ச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்றபோதிலும், அச்சுறுத்துபவனைத் தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில் கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

மோடியைக் கொல்ல சதி என்ற பெயரில் ‘மாநகர நக்சல்கள்’ கைது செய்யப்படாதிருந்தால், இந்த நாட்களின் அரசியல் விவாதப்பொருளாக எது இருந்திருக்கும்?

வரவிருக்கும் சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களை எதிர்கொள்வது குறித்து  பா.ஜ.க. ஆளும் மாநில முதல்வர்களுடனான மோடியின் சந்திப்பும், பா.ஜ.க. வின் தோல்வி குறித்த கருத்துக் கணிப்புகளும் கைது நடைபெற்ற அதேநாளில் வெளியான செய்திகள். கைது நடக்காமலிருந்தால், அவை விவாதப்பொருளாக இருந்திருக்கலாம்.

மோடியின் இழிபுகழ்பெற்ற பணமதிப்பழிப்பு நடவடிக்கை படுதோல்வியடைந்து விட்டது என்பதை அதிகாரபூர்வமாக அறிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒப்புதல் வாக்குமூலம் வெளிவந்ததே, அது மிகப்பெரிய விவாதப் பொருளாகியிருக்கலாம்.

அல்லது ரஃபேல் விமான பேர ஊழலை ஊறுகாய்ப் பானைக்குள் ஒளிக்க முயன்று நிர்மலா சீதாராமன் தோற்றுப்போக, அதற்கு முட்டுக்கொடுக்க வந்த அருண் ஜெட்லியின் வாதங்களும் அடிபட்டுப் போனதால், போபர்ஸை விஞ்சிய ரஃபேல் ஊழல், விவாதப் பொருளாகிவிடுமோ என்று ‘ஊழல் கறை படியாத உத்தமர்’ அஞ்சியிருக்கலாம்.

ரஃபேல் விமான பேர ஊழல்

கைது செய்யப்பட்ட சனாதன் சன்ஸ்தாவின் பார்ப்பன பயங்கரவாதிகளுக்கு, தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகிய அனைவரின் கொலையிலும் தொடர்பிருப்பதை மறைக்க முடியாமல், மகாராட்டிராவின் பயங்கரவாத எதிர்ப்பு போலீசே வெளியிட்டுவிட்ட காரணத்தினால், சனாதன் சன்ஸ்தா உள்ளிட்ட காவி பயங்கரவாத அமைப்புகளைத் தடை செய்  என்ற கோரிக்கை விவாதப் பொருளாகியிருக்கலாம்.

“மோடியைக் கொல்ல சதி” என்று கூச்சல் எழுப்பினால், இவற்றில் எதுவும் விவாதத்துக்கு வந்து விடாமல் தடுத்துவிட முடியுமென்று மோடி-அமித் ஷா கும்பல் கனவு கண்டிருக்கிறது. அந்தக் கனவு பேய்க்கனவாகிவிட்டது.

“பாலம் கட்டியதில் ஊழல்” என்று கூறி நள்ளிரவில் கருணாநிதியைக் கைது செய்தார் ஜெயலலிதா. அதன் விளைவாக, ஜெ.வின் குரூர முகம் அம்பலமானது மட்டுமின்றி, கருணாநிதியின் மீதான அனுதாபமும் அதிகரித்தது. அவ்வளவு அடாவடியாகக் கைது செய்யப்பட்ட அந்த வழக்கில் குற்றப்பத்திரிகைகூடத் தாக்கல் செய்யப்படவில்லை. இதன் விளைவாக ஜெயா – சசி கும்பலின் அடிமுட்டாள்தனமும் சந்தி சிரித்தது.

மோடி – அமித் ஷா கும்பலானது,  ஜெ-சசி கும்பலுக்கு இணையானது மட்டுமல்ல, அதனினும் கிரிமினல் தன்மை வாய்ந்தது. சோரபுதீன் கொலை வழக்கிலிருந்து அமித் ஷாவை விடுவித்தால், அந்த தீர்ப்பு வெளியாகும் நாளில் வேறொரு செய்தி தலைப்புச் செய்தியாக இருக்கும்படி, இதனைப் பின்னுக்குத் தள்ளிவிடலாம் என்று லோயாவிடம் கூறியிருக்கிறார் அமித் ஷாவின் இடைத்தரகராக செயல்பட்ட ஒரு நீதிபதி. லோயாவுக்குப் பின் நியமிக்கப்பட்ட கோசாவி என்ற நீதிபதி அமித் ஷாவை விடுவித்து தீர்ப்பளித்த நாள் டிச, 30, 2014. அன்றைக்கு “தோனி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது” முதன்மைச் செய்தியாக இருக்க, “அமித் ஷாவின் விடுதலை” முக்கியத்துவமற்ற ஸ்குரோலிங் செய்தியாக யார் கண்ணிலும் படாமல்போனது.

தற்போது கைது நடவடிக்கைக்கு குறிக்கப்பட்டிருக்கும் தேதியும் மோடி அரசுக்கு இத்தகைய உள்நோக்கங்கள் இருப்பதைப் புலப்படுத்துகிறது. தீயைத் தீயால் அணைக்கும் நடவடிக்கையைப் போல, ரிசர்வ் வங்கி அறிக்கையிலிருந்து மோடியின் மானத்தையும், தடை செய்யப்படுவதிலிருந்து சனாதன் சன்ஸ்தாவையும் காப்பாற்றும் பொருட்டு அவசரம் அவசரமாக இந்தக் கைது அரங்கேற்றப்பட்டிருக்கிறது.

முனைவர் ஆனந்த் தெல்தும்டே

புனே போலீஸ் கைதுக்குரிய சட்டபூர்வ முறைகளைப் பின்பற்றவில்லை. கைது செய்யப்படுபவர்களுக்கு அது தொடர்பான ஆவணங்களை ஆங்கிலத்தில் கொடுக்க வேண்டுமென்ற அறிவுகூட அவர்களுக்கு இல்லை. இந்தக் கைது நடவடிக்கையை ஒட்டி ஆனந்த் தெல்தும்டெ போன்றோரது வீடுகளில் நடத்தப்பட்ட சோதனைகள் அனைத்தும் சட்டவிரோதமான முறையிலே செய்யப்பட்டிருக்கின்றன.

அறிவுத்துறையினரை ‘அச்சுறுத்துவது’ இந்தக் கைது நடவடிக்கையின் நோக்கமாக இருக்கிறது என்ற போதிலும், இதில் வெளிப்பட்டிருக்கும் அவசரமும் மூர்க்கமும் மோடி அரசின் அச்சத்தை அடையாளம் காட்டுகின்றன. அச்சுறுத்துபவனை தைரியசாலி என்று என்று நாம் கருதவேண்டியதில்லை. ‘அச்சுறுத்தல்’ பல சந்தர்ப்பங்களில்  கோழைகளின் ஆயுதமாகத்தான் இருக்கிறது.

வரவர ராவ், வெர்னான் கன்சால்வேஸ், அருண் பெரெய்ரா ஆகியோரை  உபா சட்டத்தின் கீழ் சிறை வைக்கவேண்டுமென்பதற்கு அரசு வழக்கறிஞர்  புனே நீதிமன்றத்தில் எடுத்து வைத்த வாதங்களை மேற்கோள் காட்டி அஜய் சகானி (Institute for Conflict Management) இப்படி எழுதுகிறார்:

“இந்த வழக்கின் பின்புலம் தெரியாமல் அரசு தரப்பின் வாதங்களை நான் படித்திருந்தால், மிகச்சிறந்த நகைச்சுவை எழுத்தாளரின் படைப்பாக அதனைக் கருதியிருப்பேன். ’இந்து வெறியர்கள் நடத்திய கும்பல் கொலைகளை புகைப்படக் காட்சி வைத்து மாவோயிஸ்டு கட்சிக்கு ஆள் சேர்த்தார்’ என்பது ஒரு குற்றச்சாட்டு. கும்பல் கொலையை அம்பலப்படுத்துவது மாவோயிஸ்டுகளுக்கு ஆள் சேர்க்கும் குற்றமாகுமா?” என்று கேட்கிறார் சகானி.

அருந்ததிராய்
அருந்ததிராய்

“நாம் சமீப காலமாக விவாதித்து வரும் ஒரு விசயத்திற்கு இன்றைய நாளேடுகளில் விடை கிடைத்திருக்கிறது. ’பாசிச எதிர்ப்பு முன்னணி அமைத்து இந்த அரசையே தூக்கி எறிய சதி செய்தவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாக’ போலீஸ் கூறுகிறது. எனவே போலீசாலேயே “பாசிஸ்டு” என்று அழைக்கப்படும் ஒரு அரசுக்கு எதிராக போராடிக்கொண்டிருக்கிறோம் என்பதை இப்போது நாம் புரிந்து கொள்ள வேண்டும்” என்கிறார் அருந்ததி ராய்.

மோடி அரசு தனக்குத்தானே பாசிசப் பட்டம் சூட்டிக் கொண்டது ஒரு நகைச்சுவை. இது ஒருபுறமிருக்க, கைது செய்யப்பட்டவர்களை தனிமைப்படுத்துவதற்காக அவர்கள் பயன்படுத்திய “மாநகர நக்சல்” என்ற சொற்றொடர் “நானும் மாநகர நக்சல்தான்” என்று சமூக ஊடகங்களில் பூமராங் ஆகிவிட்டது.

“சமூகவிரோதி, நக்சல், ஆன்டி இண்டியன்” போன்ற சொற்களுக்கு தமிழகத்தில் இரண்டு மாதங்களுக்கு முன் என்ன நடந்ததோ, அது இப்போது நாடு முழுவதும் நடக்கிறது. “மோடியே வெளியேறு” என்று  தமிழகம் எழுப்பிய முழக்கமும் விரைவிலேயே “தேசிய முழக்கமாக” மாறக்கூடும்.

 – மருதையன்
மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர்.

பெட்டிச் செய்தி: ‘பத்மஸ்ரீ’ பார்ப்பன பயங்கரவாதி!

பீமா கோரேகானில் கலவரத்தை தூண்டிய முதன்மைக் குற்றவாளியின் பெயர் சம்பாஜி பிடே (85). “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் நிறுவனர். நீண்ட நாள் ஆர்.எஸ்.எஸ். ஊழியர். பீமா கோரேகான் கலவரத்துக்காக பதிவு செய்யப்பட்ட முதல் எப்.ஐ.ஆரிலேயே பிடேவின் பெயர் இருக்கிறது. எனினும், பிடே கைது செய்யப்படவில்லை.
பிடே ஒரு வெறி பிடித்த பார்ப்பன பாசிஸ்டு. ” கிறித்தவனும் முஸ்லிமும் மட்டுமல்ல, இந்துவாக இருந்து கொண்டு நம்மை ஆதரிக்காதவனும் நமது எதிரியே” என்றும் “வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்” என்றும் பேசும் மராத்திய மாநிலத்தின் எச்.ராஜா.
“குழந்தையில்லாத தம்பதிகள் 130 பேருக்கு என்னுடைய தோட்டத்து மாம்பழத்தைச் சாப்பிட்டுக் குழந்தை பிறந்திருக்கிறது” என்று பிரகடனம் செய்த இந்த கோமாளிக்கு பத்மஸ்ரீ பட்டம் கொடுத்தே தீரவேண்டுமென 2016-இல் பத்து மராத்திய அமைச்சர்கள் மத்திய அரசுக்கு சிபாரிசு செய்திருக்கின்றனர்.
தபோல்கர், கவுரி லங்கேஷ் கொலைகள், குண்டு வெடிப்புகளுக்காக, சமீபத்தில் மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசால் உபா சட்டத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் சுதன்வா காண்டலேகர், அவினாஷ் பவார் ஆகியோருக்கு  மட்டுமல்ல மோடிக்கும் பிடேதான் குருநாதர். இதை 2014 தேர்தல் பிரச்சாரத்தில் சாங்லி நகரில் அவர் பகிரங்கமாகவே அறிவித்தார்.
அதற்காக மோடியை உபா சட்டத்தில் கைது செய்ய முடியுமா, அவர் பிரதமராயிற்றே!