ண்மைக் காலத்தில் பார்ப்பனியமானது வள்ளுவரை இந்துத்துவாவிற்குள் உள்வாங்கும் முயற்சியில்  முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் ஒரு பகுதியாக, பாரதீய சனதா கட்சியானது  காவி உடையுடனும், பட்டைப் பூச்சுடனும் வள்ளுவரின் உருவத்தினையே மாற்றி வெளியிட்டு, அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

பார்ப்பனியமானது நீண்ட காலமாகக் கடைப்பிடிக்கும் ஒரு முறை ஒன்றுள்ளது. அதாவது தன்னால் எதிர்த்து நின்று அழிக்க முடியாத ஒன்றினை உள்வாங்கி அழிப்பது என்பதே அந்த முறையாகும். இதனை அவர்கள் தங்களது புராணங்களிற்கேற்ப ‘திருராட்டிர ஆலிங்கனம்’ என்பார்கள் {போரில் தோற்கடிக்க முடியாத வீமனைத் துரியோதனின் தந்தையான திருராட்டிரன்  ஆசி வழங்குவது போல அணைத்துக் கொல்ல முயன்ற கதை}. இத்தகையவர்களிடம் எச்சரிக்கையாகவிருக்க வேண்டும் என்பதனையே வள்ளுவன் பின்வரும் குறளில் கூறியிருப்பார்.

‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து”.  –குறள் 828

இன்றைக்குத் திருக்குறளைத் தனதாக்கும் முயற்சியிலீடுபடும் பார்ப்பனியமானது கடந்த காலத்தில் எவ்வாறு எல்லாம் திருக்குறளை எதிர்த்து வந்துள்ளது எனப் பார்ப்போம்.

திருக்குறளை காலகாலமாக எதிர்த்துவந்த பார்ப்பனியம் :

அண்மையில் நடைபெற்ற பார்ப்பனர்கள் மாநாட்டில் எச்.ராஜா திருக்குறளினை மேற்கோள் காட்டி, குறளானது ஒரு வைதீக நூலாகும் எனக் கூறியிருந்தார்.

‘மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்,
நிலமிசை நீடுவாழ் வார்.’ (குறள் 3)

என்ற குறளில் வள்ளுவன் வீடு பேறு (மோட்சம்) பற்றிப் பேசியிருப்பதால், இது ஒரு இந்து நூலாகும் என்கின்றார். இதற்கான பதிலாக  இந்துக்களின் உலகக்குருவான (ஜகத் குரு) சங்கராச்சாரியாரது (சந்திரசேகரேந்திர சரசுவதி) முன்பொரு முறை கூறிய  கூற்றினையே பதிலாகக் கொடுக்கலாம்.

“திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன.  வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாது” என்கின்றார்.  இதோ உலகக்குருவே ‘திருக்குறள் வீடுபேறு பற்றிப் பேசவில்லை’ என்று கூறிவிட்டார்.  இது தெரியாமல் எச்.ராஜா ஏதோ கதை விடுகின்றார்.

சங்கராச்சாரியார் தனது திருக்குறள் மீதான வெறுப்பினை இதனுடன் நிறுத்தவில்லை. கீழுள்ள ஆண்டாள் பாடலைக் கேள்விப் பட்டிருக்கலாம்.  திருப்பாவையின் இரண்டாவது பாடல், ‘வையத்து வாழ்வீர்காள்’ எனத் தொடங்கும்.

நெய்யுண்ணோம் பாலுண்ணோம்
நாட்காளே நீராடி மையிட்டெழுதோம்
மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம்
தீக்குரலை சென்றோதோம்

இப் பாடலின் இறுதி வரியான ‘தீக்குரலை சென்றோதோம்’ என்ற வரிகளின் பொருள் ‘கோள் (தீக்குரல்) சொல்ல மாட்டோம்’ என்ற பொருளிலேயே வருகின்றது. இதனை மாற்றித் ‘தீக்குறளை (தீய குறளான திருக்குறளை)’ ஒதோம் என ஆண்டாள் குறிப்பிட்டதாகப் பொய் விளக்கம் வேறு கொடுத்திருந்தார்.

படிக்க:
கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !
♦ கீழடி அகழாய்வு : பழந்தமிழர் நாகரிகத்தின் கருவூலம் !

இவ்வாறான ஒரு புரட்டினை சங்கராச்சாரியார் ஆத்திசூடியிலும் செய்துள்ளார்.  ஆத்திசூடி ‘அறம் செய விரும்பு’ , ‘ஆறுவது சினம்’  என அ, ஆ, இ… என எழுத்துவரிசையில் இடம்பெறும்.

இந்த எழுத்து வரிசையில் ய, ர, ல, வ –க்கு

இயல்பு அலாதன செய்யேல்’

அரவம் ஆட்டேல்’

இலவம் பஞ்சில் துயில்’

வஞ்சகம் பேசேல்’

வரிகள் வந்துவிட்டன (ட,ண .. போன்ற எழுத்துகள் முதலெழுத்தா வராத போது, இரண்டாம் எழுத்தா வரும்).

அடுத்த எழுத்து ‘ற’. இது (ற) முதல் எழுத்தாக வரமுடியாது என்பதால் இரண்டாம் எழுத்தாகவே வரும்.

‘அறனை மறவேல்’ என்பதே எழுத்துவரிசைப்படி சரியாக அமையும்.

அறனை மறவேல் = அறம் (Ethics) மறக்காதே!

இங்குதான் சங்கராச்சாரியார் புகுந்து விளையாடினார். ‘ற’ வினை ‘ர’ ஆக மாற்றி, “அறன்” -> “அரன்” எனக் கடவுளாக மாற்றிவிட்டார். இவரது தில்லுமுள்ளினை அடுத்த வரியான ‘அனந்தல் ஆடேல்’ (ன) காட்டிக்கொடுத்துவிட்டது.  இவ்வாறு மதத்தின் பெயரால் பல தமிழ்க்கொலைகள் நடந்துள்ளன. இலக்கணப்படி ‘அறனை மறவேல்’ என்பதே சரியானது என வெளிப்படையாகத் தெரிந்தபோதும், தெய்வத்தின்_குரல் முன்னால் தமிழ் எல்லாம் எடுபடவில்லை.

‘திருக்குறள் வைத்திருக்கும் வீடு உருப்படாது’ என்றொரு புரளியும் இவர்களால் பரப்பப்பட்டது. திருக்குறளில் முதல் பத்துக் குறள்கள் மட்டுமே படிக்கக்கூடியவை என்றும், ஏனையவை எல்லாம் கவர்ச்சி மிகு திரைப்படங்கள் போலானவை (காமத்துப் பால் குறித்து) என்றெல்லாம் காலத்திற்கு காலம் சங்கராச்சாரியார் குறள் மீது குறை பட்டுக்கொண்டே வந்துள்ளார்.  இத்தகைய பார்ப்பனர்களின் முந்திய கால ஒவ்வாமையே திருக்குறள் ஒரு வைதீக நூலன்று என்பதனைத் தெளிவாக்கும்.

திருக்குறளிற்கான பொய் விளக்கவுரைகள் :

வைதீக மதத்தினர் ஒரு புறத்தே திருக்குறளினை எதிர்த்துக் கொண்டே, மறுபுறம் குறளிற்கான வைதீகம் சார் பொய் உரைகளை எழுதிக்கொண்டுமிருந்தார்கள். கடவுள் வாழ்த்து எனப் பின்நாளில் பெயரிடப்பட்ட முதல் பத்துக் குறள்களை தமக்குச் சார்பாகப் பயன்படுத்தவும் முனைந்தார்கள். இது பற்றி ஏற்கனவே வினவுத் தளத்தில் நான் ஒரு கட்டுரை  (திருக்குறளைத் திரிக்க முனையும் பார்ப்பனியம்: பரிமேலழகர் முதல் நாகசாமி வரை ) எழுதியுள்ளதால் அதனைக் கடந்து விடுகின்றேன்.

அவற்றினை விட ‘வாமண அவதாரம்’ பற்றி வள்ளுவர் கூறியுள்ளார் என்கின்றார்கள். எங்கே எனப் பார்த்தால் பின்வரும் குறளினைப் பாருங்கள்.

“மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான்
தாஅய தெல்லாம் ஒருங்கு”- (610)

இதில் எங்கே வாமண அவதாரம். ‘அடி அளந்தான்’ என்றாலே வாமண அவதாரமா?  எனது  பாட்டி முன்பு,  நான் சிறுவனாகவிருக்கும் போது அருகிலிருக்கும் கடையில் போய் பொருட்களை வாங்கி வா என்பதனை ‘ஒரு நாலடி நடந்து வாங்கிட்டு வா’ என்பார். நல்லவேளை இதனையே 4 இற்குப் பதில் 3 அடி எனக் கூறியிருந்தால், அதனையும் வாமண அவதாரம் எனப் பொருள் கொண்டிருப்பார்கள். மன்னன் திருமாலின் மூன்றடி போல உலகினையே பெறுவான் எனில் இரண்டாவது அடியாகத் திருமால் வானிலே கால் வைத்த மாதிரி மன்னன் வானையும் கைப்பற்றுவானா!

இன்னொரு இடத்தில் ஊழ் என்று வருகின்றதாம். வரட்டுமே அதனால் என்ன.

தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்” .  (குறள் 619)

இங்கு வள்ளுவர் தெய்வத்தால் முடியாததும் உன் முயற்சியால் முடியும் என்கின்றார்.  உடனே மற்றொரு குறளைக் காட்டுவார்கள்.

ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
சூழினுந் தான்முந் துறும்”.  (குறள் 380).

இங்கு ஊழ் எல்லாவற்றையும் விடப் பெரியது எனப்படுகின்றதே! இந்த ஊழ் தொடர்புடைய செய்திகளைச் சங்ககாலப் பாடல்களிலும் காணலாம்.  இந்த ஊழினை அடிப்படையாகக் கொண்டே ஆகூழ் (நல்லூழ்)=Good luck , போகூழ் (தீயூழ்)= Bad luck போன்ற சிறப்பான தமிழ்ச் சொற்கள் உருவாகின (அதிஸ்டம், துரதிஸ்டம் என்பன தமிழ்ச் சொற்களல்ல என்பன மட்டுமல்லாமல், அவை ஆகூழ்-போகூழ் போன்ற ஆழமான பொருளுடையனவல்ல).

படிக்க:
திருவள்ளுவரை  அவமதித்த  கா(வி)லி  கும்பலை  கண்டித்து  ஆர்ப்பாட்டம் !
♦ திருவள்ளுவரை  விழுங்கத்  துடிக்கும்  காவிப் பாம்பு  !

மேலே  வள்ளுவர் முரண்பட்ட குறள்களை கூறுவது சூழல் வேறுபாடே. அதாவது ஒருவர் கடுமையாக முயற்சிசெய்து கமஞ்செய்து பயிர்கள் வளரும்போது, ஒரு இயற்கைப் பேரிடர் மூலம் எல்லாம் அழிந்துவிடுகின்றது என வைப்போம், அவரிற்கு ஊழை வலியுறுத்தும் குறள்கள். அவரினை ஆறுதல்படுத்த அக் குறள்கள். அதற்காக ஒருவர் ஊழ் வழியேதான் எல்லாம் நடக்கும் என நினைத்து செயற்படாமலேயே இருந்தால், முயற்சிக்கும் ஏற்ற பலன் உண்டு, ஊழின் தாக்கத்தை குறைத்துக்கொள்ள முடியும் (மெய்வருத்தக் கூலி தரும்) என்ற குறள்.  வள்ளுவன் முரண்படவில்லை. சூழல்தான் வேறுபடுகின்றது. சூழலிற்கேற்ப குறளைப் பயன்படுத்துவது எங்களது பொறுப்பு. எனவே குறளில் குறிப்பிடப்படும் ‘ஊழ்’ என்பது பார்ப்பனியம் குறிப்பிடும் ‘விதி’ அன்று.

அடுத்ததாக வள்ளுவர் மறுபிறப்பு பற்றிக் குறிப்பிடுவதாக ஒரு கதை விடுகின்றார்கள்.  அதற்காக அவர்கள் காட்டும் குறள் இதோ.

ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” (குறள்  398)

இதற்கு இவர்கள் கொடுக்கும் விளக்கம் யாதெனில் ஒருவருடைய கல்வியானது ஏழு பிறப்புக்களிற்கும் (ஜன்மங்களிற்கும்) தொடர்ந்து வரும் என்பதாகும். யாராவது பிறக்கும் போது ஏதாவது முற்பிறப்புக் கல்வி அறிவுடன் பிறக்கிறார்களா என்ன!  எல்லோருமே அ, ஆ இலிருந்து தானே தொடங்குகின்றார்கள். அவ்வாறாயின் அதன் உண்மையான விளக்கம் என்ன?

இவை ஒரு வகைச் சித்தர்களின் கோட்பாடு அல்லது ஆசிவகக்கோட்பாடு.  அங்கு அவை ஒரு மனிதனின் வாழ்க்கையில் உள்ள ஏழு நிலைகளைக் குறிக்கின்றனவே தவிர, ஆன்மாவுடன் தொடர்புடையதல்ல. இதனையே களவாடி ஆன்மாவுடன் தொடர்புபடுத்தி, ஏழு பிறப்புக்களாக்கி, இப் பிறப்பில் சூத்திரனாகப் பிறந்தாலும் அதனையேற்று உனது கடமையினைச் செய்தால் மறுபிறவியில் உயர்நிலையினை அடையலாம் (கீதை) எனக் கதை கட்டிவிட்டனர்.

ஆசிவகத்திலோ சித்தர்களை அவர்களின் அறிவுவளர்ச்சிக்கேற்ப அவர்களது நிலைகளை கறுப்பு, நீலம், பச்சை, சிகப்பு, மண்ணிறம், வெள்ளை, நீர்வண்ணம் என 7 நிலைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. இதில் ஒவ்வொரு நிலையினை அடைதலும் ஒவ்வொரு பிறப்பு ஆகும்.  இக் கோட்பாட்டினை இன்றும் தமிழ்நாட்டின் ஊர்களிலுள்ள ஐயனார் சிலைகளின் நிறங்களை கூர்ந்து பார்ப்பதனூடாக விளங்கிக்கொள்ளலாம் {சில ஊர்களில் காலப்போக்கில் இடைநிலை நிறங்கள் மாறுபட்டிருக்கலாம்}.

இந்த சித்தமரபுக் கோட்பாட்டினை வலியுறுத்தி வள்ளுவனும் ஆறு குறள்களைத் தந்துள்ளார். அவையாவன;

♦ “எழு பிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்” (குறள் -62)

♦ “எழுமை எழு பிறப்பும் உள்ளுவர் தங்கண்
விழுமந் துடைத்தவர் நட்பு ”(107)

♦ “ஒருமையுள் ஆமை போல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 126)

♦ “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
எழுமையும் ஏமாப்புடைத்து” ( 398)

♦ “புகழ்ந்தவை போற்றிச் செயல் வேண்டும் செய்யாது
இகழ்ந்தார்க்கு எழுமையும் இல்”- (538)

♦ “ஒருமைச் செயலாற்றும் பேதை எழுமையும்
தான் புக்கழுந்தும் அளறு”- (835)

இக் குறள்களிற்கும் பரிமேலழகர் போன்ற வைதீகச் சார்பாளர்கள் மனிதனின் ஏழு ஜன்மக்கோட்பாட்டிற்கு ஆதரவாக உரை எழுதிவைத்துவிட்னர். ஆனால் ஆன்மா மூலம் ஒருவர் பெற்ற கல்வி அடுத்த பிறவிக்குப் பயன்படுமா எனில் இல்லை. மறுபுறத்தே இக் குறள்களை சித்தமரபுக் கோட்பாட்டிற்குப் பொருத்திப் பாருங்கள், அச்சொட்டாகப் பொருந்தும் அல்லவா!!!

இவ்வாறு வைதீகப் புரட்டுக்களைத் தோலுரித்துக் கொண்டே போகலாம். அது மிக நீண்டு செல்லும் என்பதனால் இத்துடன் முடிக்கின்றேன்.

படிக்க:
தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் தீண்டாமைக் குற்றங்கள் ! 
♦ கீழடி : ‘‘ஆரிய மேன்மைக்கு ’’ விழுந்த செருப்படி !

குறள்களிற்கு  சங்கிகள் சொல்லும் விளக்கங்களைக் கேட்டால், எனக்கு கவிக்கோ எழுதிய ஒரு கவிதைதான் நினைவிற்கு வருகின்றது.

வள்ளுவரும் மாணவரானார்
திருக்குறளில் தேர்வு எழுதப்போனார்
முடிவு வெளியாச்சு பெயிலானார்
காரணம் அவர் படிக்கவில்லை கோனார்”.

–கவிக்கோ

{கோனார் உரை = குறளிற்கு எழுதப்படும் உரைகள். வள்ளுவனிற்கே இவர்கள் எழுதிய உரைகள் விளங்காது ஏனெனில் அவர் எழுதியது அறம்+பொருள்+காமம் என்பனவே. வீடு (ஆன்மீகம்) அல்ல. இக் கவிதை பரிமேலழகர் உரைக்கும் பொருந்தும்}

குறளிற்கு வள்ளுவனே ஒரு உரை எழுதியுள்ளான் தெரியுமா!  என்ன வள்ளுவனே தனது குறளிற்கு உரை எழுதினாரா! என வியக்கவேண்டாம். ஒரு குறள்தான் அந்த உரை.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு”. (423)

வள்ளுவரின் உடையின் நிறம் :

இப்பொழுது கட்டுரை தொடங்கிய இடத்திற்கே வந்தால் வள்ளுவனின் வடிவம் கற்பனை என்ற போதிலும், அவனது உருவத்திற்குப் பொருத்தமான உடை நிறம் வெள்ளையே ஆகும்.  நாம் மேலே பார்த்த நிறக் கோட்பாடுகளிற்கமைய அறிவின் உச்சியிலிருக்கும் வள்ளுவனைக் குறிக்க வெள்ளையே பொருத்தமான நிறமாகும்.  மேலும் தமிழர்களின் மரபுரீதியான ஆடையாகவும் வெள்ளை நிற வேட்டியே காணப்படுகின்றது.

இதனாலேயே ‘வெளிது’ என்ற பெயரில் சங்க காலத் தமிழரின் ஆடை அடையாளங் காட்டப்படுகின்றது {வேல்கைக் கொடுத்து வெளிது விரித்து டீஇப் பாறு மயிர்க்குடுமி எண்ணெய் நீவி` – புறநானூறு 279}. இதுவே தமிழக அரசாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட வடிவமும் ஆகும். இதனைக் காவியாக்குவதோ அல்லது கருப்பு ஆக்குவதோ தேவையற்ற வேலை.

வி.இ.  குகநாதன்

33 மறுமொழிகள்

  1. குறள் 134

    மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்

    விளக்கம்: பிராமணன் வேதத்தினை ஓதி மறந்தானாயினும் பின்னும் ஓதிக் கொள்ளலாம்: ஒழுக்கங் குறையுமாயின் குலங்கெடும்.

    ஜைனத்திலோ, புத்த மாதத்திலோ, கிறித்தவத்திலோ, அல்லது இஸ்லாமிலோ பிராமணர்கள் இருக்கிறார்களா என்ன?

    நீங்கள் ஒரு குறிப்பிட்ட ஜாதியினரை இழிவு செய்ய பயன்படுத்தும் அதே பார்ப்பான் என்ற வார்த்தையை தான் திருவள்ளுவரும் பயன்படுத்தி இருக்கிறார்.

  2. அப்ப பிராமணர்கள் ஒழுக்கம் இல்லாமதான்வாழ்ந்திருக்காங்க இப்ப மாதிரியே…அதான் எங்க அய்யன் கண்டிச்சிருக்காரு…

    • திருவள்ளுவர் சொல்லும் பார்ப்பனர்களை பற்றிய இதே வார்த்தைகளை ஹிந்து வேதங்களிலும் பல இடங்களில் பார்க்கலாம். ஒழுக்கம் பிராமணர்களுக்கு மிக முக்கிய தகுதி…

      திருக்குறள் முழுமையான ஹிந்து மதம் அடிப்படையிலான நூல்…

  3. மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
    பிறப்பொழுக்கம் குன்றக் கெடும்
    பொருள் விளக்கம்: பார்பான் = ஆய்ந்தறிந்தோராகிய உயர்ந்தோர் ஒதம் = உரிய இயற்கையான விதி இயல்களை மறப்பினும் = மதியாமல் விட்டு விட்டாலும் கொளல் ஆகும் அதை (உடலும் மனமும்) ஏற்றுக் கொள்ளும். ஒழுக்கம் குன்ற – (ஆனால்) ஒழுக்கமானது குறையக்குறைய பிறப்பு கெடும் – அவரது தோற்றம் சீரழிந்து போகும்.

  4. பார்ப்பு என்னும் சொல்லுக்குப் பறவையின் குஞ்சு என்று பொருள். இந்தப் பொருளில் அந்தச் சொல் பயன்படுத்தப்பட்டிருப்பதற்கும் இலக்கியச் சான்றுகள் உள்ளன.
    அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ
    வெள்ளம் தீப்பட்டதென வெரீஇப் – புள்ளினந்தம்
    கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கவ்வை…….
    எனவரும் முத்தொள்ளாயிரப் பாடல் பார்ப்பு என்னும் சொல்லைப் பறவையின் குஞ்சு என்னும் பொருளில்தான் ஆள்கிறது.
    சங்க இலக்கிய நூல்களில் ஒன்றான குறுந்தொகையில் 156 ஆவது பாடல்
    பார்ப்பன மகனே பார்ப்பன மகனே
    செம்பூ முருக்கின் நல்நார் களைந்து
    தண்டொடு பிடித்த தாழ்கமண் டலத்து
    படிவ உண்டிப் பார்ப்பன மகனே
    என்று அமைந்துள்ளது. மூன்று வரிகளில் நான்கு முறை பார்ப்பான் என்ற சொல் இடம்பெற்றுள்ளதைப் பார்க்க முடிகிறது.
    அகநானூற்றுப் பாடல் ஒன்றில், பாலை பாடிய பெருங்கடுங்கோ,
    தூதுஓய் பார்ப்பான் மடிவெள் ஓலை
    படையுடைக் கையர் வருந்திறம் நோக்கி
    என்று எழுதுகின்றார்.
    கொஞ்சம் கடுமையாகப் பாரதியார், “தண்டச் சோறுண்ணும் பார்ப்பான்” என்று எழுதுகின்றார்.
    பார்ப்பான் தொழிலைக் குறிக்கும் சொல். மறைந்த தமிழறிஞர் பெருஞ்சித்திரனார், “குறி பார்ப்பார், கணி (சோதிடம்) பார்ப்பார் என்பதால் அவர்களுக்குப் பார்ப்பார் என்று பெயர் வந்தது

  5. திருக்குறளில் “பார்ப்பான்” எ. சொல்
    கண்டிக்க வந்ததே!
    மறப்பினும் ஓத்து கொளல் ஆகும் பார்ப்பான் பிறப்பு
    ஒழுக்கம் குன்றக் கெடும்
    மறந்துட்டா கூட, உங்க வேதத்தை மீண்டும் படிச்சிக்கலாம்
    ஆனால் பிறப்பால் பிராமணன் எ. சொல்றீங்களே? அல்ல!
    ஒழுக்கம் போச்சுன்னா, உங்க பிறப்பு/பெருமை எல்லாம் போச்!
    பிறப்பொழுக்கம் எ. சேர்த்துப் படிக்கக் கூடாது!:)
    பிறப்பில் ஏது ஒழுக்கம்? பிறந்த குழந்தை, ஒழுக்கமாகவா ஆய் போகிறது Toiletக்குப் போய்?
    எழுதி வைக்காமல், ‘ஓத’ மட்டுமே படுவதால்= ஓத்து!

    திருக்குறளில்.. யாப்புக்காகச் சொற்கள் சேர்த்து எழுதப்படும்!
    நாம் தான் பிரித்துப் படிக்க வேண்டும்!

  6. பின்வரும் திருமூலரின் திருமந்திரப் பாடல்களையும் சேர்த்து எழுதியிருந்தால் கட்டுரை இன்னமும் சிறப்பாகவிருந்திருக்கும். ……………. “பேர் கொண்ட பார்ப்பான்
    பிரான் தன்னை அர்ச்சித்தால்
    போர் கொண்ட நாட்டுக்குப்
    பொல்லா வியாதியாம்
    பார் கொண்ட நாட்டுக்குப்
    பஞ்சமும் ஆம் என்றே
    சீர் கொண்ட நந்தி
    தெரிந்து உரைத்தானே.”
    . – திருமூலர் .
    “சத்தியம் இன்றித்
    தனிஞானந் தானின்றி
    ஒத்த விடயம்விட் டோரும்
    உணர்வின்றிப்
    பத்தியும் இன்றிப்
    பரன்உண்மை யுமின்றிப்
    பித்தேறும் மூடர்
    பிராமணர் தாம்அன்றே. ”
    . – திருமூலர்-

    • இத்தனை ஆண்டு காலம் பார்ப்பணர்களை ஆரியர்கள், கைபர் போலன் கணவாய் வழியாக வந்தவர்கள் என்று சொல்லி விட்டு, பல சங்க இலக்கியங்களில் பார்ப்பணர்கள் பாடியிருக்கிறார்கள், பல சங்க இலக்கியங்கள் பார்ப்பணர்கள் குறித்து பாடப்பட்டுள்ளது என்று தெரிய வந்ததும், இல்லையில்லை பார்ப்பணர்கள் என்றால் தமிழ் பார்ப்பணர்கள், அவர்கள் வேறு, ஆரிய பார்ப்பணர்கள் வேறு என்று பிற்காலத்தில் தமிழர்கள் உளறிக் கொட்டுவார்கள் என்று தெரிந்து கொண்டு தான் திருமூலர் இந்த பாடலை பாடியுள்ளார் போல.

  7. உங்களை போன்ற evangelist கைக்கூலிகள் எவ்வுளவு தான் திரித்து எழுதினாலும் உண்மையை மறைக்க முடியாது. திருக்குறளில் பல இடங்களில் அந்தணர்களை பற்றி வருகிறது. இல்லறத்தாரின் கடமைகளில் மிக முக்கிய கடமையாக அந்தணர்களுக்கு தானம் செய்வதும் ஒன்று. அரசன் ஒழுங்காக ஆட்சி செய்யவில்லை என்றால் அந்தணர்கள் வேதங்களை மறப்பர் என்றும் வள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

  8. தொல்காப்பியம் பொருளதிகாரம் புறத்திணையியல் இருபதாம் சூத்திரம் “அறுவகைப்பட்ட பார்ப்பனப் பக்கமும்” என்ற முதல் வரியுடன் தொடங்குகிறது. “ஓதல், ஓதுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் என்ற ஆறு திறனாகிய அந்தணர் பக்கமும்” என்று இந்த வரிக்கு அர்த்தம்

    1. ஓதல் – நான்கு வேதங்களையும் ஓதிக் கற்றல்.
    2. ஓதுவித்தல் – பிறருக்கு வேதங்களை ஓதிக் கற்பித்தல்.
    3. வேட்டல் – யாகங்களைச் செய்தல்.
    4. வேட்பித்தல் – பிறர் யாகங்களைச் செய்யுமாறு செய்தல். (யாகங்களைப் பிறருக்காகச் செய்தல் என்றும் ஆம்).
    5. ஈதல் – தம்மிடம் உள்ள பொருளைப் பிறருக்குத் தருதல்;
    6. ஏற்றல் – பிறர் தரும் பொருளை ஏற்றுக்கொள்ளுதல்.

    வேதங்களில் விதித்துள்ள வண்ணம் இந்த ஆறு செயல்களையும் தொல்காப்பியர் காலத்துத் தமிழகப் பார்ப்பனர்கள் செய்தார்கள். இதனாலேயே தொல்காப்பியர் இங்கு பதிவு செய்கிறார்.

    வினவு கூட்டங்கள் (evangelist கைக்கூலிகள்) பரப்பி வைத்து இருக்கும் பொய்கள் பல அதில் ஒரு பொய் பிராமணர்கள் வந்தேறிகள்… அப்படி என்றால் தொல்காப்பியத்திற்கு evangelist கைக்கூலிகள் என்ன பதில் சொல்ல போகிறார்கள் ?

    • தொல்காப்பியத்தைப் பின்பு பார்ப்போம். முதலில் குறளினை ஆய்வு செய்து முடிப்போம்.அந்தணர் பற்றி குறளில் வருவது உண்மை. அந்த `அந்தணர்கள்` பார்ப்பனரல்ல. அறவோரே அந்தணர்கள். இது பற்றி ஏற்கனவே இதே கட்டுரையாளர் வினவுத் தளத்தில் ஒரு கட்டுரை எழுதியுள்ளார். `திருக்குறளைத் திரிக்க முனையும் பரிமேலழகர் முதல் நாகசாமி வரை` என்ற தலைப்பில் வந்தது என நினைக்கின்றேன். `ஐயர்` என்பதும் பார்ப்பனரல்ல, அதனாலேயே `பார்ப்பனரை ஐயர் என்ற காலமும் போச்சே` எனப் பாரதியாரே பாடியுள்ளார்.

      • கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கு உங்க விளக்கம். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் புதுசா எதாவுது சொல்லுங்க…

        வினவு கூட்டங்களும் கிறிஸ்துவ மதவாத கூட்டங்களும் பார்ப்பனியம் பற்றி அவதூறு பேசி கொண்டு இருக்கிறீர்கள், இன்றைக்கு என்னவென்றால் திருவள்ளுவர் அந்த பார்ப்பானை சொல்லவில்லை இந்த பார்ப்பானை சொன்னார் என்று காமெடி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

        பார்ப்பனர் என்றால் திருக்குறள், தொல்காப்பியம், புறநாநூறு, சிலப்பதிகாரம் அனைத்திலும் ஒரே அர்த்தம் தான்.

        கிறிஸ்துவமும் வினவு கூட்டங்களும் செய்து கொண்டு இருப்பது #TamilCulturalGenocide

        நிச்சயம் கிறிஸ்துவ மதவாத அமைப்பினரும் வினவு கூட்டங்களும் ஹிந்து மதத்திற்கு எதிராக செய்யும் செயல் தவறு, இந்த மாதிரியான அழிவை தான் கிறிஸ்துவம் பிரேசில் அமெரிக்கா ஆப்பிரிக்கா கனடா போன்ற நாடுகளில் கொன்டு வந்து ஒட்டு மொத்தமாக பூர்விக மக்களின் இன அடையாளம், மொழி கலாச்சாரம் அனைத்தையும் அழித்து இருக்கிறார்கள்.

        #SaveTamilCulture from Christians and Fake Communists

  9. இந்துத்துவா` வாதிகள் இப்போது ஒரு புரளியினைத் தொடக்கியுள்ளார்கள். அது என்னவென்றால் “ `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்`. என்ற குறள் சொல்லும் பிறப்பில் வேறுபாடில்லை, செய்யும் செயல்களிலேயே வேறுபாடு உண்டு என்ற செய்தியினையே கீதையும் கூறுகின்றது “என்ற புரளியே அதுவாகும். இதற்கு இவர்கள் சான்று காட்டுவது `#குண_கர்ம` என்ற சொற்தொடரினையேயாகும். உண்மையில் கீதையில் சொல்லப்படும் `குண(ம்)` எனப்படுவது மக்களின் குணமல்ல {குண-ஜன அல்ல}, மாறாக #ஜாதிக்கு_விதிக்கப்பட்ட_வேலையின்_குணம் {குண-கர்ம} ஆகும். பின்வரும் கீதை வசனத்தைப் படியுங்கள் குழப்பம் தீரும்.
    👇👇
    `ஸ்ரேயான் ஸ்வ-தர்மோ விகுண, பர தர்மாத் ஸ்வ-அனுஷ்திதா` {3: 35}
    👆👆
    🧐👉பொருள் – உனக்குத் திறமையிருப்பினும் மேல் வர்ண வேலையைச் செய்யாதே.
    👉👇இன்னொரு வரியினையும் (1 :41) பாருங்கள்.
    👇👇
    `வர்ண சங்கரோ நரகாயைவ` = சாதி மாறி திருமணம் செய்தால் நரகம் போவாய்
    👆👆
    🧐இப்போது நீங்களே முடிவுசெய்யுங்கள்- குறள் சொல்லும் சாதி மறுப்பையா கீதையும் சொல்கின்றது!

  10. அதிர்ஷ்ட்டம், கஷ்ட்டம் ஆகியன தமிழ் சொற்கள் தான்.

    ஒரு முறை பெங்களூரில் சில் தொழிலாளர்கள் பேசிக் கொண்டிருந்ததை கேட்க நேர்ந்தது.
    “நாம தானே கட்டப்படுறோம்…’
    எனவே, கட்டப்படுகிறோம் என்னும் தமிழ் வார்த்தையின் உள் ஒரு ‘ஷ்’ நுழைத்து விட்டு அது தமிழ் வார்த்தை அல்ல என்று நினைக்க ஆரம்பித்து விடுகிறோம்.

    நட்டம் என்பதும் இதே போல் தான்.

    அதிர்ஷ்ட்டம்
    அவன் நாய்க்கு உணவு இடுகிறான்.
    இந்தப் பாதை அந்த ஊருக்கு இட்டுச் செல்கிறது.

    யார் என்று தெரியாத ஒருவர் இடும் போது அல்லது எது என்று தெரியாத ஒன்று இடும் போது
    அது இட்டம் — அதிட்டம் என்கிறோம். நடுவில் ர்ஷ் எப்படியோ புகுந்து விட்டதது. இனி அதிர்ஷட்டத்தை அதிட்டம் என்று தமிழில் தொல்வோம்.

    (கிழே வினவு தளத்தில் பதில் இடுக என்று போடப்பட்டுள்ளது.,)

    • `அதிட்டம்` என்பது தமிழ் எனின் எந்தப் பழந் தமிழ் நூலில் பயன்படுத்தப்பட்டுள்ளது. வேர்ச்சொல் விளக்கம் என்ன? அறியும் ஆவலில் கேட்கின்றேன்.

      • அது இடும் என்று விதி அல்லது ஊழ் இடுவதை அதன் விருப்பம் என்னும் பொருளில் அதன் இட்டம் என்பது ஒரு சொல்லாக அதிட்டமானது. பின்பு நமது பேச்சு உச்சரிப்புகளால் அதிர்ஷ்ட்டம் ஆனது

  11. அருமையான கட்டுரை. பார்ப்பனப் புரட்டினைத் தெளிவாக விளக்கியுள்ளது

  12. இதே ஆசிரியர் தான் ‘தெய்வம் தொழா’ என்ற திருக்குறளுக்கு ஒரு விளக்கவுரை எழுதி இருந்தார். நான் கேட்ட கேள்விகளுக்கு எல்லோரும் என்னை திட்டி தீர்த்து கடைசியாக திரு PR ஸ்ரீனிவாசன் என்பவர் ஓரளவிற்கு ஞாயமான விளக்கம் அளித்தார்

    இப்படி ஆளாளுக்கு ஏன் தங்கள் இஷ்டம் போல் திருக்குறளுக்கு விளக்கம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை

    “ஒருமைக்கண் தான் கற்ற கல்வி ஒருவற்கு
    எழுமையும் ஏமாப்புடைத்து”

    // இதில் நீர்வண்ணம் என்பது அதியுயர் முத்தி நிலை. //

    அதென்னப்பா அது ‘அதி உயர் முத்தி நிலை’ (முக்தியா அல்லது முற்றியவா அல்லது வேறு ஏதாவது சொல்லா ? ).

    முக்தி என்பது இந்து மதத்தில் இருக்கும் விஷயம் தானே. அல்லது தமிழர்களும் இந்த ‘முக்தியை’ உள் வாங்கி கொண்டனர்களா தங்கள் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக ?

    திருக்குறளே ஆர்ய கலாச்சாரத்தின் பிம்பம் தான் என்று PR ஸ்ரீனிவாசன் முந்தைய விவாதத்தில் குறிப்பிட்டார்.

    திருக்குறள் ஆரியம் என்று ஆன பிறகு இவ்வளவு தூரம் வினவு ஆசிரியர் ஏன் அலட்டி கொள்கிறார் என்று தெரியவில்லை

    // குறள் சொல்லும் சாதி மறுப்பையா கீதையும் சொல்கின்றது! //

    “மேற்பிறந்தார் ஆயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்துஇலர் பாடு”

    என்னது குறள் சாதி மறுப்பு நூலா ? இது எப்ப ? PR ஸ்ரீனிவாசன் முந்தைய விவாதத்தில் சாதியை தூக்கி பிடிக்கும் குறளை பதிவிட்டாரே மறந்து விட்டார்கள் போலும் .

    எங்கப்பா சமூக நீதி சிந்தனையாளர்கள் ? இப்போது சொல்லுங்கள் திருக்குறள் உலக பொதுமறை என்று

    நன்றி

    • கட்டுரையாளர் `முக்தி` என்ற வடசொல்லைப் பயன்படுத்தியது தவறுதான். எமக்கு தமிழிருக்க ஏன் ஒட்டுண்ணி வடமொழி. ஆனால் முக்தி இந்து மதம் என்பது தவறு. சமண,ஆசீவகத்திலும் `சமாதி` நிலையினை அவ்வாறு கூறுவார்கள். காவி கூட பவுத்தத்திடம் களவாடப்பட்டதே.பார்ப்பான் வரும்போது கொண்டு வந்தது எல்லாம் கால்நடைகளும் , கொஞ்ச சிவப்புத் தோலுள்ள பெண்களும்தான். அவற்றை வைத்து மன்னர்களை மயக்கி விட்டான்.
      மற்றையது `மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
      கற்றார் அனைத்திலர் பாடு`என்ற குறள் சாதியை வலியுறுத்தவில்லை. அக் குறள் எல்லோரையு்ம் கற்கச்சொல்கின்றது. அதுவும் பார்ப்பானிற்கு மட்டுமே கல்வி என்ற இந்துமத தர்மத்தை அடித்து நொருக்கும் பார்ப்பனிய எதிர்ப்பு குறளே. கடைசியாக சதீஸீடமும் ஒரு கேள்வி . சாதியமைப்பு நல்லதா/ கெட்டதா?

      • கவுண்டமணி செந்தில் காமெடி மாதிரி இருக்கு உங்க விளக்கம். இன்றைய ட்ரெண்டுக்கு ஏற்றார் போல் புதுசா எதாவுது சொல்லுங்க…

        வினவு கூட்டங்களும் கிறிஸ்துவ மதவாத கூட்டங்களும் பார்ப்பனியம் பற்றி அவதூறு பேசி கொண்டு இருக்கிறீர்கள், இன்றைக்கு என்னவென்றால் திருவள்ளுவர் அந்த பார்ப்பானை சொல்லவில்லை இந்த பார்ப்பானை சொன்னார் என்று காமெடி செய்து கொண்டு இருக்கிறீர்கள்.

        பார்ப்பனர் என்றால் திருக்குறள், தொல்காப்பியம், புறநாநூறு, சிலப்பதிகாரம் அனைத்திலும் ஒரே அர்த்தம் தான்.

        கிறிஸ்துவமும் வினவு கூட்டங்களும் செய்து கொண்டு இருப்பது #TamilCulturalGenocide

  13. 21ம் நூற்றாண்டில் கூட திராவிடம் வழக்கமான ‘எதுகை, மோனை’ வசனங்கள், ‘திரிப்பு வாதங்கள்’ மூலம் சாதிக்க நினைக்கிறது. இனிமேல் அது எடுபடாது.

    இதே ஆசிரியர் ‘தெய்வம் தொழா’ என்ற குறள் பார்பனீயத்தின் மறுஉருவமே என்று எழுதியதற்கு எல்லோரும் வரிந்து கட்டி கொண்டு ‘ஆசிரியர் எழுதியது உண்மையே’ என்று கமெண்ட்களை போட்டனர்

    ஆனால் இந்த குறளுக்கும், பார்ப்பனீயத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது மிக சிறந்த ‘அந்தர் பல்டி’

    ஒன்று திருக்குறள் மதச்சார்பற்ற நூல் என்றால் ‘தெய்வம் தொழா’ என்ற குறள் பார்பனீய சாயல் இல்லை என்று ஒப்பு கொள்ளுங்கள் (அல்லது) திருக்குறள் ஆரியன் மறுஉருவமே என்று ஒப்புக்கொள்ளுங்கள்

    இப்படி ஆசிரியர் சகட்டு மேனிக்கு உரை எழுதுவது, அதற்க்கு நம்மவர்கள் முரட்டு தனமாக முட்டு கொடுப்பது என்று இருப்பதின் ‘logic தான் என்ன ?

    சரி விவாதத்திற்கு வருவோம்

    திரு சுமேரியன்க்கு சில கேள்விகள்

    1) // கட்டுரையாளர் `முக்தி` என்ற வடசொல்லைப் பயன்படுத்தியது தவறுதான். எமக்கு தமிழிருக்க ஏன் ஒட்டுண்ணி வடமொழி //

    இதற்க்கு இணையான தமிழ் சொல் என்ன ? அறிவுக்கு பெயர் பெற்ற தமிழ் சமூகம் ‘முத்தி’, ‘மறுபிறப்பு’ போன்ற மூடநமபிக்கைகளுக்குள் எப்படி விழ முடியும் ?

    திருக்குறள் மதச்சார்பற்ற நூல் தானே ? திருவள்ளுவர் எப்படி ‘முக்தி’ போன்ற பகுத்தறிவற்ற விஷயங்களுக்கு இடம் தர முடியும் ?

    2) // சமண,ஆசீவகத்திலும் `சமாதி` நிலையினை அவ்வாறு கூறுவார்கள். காவி கூட பவுத்தத்திடம் களவாடப்பட்டதே.பார்ப்பான் //

    பார்ப்பனர்கள் பிறவி குற்றவாளிகள் என்பது நமக்கு தெரிந்த விஷயம் தானே ? காவியை களவாண்டர்கள். சரி இருக்கட்டும். சமண ரிஷியான ‘திருவள்ளுவர்’ ஏன் ‘தெய்வம் தொழா’ வில் பார்ப்பனியத்தை தூக்கி பிடிக்க வேண்டும் ? சமணம் வேறு, பார்ப்பனீயம் வேறு தானே ?

    ‘தெயவம் தொழா’ ஏன் சமணத்தின் கூறாக இருக்க கூடாதா (அல்லது) இருக்க முடியாதா ?

    3) // பார்ப்பான் வரும்போது கொண்டு வந்தது எல்லாம் கால்நடைகளும் , கொஞ்ச சிவப்புத் தோலுள்ள பெண்களும்தான். அவற்றை வைத்து மன்னர்களை மயக்கி விட்டான். //

    தாங்கள் சொல்வது எனக்கு மிகவும் புதியதாக உள்ளது. ஆர்ய படையெடுப்பின் பொது ஆண்கள் மட்டுமே வந்ததாக தானே சுமார் 2 வருடங்களுக்கு முன்பு வந்த ஆய்வு கட்டுரை சொல்கிறது

    இதில் ‘வெள்ளை நிற பெண்கள்’ எங்கே இருந்து வந்தார்கள் ?

    4) // மற்றையது `மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்
    கற்றார் அனைத்திலர் பாடு`என்ற குறள் சாதியை வலியுறுத்தவில்லை. //

    சாதியை வலியுறுத்தவில்லை என்று திரு வெங்கடேசலம் Ph.D சொன்ன போது , திரு PR ஸ்ரீனிவாசன், திரு SS கார்த்திகேயன் ‘இந்த குறள்’ சாதியை வலியுறுத்தி பேசுகிறது என்று கூறினார்கள்.

    இப்போது நீங்கள் ஏன் உங்களுடன் ஒத்த கருத்துள்ள திரு PR ஸ்ரீனிவாசன், திரு SS கார்த்திகேயன் அவர்களின் கருத்தில் இருந்து வேறுபடுகிறீர்கள் ?

    இதில் எது தான் உண்மை ? படிப்பவர்களை குழப்பி, அந்த குட்டையில் மீன் பிடிப்பது திராவிடத்திற்கு கை வந்த கலை

    5) // கடைசியாக சதீஸீடமும் ஒரு கேள்வி . சாதியமைப்பு நல்லதா/ கெட்டதா? //

    இந்த காலத்தில் நல்லதா ? கெட்டதா ? என்று கேட்டால் நல்லது இல்லை என்பதே என் பதில்

    அனால் 5000 வருடங்களுக்கு மனித நாகரீகம் எப்படி இருந்தது ? ஏன் தொழில் அடிப்படையில் பிரித்தார்கள் என்பது எல்லாம் அறுதியிட்டு கூற முடியாது. Clarke, Taylor, Miller போன்ற தொழில் ரீதியான பிரிவுகள் மேலை நாடுகளிலும் இருந்த, இருக்கும் ஒன்று தான்

    ஏனெனில் 5000 வருடங்களுக்கு என்ன நடந்தது என்பது நமக்கு தெரியாது

    இந்தியாவில் தற்போது 20000க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன. அது போக எல்லாவற்றையும் பார்ப்பனர்களின் தலையில் தூக்கி போடுவது நியாயமற்ற போக்காகவே கருதப்படும்

    நன்றி

    • திருக்குறளில் உள்ள பிற்போக்கு அம்சங்களை விமர்சிப்பது ஆரோக்கியமானதுதானே..!
      அதற்காக திருக்குறளை ஆரியநூல் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சதீஸின் விருப்பம் போலிருக்கிறது..!

      • திரு SS கார்த்திகேயன்,

        // திருக்குறளில் உள்ள பிற்போக்கு அம்சங்களை விமர்சிப்பது ஆரோக்கியமானதுதானே..! //

        நான் கேட்ட கேள்விகளுக்கு தனித்தனியாக பதில் அளிக்க விழைகிறேன்.

        பிற்போக்கு அம்சங்கள் என்று நீங்கள் எதை சொல்கிறீர்கள்

        ‘தெய்வம் தொழ’ என்கிற குறளுக்கு உண்மை விளக்கம் என்ன.???

        ஆளாளுக்கு வலிந்து ஒரு உரை எழுதுவது, பிறகு அதையே பிற்போக்கு தனம் என்று கூறுவது எப்படி ஏற்று கொள்ள முடியம் ? உண்மை பொருள் என்ன ?

        ஏன் சமணரான திருவள்ளுவர் ‘பார்ப்பனீயத்தை’ பற்றி எழுத வேண்டும் ? சமணர் என்று நான் சொல்லவில்லை. திராவிட ஆதரவாளர்கள் தான் சொல்கின்றனர்

        // அதற்காக திருக்குறளை ஆரியநூல் என்று நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது சதீஸின் விருப்பம் போலிருக்கிறது..! //

        இதை நான் சொல்லவில்லை. இந்த உரை ஆசிரியரே ‘தெய்வம் தொழா’ என்ற குறளுக்கு என்ன விளக்கம் அளித்தார் ?

        அது எப்படி ‘ஜாதியை’ கீதையும் சொல்கிறது, திருக்குறளும் சொல்கிறது. ‘கீதையை’ எதிர்ப்பவர்கள் இதையும் தானே எதிர்க்க வேண்டும்.

        ‘கீதையை’ எதிர்ப்பதற்கு அடிப்படையே ஜாதி தானே ? திருக்குறளிலும் ஜாதி பற்றி பேச படுகிறது தானே ?? அப்போது திருக்குறளும் தானே எதிர்க்கப்பட வேண்டும் ?

        நன்றி

  14. குறள் 25:
    ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்
    இந்திரனே சாலுங் கரி.

    விளக்கம்:

    ஐந்து புலன்களாலாகும் ஆசைகளை ஒழித்தவனுடைய வல்லமைக்கு, வானுலகத்தாரின் தலைவனாகிய இந்திரனே போதுமான சான்று ஆவான். – இந்திரன் ஹிந்து மத கடவுள்

    குறள் 84:
    அகனமர்ந்து செய்யாள் உறையும் முகனமர்ந்து
    நல்விருந்து ஓம்புவான் இல்.

    மு.வரதராசன் விளக்கம்:

    நல்ல விருந்தினராய் வந்தவரை முகமலர்ச்சி கொண்டு போற்றுகின்றவனுடைய வீட்டில் மனமகிழ்ந்து திருமகள் வாழ்வாள். – திருமகள் மஹாலக்ஷ்மி ஹிந்து மத கடவுள்

    குறள் 167:
    அவ்வித்து அழுக்காறு உடையானைச் செய்யவள்
    தவ்வையைக் காட்டி விடும்.

    விளக்கம் :

    பொறாமை உடையவனைத் திருமகள் கண்டு பொறாமைப்பட்டுத் தன் தமக்கைக்கு அவனைக் காட்டி நீங்கி விடுவாள். – திருமகளின் தமக்கை மூதேவி (இதுவும் ஹிந்து மத நம்பிக்கை)

  15. “புராணங்களைப் போலவே வள்ளுவர் குறளையும் பகுத்தறிவுக்கு ஏற்றதல்ல என்று கண்டித்து வந்தேன். எல்லாவற்றையும் குறை சொல்லும்போது பலர் என்னிடம், ‘எல்லாம் போய்விட்டால் நமக்கு எதுதான் நூல்’ என்று கேட்பார்கள். நான், ‘இங்கே இருக்கிற மலத்தினால் கெட்ட நாற்றம் வீசுகிறது, அதை எடுத்து விடு என்றால் அந்த இடத்தில் என்ன வைப்பது? என்று கேட்பதா’ என்று பதில் கூறுவேன். — பெரியார் என்று சொல்லி கொண்ட நாயக்கர்

    பெரியாரை பொறுத்தவரையில் திருக்குறள் மலத்திற்கு சமமானது. இது தான் திராவிட அரசியல்வாதிகளின் கேவலமான கீழ்த்தரமான சிந்தனைகள். பெரியார் கிறிஸ்துவ மதவாதிகள் பரப்பி வைத்த பொய்களை நம்பி ஹிந்து மதத்திற்கு எதிரான கருத்துக்களை சொல்லி கொண்டு இருந்தார்.

    இது தொடர்ச்சியாக நடந்து கொண்டு இருக்கும் #TamilCulturalGenocide

    ஹிந்துக்கள் விழிப்படையவில்லை பிரேசில் மெக்ஸிகோ ஆப்பிரிக்கா அமெரிக்கா கனடாவை போல் நாம் நம் அடையாளத்தை இழந்து நிற்போம். #புறக்கணிப்போம்பெரியாரை புறக்கணிப்போம் கிறிஸ்துவ மதவாதிகளின் பொய்களை

  16. ஹிந்து வேதங்களின் இரண்டு வரி சுருக்கம் தான் திருக்குறள்… மிக சிறந்த அறிவும் ஞானமும் உள்ள ஒருவரால் தான் வேதங்களில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயங்களை புரிந்து கொண்டு அதை இரத்தின சுருக்கமாக இரண்டு வரிகளில் கொடுக்க முடியும்.

  17. சிறப்பான கட்டுரை. பார்ப்பனப் பொய்ப் பொருளுரைகளிற்கு சிறந்த விளக்கம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. என்றாலும் பிராமணர்கள் பூசை செய்யும் கோயிலில் இப்போதெல்லாம் அர்ச்சனை செய்வதேயில்லை.

    • நீங்கள் இயேசுவை நம்பினால் இப்படி தான் பொய்களையும் அவதூறுகளையும் நம்ப வேண்டியிருக்கும் சிவனையும் முருகனையும் பெருமாளையும் நம்புங்கள் உங்களுக்கு உண்மை தெரியும்.

      • இங்குள்ள முருகன்+மாயோன்+கொற்றவை கோயில்கள் யாவும் எம்முடையது. எனது தாத்தா கூட தமிழ் ஒதுவார்தான். தமிழில் பூசை செய்து வந்த கோயிலைக் கைப்பற்றி சமற்கிரதத்திலே பூசை செய்கின்றான். பழனி கோயில் கூட அவ்வாறே.

        • தமிழர்கள் ஹிந்துக்கள் இல்லை என்று சொல்லும் உங்களை போன்ற கிறிஸ்துவ கைக்கூலிகள் என்றுமே கிறிஸ்துவர்கள் தமிழர்கள் இல்லை என்று சொல்ல மாட்டிர்கள்.

          உங்களை போன்ற கிறிஸ்துவர்கள் செய்து கொண்டு இருப்பது என்ன தெரியும்மா #TamilCulturalGenocide

  18. “சமயக் கணக்கர் மதி வழி கூறாது, உலகியல் கூறிப் பொருளிது வென்ற வள்ளுவன்”. மேலுள்ளது வள்ளுவன் பற்றி `கல்லாடம்` எனும் நூலைப் படைத்த கல்லாடர் கூறியுள்ளார். இந்தக் கல்லாடர் (11th cent)பாடல்கள் 9 ம் திருமுறையிலேயே உள்ளது. இன்னொரு பழமொழி `கல்லாடம் கற்றவருடன் சொல்லாடல் செய்யாதே`. திருமுறை படைத்த கல்லாடரே சொல்லிட்டார். குறள் சமயசார்பற்றது என்று. பார்ப்பனர்கள் எல்லாம் கடையைச் சாத்திட்டி வெளிக்கிடுங்கள். over, over.

  19. சுமேரியன்
    ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத்|
    ஸ்வத⁴ர்மே நித⁴நம் ஸ்²ரேய: பரத⁴ர்மோ ப⁴யாவஹ. 3-35

    நன்றாகச் செய்யப்படும் பர தர்மத்தைக் காட்டிலும் குணமற்றதெனினும் ஸ்வதர்மமே சிறந்தது. ஸ்வதர்மத்தில் இறந்துவிடினும் நன்றேயாம். பரதர்மம் பயத்துக்கிடமானது.

    அத⁴ர்மாபி⁴ப⁴வாத்க்ருஷ்ண ப்ரது³ஷ்யந்தி குலஸ்த்ரிய​:|
    ஸ்த்ரீஷு து³ஷ்டாஸு வார்ஷ்ணேய ஜாயதே வர்ணஸங்கர​: ||1-41||

    கண்ணா, அதர்மம் சூழ்வதனால் குல ஸ்திரீகள் கெட்டுப் போகிறார்கள். விருஷ்ணி குலத் தோன்றலே, மாதர் கெடுவதனால் வர்ணக் குழப்பமுண்டாகிறது.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க