மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்

நாள்: 07.11.2019

பத்திரிகை செய்தி

  • மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளர் தேர்வை வெளிப்படைத்தன்மையோடு, நேர்மையாக நடத்துக!
  • யாரை நியமிக்க சட்டவிரோதமான செயல்கள் நடைபெறுகின்றன?
  • முந்தைய துணைவேந்தர் திரு. செல்லத்துரை காலத்தில் நடந்த முறைகேடுகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்?

1. கடந்த 31.05.2019 அன்று வெளியான அறிவிப்பின்படி மதுரை காமராஜர் பல்கலைக் கழக பதிவாளருக்கான விண்ணப்பங்கள் 21.06.2019-க்குள் அளிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டது. விண்ணப்பப் படிவத்தில் தங்கள் மீது குற்ற/துறை ரீதியான நடவடிக்கைகள் நிலுவையில் இல்லை என விண்ணப்பதாரர்கள் உறுதிமொழி அளிக்க வேண்டும். விண்ணப்பங்களை பரிசீலிக்கக் குழு அமைக்கப்பட்டு 25.07.2019 அன்று 20 பேராசிரியர்கள் நேர்காணலுக்கு வரத் தகுதியானவர்கள் எனப் பட்டியல் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலே குளறுபடியாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. Dr.Paul Mary Deborrah என்பவர் பெயர் இருமுறை(1,7) இறுதி செய்யப்பட்டுள்ளது. பேராசிரியர்கள் திரு.ஓ.ரவி மற்றும் கர்ணமகாராஜன் ஆகியோர் “தற்காலிகமாக இறுதி செய்யப்பட்டுள்ளனர்” (Provisionally Shortlisted) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகச் சட்டப்படி தற்காலிகமாக இறுதி செய்தல் சட்டவிரோதம்.

மேலும் பல்கலைக் கழகத் தேர்வாணையர் திரு.ஓ.ரவி மீது துறைரீதியான நடவடிக்கையும், ரூபாய் 40 லட்சம் அரசுப் பணத்தை மோசடி செய்ததாக கு.எண்.09/2017 என்ற கிரிமினல் வழக்கு 21.06.2019-ல் உசிலம்பட்டி தாலுகா காவல்நிலையத்தில் நிலுவையிலிருந்தது. பேராசிரியர் திரு.கர்ணமகாராஜன் மீது ஒழுங்கு நடவடிக்கை நிலுவையில் இருந்தது. சட்டப்படி இவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஏற்கப்பட்டு, இவர்களில் திரு.ஓ.ரவி மட்டும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டுள்ளார். இதற்குரிய காரணத்தை துணைவேந்தர் விளக்க வேண்டும்.

2. செப் 23, 2019 அன்று பதிவாளர் நேர்காணல் (Interview) என அறிவிக்கப்பட்டிருந்தது. பின்பு ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. காரணம் அறிவிக்கப்படவில்லை. 23.09.2019 அன்று நடந்த பல்கலைக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டத்தில் அரசின் பிரதிநிகளை நேர்காணல் குழுவில் கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. சிண்டிகேட் உறுப்பினர்களின் எதிர்ப்பால் நேர்காணல் குழு உறுப்பினர்கள் குறித்த அஜண்டா (Item no.65) ஒத்திவைக்கப்பட்டது.

3. உச்சகட்ட விதிமீறலாக MKU ACT-CHAPTER VI- SEC.1-ன்படி நேர்காணல் குழுவை சிண்டிகேட் இறுதி செய்யாமலே, நவம்பர் 7, 2019 அன்று நேர்காணல் நடைபெறும் என அறிவிப்பு செய்யப்பட்டு கடிதங்கள் அனுப்பப்பட்டன. இதனை சிண்டிகேட் உறுப்பினர்கள் எதிர்த்ததால் இன்று நடைபெற இருந்த நேர்காணலும் சந்தேகத்திற்கிடமான முறையில் ரத்து செய்யப்பட்டது.

4. மேற்கண்ட நடைமுறைகள் துணைவேந்தருக்கோ, அதிமுக அமைச்சர்களுக்கோ வேண்டிய நபரை பதிவாளராக்குவதற்கான வேலைகள் நடைபெறுகிறதோ என்ற சந்தேகத்தை உருவாக்குகிறது. இதற்கு துணைவேந்தர் விளக்கமளிக்க வேண்டும்.

படிக்க:
கேரளம் : மாவோயிச நூல்கள் வைத்திருந்ததாக சி.பி.எம். மாணவர்கள் உபா சட்டத்தில் கைது !
♦ காஷ்மீர் ஒடுக்குமுறைக்கு எதிராக பதவி விலகிய ஐ.ஏ.எஸ். கண்ணன் கோபிநாத் மீது குற்றப்பத்திரிகை !

துணைவேந்தரின் செயல்பாடுகள் பல்கலைக் கழகத்தை மேம்படுத்துமா?

02.01.2019 அன்று பொறுப்பேற்ற துணைவேந்தர் திரு.கிருஷ்ணன், பத்து மாதங்களை  நிறைவு செய்துள்ளார். பல்கலைக் கழகத்தில் நிலவிவரும் முறைகேடுகளை அகற்றுவதே தனது முக்கியப் பணி என்றார். இன்று நிலைமை என்ன?

1. நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிர்மலாதேவி பிரச்சனையில் காவல்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த பின்பும், சம்மந்தப்பட்டவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க, குழு கூட அமைக்காததேன்?

2. செனட், சிண்டிகேட்டிற்கான Academic council- தேர்தல்கள் நடத்தப்படாதது ஏன்?

3. பல்கலைக் கழக சட்டப்படி உதவிப் பதிவாளர் தகுதியில் உள்ள ஒருவரே, பல்கலைக் கழக மக்கள் தொடர்பு அலுவலராக நியமிக்க வேண்டும். ஆனால், கண்காணிப்பாளர் தகுதியில் உள்ள அறிவழகன் என்பவர் தனது அரசியல் செல்வாக்கால் தொடர்ந்து 5 ஆண்டுகள் மக்கள் தொடர்பு அலுவலராக உள்ளார். துணைவேந்தர் மவுனம் காப்பதேன்?

4. நிர்மலாதேவி பிரச்சனையில் விசாரிக்கப்பட்ட பேராசிரியர் கலைச்செல்வன், தற்காலிகப் பதிவாளர் பேராசிரியர் சுதா, பல்கலை ஊழியரை மிகவும் தரக்குறைவாகப்பேசி மிரட்டியது தொடர்பாக பதிவாளர் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை ஏன்? பதிவாளர் நிலைமையே இதுதான் என்றால் நிர்வாகம் எப்படி நடக்கும்?

மேற்கண்ட கேள்விகளுக்கு துணைவேந்தர் உரிய விளக்கமளித்து அறிக்கை வெளியிட வேண்டும். 31.05.2019 தேதிய பதிவாளர் தேர்வு அறிவிக்கையை ரத்து செய்து, புதிதாக வெளியிட வேண்டும். தேர்வுமுறை, தேர்வு நடவடிக்கைகள் வெளிப்படையாக இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும். பல்கலைக் கழக சட்டங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
முகவரி:384, முதல் தளம்,
கிழக்கு 8-வது தெரு,
கே.கே.நகர், மதுரை-20.  
தொடர்புக்கு : 98653 48163.

வழக்கறிஞர் சே. வாஞ்சி நாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்

பேரா.அ. சீனிவாசன்,
தலைவர்

ம. லயனல் அந்தோணிராஜ்,
செயலர், மதுரைக் கிளை

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க