கோவையில் அக்டோபர் 14 அன்று, பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்துகொண்ட அவ்விழாவில் ஆராய்ச்சி படிப்பை முடித்த மாணவர்களுக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. அப்போது ஆங்கிலத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற மாணவர் ஆ. பிரகாஷ் அவர்கள் பல்கலைக்கழகத்தில் நிலவும் பிரச்சினைகள் பற்றி ஆளுநரிடம் புகார் அளித்தார்.
அப்புகாரில், பல்கலைக்கழகத்தில் பல பிரச்சினைகளும், முறைகேடுகளும் நடக்கின்றன. முனைவர் பட்டம் பெற வழிகாட்டும் பேராசிரியர்கள் சிலர் ஆய்வு மாணவர்களிடம் தங்களின் வீட்டு வேலைகளைச் செய்ய வைப்பது மற்றும் பள்ளிகளிலிருந்து தங்களின் குழந்தைகளை அழைத்து வரச் சொல்வதாகவும், ஆய்வு மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையைச் சமர்ப்பிப்பதற்கு பேராசிரியர்களுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் வரை பணம் செலவிடப்பட வேண்டிய நிலை உள்ளதாகவும், பணத்திற்கு ஈடாக நகை வாங்கி தரச் சொல்வதாகவும் கூறினார். மேலும், சில பேராசிரியர்கள் ATM அட்டையை வாங்கி வைத்துக் கொள்கின்றனர் என பேராசிரியர்களின் அட்டூழியங்களை அம்பலப்படுத்தியுள்ளார்.
மேலும் அம்மாணவர் கூறுகையில், பல்கலைக்கழகத்தில் சாதி ரீதியான பாகுபாடுகள் நிலவுகின்றன. ஆதிதிராவிடர் விடுதி இருந்தாலும் பொது விடுதிகளில் மாணவர்கள் தங்கவைக்கப்படுகின்றனர். இதனால் ஏழை, எளிய மாணவர்கள் பொது விடுதிகளின் உணவு கட்டணத்தைக் கட்டுவதற்குச் சிரமப்படுகின்றனர். ஆதிதிராவிடர் விடுதிக்கு வரும் பணத்தை முறைகேடாகப் பயன்படுத்தப்படுகிறது. விடுதிகளும் சரியாகப் பராமரிக்கப் படுவதில்லை, பல்கலைக்கழக விளையாட்டு மைதானம் இருந்தும் பயன்படுத்தப்படுவதில்லை. மாணவர்கள் விளையாடுவதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால் விளையாட்டு மைதானம் வெளியிலிருந்து வருபவர்களுக்கு வாடகைக்கு விடப்படுகிறது என நிர்வாகத்தின் முறைகேடுகளையும், பேராசிரியர்களின் சாதிய அடக்குமுறைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமிக்கப்படாததால் பல பிரச்சினைகள், முறைகேடுகள் தொடர்ந்து நடக்கின்றன. உடனடியாக பல்கலைக்கழகத்திற்கு துணை வேந்தர் நியமிக்கப்பட வேண்டும். ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஏற்படும் நெருக்கடியைச் சரி செய்ய வேண்டும், சாதிய அடக்குமுறைகளைச் செய்து வருகின்ற பேராசிரியர்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் விடுதிகள் முறையாகப் பராமரிக்கப்பட வேண்டும் என மாணவர்களால் முன்வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்.
வினவு களச்செய்தியாளர்,
கோவை.
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram