சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் மறுக்கும் சங்கி ஆர்.என்.ரவி

ஒரு பக்கம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டு இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு நினைவு கூரத் தவறியதாக சமீபத்தில் ஆளுநர் ரவி திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்தில் கையெழுத்திடாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மறுத்து வருவது கடும் கண்டனத்துக்குள்ளாகியுள்ளது.

சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்குவது குறித்து மதுரை பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிமன்றப் பேரவைக் குழு இரண்டும் சேர்ந்து ஆகஸ்டு மாதம் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைத்தன. இந்த தீர்மானத்தில் கையெழுத்திட ஆளுநர் ரவி மறுத்து வருகிறார். இது குறித்து சிபிஎம், சிபிஐ, திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

சங்கரய்யா அவர்கள் விடுதலைப் போராட்ட காலத்தில் 4 ஆண்டுகள் வரை சிறையில் இருந்துள்ளார்.  அதன் பிறகும் நான்கு ஆண்டுகள் சிறைவாழ்க்கை, மூன்றாண்டுகள் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டுள்ளார். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்த நேரத்தில், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இன்டர்மீடியட் படித்துக் கொண்டிருந்தார் சங்கரய்யா அவர்கள். பட்டப்படிப்பின் இறுதியாண்டுத் தேர்வை எழுதுவதற்கு 15 நாள்களுக்கு முன்பாகக் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 18 மாதங்கள் சிறைக்கொடுமைகளை அனுபவித்தார். இதனால் அவரது கல்லூரி வாழ்க்கையை இழக்க நேர்ந்தது.

சங்கரய்யா அவர்களின் தியாகத்தை அங்கீகரிக்கும் விதமாக தமிழ்நாடு அரசு தகைசால் தமிழர் விருது வழங்கியது.


படிக்க: ஆளுநர் மாளிகை மீது குண்டு வீச்சாம்! | கவிதை


தமிழ்ச்சமூகத்துக்கு என்.சங்கரய்யா ஆற்றியிருக்கும் பணிகளை பாராட்டும் விதமாக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராசர் பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. இதையொட்டி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வரும் நவம்பர் 2-ஆம் தேதி பட்டமளிப்பு விழா நடைபெறும் நிலையில் தீர்மானத்தில் கையெழுத்திடாமல் ஆர்.என்.ரவி மறுத்து வருவதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

இதுகுறித்து பேசியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர்.பாலகிருஷ்ணன் “விடுதலைப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் இப்போது என்.சங்கரய்யாவுக்கு பட்டத்தை மறுக்கிறார்கள்” என்று சாடியுள்ளார்.

ஒரு பக்கம் சங்கரய்யாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுப்பதற்கான கோப்பில் கையெழுத்திட மறுத்துவிட்டு இன்னொரு பக்கம், தமிழ்நாட்டின் சுதந்திரப் போராட்ட வீரர்களை தமிழ்நாடு நினைவு கூரத் தவறியதாக சமீபத்தில் ஆளுநர் ரவி திசைதிருப்பும் வகையில் பேசியுள்ளார். சாதி கடந்து மக்களைத் திரட்டி போராடிய மருது பாண்டியர்கள் குறித்து அவதூறாக பேசியுள்ளார்.

மக்கள் நலன் சார்ந்த மாநில அரசின் தீர்மானங்களை திமிர்த்தனமாகக் கிடப்பில் போட்டுவிட்டு, எது வேண்டுமானாலும் பேசலாம் என்று நினைத்துக் கொண்டு ஆர்.எஸ்.எஸ்-இன் திட்டத்தின் அடிப்படையில் தீவிரமாகச் செயலாற்றி வரும் ஆர்.என்.ரவி அதிகாரத்தைப் பயன்படுத்தி தமிழ்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார். ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு படுகொலை, நீட் போன்ற விசயங்களில் தமிழ்நாட்டு மக்களின் போராட்ட உணர்வை தொடர்ச்சியாகக் கொச்சைப்படுத்தி வருகிறார்.

வெறும் கண்டனங்களாக மட்டுமல்லாமல், நாகலாந்து மக்களைப் போல ஆர்.என்.ரவியை தமிழ்நாட்டில் இருந்து ஓட ஓட விரட்டியடிக்கும் வகையில் எதிர்க்கட்சிகளும், ஜனநாயக சக்திகளும் வேண்டாம் ஆளுநர் ரவி, வேண்டும் ஜனநாயகம் என்ற அடிப்படையில் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும்.


அய்யனார்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க