நரேந்திர மோடி குஜராத் முதல்வராக இருந்த இருண்ட காலத்தில் கொண்டு வரப்பட்டு சுமார் 16 ஆண்டுகள் மூன்று குடியரசுத் தலைவர்களால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கருப்புச் சட்டத்திற்கு தற்போதைய குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்து உள்ளார்.
குஜராத் பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாடு மசோதா (Gujarat Control of Terror and Organised Crime Bill – GCTOC) என்ற பெயரிலான கருப்புச் சட்டம் ஒன்றை கடந்த 2003-ம் ஆண்டு குஜராத் சட்டமன்றத்தில் நிறைவேற்றினார் அப்போதைய குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி.
அதன் பின்னர் அந்தச் சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அப்போதைய ஜனாதிபதியாக இருந்த அப்துல்கலாம் அச்சட்டத்தை அங்கீகரிக்கவில்லை. அடுத்ததாக வந்த பிரதீபா பாட்டிலும், அச்சட்டத்தை இரண்டு முறை நிராகரித்தார். அடுத்து வந்த பிரணாப் முகர்ஜியும் இச்சட்டத்தின் சில பகுதிகள் குறித்து விளக்கங்கள் கேட்டு திருப்பியனுப்பினார். இவ்வாறு கடந்த 16 ஆண்டுகளில் 4 தடவை இந்த கருப்புச் சட்ட மசோதா ஜனாதிபதிகளால் நிராகரிக்கப்பட்டது. ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதிகளாகிய ஜனாதிபதிகளாலேயே நிராகரிக்கப்பட்டிருக்கிறது என்றால் இது எவ்வளவு மோசமான ஆள்தூக்கி கருப்புச் சட்டம் என்பதைப் புரிந்து கொள்ளமுடியும்.
மனித உரிமைச் செயல்பாட்டாளர்களும், சிவில் சமூக உறுப்பினர்களும் இச்சட்டம் அரசாங்கத்தால் தவறாகப் பயன்படுத்தப்படும் வகையில் இயற்றப்பட்டிருக்கிறது என்கின்றனர். மேலும் இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகையில் எவ்வித முறையான நடைமுறையையும் பின்பற்றத் தேவையில்லை. கூடுதலாக குற்றம்சாட்டப்பட்டவருக்கு அரசியல்சாசன சட்டம் வழங்கும் உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.
இந்த மசோதாவின் படி, பயங்கரவாத நடவடிக்கை என்பது, “சட்ட ஒழுங்கை, பொது ஒழுங்கை சீர்குலைக்கவோ அல்லது அரசின் பாதுகாப்பு, ஒற்றுமை, ஒருங்கிணைந்ததன்மை ஆகியவற்றை அச்சுறுத்தும் வகையிலோ, அல்லது மக்கள் மனதில் – குறிப்பான பிரிவு மக்களின் மனதில் பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் வெடிகுண்டு, வெடிமருந்துகள், பிற வெடி பொருட்கள், ஆயுதங்கள், விசம், நச்சு வாயுக்கள் அல்லது இரசாயனங்கள் அல்லது உயிரி மற்றும் இன்னபிற ஆயுதங்களைப் பயன்படுத்தி ஒரு பொது ஊழியருக்கோ அல்லது தனிநபருக்கோ மரணத்தை விளைவித்தாலோ, காயப்படுத்தினாலோ அல்லது ஏதேனும் சேவை மற்றும் வழங்கலை தடுத்தாலோ அல்லது ஏதேனும் ஒரு நபரை சிறைப்படுத்தி அரசாங்கத்தை ஏதேனும் ஒரு செயலைச் செய்யவோ அல்லது செய்வதிலிருந்து தடுக்கவோ எத்தனித்தாலோ” அது எல்லாம் பயங்கரவாதச் செயலாகும்.
படிக்க :
♦ நீக்கப்பட வேண்டியது ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டமே தவிர 370 அல்ல !
♦ மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி
மேலும் இந்த மசோதாவில் கூடுதலாக, “குற்றம் சாட்டப்பட்டவர்கள் போலீசில் ‘கொடுக்கும்’ வாக்குமூலத்தை அதாரமாக ஏற்றுக் கொள்வதற்கும், வாய்வழி, தொலைபேசி, அலைபேசி வழியில் பேசுவதை ஒட்டுக்கேட்டு அதனை ஆதாரமாகப் பயன்படுத்துவதற்கும்” வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இந்திய ஆதாரங்கள் சட்டத்தின் படி போலீசில் கொடுக்கப்பட்ட வாக்குமூலங்கள் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளப்படாது. குற்றம் சாட்டப்பட்டவர்களை சித்திரவதை செய்து ஒப்புதல் வாக்குமூலம் வாங்குவதிலிருந்து போலீசைத் தடுக்கவே இந்த சட்ட விதிமுறை இருந்து வருகிறது.
மேலும் இச்சட்டத்தின் கீழ் போலீசு அதிகாரிகள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் எவ்விதமான கொடுங்கோன்மைக்கும் முழு பாதுகாப்பு வழங்குகிறது இந்த சட்டப் பிரிவு. “நல்ல நோக்கத்துடன் அதிகாரிகள் எடுக்கும் எந்த வித நடவடிக்கைகளின் மீதும் சட்டரீதியான நடவடிக்கைகள் எடுப்பதோ, கைது செய்வதோ, வழக்கு பதிவு செய்வதோ கூடாது” என இந்த மசோதாவின் பிரிவு 25 குறிப்பிடுகிறது. அதாவது ‘நல்ல’ நோக்கத்துடன் சித்திரவதை செய்தாலோ, உற்றாரை கொன்றுவிடுவதாக மிரட்டினாலோ, கொலை செய்தாலோ கூட தண்டிக்க முடியாது. ஏனென்றால் போலீசு நல்ல நோக்கத்திற்குத் தானே இதையெல்லாம் செய்கிறது.
மேலும், தான் ஏதுமறியாதவன் / குற்றமற்றவன் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பை குற்றம்சாட்டப்பட்டவர் மீதே சுமத்துகிறது இந்தப் பிரிவு. அதாவது குற்றம் சாட்டப்பட்டவர் பிணை ஏதும் வழங்கப்படாத சூழலிலும், (இக்கருப்புச் சட்டத்தின் கீழ் பிணை கிடையாது) சிறையில் இருந்து கொண்டே, தான் குற்றமற்றவன் என நிரூபிக்க வேண்டுமாம். இல்லையென்றால் குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி என நீதிமன்றம் உறுதி செய்து கொள்ளுமாம்.
படிக்க :
♦ அம்பிகளின் திடீர் திருவள்ளுவர் பாசமும் – சில கேள்விகளும் !
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
இதுதான் தற்போது ஜனாதிபதியாக வீற்றிருக்கும் ஆர்.எஸ்.எஸ். ரப்பர் ஸ்டாம்ப் ராம்நாத் கோவிந்து ஒப்புதல் கொடுத்திருக்கும் சட்ட மசோதாவின் சாரம். இந்த ஒரு சட்டத்தைக்காட்டி இனி அனைத்து மாநிலங்களிலும் இத்தகைய சட்டங்கள் புற்றீசல் போல புறப்பட்டு வரும். சங்கிகளின் ரப்பர் ஸ்டாம்போ, ஒப்புதல் அளிப்பதில் எவ்வித தயக்கமும் காட்டப் போவதில்லை.
விரைவில், தமிழ்நாடு பயங்கரவாதம் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் கட்டுப்பாடு மசோதா (TNCTOC Bill) என்ற ஒன்றை எடுபிடி அரசு கொண்டுவரலாம். அதன் பின்னர், ரேசன் கடையில் அரிசி போடவில்லை எனப் போராடினாலோ, அரசு அலுவலகத்தில் பல நாட்களாக கிடப்பில் போடப்பட்ட மனு குறித்து கோபமாக ஒரு கேள்வி கேட்டாலோ கூட இந்தச் சட்டத்தில் உள்ள “சேவை மற்றும் வழங்கலைத் தடுத்த” குற்றத்திற்காக சில ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை சிறைவாசம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். தயாராக இருப்போம் ! ஏனெனில் புதிய இந்தியாவில் இவைதானே பயங்கரவாத நடவடிக்கைகள் !
நந்தன்
நன்றி : தி வயர்.