ஆர்.எஸ்.எஸ் அம்பிகளுக்கு திடீரென திருவள்ளுவர் பாசம் பொங்கிப் பீறிடுகிறது. தாய்லாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி திருக்குறளை தாய் மொழியில் வெளியிட்டார். அதே நேரத்தில் திருவள்ளுவர் படத்திற்கு காவி வண்ணம் பூசி அவர் கழுத்தில் கொட்டையும் நெற்றியில் பட்டையும் பூசி சமூக வலைத்தளங்களில் அலப்பறையை ஆரம்பித்து வைத்தது தமிழக பாஜக-வின் ஐ.டி விங். பக்கவாத்தியமாக மைலாப்பூர் பார்த்தசாரதிகள் குடுமியை இழுத்துக் கட்டிவிட்டு களத்தில் இறங்கினர்.

“வேதங்களில் சொல்லப்பட்டுள்ள தர்ம, அர்த்த, காம, மோட்ச…  ஆகிய கோட்பாடுகளின் அடிப்படையில் தான் திருவள்ளுவர் அறம் பொருள் இன்பம் என தனது குறளை எழுதினார். சொல்லப் போனால் பிராமனிய விழுமியங்களின் படி திருக்குறள் எழுதப்பட்டுள்ளதால் திருவள்ளுவர் நிச்சயம் ஒரு பிராமனராகத் தான் இருந்திருக்க வேண்டும்” என்பது மையிலை மாமா ஒருவரின் துணிபு. மேற்படி பதிவின் பின்னூட்டங்களில் பல்லக்குத் தூக்கிக் கொண்டிருந்த சூத்திர சம்பத்துகளில் ஒருவர் “சாமி, காமத்துக்கு பின்னே மோட்சம் ஏன் திருக்குறளில் இல்லை?” என கேட்டு மண்டையைச் சொறிந்தது தனிக் கதை.

சமீப நாட்களாக ராஜராஜ சோழனின் பெருமை, அங்கோர்வாட் சூரியக் கோயில், தமிழின் பெருமைகள் என காக்கி டவுசர்கள் சப்பளாக் கட்டைகளைத் தூக்கிக் கொண்டு அலைவதை நாம் எல்லோரும் அறிவோம். இதனால் பிஜேபியின் “பி” டீமான சீமானின் திருவோட்டில் விழுந்த ஓட்டையின் விட்டம் எவ்வளவு என்பது  தனியே ஆராயப்பட வேண்டிய ஒன்று.

நிற்க.

நமது மாமாக்களும் மாமிகளும் கருவாட்டை கடித்துக் கொண்டு பஞ்சாமிர்தம் சாப்பிடத் துணிவானேன்?

***

ற்கெனவே பல மாநிலங்களிலும் தேசிய அளவிலும் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்த்த ஒரு உத்தியை கையிலெடுத்துள்ளது பாரதிய ஜனதா கட்சி. அதாவது ஒரு குறிப்பிட்ட மாநிலத்தின் பெருமையும் இந்துப் பெருமையும் வேறு வேறல்ல என இரண்டையும் முடிச்சுப் போடுவது; பின்னர் இந்துத்துவத்தை எதிர்த்தால் அதை இந்துமத எதிர்ப்பாக மடைமாற்றி அப்படியே அந்த குறிப்பிட்ட மாநிலப் பண்பாட்டுக்கு எதிரானதாக நிறுவுவது. இந்த அடிப்படையிலான முழக்கங்கள் தான் “குஜராத்தி அஸ்மிதா” மற்றும் “மராத்தி மானூஸ்” போன்ற முழக்கங்கள். இந்த வரிசையில்தான் தற்போது தமிழுக்கு பூணூல் மாட்டும் முயற்சி.

படிக்க:
திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
♦ எச்ச ராஜாவுக்கு ஃபேஸ்புக்கில் சில அறிவார்ந்த செருப்படிகள் !

ஒருபக்கம் தமிழுக்கு காவி வண்ணம் பூசி அதை இந்துமயமாக்குவது – பின்னர் அப்படியே இந்துத்துவ போர்வையால் மூடுவது. இன்னொரு பக்கம் இதற்கு எதிர்ப்பு வரும் திசையில் இருப்பவர்களை கேலி கிண்டல் செய்து முடக்குவது. இப்போதைக்கு பாஜக தமிழகத்தில் வகுத்திருக்கும் தேர்தல் உத்திகளுக்கு குறுக்கே நிற்பது திமுகதான். திராவிட முன்னேற்றக் கழகம் பெரியாரியத்தில் இருந்து கணிசமாக விலகிச் சென்று விட்டாலும் தேர்தல் அரசியல் நலன் என்கிற வரம்புக்குள் நின்று பாஜக – இந்துத்துவ எதிர்ப்பை மேற்கொண்டு வருகிறது. ஓட்டுக்கட்சிகளுக்கே உரிய சமரங்கள் மற்றும்  போதாமைகள் ஒருபுறம் இருக்க தமிழகத்தைப் பொருத்தவரை தேர்தல் அரசியலில் இந்துத்துவத்தின் நேரடி வெற்றியை தாமதப்படுத்தும் காரணிகளில் பிரதானமாக திமுக இருக்கிறது.

காங்கிரசு மற்றும் ராகுல் காந்தியை கையாள தேசிய அளவில் பாஜக எந்த ஆயுதத்தை பயன்படுத்தியதோ அதே அயுதத்தை திமுக மற்றும் முக ஸ்டாலினை நோக்கி நீட்டியுள்ளது. முதலில் திமுக என்கிற கட்சியின் மேல் மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தகர்ப்பது – இரண்டாவது அதன் தலைவரை காமெடியன் போல காட்டுவது – மூன்றாவது கலாச்சார பண்பாட்டுத் தளங்களில் திமுக ஏற்படுத்தி வைத்துள்ள அடையாளங்களை கைப்பற்றுவது.

இதில் முதல் அம்சமாக திமுக-வின் மேல் மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்படுத்த பல்லாண்டுகளாக பார்ப்பன லாபி திமுகவை நோக்கி கட்டமைத்து வந்த “ஊழல் கட்சி” என்கிற பிம்பத்தை ஊதிப் பெருக்குவது. இதற்கு துணை செய்யும் விதமாகத் தான் முரசொலி பத்திரிகையின் கட்டிடம் பஞ்சமி நிலத்தின் மீது கட்டப்பட்டுள்ளது என்கிற புகார். கடந்த சில மாதங்களாக (வருடங்களாகவே) தொலைக்காட்சிகளில் நடக்கும் அனைத்து விவாதங்களும் திமுகவை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி விசாரணை செய்யும்  விதமாகவே நடந்துள்ளன என்பதை இந்த பின்னணியில் புரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் மத்தியிலும் மாநிலத்திலும் அதிகாரத்தில் இருக்கும் கட்சிகளையோ அரசுகளையோ நோக்கி இந்த ஊடகங்கள் சிறிய முணுமுணுப்பைக் கூட எழுப்பவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இரண்டாவது அம்சமாக ராகுல் காந்தியை “பப்பு” என கிண்டல் செய்ததைப் போலத் தான் முக ஸ்டாலினை கிண்டல் செய்யத் துவங்கியுள்ளனர். மூன்றாவது அம்சத்தில் தான் திருவள்ளுவர் வருகிறார். திமுகவின் அடையாளங்களில் முக்கியமானது அந்தக் கட்சியின் மீது இருக்கும் தமிழ் அடையாளம் – குறிப்பாக திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு கன்யாகுமரியில் கற்சிலை, வள்ளுவர் கோட்டம், பேருந்துகளில் திருக்குறள், கலைஞர் எழுதிய குறளோவியம் என தமிழ்சார்ந்த (குறிப்பாக திருக்குறள் சார்ந்த) கலாச்சார அடையாளங்களை திமுக நிறுவியுள்ளது. இந்த அடிப்படைகளை தகர்ப்பதன் மூலம் திமுகவை பலகீனப்படுத்துவது அந்த இடைவெளியில் தமிழகத்தின் அதிகாரத்தை நேரடியாக கைப்பற்றுவது என்பதுதான் பாஜகவின் வியூகம்.

***

தேர்தல்களை மைக்ரோ அளவிலும் மேக்ரோ அளவிலும் அணுகி வியூகம் வகுப்பது; அதில்  வெற்றி பெறுவது என்பதில் பாஜகவுக்கு நிகரான கட்சி இன்றைய தேதியில் இந்தியாவில் இல்லை. வரலாற்றுரீதியில் இந்துத்துவ அரசியல் நுழையவே முடியாது என்று நம்பப்பட்ட மாநிலங்கள், பிரதேசங்களில் எல்லாம் பாரதிய ஜனதா வெற்றிகரமாக நுழைந்து வெற்றி பெற்றுள்ளது. பாரதிய ஜனதாவுக்கு சவாலான மாநிலங்களின் பட்டியலில் முன்னணியில் நிற்கின்றன கேரளமும், தமிழகமும். இதில் குறிப்பாக தமிழகத்தின் மீது பாஜகவுக்கும் அதன் மூளையாகச் செயல்படும் பார்ப்பனர்களுக்கும் இருக்கும் தீராத ஆத்திரத்திற்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு.

படிக்க:
மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை நேர்மையாக நடத்துக !
♦ #GoBackModi : தமிழகம் தந்த தரமான சம்பவம் ! ஃபேஸ்புக் தொகுப்பு

வடக்கில் பாரதிய ஜனதா பரீட்சித்துப் பார்த்த இந்த உத்திகள் தமிழகத்தில் செல்லுபடியாகுமா?

மேலே குறிப்பிட்டுள்ள மூன்றம்ச அணுகுமுறையில் ஒவ்வொன்றிலும் பாரதிய ஜனதா கடுமையான சவால்களை எதிர்கொள்கிறது. முதலில் திமுகவை ஊழல் கட்சியாக காட்டி மக்களின் அவநம்பிக்கையை அக்கட்சியின் மீது திருப்பும் முயற்சிக்கு முதல் தடையாக இருப்பது இங்கு நடக்கும் அதிமுக ஆட்சி. கடந்த ஒன்பதாண்டுகளாக மாநில நிர்வாகத்தை கையில் வைத்திருக்கும் அதிமுகவின் ஆட்சி ஊழல் முறைகேடுகள், பாலியல் குற்றங்கள் என மக்கள் முகம் சுளிக்கும் வகையில் நடைபெற்றுள்ளது.

முரசொலி அலுவலக கட்டிடம் பஞ்சமி நிலமா இல்லையா என்பதைப் பொறுத்தவரை சாதாரண மக்களின் கேள்வி “அதிகாரத்தில் இருப்பவர்கள் நடவடிக்கை எடுக்காமல் பத்திரிகைகளில் அறிக்கை மட்டும் விடுவது ஏன்?” என்பதாகத்தான் உள்ளது.

ஸ்டாலினை கேலிக்குரியவராக காட்டும் உத்தியின் விளைவாக அவர்கள் எதிர்பார்ப்பது “நம்பிக்கைக்குரிய மாற்று யாரும் இல்லை” (TINA – There Is No Alternative) என்பதை நிறுவுவதே. தேசிய அளவில் மோடி Vs ராகுல் காந்தி என்கிற தெரிவுகள் மக்கள் முன் இருந்த நிலையில் ராகுலை “பப்பு” என கிண்டல் செய்தது பாஜகவுக்கு நல்ல பலனைக் கொடுத்தது – இதற்கு முக்கிய காரணம் ராகுலுக்கு எதிரே நின்றது நரேந்திர மோடி.

மக்களை சிந்திக்கவிடாத வகையில் பேசுவது, சவடால், கண்ணீர் காட்சிகள் என பிரச்சார மேடைகளில் மோடி நடத்திய நாடகங்கள் ஒருபுறம் என்றால், “சின்ன வயதில் முதலையைப் பிடித்து விளையாடிய வீரன், ராஜாவீட்டு கன்றுக்குட்டி ராகுலை எதிர்க்கும் எளிய டீக்கடைக்காரரின் மகன்” போன்ற பிம்பங்களை ஊடகங்களின் உதவியோடு பல ஆண்டுகால முயற்சியில் கட்டமைத்திருந்தது பாஜக. “மோடி என்கிற விண்ணை முட்டும் ஒரு ஆளுமையை எதிர்க்கும் ராகுல் என்கிற கற்றுக்குட்டி” என்ற இந்த உத்தி மிகச் சிறப்பாக பலனளித்தது.

ஆனால், தமிழகத்தின் நிலை வேறு. கலைஞர் அளவுக்கு மு.க. ஸ்டாலின் பேச்சாற்றல் இல்லாதவர் என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவுக்கு உண்மை திமுகவுக்கு எதிரணியில் நிற்கும் கட்சிகளிலும் அவ்வாறான பேச்சாளர்கள் இல்லை என்பது. பழனிச்சாமி சேக்கிழார் எழுதிய கம்பராமாயணத்தையே கரைத்துக் குடித்த அறிவாளி என்றாலும் சேர்ந்தாற் போல் நான்கு வரிகளை பேசும் ஆற்றல் அவருக்கு இல்லை.

தர்மயுத்த்தம் தோற்ற அன்றே ஓபிஎஸ்-ன் பிம்பமும் தகர்ந்தது. இவர்களைத் தவிர்த்து பார்த்தால், ஜெயக்குமார் போன்றோர்தான் உள்ளனர். தன்னை விட கட்சியில் எவனும் / எவளும் அறிவாளியாக இருந்து விடக்கூடாது என்கிற புரட்சித் தலைவி அம்மாவின் கொள்கையின் வளர்க்கப்பட்ட இயக்கம் என்பதால் அண்ணா திமுக மேலிருந்து கீழ் வரை செல்லூர் ராஜூக்களால் நிரம்பி உள்ளது.

பாரதிய ஜனதா தானே நேரடியாக ஹெச்.ராஜா, நாராயணன், எஸ்.ஆர் சேகர் உள்ளிட்ட தன்னுடைய ஆளுமைகளை தேர்தல் பிரச்சார களத்தில் இறக்கி விடலாம். ஆனால், அப்படி மட்டும் நடந்து விட்டால் திமுக பிரச்சாரத்திற்கே போகாமல் வென்று விடும் – தன்னைப் பற்றிய இந்த உண்மை பாஜகவுக்கும் தெரியும். இப்போதைக்கு ரஜினியை நம்பிக் கொண்டுள்ளனர். இதிலும் ஒரு சிக்கல் உள்ளது. ரஜினியின் வாயைத் தைத்து மண்டையின் இருபுறமும் மிச்சமிருக்கும் முடியைக் கோதுவதோடு நிறுத்திக் கொள்ள வலியுறுத்த வேண்டும். மீறி ரஜினி வாயைத் திறந்து பேசி விட்டால் திமுகவுக்கு பிடி கிடைத்து விடும் – ரஜியைப் பற்றிய இந்த உண்மையும் பாஜகவுக்கு தெரிந்திருக்க வேண்டும்.

இறுதி அம்சமாக வருகிறார் திருவள்ளுவர். திருவள்ளுவருக்கு பட்டையும் கொட்டையும் சாட்டியாகி விட்டது – ஆனால், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்கிற குறளின் சாராம்சத்தை ஏற்றுக் கொள்வதாக இருந்தால் பிறப்பினடிப்படையில் வேற்றுமை பாராட்டும் இந்துத்துவத்தை கைவிட வேண்டியிருக்கும். இந்துத்துவம் தமிழை வரித்துக் கொள்வதை அரசியல் உத்தியாக கையில் எடுத்தால் இந்தித் திணிப்பையும் சமஸ்கிருதமயமாக்களையும் கைவிட வேண்டி வரும்.

எனினும் ஒரு குறைந்தபட்ச அளவில் “திருவள்ளுவர் ஒரு துறவி”, “தமிழின் பெருமை அதன் பக்தி இலக்கியங்கள்” என ஜல்லி அடிக்கும் வாய்ப்பு பாஜகவுக்கு உள்ளது. ஆழ்ந்த வாசிப்பறிவற்ற இளம் தலைமுறையினரில் ஒரு சிறிய பிரிவினர் இதற்கு பலியாவதற்கும் வாய்ப்பு உள்ளது. இதை வெறுமனே திமுக எதிர்கொள்ளும் சவால் என்று மட்டும் குறுக்கிப் பார்த்து விடக்கூடாது. தமிழகம் பல நூற்றாண்டுகளாக கட்டிக் காப்பாற்றி வந்த ஒரு சகிப்புத் தன்மை மற்றும் மனிதநேயத்தை வேரறுக்கும் முயற்சியில் பாஜக இறங்கி உள்ளதை முற்போக்காளர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்துத்துவ பாசிஸ்டுகள் நம் கலாச்சாரத்தை கைப்பற்ற வருகிறார்கள். அவர்களிடம் கேட்பதற்கு நம்மிடம் சில கேள்விகள் உண்டு.

  • வாழும் மொழியான தமிழை கருவறைக்கு வெளியே நிறுத்தி விட்டு செத்த மொழி சமஸ்கிருதத்தில் அர்ச்சனை செய்வது ஏன்? கருவறைக்குள் தமிழை எப்போது அனுமதிப்பீர்கள்?
  • திருக்குறளை சொந்தம் கொண்டாடும் பாசிஸ்டுகளே, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற வள்ளுவரின் வாக்கிற்கு எதிராக சாதியை தூக்கிப் பிடிக்கும் மனுசாஸ்திரத்தையும் பகவத் கீதையையும் கொளுத்துவோம் வருகிறீர்களா?
  • கீழடியில் இல்லாத, திருக்குறளில் இல்லாத மதமான இந்து மதத்தை கைவிடத் தயாரா ஆர்.எஸ்.எஸ் அம்பிகளே?
  • சங்க இலக்கியங்களிலும் பண்டைய தமிழகத்திலும் இல்லாத சாதியை கைவிடத் தயாரா? நாமெல்லாம் தமிழர்கள் தானே, சேரித் தமிழனிடம் திருமண சம்பந்தம் செய்து கொள்ள அக்கிரகாரம் தயாரா?
  • தமிழ் உலகின் மூத்த மொழி என தேனொழுக பேசுகிறார் உங்கள் பிரதமர், அந்த தமிழை அலுவல் மொழியாக அறிவிக்குமா மத்திய அரசு?
  • உச்சநீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் தமிழை வழக்காடு மொழியாக அறிவிப்பீர்களா பாஜகவின் திடீர் தமிழ் ஆர்வலர்களே?
  • சமஸ்கிருதத்தை விட தமிழ் தான் மூத்த மொழி என்பதை ஏற்றுக் கொண்டு அறிவிப்பீர்களா?
  • தமிழில் எழுத்துருவான தமிழியில் இருந்து தான் சமஸ்கிருதம் பெற்றுப் போட்ட குட்டிகள் எல்லாம் எழுத்துருக்களைப் பெற்றன என ஒப்புக் கொள்வீர்களா?
  • இனிமேல் ஆர்.எஸ்.எஸ் ஷாகாக்களில் “நமஸ்தே சதா வத்சலே…” எனத் துவங்கும் பிரார்த்தனைப் பாடலுக்கு பதிலாக தமிழ்தாய் வாழ்த்து பாடத் தயாரா?
  • தமிழ் வாழும் தமிழ்நாட்டில் இருக்கும் சங்கர மடம் உள்ளிட்ட மடங்களில் சமஸ்கிருதத்தை தடை செய்ய போராடுவோம் வருகிறீர்களா?

இந்தக் கேள்விகளை திடீர் தமிழ் வேடம் போட்டு வரும் ஆர்.எஸ்.எஸ் கும்பலிடம் கேட்க வேண்டும்.

வினவு செய்திப் பிரிவு
சாக்கியன்