மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்களாக ஊழியர்களுக்கு ஊதியம் வழங்காததற்கு எதிராக 200-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் எட்டாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்ரவரி 16 அன்று போராட்டம் தொடங்கப்பட்டது.
கடந்த ஐந்து ஆண்டுகளாகவே பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி நிலவி வந்த சூழலில், தாமதமாக ஊதியம், ஓய்வூதியம் வழங்கி வந்துள்ளனர். ஆனால், தற்போது இரண்டு மாதங்களாக ஊதியத்தை நிறுத்தி வைத்துள்ளனர். ஆசிரியர் இல்லாத பணிகளில் 650 பேர், ஆசிரியர்கள் 500 பேர் மற்றும் ஓய்வூதியம் பெறக்கூடியவர்கள் என மாதத்திற்கு கிட்டத்தட்ட 12 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.
ஆனால் பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடியை சரி செய்ய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தற்போது இரண்டு மாதங்களாக ஊதியம் வராத நிலையில் கடைநிலையில் உள்ள ஊழியர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அன்றாட தேவைகளுக்கே மிகப்பெரிய நெருக்கடியில் சிக்கி, வேதனைப்படுவதாகக் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக நிர்வாக அலுவலர் சங்கம் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த தொடர் போராட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை தொடர் முழக்கமிட்டு வருகின்றனர்.
“உடனடியாக ஊதிய நிலுவையை தர வேண்டும்.
நிர்வாகத்தின் அலுவலர்களை மதிக்காத துணைவேந்தர் பதவி விலக வேண்டும்.
மாநில அரசே பல்கலைக்கழகத்தை எடுத்து நடத்த வேண்டும்.
அடிப்படை வசதிகளை நிறைவேற்ற வேண்டும்”
ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து எட்டு நாட்களாகத் தொடர்ந்து போராடி வருகின்றனர்.
இந்த போராட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் ஆதரவளித்துள்ளனர்.
எட்டு நாட்களாகத் தொடர்ந்து போராட்டம் நடந்திவரும் இவர்களின் கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும்.
பெரும்பாலும் இந்த செய்தியை வெளியிட்ட பத்திரிகைகள், போராட்டம் நடத்துவதால் வினாத்தாள் திருத்தும் பணி நிறைவேறாமல் போகும் என்பதையே முதன்மைப்படுத்தி போராட்டத்தை சிறுமைப்படுத்துகின்றன.
ஜனநாயக சக்திகள் பொதுமக்கள் அனைவரும் இந்த போராட்டத்தை ஆதரிக்க வேண்டும்.
ராஜா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube