கடந்த ஐந்தாண்டுகளுக்கும் மேலாக, ஆளுநர்கள் மூலம் தமிழ்நாட்டின் பல்கலைக்கழகங்களுக்கு சங் பரிவாரத்தைச் சேர்ந்தவர்கள் துணைவேந்தர்களாக நியமிக்கப்படுவது வழக்கமாகி வருகிறது. இவர்களை வைத்து பல்கலைக்கழக வளாகங்களில் தமது நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றிக் கொள்ளவும் ஊடுருவல் நடத்தவும் தொடர்ந்து முயன்று வருகிறது ஆர்.எஸ்.எஸ் கும்பல்.
மேற்படி நிகழ்ச்சிநிரலைச் சிரமேற்கொண்டு நடத்தி வரும் நபர்களில் முதன்மையானவர் சேலம் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தரான ஜெகந்நாதன். ஊழல் குற்றவாளியான இவரை, ஆளுநர் ரவி தொடர்ச்சியாகக் காப்பாற்றி வருவதே, தனது விசுவாசி, சங் பரிவார் கும்பலைச் சேர்ந்தவர் என்பதற்காகத்தான். ஜெகந்நாதனும், அதற்குத் தோதாகவே பல்கலைக்கழக வளாகத்தை மாற்ற முயன்று வருகிறார். பெயரில் மட்டுமே பெரியாரைக் கொண்டிருக்க வேண்டும், வளாகத்தில் எவரும் முற்போக்கு – ஜனநாயக சக்தியாக இருக்கக் கூடாது, தனது ஊழல் – அடாவடிகளைப் பற்றிப் பேசக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்துகிறார் ஜெகந்நாதன்.
சமீபத்தில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் கூட்டம் கடந்த 22.11.2024 அன்று நடைபெற்றது. அக்கூட்ட நிகழ்ச்சிநிரலில், ஜெகந்நாதனால் கேடான முறையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் திரு. பிரேம்குமாரை நிரந்தப் பணி நீக்கம் செய்வது குறித்து சேர்க்கப்பட்டிருந்தது. இதற்கு முன்பு 6.11.2023 அன்று நடைபெற்ற 114-வது சிண்டிகேட் கூட்டத்திலும் பிரேம்குமாரை பணி நீக்கம் செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பெரும்பான்மை உறுப்பினர்களின் எதிர்ப்பால் தோல்வியடைந்தது. பிரேம்குமாரை பழிவாங்கும் உள்நோக்கத்துடன் தான், ஏற்கெனவே தோல்வியடைந்த தீர்மானத்தை மீண்டும் சிண்டிகேட் கூட்டத்தில் முன்வைத்தார் என குற்றம் சாட்டுகின்றனர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர்.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கப் பொதுச்செயலாளராக உள்ள பிரேம்குமார், தனது பணிக்காலத்தில் பல்கலையில் நடைபெறும் பல முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார். பல்கலையின் சாசன விதிகளை மீறி பேராசிரியர் ஒருவருக்கு மீள் பணி வழங்குவதற்கு, பல்கலைத் துணைவேந்தரான ஜெகந்நாதன் சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற இருப்பதை முன்னறிந்த பிரேம்குமார், இம்முறைகேடு குறித்து உயர் கல்வித்துறைச் செயலாளருக்குப் புகாரளித்தார். இந்நடவடிக்கையால் எரிச்சலடைந்த துணைவேந்தர், சிண்கேட் ‘ரகசிய’த்தை வெளியிட்டதற்காக பிரேம்குமாருக்கு மெமோ அனுப்பியதோடு, அவரது பதிலில் திருப்தியில்லை என்று 5.3.22 அன்று பணியிடை நீக்கமும் செய்தார். இதிலும் ஆத்திரம் அடங்காத ஜெகந்நாதன், தனது அடிவருடியான பல்கலைப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலின் மூலம், வரலாற்றுத்துறை மாணவி ஒருவரைக் கொண்டு, பொய்யான பாலியல் புகார் ஒன்றை பிரேம்குமார் மீது சேலம் சூரமங்கலம் போலீஸ் நிலையத்தில் அளிக்க வைத்துள்ளார். இம்மாதிரியான புகார்களைப் பல்கலையின் உள்விசாரணைக்குழுவின் முன் தெரிவிக்காமல், போலீஸ் நிலையத்திற்குக் கொண்டு செல்வதன் மூலம், உடனடியாக பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுப்பதும், சிறைக்கு அனுப்புவதுமே ஜெகந்நாதன் கும்பலின் நோக்கமாக இருந்தது.
பிரேம்குமார் மீது நடவடிக்கை எடுப்பதையே நோக்கமாகக் கொண்டுள்ள பதிவாளரான தங்கவேல் மீது பல ஊழல் முறைகேடு புகார்கள் உள்ளன. அது மட்டுமின்றி, கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்றுவிட்டு கணினித்துறைத் தலைவராகப் பதவி வகிக்கிறார். இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, கடந்த பிப் .7 ஆம் தேதி பொறுப்பாளரை பணியிடை நீக்கம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டும் ஜெகந்நாதன் அதை நிறைவேற்றவில்லை. அரசு விதிமுறைகளுக்கு எதிராகத் தனியார் நிறுவனம் தொடங்கிய முறைகேட்டில் ஈடுபட்ட குற்றவாளியான துணைவேந்தர் ஜெகந்நாதனும், ஊழல் குற்றவாளியான தங்கவேலும் இணைந்து பிரேம்குமாருக்கு எதிராக சதி செய்து வருவது ஊரறிந்த உண்மை.
தன் மீதான குற்றச்சாட்டுகள் எதுவும் உண்மையில்லை என்பதை ஆதாரத்துடன் பிரேம்குமார் நிரூபித்திருக்கிறார். வரலாற்றுத்துறை மாணவ-மாணவிகளும் அவர் மீது கொடுக்கப்பட்ட பாலியல் புகார் பொய்யானது என்று பல்கலைக்கழக உள்ளக விசாரணைக் குழுவில் தெரிவித்திருக்கின்றனர். இக்குற்றச்சாட்டுகள் குறித்த வழக்கானது சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இவ்வழக்கு நீடிப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத சூழலில், வழக்கை முடிக்கக்கூடாது என்பதற்காகவும், பிரேம்குமாரை பழிவாங்க வேண்டும் என்பதற்காகவும் தொடர்ந்து வாய்தா கேட்டு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தவிர்த்து வருகிறார், ஜெகந்நாதன். ஒருபுறம் நீதிமன்ற வழக்கை இழுத்தடித்துக் கொண்டும், மறுபுறம் பிரேம்குமாரை நிரந்தரப் பணிநீக்கம் செய்யவும் திட்டமிட்டிருப்பதானது துணைவேந்தர் ஜெகன்நாதனின் உள்நோக்கத்தைப் பளிச்செனக் காட்டுகிறது.
இதேபோல, “மெக்காலே-பழமைவாதக் கல்வியின் பகைவன்” என்ற நூலை வரலாற்றுத் தரவுகளிலிருந்து எழுதி வெளியிட்டதற்காக, பெரியார் ஆய்வுமையப் பொறுப்பாளரும், இதழியல் துறை பேராசிரியருமான சுப்ரமணிக்கும் மெமோ அனுப்பியிருக்கிறார் ஜெகன்நாதன்.
பெரியார் பல்கலையில் இந்த நிலை என்றால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் துணைவேந்தரையே இடைநீக்கம் செய்திருக்கிறார் ஆளுநர் ரவி. தனக்கு பல்கலையின் சட்ட ஆலோசகர் பொறுப்பு கிடைக்காததால், எட்டாண்டுகளுக்கு முன்பாக நியமனம் செய்யப்பட்ட 40 பேராசிரியர்களின் நியமனம் செல்லாது என வழக்கு தொடர்ந்துள்ளார் ஒரு நபர். இதன் பிறகு நியமிக்கப்பட்ட விசாரணைக்குழுவில் தமது தரப்பை நிரூபித்து விட்டனர் பேராசிரியர்கள். அதன் பிறகும் அவர்கள் மீதான விசாரணையை மீண்டும் நடத்த வேண்டும், இழுத்தடிக்க வேண்டுமென துணைவேந்தர் திருவள்ளுவனுக்கு நெருக்கடி கொடுத்துள்ளது ஆளுநர் தரப்பு. அவர் பணிந்து போகாத நிலையில், இந்தப் பிரச்சினையைத் தவறாகக் கையாண்டுள்ளார் எனக் குற்றம்சாட்டி பணியிடை நீக்கம் செய்துள்ளார் ஆளுநர் ரவி. இந்த நடவடிக்கையில், ஆளுநர் மாளிகையில் உள்ள ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியும், போலி வழக்கு தொடுத்த ‘வழக்கறிஞரும்’ கூட்டணி அமைத்துச் செயல்படுவது அம்பலமாகியுள்ளது.
இதுபோல, ஆர்.எஸ்.எஸ் – இந்துத்துவ சித்தாந்தத்திற்கும், தமது எடுபிடிகளின் ஊழல் முறைகேடுகளுக்கும் எதிராக இருக்கின்ற முற்போக்கு – ஜனநாயக சக்திகளைப் பழிவாங்கும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது காவி கும்பல். பல்கலைக்கழகங்களை காவிக்கூடாரமாக மாற்றத் துடிக்கும் ஆளுநர் ரவி – ஆர்.எஸ்.எஸ் கும்பலின் சதிகளை முறியடிக்க, தமிழ்நாட்டின் முற்போக்கு – ஜனநாயக சக்திகள் அணிதிரள்வது உடனடித் தேவை.
தினேஷ்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram