்கு கருத்துக்களைவிடப்  பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள்தான் எழுந்துள்ளன. ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் 16 பேர்,  100 வழக்குரைஞர்கள் மற்றும் முன்னாள் ஆட்சிப் பணியாளர்கள், கல்வியாளர்கள், அறிவுத்துறையினர் உள்ளிட்ட 150 பேர் இக்குழுவின் செயல்பாடுகளை நிறுத்த வேண்டுமென்றும்,  பல்வேறு தட்டுக்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய வகையில் இக்குழு புனரமைக்கப்பட வேண்டுமென்றும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

‘‘முதல் ஐந்து சட்ட ஆணையங்கள் மூன்றில் ஒரு பங்கு  குற்றவியல் சட்டங்களைத் திருத்துவதற்கே பத்தாண்டுகள் எடுத்துக்கொண்ட நிலையில், இக்குழு 6 மாதத்திற்குள் எப்படித் திருத்தங்களைச் செய்து முடிக்க முடியும்?’’ என இந்திய மற்றும் வெளிநாட்டு வாழ் சட்ட நிபுணர்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

இத்துணை எதிர்ப்புகளையும் சந்தேகங்களையும் மாற்று ஆலோசனைகளையும் புறந்தள்ளிவிட்டு, இக்குழுவைத் தடையின்றிச் செயல்பட அனுமதித்திருக்கிறது, மைய அரசு.

***

தற்போதுள்ள குற்றவியல் சட்ட அமைப்பு இன்றைய ஜனநாயக நடைமுறைக்குப் பொருந்தாமல் இருக்கிறதாம். அதனால், ஜனநாயகத்தை மேம்படுத்தவும், விரைவாக நீதி கிடைப்பதை உத்தரவாதப்படுத்தும் முகமாகவே குற்றவியல் சட்டத்தைத் திருத்த வேண்டியிருப்பதாகக் கூறுகிறது, மோடி அரசு. இத்திருத்த நடவடிக்கைக்கு மோடி கற்பிக்கும் இந்நியாயம் குரூரமான நகைச்சுவை தவிர வேறில்லை.

ஆர்.எஸ்.எஸ். சங்கப் பரிவாரத்தைப் பொருத்தவரை, இந்தியச் சட்டங்கள் ஒவ்வொன்றையும் மட்டுமல்ல, இந்திய அரசியல் சாசனத்தையே திருத்த வேண்டும் என்பதுதான் அதன் நோக்கம். வாஜ்பாயி ஆட்சியின்போதே இதற்கான முயற்சி எடுக்கப்பட்டது. அரசியல் சாசனச் சட்டத்தைத் திருத்துவது தொடர்பாகவும், நாடாளுமன்ற ஆட்சி முறையில் மாற்றங்கள் கொண்டுவருவது தொடர்பாகவும் பரிசீலிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி வெங்கடாசலய்யா தலைமையில் ஒரு கமிட்டியும் அமைக்கப்பட்டது.

ரண்பிர் சிங்

இக்கமிட்டி அமைக்கப்பட்டதற்கு எதிராகப் பலத்த எதிர்ப்பு எழுந்ததன் காரணமாகவும், அப்போது கூட்டணிக் கட்சிகளை நம்பியே பா.ஜ.க., ஆட்சியை ஓட்டிக் கொண்டிருந்ததாலும், அதனின் ஆசை நிராசையாகிப் போனது. மேலும், அந்த அனுபவத்திலிருந்து அரசியல் சாசனத்தை அதிரடியாக அல்லது பலவந்தமாகத் திருத்துவதற்குப் பதிலாக, அதனை உள்ளிருந்தே தனது நோக்கங்களுக்கும் அரசியல் திட்டங்களுக்கும் ஏற்ப சிறுகச் சிறுகத் திருத்துவது எனத் தனது தந்திரோபாயத்தை மாற்றியும் கொண்டது.

2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. மக்களவையில் தனிப் பெரும்பான்மையோடு ஆட்சியமைத்தவுடன் காஷ்மீருக்குச் சிறப்புரிமை அளிக்கும் அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது. பொது சிவில் சட்டம் என்ற தனது நயவஞ்சகமான திட்டத்தை அமலாக்கும் முதல் அடியாக, முத்தலாக் மண முறிவை கிரிமினல் குற்றமாக்கிச் சட்டமியற்றிவிட்டது.

குற்றவியல் சட்டத் தொகுப்பைத் திருத்துவதற்கு மோடி அரசால் அமைக்கப்பட்டிருக்கும் குழுவையும், அக்குழு திருத்தம் தொடர்பாக முன்வைத்திருக்கும் கேள்விகளையும் இந்த அடிப்படையில்தான் பார்க்க வேண்டும்.

***

குற்றவியல் சட்டத் தொகுப்பைத் திருத்துவதற்கு மோடி அரசிற்கு இரு காரணங்கள் உள்ளன. ஒன்று, நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு, நாட்டின் வளங்கள் அனைத்தையும் மென்மேலும் தனியார்மயப்படுத்துவதுதான் தீர்வு என மோடி அரசு கருதுகிறது. மேலும், ‘‘ஏக் பாரத் ஷ்ரேஷ்ட பாரத்’’ என்ற போர்வையில் இந்தியாவின் பன்முகத்தன்மையை அழித்து இந்து இந்தியாவை உருவாக்கிவிடவும் விழைகிறது. இவற்றுக்கெல்லாம் எழக்கூடிய எதிர்ப்புகளை எதிர்கொள்ளுவதற்குப் பழைய சட்டங்கள் பயன்படாது என்று அது கருதுகிறது.

இந்த அடிப்படையில்தான் வேளாண்மை தொடர்பான சட்டங்களில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்புச் சட்டம் நீர்த்துப் போக வைக்கப்பட்டிருக்கிறது. கேந்திரமான பொதுத்துறை நிறுவனங்களின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கார்ப்பரேட் முதலாளிகள் மீண்டும் வங்கித் தொழிலில் ஈடுபடுவதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் கொண்டுவரும் முயற்சிகள் தொடங்கப்பட்டுவிட்டன. ஒரே நாடு ஒரே வரி, ஒரே நாடு ஒரே கல்விக் கொள்கை, ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு மற்றும் தேசியப் புலனாய்வு முகமை ஆகியவற்றின் மூலம் மாநில அரசுகளின் உரிமைகள் ஒவ்வொன்றாக உருவப்பட்டு, மாநில அரசுகள் முனிசிபாலிட்டிகளாக மாற்றப்படுகின்றன.

குடியுரிமைச் சட்டத் திருத்தம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றின் மூலம் சிறுபான்மை மதத்தினரை, குறிப்பாக முஸ்லிம்களைச் சட்டபூர்வமாகவே இரண்டாம்தர குடிமக்களாக மாற்ற முயற்சிக்கிறது.

தொகாடியா

இவை தொடர்பாக எழக்கூடிய அமைதி வழியிலான எதிர்ப்புகளையும்கூடக் கிரிமினல்மயமாக்குவது என்ற நோக்கில்தான் குற்றவியல் சட்டத் தொகுப்பையும் திருத்த முயலுகிறது, மோடி அரசு. டெல்லி-ஷாஹின்பாக் போராட்டத்தை மோடி அரசு எதிர்கொண்ட விதத்தை இங்கு நினைவுபடுத்திக் கொண்டால், இத்திருத்தத்தின் நோக்கத்தை நாம் எளிதாகப் புரிந்து கொள்ளலாம்.

வாஜ்பாய் ஆட்சியின் போதே, விசுவ இந்து பரிஷத்தைச் சேர்ந்த பிரவீன் தொகாடியா முன்னெடுத்த  ‘‘சிந்தனை உச்சி மாநாடுகள்’’ பல நடத்தப்பட்டன.  ஆர்.எஸ்.எஸ்.-ன் அனுதாபிகள் பங்கெடுத்த இம்மாநாடுகளில் குற்றவியல் சட்டத்தில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் மற்றும் காலத்திற்கேற்ற வகையில் மனு ஸ்மிருதியை அமலாக்குவது குறித்துத்தான் விவாதிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாகவே இக்குழுவையும், இக்குழு இணைய வழியில் நடத்தும் கருத்துக் கேட்பு நாடகத்தையும் காண முடியும்.

***

காவல்துறையின் அத்துமீறல்களுக்கு எதிராகக் கடுமையான சட்டங்கள், கண்காணிப்புப் பொறியமைவுகளை உருவாக்க வேண்டுமென ஒடுக்கப்பட்ட மக்களிடையே பணிபுரியும் அரசியல் கட்சிகளும், மனித உரிமை அமைப்புகளும் தொடர்ந்து கோரி வருகின்றன. ஆனால், குற்றவியல் சட்டத் திருத்தத்திற்கான குழு தயாரித்துள்ள கேள்விப்பட்டியலில் இது குறித்து எந்தக் கேள்வியும் இடம்பெறவில்லை. மேலும், இப்பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்துவரும்  எந்தவொரு அமைப்பிற்கும் பிரதிநிதித்துவமும் கொடுக்கப்படவில்லை.

பெண் பிரதிநிதி ஒருவர்கூட இடம்பெறாத இக்குழு, பெண்கள் தொடர்பான பிரச்சினைகளில் நடைமுறையில் இருந்துவரும் சட்டங்களையும் நீர்த்துப் போகச் செய்யும் வகையில் கேள்விகளை முன்வைத்திருக்கிறது. குறிப்பாக, பாலியல் வன்புணர்வு அல்லாத பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட பாலியல் குற்றங்களை வகைப்படுத்தும் 354-A, B, C, D ஆகிய சட்டப்பிரிவுகளை மறுபரிசீலனைக்கும் உட்படுத்தும் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும், மண உறவில் நடக்கும் வன்புணர்வுக்கு (Marital rape) அளிக்கப்பட்டிருக்கும் விதிவிலக்கை நீக்குவது, ‘‘கௌரவக் கொலை’’ எனப்படும் சாதி ஆணவப் படுகொலை உள்ளிட்ட வன்கொடுமைகளுக்குத் தொகுப்பான சட்டம் உருவாக்குவது ஆகிய கோரிக்கைகள் இருந்துவரும் நிலையில், இவற்றுக்கெல்லாம் தனிச்சட்டம் தேவையா எனக் குதர்க்கம் நிறைந்த கேள்வியை முன்வைத்திருக்கிறது.

2014- நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு புதிய சட்டத்தை இயற்றும் போதும், அதற்கு ஈடாக 10 பழைய சட்டங்களை நீக்குவோம்’’ என்றும், காலப்பொருத்தமற்ற காலனிய காலச் சட்டங்கள் ஏராளமாக இருப்பதாகவும், ஒரு நாளுக்கு ஒரு சட்டம் என்ற வீதத்தில் அவற்றை எல்லாம் நீக்கப் போவதாகவும் மோடி கூறினார்.

‘‘இந்த அடிப்படையில் மோடி ஆட்சியின் முதல் ஐந்தாண்டுகளில் சுமார் 3,500 காலாவதியான சட்டங்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், முன்னெப்போதும் இல்லாத வேகத்தில் இது நடந்துள்ளதாகவும்’’ இந்தியா டுடே ஆங்கில ஏட்டின் இணையதளம் கூறுகிறது. ‘‘சுதந்திரத்திற்கு முந்தைய பழைய மற்றும் பொருத்தமற்ற சட்டங்கள் பலவும் காலனித்துவ மரபின் துரதிர்ஷ்டவசமான பகுதியாக இருந்தன என்றும் அவற்றை ரத்து செய்வது அரசாங்கத்தின் முன்நோக்கு அணுகுமுறையைப் பிரதிபலிக்கும் ஒரு முற்போக்கான நடவடிக்கை என்றும்’’ சட்ட அமைச்சகம் மார்தட்டிக்கொண்டதையும் அவ்விணைய தளம் சுட்டிக் காட்டியிருக்கிறது.

படிக்க :
♦ பொதுத்துறை வங்கிகளை தொடர்ந்து கூட்டுறவு வங்கிகளை கொள்ளையிட களமிறங்கும் மோடி அரசு !
♦ குஜராத் கலவரம் : பரிசுத்தமானவர் மோடி – நானாவதி கமிஷன் அறிக்கை !

காலப் பொருத்தமற்ற சட்டங்களைப் பற்றி அங்கலாய்த்துக் கொள்ளும் மோடி அரசு, ஆங்கிலேயக் காலனிய அரசால் உருவாக்கப்பட்ட தேசத்துரோக வழக்கு சட்டப்பிரிவு 124 A-வைப் பற்றி என்ன கருதுகிறது? அந்தச் சட்டத்தின் தாய்வீடான பிரிட்டனிலேயே 2009-ம் ஆண்டில் இச்சட்டம் நீக்கப்பட்ட பிறகும் கூட, இந்தியாவில் இன்னும் நடைமுறையில் இருப்பதைப் பற்றி மோடி அரசு அக்கறை கொள்ளவில்லை என்பதோடு, தனது அரசிற்கு எதிராகச் சட்டபூர்வ வழிகளில், அமைதியான முறையில் போராடுபவர்களையும் ஒடுக்குவதற்கு இந்தக் காலனிய காலச் சட்டப்பிரிவைத்தான் வகைதொகையின்றிப் பயன்படுத்தி வருகிறது. இதன் காரணமாகவே, ரன்பீர்சிங் குழுவும் கூட இந்தச் சட்டத்தை நீக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தவில்லை. மாறாக, தேசத்துரோகக் குற்றச்சாட்டைக் கையாளும் 124 ஏ-இன் வரையறை, நோக்கம் மற்றும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இச்சட்டப் பிரிவைத் திருத்தங்களிலிருந்து தவிர்த்துவிடலாமா அல்லது ஏதேனும் திருத்தம் தேவையா எனத் தந்திரமான கேள்வியை  எழுப்பியுள்ளது.

124 ஏ மற்றும் உபா போல ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வரும் கருப்புச் சட்டங்களை இக்குழு தவிர்ப்பது ஒருபுறமிருக்க, திருத்தம் என்ற போர்வையில் சாதாரண கிரிமினல் சட்ட நடைமுறைகளை இன்னும் கடுமையாக்கத் திட்டமிடுகிறது. எடுத்துக்காட்டாக, தற்போதுள்ள இந்திய சாட்சியச் சட்டத்தின்படி, போலீசு முன் கொடுக்கப்படும் ஒப்புதல் வாக்குமூலம் சாட்சியாக எடுத்துக் கொள்ளப்படாது. தற்போது அந்த ஒப்புதல் வாக்குமூலத்தை சாட்சியாக ஏற்றுக்கொள்ள ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனை சட்டமாக்கப்படுவதும் கொட்டடிச் சித்திரவதைகளுக்கு லைசென்சு வழங்குவதும் ஏறத்தாழ ஒன்றுதான்.

ஒரு குற்றம் நடைபெறும்போது, அக்குற்றத்தைச் செய்தவருக்கு அக்குற்றம் தொடர்பான சட்டங்கள் குறித்த புரிதலை கணக்கில் எடுத்துக்கொள்ளுவது கிரிமினல் சட்டத் தொகுப்பில் உள்ளார்ந்த அம்சமாக உள்ளது. இந்த அடிப்படையில், சிலவகை குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும்போது குற்றஞ்சுமத்தப்பட்டவரின் சட்டம் குறித்த புரிதல் கணக்கில் கொள்ளப்படும். எனினும், சிலவகை குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும்போது குற்றஞ்சுமத்தப்பட்டவரின் புரிதலைக் கணக்கில் கொள்ள வேண்டிய அவசியமில்லை. ரன்பீன் சிங் குழுவினர், பின்னதன் அடிப்படையில் தண்டிக்கப்படும் குற்றங்களின் பட்டியலை விரிவுபடுத்த வேண்டும் என்ற ஆலோசனையை முன்வைத்திருக்கிறது. இதன் நோக்கம் அரசுக்கு எதிரான எந்தவொரு போராட்டத்திற்கும், அதில் கலந்துகொண்ட ஒவ்வொருவருக்கும் உள்நோக்கம் கற்பித்துவிட முடியும்.

இக்குழு வெளியிட்டிருக்கும் கேள்விகள் அடங்கிய பட்டியல் ஆங்கில மொழி தவிர, வேறெந்த இந்திய மொழியிலும் வெளியிடப்படவில்லை. ஒரு சட்டத்தை எதற்காகத் திருத்த வேண்டியிருக்கிறது, எந்த அடிப்படையில் திருத்த வேண்டியிருக்கிறது எனும் ரீதியில் விளக்கங்கள் அளிக்கப்படாமல், பொத்தாம் பொதுவாகக் கேள்விகள் முன்வைக்கப்பட்டுள்ளன. மேலும் இக்கேள்விகளும் ஆங்கிலம் தெரிந்தவர்களோ, பொதுவான சட்ட அறிவு கொண்டவர்களோ பதில் அளிக்கமுடியாதபடி தயாரிக்கப்பட்டிருக்கின்றன. இத்திருத்த நடைமுறையில் இருந்து சாதாரண பொதுமக்களை விலக்கிவைக்க வேண்டும் என்ற நோக்கம் தவிர, வேறெந்த காரணமும் இதன் பின் இருக்க முடியாது.

கிரிமினல் சட்டத் திருத்தம் பற்றித் தனது கருத்துக்களை ஃபிரெண்டலைன் இதழில் முன்வைத்திருக்கும் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி செல்லமேஸ்வர், ‘‘கிரிமினல் சட்டத் தொகுப்பைத் திருத்த எடுக்கும் முயற்சிகள் அனைத்தும், கிரிமினல் சட்டங்களுக்கும் அரசியல் சாசனத்திற்கும் இடையேயான உறவைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உறவானது தனிமனித உரிமை, சமூகக் கட்டுப்பாடு என்ற இரட்டைத் தன்மையால் ஆளப்படுகிறது என்பதையும் இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையே அறிவுப்பூர்வமான சமநிலை நிலவ வேண்டும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இந்த இரண்டு போக்குகளும் ஒன்றுக்கொன்று எதிரானவையும் அல்ல, ஒன்றைவிட்டு மற்றொன்று தனித்து இயங்கக்கூடியதும் அல்ல. இந்த இரட்டைத்தன்மையும், அவை ஒன்றையொன்று சார்ந்து இயங்குவதும் செயல்பூர்வமான அரசியல் ஜனநாயகத்திற்கு இன்றியமையாதவை’’ எனக் குறிப்பிடுகிறார்.

ஆனால், இன்று நமது நாட்டில், மோடியின் ஆட்சியின் கீழ் நடப்பதென்ன? தேசிய நலன், பொது நலன் என்ற பெயரிலும், வளர்ச்சி என்ற பெயரிலும் தனிமனித உரிமைகள் மட்டுமல்ல, பொதுமக்களின் சமூகப் பொருளாதார வாழ்வாதார உரிமைகளும் பறிக்கப்படுகின்றன. கருப்புப் பணத்தை ஒழிப்பது என்ற பெயரில் மோடி அரசு அமல்படுத்திய பணமதிப்பு நீக்கமும், வரி ஏய்ப்பைத் தடுப்பது என்ற பெயரில் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. வரி விதிப்பும்; திறமை வாய்ந்த மாணவர்களைத் தேர்ந்தெடுப்பது என்ற போர்வையில் திணிக்கப்பட்ட நீட் தேர்வும்; இறுதியாக, கரோனாவை ஒழிப்பது என்ற பெயரில் மோடி அரசு அமல்படுத்திய தேசிய ஊரடங்கும் அடித்தட்டு மக்களின் வாழ்க்கையை மேலும் நாசப்படுத்தியதைத் தாண்டி வேறெந்த பலனையும் தரவில்லை.

இவ்வாறான நிலையில்தான் கிரிமினல் சட்டத் தொகுப்பைச் சீர்திருத்தக் கிளம்பியிருக்கிறது, மோடி அரசு. இதன் பொருள், காலனிய கால அடக்குமுறைச் சட்டங்களை மறுகாலனியாதிக்கத்திற்கு ஏற்பவும், இந்தி, சமஸ்கிருதத் திணிப்பு, குடியுரிமைத் திருத்தச் சட்டம் உள்ளிட்ட தனது காவித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்றவாறும் திருத்தியமைப்பதாக அமையுமேயொழிய, மக்களின் அரசியல் ஜனநாயக உரிமைகளை வலுப்படுத்துவதாகவோ, பாதுகாப்பதாகவோ அமையாது.

 


வாகை

புதிய ஜனநாயகம் டிசம்பர் 2020 மின்னிதழ் தரவிறக்கம் செய்ய : இங்கே அழுத்தவும்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க