தமிழ் விரோத போக்கை கடைப்பிடிக்கும் பாரதியார் பல்கலைக்கழகம்!

அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் ஆணையினைச் செயல்படுத்தி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் அரசு ஆணையினை மதிக்காமல் இருப்பது பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற கேள்வியினை எழுப்புகிறது.

மிழ்நாட்டில் 2021 ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றதும்       உயர்கல்வித்துறை அமைச்சர் க. பொன்முடி அவர்கள் பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்து இளநிலைப் பட்டங்களுக்கும் இரண்டாண்டு தமிழ் மொழிப்பாடம் சேர்க்கப்படும் என்று அறிவித்தார். அதற்கான அரசாணையும் உடனடியாக வெளியிடப்பட்டது.

பாரதிதாசன், அன்னை தெரசா, பெரியார் ஆகிய பல்கலைக்கழகங்கள்   பி.காம்., பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்து இளநிலைப் பட்டங்களுக்கும் இரண்டாண்டுகள் தமிழ் மொழிப்பாடம் சேர்த்திருப்பதைக் குறிப்பிட்டு மற்ற பல்கலைக்கழகங்களும் இரண்டு ஆண்டுகள் தமிழ் மொழிப்பாடத்தை அனைத்து இளநிலைப் பட்டப்பிரிவுகளுக்கும் சேர்க்க வேண்டும் எனவும் அது குறித்து அரசுக்கு அறிக்கை அளிக்கும்படியும் 23.09.2022 ஆம் நாளிட்ட கடிதத்தின் மூலம் உயர்கல்வித்துறை செயலர் அனைத்துப் பல்கலைக்கழகப் பதிவாளர்களுக்கும் அறிவுறுத்தினார்.

அதனையொட்டியே தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் வெளியிட்ட மாதிரி பாடத்திட்டங்களில் அனைத்து இளநிலைப் பட்டங்களுக்கும் இரண்டாண்டு தமிழ் மொழிப்பாடம் சேர்க்கப்பட்டது. இப்பாடத்திட்டத்தினை அனைத்துப் பல்கலைக்கழகங்களும் 2023-2024 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தின. ஆனால் பாரதியார் பல்கலைக்கழகம் 2024-2025 ஆம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்துவதாக கேட்டுக்கொண்டது.

தற்போது 2024-2025 ஆம் கல்வியாண்டில் உயர்கல்வி மன்றத்தின் மாதிரி பாடத்திட்டத்தினை விடுத்து ஏற்கெனவே இருந்த பாடத்திட்டத்தினையே தொடர்வதாக பாரதியார் பல்கலைக்கழகம் முடிவு செய்து அதற்கான பாடத்திட்டக்குழுவின் கூட்டங்களையும் நடத்தி முடித்திருக்கிறது.

தமிழ் மொழிப்பாடத் திட்டக்குழுவினர் அனைத்து இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கும் இரண்டு ஆண்டுகள் தமிழ் மொழிப்பாடத்திற்கு ஆறு மணி நேரம் ஒதுக்கி தீர்மானம் இயற்றியுள்ளனர். (அதாவது யுஜிசி விதிகளின்படி எந்த ஒரு பாடத்துக்கும் வாரத்துக்கு 6 மணி நேரம் பாட வகுப்பு நேரம் என்பது பொதுவிதி) அதே வேளையில் பி.காம்., பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட பாடத்திட்டக்குழுவினர்கள் தமிழ் மொழிப்பாடத்திற்கு நான்கு மணிநேரமே ஒதுக்கியுள்ளனர்.


படிக்க: உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக்கழக பேராசிரியர்கள் – பணியாளர்கள்


தமிழ் மொழிப் பாடத்தை எத்தனை மணிநேரம் நடத்த வேண்டும் என்று தமிழ் மொழிப்பாடத் திட்டக்குழுவினர் தான் முடிவு செய்யவேண்டும். பி.ஏ வரலாறு, பொருளியல், உள்ளிட்ட கலைப்பாடப்பிரிவுகளுக்கும் பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட வணிகவியல், அறிவியல் பாடப்பிரிவுகளுக்கும் ஒரே மொழிப்பாடத்திட்டம் உள்ள நிலையில் ஒரு வகுப்பிற்கு ஆறு மணிநேரமும் மற்றொரு வகுப்பிற்கு நான்கு மணிநேரமும் எவ்வாறு பாடத்தை நடத்த முடியும் என்ற புரிதலின்றி 2023-2024 ஆம் கல்வியாண்டிற்கான பாரதியார் பல்கலைக்கழகப் பாடத்திட்ட நிலைக்குழு  ( Part I Tamil 2023-24 onwards – Affiliated Colleges – Annexure No.2. SCAA DATED: 18.05.2023) இரு பாடத்திட்டங்களுக்கும் ஒரே கூட்டத்தில் ஒப்புதல் அளித்துள்ளது.  கடந்த கல்வியாண்டுக்குரிய (2023-2024) பல்கலைக்கழக இணைய தளத்தில் தமிழ் பாடத்திட்டக் குழுவால் ஒப்புதல் அளிக்கப்பட்ட பாடத்திட்டமும் பாட வேலைநேரமாக 6 மணி நேரமும் வெளியிடப்பட்டுள்ளது.  அதேசமயத்தில் அந்தந்தப் பட்டப்படிப்பு வகுப்புகளுக்கு உரிய பாடத்திட்டங்களில் குறிப்பாக கணினி அறிவியல், பி.காம், பி.காம் சி.ஏ போன்ற சில பட்டப்படிப்பு வகுப்புகளில் 4 மணி நேரம் என்று வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட பட்டப்படிப்பு வகுப்புகளில் படிக்கும் மாணவர்களின் கல்வி வாய்ப்பை மட்டும் பாதிக்கும்படியான இந்த முரண்பாடான நிலை 2024-2025 கல்வியாண்டில் தொடரக்கூடாது என்று தமிழ்ப் பேராசிரியர்கள் குழுவானது 18.6.2024 நாளன்று பாரதியார் பல்கலைக்கழகப் பதிவாளர் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குழுவினரைச் சந்தித்து தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவான பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட அனைத்து இளநிலைப் பாடங்களுக்கும் ஒரே மாதிரியாக இரண்டு ஆண்டுகள் தமிழ்மொழிப்பாடம் சேர்க்கப்பட்டு (6) ஆறு மணிநேரம் ஒதுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுவினை அளித்தனர். அவர்களும் அன்று நடைபெறவுள்ள பாடத்திட்ட நிலைக்குழுவில் முடிவெடுப்பதாகக் கூறினர்.

ஆனால் அன்றைய நாளில் (18.6.2024) நடைபெற்ற பல்கலைக்கழகப் பாடத்திட்ட நிலைக்குழுவில் அதற்கான முடிவு எட்டப்படாமல் உயர்கல்வி செயலரின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்படும் எனத் துணைவேந்தர் குழுவினரால் தெரிவிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசின் உயர்கல்வி தொடர்பான கொள்கை முடிவினை உயர்கல்வித்துறையின் செயலர்தான்   அரசாணை வெளியிடுகிறார். அதனை நிறைவேற்றுவது தான் உயர்கல்வித்துறையின் கீழ் உள்ள பல்கலைக்கழக நிர்வாகத்தின் கடமையாகும். பாரதியார் பல்கலைக்கழகத்தில் தற்போது துணைவேந்தர் இல்லாததால் துணைவேந்தர் குழு நிர்வாகத்தை நடத்தி வருகிறது. இக்குழுவின் தலைவர் உயர்கல்விச் செயலர்தான். இந்நிலையில் உயர்கல்விச் செயலரின் ஆணையினை நிறைவேற்றுவது குறித்து அவரிடமே விளக்கம் கேட்பதாக துணைவேந்தர் குழுவினர் கூறுவது வேடிக்கையாக உள்ளது.

19.6.2024 முதல் கல்லூரிகள் தொடங்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில் அரசாணையினை அமல்படுத்துவதில் தயக்கம் காட்டும் பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டால் மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களும் அரசின் ஆணையினைச் செயல்படுத்தி வரும் நிலையில் பாரதியார் பல்கலைக்கழகம் மட்டும் அரசு ஆணையினை மதிக்காமல் இருப்பது பல்கலைக்கழகம் யார் கட்டுப்பாட்டில் இயங்குகிறது என்ற கேள்வியினை எழுப்புகிறது.


படிக்க: மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் தொடர் போராட்டம்


தமிழ் மொழிப்பாடத்திற்கு எதிரான பல்கலைக்கழகத்தின் செயல்பாட்டால் பாரதியார் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட பல தன்னாட்சி கல்லூரிகள் அரசின் அறிவிப்பை ஏற்காமல் ஓராண்டு மட்டும் தமிழ் மொழிப்பாடத்தை நடத்துகின்றன. இதற்கும் பாரதியார் பல்கலைக்கழகமே பட்டங்களை வழங்குகிறது.

ஒரு சில கல்லூரிகள் பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல் உள்ளிட்ட  இளநிலைப் பட்டங்களில் இரண்டு ஆண்டுகள் மொழிப் பாடத்தை நடத்துவதும் ஒரு சில கல்லூரிகள் ஓராண்டு மட்டும் மொழிப்பாடத்தை நடத்துவதும் இரண்டிற்கும் பல்கலைக்கழகம் ஒரே பட்டத்தை வழங்குவதையும் என்னவென்பது?  பல்கலைக்கழகத்திற்கு என்று ஒரு கொள்கை இருக்கவேண்டும் அல்லது அரசின் கொள்கை முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும். இரண்டுமின்றி ஒரு பல்கலைக்கழகமே செயல்படுவதை எவ்வாறு எடுத்துக்கொள்வது?

பாரதியார் பல்கலைக்கழகத்தின் தமிழ் விரோதப் போக்கினை தமிழ்நாடு அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். இரண்டு ஆண்டுகள் ஆறு மணிநேரம் தமிழ்மொழிப்பாடத்திற்கு ஒதுக்கி தமிழ் இலக்கியம் பயின்றவர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகுவதை அரசு உறுதி செய்யவேண்டும்.

அரசு இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு, அனைத்துப் பட்டப்படிப்பு வகுப்பு மாணவர்களும் சமச்சீராக 6 மணி நேரம் தமிழ் மொழிப்பாடம் கற்கும் வாய்ப்பை உறுதிப்படுத்த, அரசு ஆணைக்கு எதிராகவும் தமிழ் மொழிக்கு எதிராகவும் நடக்கும் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு கொள்கை முடிவை நிலைநாட்ட வேண்டும். அரசின் தமிழ் மொழி சார்ந்த முன்னெடுப்புகள் இறுதிவரை, அதாவது மக்களைச் சென்று சேருகிறதா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும்.


இளமாறன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTubeவிவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க