மோடியைக் கொல்ல சதியா? | மருதையன் – ராஜு உரை | காணொளி

மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ”அச்சுறுத்தும் பாசிசம் - செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் நடைபெற்ற அரங்கக்கூட்டத்தில் தோழர் மருதையன் மற்றும் தோழர் ராஜு ஆற்றிய உரை - காணொளி

சென்னையில் கடந்த 08-09-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் “அச்சுறுத்தும் பாசிசம் – செயல்வீரர்கள் மீது மோடி அரசின் தாக்குதல்” என்ற தலைப்பில் அரங்கக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு தலைமையேற்று நடத்தினார். இதில் தோழர் மருதையன் உரையாற்றினார்.

அவரது உரையில், “ உண்மையிலேயே மோடியைக் கொல்ல சதி இருக்கிறதா? உள்துறை அமைச்சகம் மோடியை பாதுகாக்க ஒரு தனி படை அமைத்து இருக்கிறது. அமைச்சர்கள் கூட அனுமதி இல்லாமல் மோடியை பார்க்க போக முடியாது. அந்த அளவிற்கு பாதுகாப்பு. தமிழிசையை பார்த்து ஒரு பெண் ”பாசிச பாஜக ஆட்சி ஒழிக” என்றால் உடனே கொலை செய்து விடுவார்கள் என்று கூவுகின்றனர். நாயை தெருவில் பார்த்தால் கடித்து விடுமோ என்று அஞ்சுவோம். அதுவே திருடனாக இருந்தால் பிடிபட்டு விடுவோமோ என்று அஞ்சுவான். அந்த 2-வது பயம்தான் இவர்களுக்கு. சோஃபியா முழக்கமிட்ட நேரத்திலே அதை வாங்கி பின் இருந்தவர்களும் முழக்கம் போட்டிருந்தால் நிலைமையே மாறி இருக்கும்.

உச்சநீதிமன்றம் இந்த 5 பேரை முதலில் 6 நாள் வீட்டுக் காவலில் வைத்தார்கள். முதலில் இவர்களுக்கும் பீமா கோரேகானில் நடந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை இவர்கள் மீது வழக்கும் இல்லை. ஆனால் இதை நீதிபதி கேட்டால் போலீசிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

காவல் நிலையத்திற்கு போனாலே எப்படி பொய் வழக்குகளை ஜோடிப்பது என்று தெரியும். அது போலத்தான் முற்போக்காள‌ர்கள் மீது பல பொய் வழக்குகளை இவர்கள் போட்டு உள்ளனர். பொய் வழக்குகள் போடப்பட்டு அவர்கள் ஒடுக்கப்படுகிறார்கள்.

மோடி ஆட்சிக்கு வந்த 4 ½ ஆண்டுகளில் விலைவாசி உயர்வு, சிறு தொழில்கள் அழிவு, கொலை ஆகியவையெல்லாம் முதலில் அதிர்ச்சியூட்டும் செய்திகளாக இருந்தன. பின்னர் அதுவே நமக்குப் பழகிவிட்டது. அவசர நிலை காலகட்ட நடைமுறைகள் அனைத்தும் நமக்கு பழக்கமாக்கப்படுகின்றன. தமிழிசையை அச்சுறுத்திய சோஃபியாவின் குரல், பகத் சிங் நாடாளுமன்றத்தில் குண்டு போட்டு முழங்கினானே, “கேளாத செவிகள் கேட்கட்டும்” என்று, அதே குரல்தான் இதுவும்.

இந்த பாசிச ஆட்சிக்கு முடிவுகட்ட உடனடியாக களத்தில் இறங்குவோம். இல்லையென்றால் நாம் 1000 ஆண்டு அடிமைத்தனத்திற்கு மீண்டும் செல்ல நேரிடும்” என்று கூறினார்.

**********

க்கூட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு உரையாற்றினார். அவர் பேசுகையில், “இந்தியா முழுவதும், பத்திரிகையாளர்கள் மற்றும் முற்போக்கு சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்களும், ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற பீமா கோரெகான் சம்பவத்தைக் காரணமாக வைத்து, பேராசிரியர் ஆனந்த் தெல்தும்டே உள்ளிட்ட பல்வேறு பத்திரிக்கையாளர்கள், எழுத்தாளர்கள், சமூக செயற்பாட்டாளர்களின் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. மேலும் அவர்கள் மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர்கள் என்றும், மோடியைக் கொல்ல சதி செய்தனர் என்றும் பொய்க்கதைகளை கட்டியுள்ளது.

மோடி ஆட்சியிலமர்ந்து இந்த நான்கு ஆண்டுகளில் கொண்டு வந்த மேக் இன் இந்தியா, சுவச்சு பாரத், பண மதிப்பழிப்பு, ஜி.எஸ்.டி, என அனைத்து திட்டங்களும் தோற்றுப்போய் விட்டன. இக்காலகட்டத்தில் ஆயிரக்கணக்கான‌ கூலிப்படைகளை ஆர்.எஸ்.எஸ் இறக்கி உள்ளது. இவர்கள் மூலம்தான் முற்போக்காளர்கள் மீதான் தாக்குதல்களும் கொலைகளும் நடைபெற்று வருகின்றன. கட்ந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் கொல்லப்பட்ட கெளரி லங்கேஷை கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும், அதற்கு முன்னர் கொலை செய்யப்பட்ட தபோல்கரைக் கொல்ல பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியும் ஒன்றுதான் என கர்நாடக புலனாய்வு துறை கண்டுபிடித்துச் சொன்னது.

கொலை செய்த அமைப்பு சுதந்திரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் வட இந்தியா முழுவதும் செயற்பாட்டாளர்கள் ஒடுக்கப்படுகிறார்கள். இதை மக்கள் மத்தியில் நாம் கொண்டு செல்ல வேண்டும்.

உணர்வு பூர்வமாக போராடும் மக்களுக்கு மத்தியில் நாம் விசயங்களை அறிவியல்பூர்வமாக எடுத்துச் சொல்லும்போது போராட்டம் தீவிரமடைகிறது. தூத்துக்குடி போராட்டம் 99 நாள் நடந்த போராட்டம் 100-வது நாள் மட்டும் எப்படி கலவரமாகும் என்று கேள்வி கேட்கிறார்கள். 100-வது நாள் கலவரத்தை அரசுதான் திட்டமிட்டு செய்தது. தமிழிசையை பார்த்து பி.ஜே.பி பாசிச ஆட்சி ஒழிக என்று தூத்துகுடி சோஃபியா முழக்கமிட்டார். அது மிகப்பெரிய குற்றம் போல் கூவுகின்றனர். யார் அந்த தமிழிசை? என்ன நடக்கிறது தமிழகத்தில்? பொதுக்கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு, கருத்துரிமைக்கு தடை – இது போன்ற பாசிச ஆட்சி நடைபெறுவதைப் பொறுக்க முடியாமல்தான் விமர்சிக்கிறார். இது தவறா?

மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டத்திற்கு திருச்சியில் அனுமதி மறுத்துள்ளனர். காரணம் கேட்டால் உங்கள் மீது ஒவ்வோரு மாவட்டத்திலும் பல வழக்குகள் உள்ளன. மேலும் உங்களைக் குறித்து அலசி ஆராய்ந்ததில் பிரச்சனை ஏற்படும் என தெரிகிறது. எனவே உங்கள் கூட்டத்திற்கு அனுமது மறுக்கப்படுகிறது. அடக்குமுறை, பாசிசம், அச்சுறுத்தல் என்று  ஜனநாயகமே இல்லாமல் செய்கின்றனர். இதைதான் நாம் விவாதிக்க வேண்டும். அனைவரும் இதற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்.” என்று கூறினார்.

  • வினவு களச் செய்தியாளர்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க