Thursday, June 13, 2024
முகப்புவாழ்க்கைஅனுபவம்கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

கோகிலாம்மாவின் பாவமும், சங்கராச்சாரியின் புண்ணியமும் !

-

பணத்தோடும் பந்தலோடும் வரவேற்கிறது காஞ்சிமடத்தின் முகப்பு.

வேதம் விதித்த தர்ம வழியில் நடப்பவன் புண்ணியத்தைத் அடைகிறான். ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்பவன் பாவத்திற்கு ஆளாகிறான்”- இது இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியாரின் சிந்தனை. “கற்புக்கரசிகளை மனைவியாகக் கொண்டிருப்போருக்குத்தான் கடவுள் தெரிவார்” – இது வைகைப்புயல் வடிவேலாரின் சிந்தனை. முன்னதின் தராரதரத்தை பின்னவர் ‘புரிய’ வைக்கிறார் என்பதற்கு காஞ்சி சங்கரமடத்தில் பார்த்ததும் கேட்டதுமான இரண்டு சம்பவங்களைப் பார்ப்போம்.

ஒரு நண்பரைப் பார்ப்பதற்கு காஞ்சிபுரம் சென்றிருந்தேன். ஊர் சுற்றி பார்க்கும் வைபவத்தில் காஞ்சி மடமும் உண்டு என்பதால் அங்கும் சென்றோம். அன்று கூட்டம் அதிகமில்லை. இருப்பினும் வந்தவர்களில் பெரும்பான்மையினர் சுண்டிவிட்டால் சிவக்கக்கூடிய வெண்ணிற வேந்தர்கள்தான். எங்களையும் உள்ளிட்ட ‘கரிய’ அசுரர்கள் ஓரிருவர்தான். முதலில் சங்கராச்சாரி தரிசனம் தரும் கருவறை இதுதான் என்று கல்லாலான கால் பாதத்தைக் காண்பித்தார்கள். அந்த அறையில்தான் ஜயேந்திர சரஸ்வதி பொது மக்களுக்கு காட்சி அளிப்பாராம். இப்போதெல்லாம் அவர் அதிகம் பேசுவதில்லையாம். அதுவும் அதிஷ்டம் இருப்பவர்களுக்கு மட்டும்தான் காட்சியும் கொஞ்சம் கற்கண்டும் கிட்டும் என்றார்கள். கருவறையின் அருகிலேயே மண்டையில முக்கால் பாக முடிய வழித்து விட்டு கால் பாக முடியோட புண்ணியத்தை அடையும் வழியான வேத பாடத்தைப் பதினைந்து வயது மதிக்கத்தக்க பார்ப்பன சிறுவர்கள் பரிதாபமான முறையில் ஜெபித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்து கண்ணாடி அறை ஒன்றில் மனுசனா சிலையா என்று இனங்காண முடியாத காஞ்சிப் பெரியவரின் மெழுகுச்சிலையொன்று இருந்தது. அதற்கு மிகவும்  சுத்தமான ஆடை, செருப்பு மற்றும் அதனை சுற்றி பணம் (பக்தர்கள் போடும் காணிக்கை) என எல்லாம் பளிச்சென்று இருந்தது. உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது.

அதுக்கு நேர்மாறாகக் கருவறைக்குப் பின்புறம் ஒரு இடத்தில் சிலையைப் போல் அமர வைக்கப்பட்டிருந்தார், ஒரு உயிர் உள்ள வயதான சாமியார். அவருக்கு சுமார் என்பது வயதுக்கு மேல் இருக்கலாம். ஒரு குடித்தன வீட்டில் ஓரமாக இருக்கும் மாட்டுத் தொழுவம் போல இருந்தது அந்த இடம். நீளமான வரண்டாவின் ஓரம் இரண்டடி சிமண்ட் பெஞ்சில் உட்கார்ந்திருந்தார் அவர். இரண்டு சொம்புத் தீர்த்த தண்ணீர், ஒரு சொம்பு குடிதண்ணீர், ஏதோ இரண்டு ஆன்மீகப் புத்தகங்கள், ஏதோ சாமி புகைப்படம், விபூதி, குங்கும கிண்ணம் எல்லாம் அந்த சாமியாரின் அருகில் அதே பெஞ்சில் இருந்தன. அவர் உடம்பு முழுவதும் விபூதி பட்டை, சந்தன குங்குமப் பொட்டு, கழுத்தில் மணி மாலை, வரித்து கட்டியக் கோவணம், தூக்கிக் கட்டிய கொண்டை தலைமுடி, ஒரு முழ நீளத்துக்குத் தாடி என வீற்றிருந்தவரைப் பார்க்கும் போது பக்தியை விட பரிதாபமே வரும்.

உண்மையிலேயே பெரிய சங்கராச்சாரியார் இருந்தால் அந்த அறை எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு சுத்தமாக இருந்தது. – பெரிய சங்கராச்சாரியாரின் மெழுகுச் சிலை.

அந்த இடம் பல நாள் சுத்தம் செய்யாத நிலையில் எலி நடமாட்டத்துக்கு சாட்சியாக எலிப் புழுக்கைகள் தெயவீக் மணத்தை தாண்டி மணம் வீசின. அங்கேதான் அவர் தங்கியும் இருக்கிறார். அவர் அமர்ந்திருந்த திண்ணைக்கு கீழேயே டாய்லெட் வடிவில் சிமெண்டால் கட்டியிருந்தார்கள். அதில் சிறுநீர் கழித்தால் அது சாக்கடையோடு சேர்ந்து விடும். அதுல வேதனை என்னன்னா அவசரத்துக்குக் கோவணத்த அவுத்துட்டு அவரால ஒன்னுக்குக் கூடப் போக முடியாது. தடியக் கூட ஊனி நேரா நிமிர்ந்து நிற்க முடியாத நிலையில இருக்கும் அவரால இருக்கி கட்டிய கோவணத்த (சன்னியாசி கோவணக்கட்டு) எப்படி அவிழ்க்க முடியும்?

மூன்று நாள் விடாது பெஞ்ச மழையில கூட அவர வெத்து உடம்போட  வச்சுருந்ததப் பாக்க மனசு தாங்கல. சாப்டிங்களா குளிருக்குப் போர்வ வேணுமான்னு ஒரு குழந்தையிடம் கேட்கச் சொன்ன போது, அது அவர் காதுக்கே கேட்டு உடனே திரும்பிப் பார்த்தார். அதில்   ஏக்கம் இருந்தது. அதே நேரம் அப்போது அங்கே வந்த ஒரு நடுத்தர மனிதர், “நல்லபடியா திருப்பதி போய்வர உங்க ஆசீர்வாதம் வேணுன்னுப் அந்தப் பெரியவரிடம் கேட்டதும் கூண்டுக்குள் அடைபட்ட விலங்கைப் போல அவர் பார்வையில் அத்தனை எரிச்சலும், சலிப்பும் இருந்தது. “கடவுள் இல்லேன்னு சொல்றவன விட இருக்குன்னு சொல்றவனுக்குதான் கடவுள் இல்லைன்னு உறுதியா தெரியும்”னு சொன்ன பெரியாரின் உண்மையை நினைவுபடுத்தியது அந்த பார்வை.

ஒரு பச்சக் குழந்தை முகத்துக்கு முன்னாடி ஒரு கிலுகிலுப்பையை ஆட்டினா அது சிரிக்கும் உற்சாகமடையும். அதே குழந்தை வளர்ந்து முதிர்ந்து கட்டிலில் கிடக்கும் போது உற்சாகமூட்ட கிலுகிலுப்பையை ஆட்டுனா சிரிக்குமா.? சிரிக்காது. முடியாத முதுமையில் ஜீவனற்றப் பார்வையும் உணர்ச்சியற்ற முகமுமாகப் பார்ப்போரை பரிதாபப்பட வைக்கும் தோற்றத்தோடு இருந்தவரை ஒரு சாமியாராக் பிடித்து வைத்திருக்கின்றனர். அருங்காட்சியகத்தில் இருக்கும் தொன்மம் வாய்ந்த பொருள் போல அல்லது உயிரியல் பூங்காவில் இருக்கும் அபூர்வ விலங்கு போலவும், அதை பலர் அதியசமாக பார்ப்பதுமாய் இருந்தது அந்த சாமியாரின் நிலைமை. நல்ல உணவும் உறக்கமும் தேவைப்படும் தள்ளாத வயதில் இல்லாதக் கடவுளைக் காப்பாத்த இவரை சித்திரவதை செய்கிறார்கள்.

அடுத்து உயிரற்ற சிலையையும் உயிருள்ள மனிதனையும் காட்சிப் பொருளாக்கி ஆன்மீகத்தை நிலைநிறுத்தி ஆளுகின்ற காஞ்சி சங்கரமடத்தின் மற்றொரு பாவக்கணக்கைப் பார்ப்போம்.

சென்னை ராஜிவ்காந்தி மருந்துவமனையில் புற நோயாளிகள் மற்றும் நோயாளி அல்லாத காத்திருப்போர் தங்குமிடத்தில் தற்செயலாக கோகிலாம்மாவைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது மோடியின் செல்லாத நோட்டு அறிவிக்கப்பட்டு ஒரு பத்து நாள் இருக்கும்.

சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க – கோகிலாம்மா. இடம்: சென்னை அரசு மருத்துவமனை.

“சட்டுன்னு சாகக் கூட புண்ணியம் பண்ணாத சென்மம் நாங்க. அறிமுகம் இல்லாத மனுசாள் கூட என்னப் பாத்து பாவம் பண்ணின ஜென்மமுன்னு சொல்லும் போது பூமிக்கு பாரமாத்தான் நான் பொறந்தேன்னு நெனைக்காம இருக்க முடிலையே!. யாரைச் சொல்லியும் குத்தமில்ல. சக மனுசாகிட்ட எப்புடி நடந்துக்கனுமின்னு பணம்தான் சொல்றது. ராமா! ராமா! இதுக்கு மேலேயும் லோகத்துல நேக்கு இருக்க முடியலப்பா….” என்று திடிரெனக் கதறி அழுதார் கோகிலாம்மா.

ஐம்பது வயதைக் கடந்திருக்கும் அவர் 20 நாளுக்கு மேலாகக் கணவருடன் மருத்துவமனை வளாகத்தில் தான் தங்கியிருந்தார். மிகவும் பரிதாப நிலையில் தரையில் சுருண்டு அவர் கணவர் படுத்திருந்தார். வயிறு வலி, கிட்னியில் பிரச்சனை என்று இங்கு சேர்ந்த அவர்களைப் பாண்டிச்சேரி புற்றுநோய் மருத்துவமனையில் டெஸ்ட் எடுத்து வரச்சொல்லி மருத்துவமனை நிர்வாகம் கூறிவிட்டது. வீடே இல்லாத அவர்கள் புதுவைக்குப் போக பஸ்சுக்குப் பணமில்லாது அங்கேயே தங்கியிருந்தனர்.

கோகிலாவின் கணவர் பாலசுப்பிரமணியன், புரோகிதத்தையே தொழிலாகக் கொண்டவர் . இவர்களுக்குப் பிறந்த குழந்தை மனவள பாதிப்போடு வளர்ந்து இன்றைக்கு அவனுக்கு பதினைந்து வயது இருக்கும் என்றார் கோகிலா. மகன் பிறந்ததும் சிறிது காலத்திலேயே புரோகிதத் தொழில் பிடிக்காமல் விசேசத்துக்குச் சமையல் செய்ய ஆரம்பித்துள்ளார். காலப்போக்கில் மனவளர்ச்சி பாதித்த மகனுக்கு மருத்துவம் செய்துகொண்டு சென்னையில் வாழ்வதற்கான வருமானம் கிடைக்காததால் சொந்த ஊர் சாதிசனத்தின் மேல் நம்பிக்கை வைத்து காஞ்சிபுரத்துக்குத் திரும்பியுள்ளார். ஐயர் என்ற தகுதியில் சங்கரமடத்தில் சமையல் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

“காஞ்சியில ஒரு சின்ன வாடகை வீட்டுல குடியிருந்துட்டு சங்கரமடத்துல 12 வருசமா சமையல் வேலை செஞ்சுட்டு இருந்தோம். சாப்பாடு மடத்துல முடிஞ்சுரும். வாங்கற சம்பளம் வாடகை, மருந்துக்கும் தான் சரியாருக்கும். ஆசப்பட்டு  ஒன்னு கூட வாங்கிச் சாப்பிட முடியாது.

எந்த நேரமும் அவர் அனல்லேயே நிப்பார். பாத்தரம் தேய்க்கறது, காய் கழுவறது, சுத்தம் செய்றதுன்னு தண்ணியிலேயே எம்பொழப்பு போகும். கால் கையெல்லாம் நரம்பு இழுத்துகிட்டு புண்ணாயிருச்சு. அவருக்கும் கிட்னியில கட்டி வந்தது. நாலு பேரு நல்லவங்க வர்ர எடம் உங்களப் பாத்து முகம் சுழிக்கக் கூடாது வேற வேலை பாத்துக்குங்கன்னு சங்கர மடத்துல சொல்லிட்டாங்க. பத்து வருசத்துக்கு மேல மடத்துல வேலபாத்தோம். திடீர்னு ஒரு நாள் எந்த உதவியும் செய்யாம வரவேணாம்னு சொன்னதும் மேற்கொண்டு என்ன செய்யறதுன்னே ஒண்ணும் தோணல”.

மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

மடத்தில் உள்ள சில மேல் மட்ட நிர்வாகிகளிடம் உதவி கிடைக்கவில்லை என்றதும் மடாதிபதி ஜெயேந்திர  சங்கராச்சாரியிடமே கோகிலா தம்பதியினர் தன் குறையைக் கொட்டியுள்ளார்கள்.

“அய்யா நாங்க 10 வருசத்துக்கு மேல மடத்துலதான் வேலை செய்றோம். உங்கள விட்டா எங்களுக்கு வேற போக்கிடம் கெடையாது. முடியாத பிள்ளைய வச்சுருக்கோம். நீங்க பாத்து உதவி செஞ்சாதான் உண்டுன்னு ஒரு தடவ இல்ல நாலு தடவ சங்கராச்சாரி கால்ல விழுந்துருக்கேன். மவராசன் குந்தியிருக்கற நாற்காலிக்கி நோகாம “நன்னா பேஷா பாத்துப்பா போ”ன்னு கல்கண்ட எடுத்து கையில குடுக்கறாரு.

புளிச்ச ஏப்பக்காரனுக்கு பசியேப்பம் புரியாதுங்க. அதனாலதான் ‘அழுவாதப் பாப்பா இந்தா வாழப்பழம்னு’ கல்கண்டத் தூக்கி கையில கொடுக்குறாரு சங்கராச்சாரி. சாதி பாசமெல்லாம் ஒடம்புல தெம்பு இருக்கற வரைதான். முடியாதவங்கள யாரு வேலைக்கி வச்சுக்குவா? நல்லவா கெட்டவா யாருன்னு தெரியாம உலகம் புரியாம இருந்துட்டோம். எங்க ஆளுங்களுக்கு நீங்க எவ்வளவோ தேவலாம்”.

ஆயிரம் பேருக்கு அன்னதானமா இருந்தாலும் அற்புதமா சமைப்பாராம் கோகிலாவின் கணவர். அவர் சமைச்சதை வயிராற சாப்பிட்டு வாயார வாழ்த்தினவங்க எத்தனெப் பேர் இருப்பாங்க, ஒருத்தர் புண்ணியம் கூட அவங்களக் காப்பாத்தாம நடுத்தெருவுல விட்ட போது பார்ப்பனராவே இருந்தாலும் கடவுள் மேல கோபம் வரத்தேனே செய்யும்?

பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு.

“வாடகை கொடுக்க முடியாம வீட்ட காலி செஞ்சுட்டு கோயில்ல அன்னதானம், தெரிஞ்ச வீட்டு திண்ணையிலப் படுக்கையின்னு ஆறு வருசமா இப்படிதான் வாழ்க்கைய ஓட்டறோம். இந்த நெலமையில எம்பிள்ளைய எங்கூட எப்புடி வச்சுக்க முடியும். அவர் தங்கச்சிதான் பாத்துக்குது. அவங்களும் வசதியானவங்க கிடையாது. ஏதோ எங்க கையில கெடைக்கிற காச எப்பையாவது கொடுப்போம்.

மடத்துக்கு வந்துபோன மாமா ஒருத்தர் நாலு வருசமா மாசம் 500 ரூபா உதவி செஞ்சாரு. அவருக்கும் பெரிய சம்பாத்தியம் இல்ல, பிள்ளைகள வச்சுட்டு சிரமப்படுறவருதான் இருந்தாலும் எங்க மேல எறக்கப்பட்டு குடுத்துட்டு இருந்தாரு.  பிறகு அவரும் பொண்ணு கல்யாணத்துக்கு வாங்கின கடனுக்கு வட்டி கட்டவே சம்பாத்தியம் போதல மண்ணிச்சுருங்கோ, மாமின்னு கைய விரிச்சுட்டார்.”

 

இதுதான் கோகிலாம்மாவின் கதை. அரசு மருத்துவமனையில் இருக்கும் இல்லாமை எனும் வறுமையை கொண்டிருக்கும் மக்கள் கோகிலாம்மாவுக்கு முடிந்த அளவு உதவுகிறார்கள். அம்பானி, டாடா, ஐஏஎஸ், ஐபிஎஸ், ஆர்.எஸ்.எஸ், பாஜக பிரமுகர்கள் வந்து போகும் பணம் பிதுங்கும் சங்கர மடம் உதவ முடியாதென்று கைவிரித்து விட்டது. பொன்னாருக்கு கட்டாந்தரையும் பொறுக்கி புகழ் சுப்ரமணிய சாமிக்கு சம பொன்னிருக்கையும் தரும் சங்கரமடத்தில் பார்ப்பனியத்தின் பேதம் மட்டுமல்ல, ஏழை பணக்காரன் பேதமும் உண்டு என்பதை கோகிலாம்மாவும் அந்த தொண்டுக் கிழ சாமியாரும் உணர்த்துகிறார்கள்.

காஞ்சிப் பெரியவரின் அருளுரையின் படி பார்த்தால் காஞ்சிமடத்தில் இருந்த பெரியவர், வேதம் விதித்த தர்ம வழியைப் பின்பற்றிப் புண்ணியத்தை அடைந்தவர். கோகிலா தம்பதியோ ஆசை வயப்பட்டு பிறருக்குத் தீங்கு செய்து பாவத்துக்கு ஆளானவர் என்பதுதான்.

மனு தர்மத்தை ஒழிக்காமல் சங்கரராமன்களுக்கும், கோகிலாம்மாக்களுக்கும் நீதி கிடைப்பதில்லை, சங்கராச்சாரிகளுக்கும் தண்டனை கிடைப்பதில்லை!

– சரசம்மா

 1. முதலில் கோகிலாம்மாவை பார்த்து விட்டு காஞ்சிபுரம் சென்றோம் என்று சொல்லுங்களேன் ஏன் இந்த வேஷம் ? கோகிலாம்மாவின் நிலையை வைத்து காஞ்சி பெரியவர் மீது வெறுப்பை தூண்டும் உங்கள் உள்நோக்கம் புரிகிறது.

  அதெல்லாம் இருக்கட்டும் அந்த முதியவர்களுக்கு நீங்கள் என்ன செய்திர்கள் ? பாண்டிச்சேரி செல்ல எதாவுது உதவி செய்திர்களா அல்லது வழக்கம் போல் அவதூறு பரப்ப ஒருவர் கிடைத்தார் என்று அவர்களின் கதையை மட்டும் கேட்டு விட்டு வந்திர்களா ?

  • Is there any problem if they first visited and then moved to mada? in the article they didnt mention which one they visited first. But article mean to say your point only that Kanchi periyava is a culprit and corrupt. do you agree this or not?

   Vinavu team contribute to those people are not? In my opinion they might have helped them. With Vinavu kind of people only some humanity is left.

   People like you with selfish mind telling they volunteered to take that pain, let them enjoy it. And view every other person also with the same mind set. (here also i am not telling you dont have helping nature, you may be doing it here and there at your own likeliness).

 2. இவரு பெரிய அப்பாடக்கரு அந்த பெரியவரின் mind வாய்ஸ் இவருக்கு கேட்டுச்சாம்.

  நீங்க போர்வை வேணும்மானு கேட்டதற்காக தான் அந்த பெரியவர் எரிச்சல் அடைஞ்சு இருப்பார், கொஞ்சம் இமயமலை ரிஷிகேஷ் ஹரித்துவார் பக்கம் போய் பாருங்கள் அந்த கடும் குளிரில் பல வயதான பெரியவர்கள் வெறும் உடம்போடு (கங்கை நீர் ஐஸ் மாதிரி இருக்கும், வேகமும் மிக அதிகமாக இருக்கும்) விடியல் காலையில் நீராடுவார்கள். அதன் பிறகு தியானம் செய்ய போவார்கள், இந்த மாதிரியான வாழ்வை விரும்பி ஏற்பவர்கள் பலர் இருக்கிறார்கள், அதை கிண்டல் செய்வது நியாயம் இல்லை.

 3. சங்கராச்சாரியை துணிந்து உள்ளே தள்ளிய எங்கள் அம்மா இப்போது இருந்திருந்தால் இந்த காவி கழிசடை கம்பி எண்ணிக்கொண்டிருக்கும்!ஆனால் அவரும் போய்விட்டார்!சின்னமாவையும் மோதி அழிக்க பார்க்கிறார்!

 4. திரு. மணிகண்டன் அவர்களுக்கு, சங்கராச்சாரியாரை பற்றி உங்க நம்பிக்கை உங்களுக்கு மகிழ்ச்சிய தரலாம். ஆனால், உண்மை மகிழ்ச்சியோட மட்டும் சம்பந்தப்பட்டது இல்ல. சில நேரங்களில் நம்ம முகத்துலயும் அது அறையும். அதை எதிர்க்கொள்ளுவதுதான் நாம் உண்மைய தெரிஞ்சிக்கிறதுக்கான முதல்படி.

  உங்க சங்கராச்சாரியார் பற்றி அப்படி நேரடியான கண்ட சாட்சியங்கள் இவை, நான் தினமும் பயணிக்கும் இரயிலில் சந்தித்த ஈஸ்வரிக்கு வயது 35. குடியால் கணவரை இழந்தவர். வாலஜாபாத்திலிருந்து அருகிலிருக்கும் சங்கரமடத்துக்கு மடத்தை சுத்தம் செய்யும் வேலைக்கு செல்பவர். அவரிடம் பேசியதிலிருந்து…”மடத்துல காலைல 9 மணியிலருந்து சாயந்திரம் 5 மணி வரை வேலை. அவ்ளோ பெரிய மடத்தை சுற்றிலும் பெருக்கணும், கூடவே, பூஜைக்கான மாடுகள்
  இருக்கிற முழு கொட்டகையும் சுத்தம் செய்யணும் முடிந்ததும், காமாட்சி அம்மன் கோயில் சத்திரங்கள் இருக்கு அதையும் சுத்தம் செய்யணும். இந்த வேலைய பத்துக்கும்மேற்பட்டோர் செய்றோம். மாசம் 3000 சம்பளம்” என்றார்.

  “நிறைய பெரிய மனுசங்க வர்ற இடம் சாப்பாட்டுக்கு குறை இருக்காது” என்றேன்.

  “அதெல்லாம் கிடைக்காதுக்கா, எல்லாருக்கும் கிடைக்கற காமாட்சி அம்மன் கோயில் அன்னதானம்தான் எங்களுக்கும். பெரிய, பெரிய பணக்காரங்க வருவாங்க அவங்க கொண்டுட்டு வர்ற பழம் பூ, எல்லாத்தையும் தினமும் அக்னி ஓமத்துலத்தான் போடுவாங்க…. போன வருசம் டிசம்பர்ல பெரிய மழை பெய்ச்சது இல்லயா? அப்ப குடும்பம் நடத்துறதே ரொம்ப கஷ்டமாயிச்சி, வேலை செய்யற எல்லாருமா ஒண்ணா சேர்ந்து எதவாது அட்வான்ஸ் மாதிரி கொடுக்கச் சொல்லி கேட்டோம். சூப்பரவைசரு பெரியவாகிட்ட சொல்றேன் சொன்னாரு.

  ஏற்பாடும் செஞ்சாங்க, கொடுக்கும்போது எல்லாரையும் லைன்னா நிக்க வெச்சி, அவர்கிட்டருந்து பணம் வாங்கும்போது போட்டோ எடுத்தாங்க, வாங்கறவங்க முதல்ல அவரு கால்ல விழணும், எழுந்ததும்…. ஒரு பாயி, பழம், காசு 2000 ஆயிரமுனு கொடுத்தாரு. எனக்கு, கால்ல விழறதுல்லாம் புடிக்காது. மனுசன் கால்ல மனுசன் ஏன் விழணும். ஆனா எனக்கு காசும்வேணும் என்ன செய்யறதுனு புரியாம கடைசியா நின்னேன். சுப்ரவைசர்கிட்ட சொன்னேன் அட்வான்சா தாங்க, எங்க வீட்டுகாரு கால்லயே விழுந்தது இல்ல. யாரு கால்லயும் விழ மாட்டேன்னுட்டேன். எனக்கு மட்டும் போட்டோ எடுக்காம பணம் கொடுத்தாங்க.

  அவரு எல்லாம் தெரிஞ்சவருன்றாங்க…

  விதவைக்குனா…. கரெக்டா குங்குமம் தர மாட்டறாரு… இன்னும் இதமாதிரி என்னன்மோ நிறைய சொல்றாங்க… உடனே

  நான் கேட்டேன், வெள்ளம் வந்து வீடே போச்சு, சோத்துக்கே கஷ்டமாயிடுச்சி, நம்ம சொன்னப் பிறகுதான் நம்ம கஷ்டமே அவருக்கு தெரியுது… பொம்பளங்க போய் நின்னா மேல இருந்து கீழ வரைக்கும் பார்க்குறாரு…. பொட்டு இல்ல, கயிறு இல்ல, மெட்டி இல்ல… விதவன்னு தெரியாதா… இதுக்குகூடவா பெரிய சாமி வேணும்னு கேட்டேன்…..எல்லாரும் சிரிச்சாங்க….” என்றார். பிறகு குடும்ப கஷ்டத்த பத்திப் பேசிட்டு பிரிஞ்சோம்.

  இன்னொருவர் நந்தினி கல்லூரி மாணவி. இரயில் பயணி அவரும் வாலாஜாபாத்துதான். காஞ்சிபுரம் கோவில்களில் சாமி தூக்குபவரின் மகள்.

  “எனக்கு புத்தி தெரிந்ததிலிருந்து என் குடும்பத்திலிருக்கும் ஆம்பளங்க எல்லாருக்கும், ஜல்லிக்கட்டு மாடுகளுக்கு இருக்கும் திமில் போல் இரண்டு தோள்களிலும் இருக்கும். எனக்கு புத்தி தெரியாத வயதில் அதை அழுத்தி, அழுத்தி விளையாடுவேன். அப்பல்லாம் எனக்கு அது அவங்களுக்கு வலிக்கும்னு தெரியாது.. இப்ப நினைச்சா கஷ்டமாயிருக்கு. காஞ்சிபுரம் கோயில்ல திருவிழா ஆரம்பம் ஆனதும் தொடர்ந்து ஒவ்வொரு கோயிலா விழா ஆரம்பிச்சிடும், எல்லா கோயில் சாமிகளையும் தூக்கிட்டு இவங்கதான் சுத்துவாங்க. சாமி மட்டுமில்ல, திண்டு மாதிரி நாலு ஐயருங்களையும் திருப்பதி குடையையும் சேர்த்து சுமக்கணும். அதுக்கப்பறம் ஒரு வாரத்துக்கு எழுந்துக்கவே முடியாம அடிச்சிப்போட்ட மாதிரி சாப்பிட்டு, சாப்பிட்டு தூங்கிடுவாங்க…. அவ்ளோ கஷ்டமான வேலை அது. ஆனா, சம்பளத்த மட்டும் பல வருஷமா ஏத்தறதும் இல்ல.. அதப்பத்தி யாரும் யோசிக்கறதும் இல்ல… சமீபத்துலக்கூட ஏகாம்பர நாதர் கோயில் சாமிய தூக்க மாட்டோம் சம்பளம் ஏத்துங்கனு நடு ரோட்டுலய சாமிய இறக்கி சாமியோட உட்கார்ந்துட்டாங்க, இத, போஸ்டர்லாம் கூட போட்டாங்க… ஏழைங்க கஷ்டம் ஐயருங்களுக்குத்தான் தெரியலனா அந்த சாமிக்குமா தெரியலனு என் அப்பாக்கிட்ட கேட்பேன்” என்றார்

  காஞ்சிபுரத்த சுத்தினா, சங்கராச்சாரி……யார்னு பல கதைகள் பார்க்கலாம். இது ஒண்ணும் சிதம்பர ரகசியம் இல்ல..

  • ******

   காஞ்சி ‘மடம்’ அது ஒன்றும் இன்போசிஸ் போன்ற கார்பொரேட் கம்பெனி அல்ல, இன்சூரன்ஸ், increment அல்லோவான்ஸ் etc etc கொடுக்க அவர்களால் என்ன முடியும்மொ அதை செய்கிறார்கள், விருப்பம் இருப்பவர்கள் அங்கே வேலை பார்க்கலாம் இல்லையென்றால் வேறு வேலைக்கு போகலாம் யாரும் உங்களை அங்கே தான் வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப்படுத்த போவதில்லை.

   ஒருவர் மீது அவநம்பிக்கையை உருவாக்க வேண்டும் என்றால் அவரின் நல்ல பெயரை நாசம் செய்ய வேண்டும், அதை தான் நீங்களும் வினவு போன்றவர்களும் காஞ்சி மடத்திற்கு எதிராக செய்து கொண்டு இருக்கிறீர்கள்

   • சங்கரமடத்திற்கு ஒரு பில்லியன் டாலருக்கு சொத்து இருக்கிறது ,சங்கரமடம் வரி கட்டுவது இல்லை . கார்ப்பரேட் ஸ்டைலில் நிர்வாகம் செய்யப்பட வேண்டிய மடம்.

    மதுரை மடம் 2000 கோடி சொத்து கொண்டுள்ளது .
    நித்தியானந்தா2000 கோடி சொத்து வைத்துள்ளார்.
    அவர்களுடைய கார்ப்பரேட் மெர்ஜர் சரியாக போகவில்லை

 5. நல்ல சம்பளம் தரணும்னா இன்போசிஸ் மாதிரி கம்பெனியாவா இருக்கணும்? சின்ன கம்பெனியா,இல்லை தனியார் வீடா இருந்தாக்கூட ஒரு மனிதாபிமானத்தோட வாழ்க்கைக்குத் தேவையானதைத் தர முடியாதா? அப்படியென்ன சங்கரமடம் திவாலாய்ப் போய் பணமில்லாமயா கிடக்கு?

  • காஞ்சி மடத்தினர் அவர்களுக்கு வரும் வருமானத்தை வைத்து எவ்வுளவோ நல்ல காரியங்களை செய்து கொண்டு இருக்கிறார்கள், எத்தனையோ கோவில்களை புராணமைப்பு செய்து இருக்கிறார்கள் சென்னையில் உள்ள child trust hospital கோவையில் கண் மருத்துவமனை, தமிழகம் முழுவதும் Hindu Mission Hospital 50க்கும் பள்ளிகளை நாடு முழுவதும் நடத்தி கொண்டு இருக்கிறார்கள், உத்த்ராஞ்சல் போன்ற மாநிலங்களில் பழங்குடி மக்களுக்காக மருத்துவமனை என்று எவ்வுளவோ செய்கிறார்கள் அதனால் மனிதாபிமானத்தை பற்றி நீங்கள் அவர்களுக்கு சொல்ல தேவையில்லை…

   • Sankara Mutt mints money by running the Child Trust Hospital in Chennai and the Eye Hospital at Coimbatore.Jayendrar ran into trouble with Jaya due to business rivalry in acquiring one more hospital by Jayendrar.Child Trust Hospital and the Eye Hospital at Coimbatore are not run as charitable institutions.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க