Thursday, December 12, 2024
முகப்புதலைப்புச் செய்திமோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

மோடியைக் கொல்ல சதியா ? ஜனநாயக உரிமைகளைக் கொல்ல மோடியின் சதியா ?

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான் இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. - ம.க.இ.க. கண்டன அறிக்கை.

-

நேற்று (28.08.2018) அதிகாலை 6 மணிக்கு டெல்லி, ஐதராபாத், ஃபரிதாபாத், மும்பை, தானே, கோவா, ராஞ்சி போன்ற இடங்களில் ஒரே நேரத்தில் கைது மற்றும் சோதனை நடவடிக்கைகளை நடத்தியிருக்கிறது மகாராட்டிரா போலீசு.

சிவில் உரிமை செயல்பாட்டாளர்களான சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லகா, புரட்சிகர எழுத்தாளர் சங்கத்தின் தோழர் வரவர ராவ் மற்றும் வழக்கறிஞர் வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகிய 5 பேர் ஊஃபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருக்கின்றனர்.

கோவா ஐ.ஐ.எம் -இல் பணியாற்றும் தோழர் ஆனந்த் தெல்தும்டெ,  ராஞ்சியில் பாதிரியார் ஸ்தான் சாமி, வெர்னான் கன்சால்வேசின் மனைவி சூசன் ஆப்ரகாம், ஐதராபாத்தில் பத்திரிகையாளர் கிராந்தி தெகுலா, வரவரராவின் மகள்கள் ஆகியோரும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அவர்களது உடைமைகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

கைது செய்யப்படுபவர்கள் பிரபலமான சிவில் உரிமை அமைப்புகளின் தேசியத்தலைவர்கள் மற்றும் செயல்வீரர்கள் என்ற போதிலும், கைது மற்றும் சோதனையின் போது பின்பற்ற வேண்டிய சட்டபூர்வ வழிமுறைகள் எதையும் மகாராட்டிரா போலீசு பின்பற்றவில்லை. கைது குறித்தும் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்கள் குறித்தும் மராத்தி மொழியில் எழுதி அதன் கீழ் கையெழுத்திடுமாறு அவர்கள் கட்டாயப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

இந்தக் கைது நடவடிக்கை எதிர்பாராததல்ல. மோடியைக் கொல்வதற்கு மாவோயிஸ்டுகள் திட்டமிட்டிருப்பதாகவும், அது தொடர்பான “கடிதம்” தங்களிடம் சிக்கிவிட்டதாகவும் கூறி,  ஜுன் 7 ஆம் தேதியன்று வழக்கறிஞர்க்கள் உள்ளிட்ட 5 பேரை சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (UAPA) கைது செய்தது மகாராட்டிர போலீஸ்.

கணினியில் தட்டச்சு செய்யப்பட்ட அந்த “மொட்டைக் கடிதம்” பீமா கோரேகான் நிகழ்ச்சியுடன் மாவோயிஸ்டுகளை மட்டுமின்றி ஜிக்னேஷ் மேவானி முதல் காங்கிரசு கட்சி வரையிலான அனைவரையும் தொடர்புபடுத்தி போலீசால் தயாரிக்கப்பட்டிருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. அதில் கூடுதலாக “மோடியைக் கொல்ல சதி” என்ற மசாலாவும் சேர்க்கப்பட்டிருந்தது.

மேற்சொன்ன கைதுகள் நடந்த ஒரு மாதத்துக்குள்ளாக,  அடுத்த புரளியை கடந்த ஜூலை 4 ஆம் தேதியே ரிபப்ளிக் டிவி கிளப்பத் தொடங்கி விட்டது.  பியுசிஎல் அமைப்பின் தேசிய செயலரான சுதா பரத்வாஜுக்கும், நக்சலைட்டுகள் மற்றும் காஷ்மீர் பிரிவினைவாதிகளுக்கும் இடையிலான தொடர்பை நிரூபிக்கும் கடிதம் தங்களிடம் சிக்கியிருப்பதாக ஒரு பொய்ப் பிரச்சாரத்தை இடையறாமல் தொடர்ந்தது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி.

உடனே, “தங்களிடமும் ஒரு கடிதம் சிக்கியிருப்பதாக” இந்த பொய்ப் பிரச்சாரத்தை போட்டி போட்டுக்கொண்டு தொடர்ந்தது டைம்ஸ் நவ் டிவி. இந்த கோயபல்ஸ் பிரச்சாரத்தின் தொடர்ச்சியே தற்போதைய கைது நடவடிக்கை. உமர் காலித் உள்ளிட்ட ஜே.என்.யு மாணவர்களுக்கு எதிராக “தேசவிரோதிகள், நாட்டை துண்டாடுபவர்கள், பாக் கைக்கூலிகள்” என்ற பிரச்சாரத்தை மேற்சொன்ன தொலைக்காட்சிகள் இடையறாமல் நடத்தின. “என்னைக் சுட்டுக் கொல்ல முயன்றவன் இந்தப் பிரச்சாரத்தை உண்மையென நம்பிய ஒரு முட்டாளாகவும் இருக்கலாம்” என்று உமர் காலித் கூறியதை இங்கே நினைவிற்கொள்ள வேண்டும்.

தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் “மோடியைக் கொலை செய்வதற்கான சதியில் சம்மந்தப்பட்டவர்கள்” என்ற தோற்றத்தை, மோடியின் ஏவல்நாய்களான ஊடகங்கள் திட்டமிட்டே உருவாக்குகின்றன. ஆனால் கைது செய்யப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக அத்தகைய குற்றச்சாட்டு எதுவும் மகாராட்டிர போலிஸ் அளித்துள்ள ஆவணங்களில் இல்லை. குற்ற எண் 04- 2018 இன் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அது பீமா கோரேகான் சம்பவம் தொடர்பானது மட்டுமே.

*****

“மோடியைக் சொல்லச் சதி என்பது குஜராத்தில் ஏற்கனவே அரங்கேற்றப்பட்ட  நாடகம்தான்.  இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலையில் என்ன நடந்ததோ அதுதான் இதிலும் நடக்கிறது. இது தலித் மக்களின் போராட்டத்தை மாவோயிஸ்டு சதி என்று  திசைதிருப்புவதற்கான  திட்டமிட்ட முயற்சி” என்று ஜூன் மாதத்தில் நடந்த கைதுகளைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார் ஆனந்த் தெல்தும்டே.

அந்த நாடகம் இப்போது புதிய பரிமாணங்களை எடுத்திருக்கிறது. வளர்ச்சித் திட்டம் என்ற பெயரிலான ஆக்கிரமிப்புகள், சூழல் அழிவு, பண மதிப்பழிப்பு முதல் ஜி.எஸ்.டி வரையிலான நடவடிக்கைகள்  மக்களிடம் தோற்றுவித்திருக்கும் கோபம், அதிகரித்து வரும் தலித் மக்களுக்கு எதிரான வன்முறைகள் போன்றவற்றால் மக்களின் கடும் கோபத்தை எதிர்கொண்டிருக்கிறது மோடி அரசு.

இந்தக் கோபத்திலிருந்து மக்களைத் திசை திருப்புவதற்கு “முஸ்லிம் தீவிரவாதம்” என்ற பழைய பூச்சாண்டி பயன்படாது என்பது மோடி – அமித் ஷா கும்பலுக்கு தெரிந்திருக்கிறது. எனவேதான், மேற்கூறிய பிரச்சினைகளில் மோடி அரசுக்கு எதிராகப் பேசுபவர்கள், மக்களைத் திரட்டுபவர்கள் யாரோ, அவர்களையெல்லாம் ஒடுக்குவதற்கு “நகர்ப்புற நக்சல்கள், அறிவுத்துறை நக்சல்கள், அரை மாவோயிஸ்டுகள்” என்ற புதிய முத்திரைகளை தயார் செய்திருக்கிறது.

மோடி அரசை விமரிசிக்கும் அறிவுத்துறையினர், ஊடகத்தினர் முதல் அரசியல் கட்சி பிரமுகர்கள் வரை ஒவ்வொருவரும் “தாங்கள் நகர்ப்புற நக்சல்கள் அல்ல” என்றும், “வன்முறையில் நம்பிக்கை கொண்டவர்கள் அல்ல” என்றும், “இந்திய அரசியல் சட்டத்தின் மீது பக்தி கொண்டவர்கள்” என்றும்  தன்னிலை விளக்கம் அளிக்குமாறு அச்சுறுத்தப்படுகின்றனர்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம்.

தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை ஆதரித்தவர்கள் மீது பாஜக வினர், “சமூகவிரோதி, நக்சலைட்டு” என முத்திரை குத்தியதை நாம் அறிவோம். இத்தகைய முத்திரை குத்தல்களுக்கு அஞ்சி  தன்னிலை விளக்கம் அளிப்பது இழிவானது. “நான் நடத்தை கெட்டவள் அல்ல” என்று ஒரு பெண் தன்னிலை விளக்கம் அளிக்க நேர்வதற்கு ஒப்பானது.

“சட்டத்தின் ஆட்சி குறித்தோ ஜனநாயக வழிமுறைகளை கடைப்பிடிப்பது குறித்தோ, வன்முறையைத் தவிர்ப்பது குறித்தோ பேசுவதற்கான அருகதை உனக்கு கிடையாது” என்று திருப்பியடிப்பது ஒன்றுதான் பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்கொள்ளப் பொருத்தமான வழி.

“சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு” என்று சொல்லிக் கொண்ட போதிலும், மோடி அரசு நடத்துவது “சட்டத்தின் ஆட்சி” அல்ல. சொல்லிக் கொள்ளப்படும் அரசியல் சட்டத்தின் ஆட்சியை நாடாளுமன்றத்துக்கு உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் கவிழ்க்கும் நடவடிக்கைகள்தான் கடந்த நான்கரை ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கின்றன.

பாஜக -வினர் அரசியல் செல்வாக்கு பெற்றிருக்கும் வட இந்திய மாநிலங்களில் முஸ்லிம் மக்களும், தலித் மக்களும் பார்ப்பன பாசிசக் கும்பல்களால் தாக்கப்படுகிறார்கள். கொல்லப்படுகிறார்கள்.  இந்தக் கொலைகளுக்கு போலீசும் அரசு எந்திரமும் துணை நிற்பதை நாம் பார்க்கிறோம்.

பாஜக அரசியல் செல்வாக்கு பெற முடியாத தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பிற பகுதிகளில் பார்ப்பன பாசிசத்தை எதிர்க்கும் அறிவுத்துறையினர் குறிவைத்துக் கொல்லப்படுகின்றனர். இது இன்னொரு உத்தி. கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணையின் மூலம் அத்தகைய கொலைப்பட்டியல்கள் குறித்தும் நாம் அறிகிறோம்.

தற்போது மேற்கொள்ளப்படும் “ஊஃபா” கைது இன்னொரு வகைத் தாக்குதல். இதற்கும் இஷ்ரத் ஜகான் போலி மோதல் கொலைக்கும் அடிப்படையில் எந்த வேறுபாடும் இல்லை. தற்போது கைது செய்யப்பட்டிருப்பவர்கள் நாடறிந்த அறிவுத்துறையினர் என்ற ஒரே காரணத்தினால்தான்  இஷ்ரத் ஜகானுக்கு நேர்ந்த கதி இவர்களுக்கு நேரவில்லை. ஒருவேளை இந்தக் கைது நடந்திராவிட்டால், உமர் காலித் மீது நடத்தப்பட்ட  கொலைமுயற்சியைப்  போன்ற  ஒன்று இவர்களுக்கு எதிராகவும் நடந்திருக்கும்.

கவுரி லங்கேஷ் வழக்கு விசாரணை பார்ப்பன பாசிச அமைப்புகள் தயாரித்திருக்கும் கொலைப்பட்டியலை அம்பலமாக்கியிருக்கிறது. பன்சாரே மட்டுமின்றி அவரது மகள் உள்ளிட்ட  குடும்பத்தினரும் கொலைப்பட்டியலில் இருப்பதை கர்நாடகா போலீசே உறுதிப் படுத்தியிருக்கிறது.

கவுரி லங்கேஷ் விசாரணையில் கிடைத்துள்ள தரவுகளின் அடிப்படையில் சனாதன் சன்ஸ்தாவின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கர்நாடக அரசு மகாராட்டிர அரசை வலியுறுத்தி வருகிறது. மும்பையில் இந்துக்கள் வாழும் பல பகுதிகளில் சனாதன் சன்ஸ்தாவினர் குண்டு தயாரிப்பதும், விநாயகர் சதுர்த்தி மற்றும் ஈத் பண்டிகைகளின் போது குண்டுவெடிப்பு நடத்த திட்டமிட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

“இதன் காரணமாக சனாதன் சன்ஸ்தாவை தடை செய்ய வேண்டும் என்று பரவலாக எழுந்துள்ள கோரிக்கையை திசை திருப்புவதற்காகவே தற்போதைய கைது நாடகம் நடத்தப்படுகிறது” என்று பிரகாஷ் அம்பேத்கர் கூறியிருப்பதையும் நாம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டும்.

கார்கில் போர், நாடாளுமன்றத் தாக்குதல், கோத்ரா – குஜராத் படுகொலை உள்ளிட்ட ஒவ்வொன்றின் பின்னாலும் பாசிஸ்டுகள் மறைக்கத் துடிக்கும் ஒரு மர்மம் இருந்துள்ளது என்பதை நாம் மறந்து விடக்கூடாது.

வீழ்த்தப்பட முடியாததல்ல பார்ப்பன பாசிசம்.  அப்படி ஒரு தோற்றத்தைக் காட்டி அது அச்சுறுத்துகிறது. அஞ்சுவதும், சமரசம் செய்து கொள்வதும், மவுனம் சாதிப்பதும்தான் பாசிசத்தின் வெற்றிக்கு வழி வகுக்கும். கைது செய்யப்பட்டிருப்பவர்கள் யாரும் இந்த அடக்குமுறைக்கு அஞ்சக் கூடியவர்கள் அல்ல என்பது மோடி அரசுக்குத் தெரியும்.

அத்தகைய அச்சமின்மையை சமூகம் முழுமைக்கும் நாம் பரப்ப வேண்டும். பார்ப்பன பாசிசத்துக்கு எதிரான அரசியலை மேலும் போர்க்குணமாக, மேலும் பரவலாக கொண்டு செல்வதும், மக்கள் போராட்டங்களை கட்டியமைப்பதும்தான் அச்சமின்மையைப் பரப்புவதற்கான வழி. தமிழகம் அதனைச் செய்து காட்ட வேண்டும்.

மருதையன்
பொதுச்செயலர்,  மக்கள் கலை இலக்கியக் கழகம்.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க