முதலாளித்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் அமெரிக்காவில், 2000-ம் ஆண்டுக்குப் பின் பிறந்த இளம் தலைமுறையினர் சோசலிசத்துக்கு வாக்களிக்க விரும்புவதாக சமீபத்தில் வெளியான புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது. இந்த புள்ளிவிவரம், 23 முதல் 38 வயது வரையிலான அமெரிக்கர்களில் 70 சதவீதம் பேர் சோசலிஸ்டுகளுக்கு வாக்களிக்க இருப்பதாக தெரிவிக்கிறது.
16 வயது முதல் 22 வரையிலான தலைமுறை Z -யில் 51 சதவீதம் பேரும் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களில் 50 சதவீத பேரும் மட்டுமே முதலாளித்துவத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 2018-ம் ஆண்டைவிட இது சரிவாகும். 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்தவர்களில் 33 சதவீத பேர் கம்யூனிசத்துக்கு ஆதரவாகவும் 35 சதவீதம் பேர், மார்க்சியத்தை தாங்கள் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
பழைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் (40களுக்கு முன்பும் இரண்டாம் உலகப் போர் நடந்த காலக்கட்டத்திலும் பிறந்தவர்கள்) இதிலிருந்து வேறுபட்டாலும் அதிலும் 33 சதவீதம் பேர் சோசலிசத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என கூறியுள்ளனர்.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தலைமுறை X (1960களிலிருந்து 70 வரை பிறந்தவர்கள்)ஐ சேர்ந்தவர்களில் 44 சதவீதம் பேர் சோசலிஸ்ட் வேட்பாளர்களுக்கு வாக்களிப்போம் என தெரிவித்துள்ளனர்.
இந்தக் கணக்கெடுப்பு செப்டம்பர் 6 முதல் செப்டம்பர் 13-ம் தேதிவரை எடுக்கப்பட்டு, கடந்த வாரம் முடிவுகள் வெளியிடப்பட்டன. 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் ஜனநாயக சோசலிஸ்டுகளுக்கு வாக்களிப்பதில் தயக்கம் காட்டியவர்களின் சதவீதம் இந்த ஆண்டு சற்றே குறைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.
முற்போக்கு மற்றும் மிதமான அதிபர் வேட்பாளர்களிடையே வளர்ந்துவரும் பிளவுகளுக்கு மத்தியில் இந்த வாக்கெடுப்பு முடிவு வந்துள்ளதாக ஃபாக்ஸ் பிஸினஸ் செய்தி கூறுகிறது. 2020-ம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முக்கியமான வேட்பாளரான, ஜனநாயக சோசஸிஸ்ட் என தன்னை கூறிக்கொள்ளும் பெர்னி சேண்டர்ஸ், அனைவருக்குமான மருத்துவ காப்பு, பருவநிலை மாற்றம் மற்றும் பொருளாதார அசமத்துவத்தை பேசும் புதிய பசுமை ஒப்பந்தம் (Green New Deal), பணக்கார அமெரிக்கர்கள் மீதான வரிவிதிப்பு போன்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார்.
படிக்க :
♦ திவாலாகும் முதலாளித்துவ பொருளாதாரம் ! சோசலிசமே நாட்டைக் காப்பாற்றும் ! திருச்சி அரங்கக் கூட்டம் !
♦ திருக்குறளை உறவாடிக் கெடுக்க வரும் பார்ப்பனியம் : வி.இ.குகநாதன்
மற்றொரு வேட்பாளரான எலிசபெத் வாரண், இதேபோன்ற திட்டங்களை முன்மொழிந்துள்ளார். அமெரிக்கர்களுக்கு இருக்கும் ‘சோசலிசத்தின்’ மீதான வெறுப்பு அவருக்கும் இருக்கிறது. தன்னை ‘சோசலிஸ்டு’ என குறிப்பிட அவர் விரும்பவில்லை.
முதலாளித்துவத்தின் மீதான அமெரிக்கர்களின் விருப்பம் அத்தனை எளிதாக மாறக் கூடியதல்ல. மொத்தத்தில் 61% பேர் இப்போதும் முதலாளித்துவ பொருளாதார அமைப்பை விரும்புகிறார்கள். ஆனால், அதே சமயம் 2000-ம் ஆண்டுக்குப் பின்னர் பிறந்த இளந்தலைமுறையினரில் சுமார் 46% பேர் இந்த முதலாளித்துவ பொருளாதார அமைப்பு தங்களுக்கு எதிராக உள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.
அமெரிக்க புள்ளிவிவர ஆணையம் 2018-ம் ஆண்டு வெளியிட்ட ஆய்வில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகரித்திருப்பதாகக் கூறியது. 1940-களில் பிறந்த பழைய தலைமுறையினர் மட்டுமே முதலாளித்துவம் தங்களுக்கு சாதகமாக இருந்ததாகச் சொல்லக்கூடும்.
ஆனால், கம்யூனிசம் பற்றிய எண்ணங்கள், முந்தைய தலைமுறைகளைவிட வேறுபடுகின்றன. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு பிறந்த இளம்தலைமுறையினரில் 15 சதவீத சோவியத் அரசு இருந்திருந்தால் உலகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் எனக் கூறுகின்றனர். உலக பயங்கரவாதம் கடந்த 60 ஆண்டுகளில் கொன்று குவித்த மக்கள், கம்யூனிசத்தால் நடத்தப்பட்டதைவிட அதிகம் என தலைமுறை Z (90-களுக்குப் பிறகு பிறந்தவர்கள்) கருதுகிறது.
மேற்கண்ட இந்தப் புள்ளிவிவரத்தை எடுத்தது, சோசலிச ஆதரவு அமைப்பு அல்ல. The Victims of Communism Memorial Foundation என்ற தொண்டு நிறுவனம் இந்த ஆய்வை எடுத்துள்ளது. இந்தத் தொண்டு நிறுவனம் தன்னைப் பற்றிய தகவலில் இப்படிக் கூறியுள்ளது: ‘கம்யூனிசத்தைப் பற்றிய உண்மையைச் சொல்கிறோம். ஏனெனில் எங்களுடைய இலக்கு, கம்யூனிசம் குறித்த தவறான நம்பிக்கையிலிருந்து உலகத்தை விடுவிப்பதே’.
கம்யூனிசம், சோசலிசத்துக்கு எதிராக இயங்குகிறவர்களே, மக்களின் மனங்களை காட்டியிருக்கிறார்கள். ட்ரம்ப் போன்ற எதேச்சதிகாரிகளை, வலதுசாரிகளை எதிர்க்கவும் தங்களை சுரண்டி கொழுக்கும் முதலாளித்துவத்தை வீழ்த்தவும் சோசலிசமே சரியான ஆயுதம் என அமெரிக்கர்கள் உணரத் தொடங்கியிருக்கிறார்கள் என்பதையே இந்தப் புள்ளிவிவரம் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.
அனிதா
நன்றி : ஃபாக்ஸ் பிஸினஸ்.