வைகுண்டருக்கும் சனாதனத்துக்கும் சம்பந்தமே இல்லை!
அய்யாவழி நூலை ஆளுநர் வெளியிட எதிர்ப்பு!
நெல்லை அருகே செங்குளத்தில் இன்று (பிப்ரவரி 28) அய்யா வைகுண்டரின் 193வது பிறந்த நாள் விழாவில் ”அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்” எனும் நூலை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வெளியிட்டு உரையாற்றுகிறார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யா தர்மயுக வழி பேரவை தென்மண்டல பொறுப்பாளர் தருவை முருகன், மகளிர் அணி ராமலட்சுமி பாலமுருகன், நெல்லை மாவட்ட செயலாளர் சிதம்பரம் ஆகியோர் நெல்லையில் பிப்ரவரி 26 அன்று பேட்டி அளித்தனர். அதில்:
அய்யா வைகுண்டர் ஜாதி கொடுமையைத் தகர்த்தெறிந்தவர். பெண் அடிமைத்தனத்தை அகற்றியவர். பெண்கள் அனைவரும் தோள் சீலை அணியும் போராட்டத்தை நடத்தி வெற்றி பெற்றவர். அடிமை வரி விதிப்பைத் தகர்த்ததோடு 18 ஜாதிகளையும் ஒன்று என வலியுறுத்தியவர். அத்தகைய பெருமைமிக்க ஐயா வைகுண்டரை சனாதனம் என்ற வட்டத்துக்குள் அடைக்க முயல்வது தவறாகும். ஐயா வைகுண்டருக்கும், சனாதனத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிறப்பில் பாகுபாடு பார்ப்பது அய்யா வழியில் கிடையவே கிடையாது. கோயில் கருவறையில் நுழைந்து இறைவனைத் தொட்டுப் பணி செய்ய வைத்தவர் வைகுண்டர். தலைப்பாகை அணியச் செய்தவர் அவர். இவற்றையெல்லாம் சனாதனம் ஏற்குமா? கோயில் கருவறையில் இறைவனைத் தொட்டு வழி செய்ய சனாதனம் இடம் கொடுக்குமா?
எனவே ”அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்” என்ற பெயரில் நூல் வெளியீட்டு விழா நடத்துவது தவறாகும். ஐயா வைகுண்டருக்கும், சனாதனத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எனவே சனாதனத்தோடு தொடர்பு படுத்திய அய்யாவழி நூலினை தமிழ், மலையாளம், இந்தி, ஆங்கிலம் ஆகிய நான்கு மொழிகளில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
அய்யா வைகுண்டர், வள்ளலார், திருவள்ளுவர் உள்ளிட்ட சாதி மறுப்பு மற்றும் சமூக சீர்திருத்தவாதிகளை ஆன்மீகம் எனும் பெயரில் அபகரித்துக் கொள்ள முயற்சிக்கும் இந்துத்துவ பாசிச கும்பலை அம்பலப்படுத்தி வீழ்த்துவோம். ஜனநாயகத்தை மறுக்கும் பார்ப்பனிய சனாதனத்தை எதிர்த்து ”வேண்டும் ஜனநாயகம்” என்று முழங்குவோம்.
பதிவு
மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.
9385353605

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram