இன்றைய செய்தித்தாள்கள் (ஆகஸ்டு 30, 2018) தாங்கி வந்துள்ள செய்திகள் குறித்து நாம் சில காலமாக விவாதித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியன் எக்ஸ்பிரஸின் முதல் பக்க செய்தியின் தலைப்பு: “நீதிமன்றத்தில் போலீசு : அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான பாசிச எதிர்ப்புத் திட்டத்தின் பகுதியாக இருந்தவர்கள்”.
சொந்த போலீசாலேயே பாசிசவாதி என அழைக்கப்படும் அரசாங்கத்துக்கு எதிராக நாம் இருக்கிறோம் என்பதை இப்போது அறிந்து கொள்ள வேண்டும். தற்போதைய இந்தியாவில், ஒருவர் சிறுபான்மையினராக இருப்பது ஒரு குற்றம்; கொலை செய்யப்படுவது ஒரு குற்றம்; அடித்து கொல்லப்படுவது ஒரு குற்றம்; ஏழையாக இருப்பது ஒரு குற்றம். வறியவர்களை ஆதரிப்பது அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான திட்டமிடல்.
அறியப்பட்ட செயல்பாட்டாளர்கள், கவிஞர்கள், வழக்கறிஞர்கள், மத போதகர்களின் வீடுகளை புனே போலீசு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சோதனை இட்டது; ஐவரை கைது செய்தது. முக்கியமான சிவில் உரிமைப் பாதுகாவலர்கள், இரண்டு வழக்கறிஞர்கள் நகைப்புக்குரிய குற்றச்சாட்டுகளில், சிறு அல்லது ஒன்றுமேயில்லாத ஆதாரங்களின் அடிப்படையில் கைதாகியிருக்கிறார்கள். அரசு இது கடுமையான எதிர்வினைகளைக் கிளறிவிடும் என அறிந்திருந்தும் செய்தது. இந்த பத்திரிகையாளர் சந்திப்பு, கைதுக்கு எதிராக நாடு முழுவதும் நடத்தப்படும் போராட்டங்கள் உள்ளிட்ட நம்முடைய எதிர்வினைகளையெல்லாம் அரசு இந்த நடவடிக்கையை எடுக்கும் முன் கணக்கில் கொண்டிருக்கும். எனவே, ஏன் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன?
வாக்காளர்களின் தகவல்களை வைத்து லோக்நீதி – CSDS-ABP செய்த சமீபத்திய கருத்துக் கணிப்பில் பாஜகவும் பிரதமர் நரேந்திர மோடியும் தங்களுடைய செல்வாக்கை கணிசமான அளவில் இழந்திருக்கிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது அவர்களுக்கு ஒரு எச்சரிக்கையை ஏற்படுத்தியிருக்க வேண்டும். இதன் பொருள் என்னவென்றால், நாம் ஆபத்தான காலத்துக்குச் சென்று கொண்டிருக்கிறோம் என்பதே. இந்த செல்வாக்கு குறைவு மற்றும் எதிர்க்கட்சிகளுக்கான ஆதரவு பெருகுவதை மறைக்க இனி தொடர்ச்சியான கருணையற்ற முயற்சிகள் மேற்கொள்ளப்படலாம். கைதுகள், படுகொலைகள், அடித்துக் கொல்லுதல், வெடிகுண்டு தாக்குதல், கொடியை முன்வைத்து கொலை, கலவரங்கள், இனப்படுகொலைகள் என தேர்தல் முடியும்வரை இந்த சர்க்கஸ் தொடரும். அதுதான் பிரித்தாள்வது. இதையும் சேர்த்துக் கொள்ளுங்கள், திசைதிருப்பி ஆள்வது. இப்போதிலிருந்து தேர்தல் வரை, எப்போது, எங்கிருந்து நெருப்பு பந்து நம்மேல் விழும் என நம்மால் கணிக்க முடியாது; அந்த நெருப்பு பந்து எப்படிப்பட்டது என்பதும் தெரியாது. வழக்கறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் கைது குறித்து பேசும் முன்னர், நெருப்பு மழையும், வினோதமான சம்பவங்களும் நம்மீது விழும் முன், நான் சில விஷயங்களைச் சொல்ல விரும்புகிறேன்.
- நவம்பர் 8, 2016 அன்று டிவியில் தோன்றி மோடி அறிவித்த பண மதிப்பு நீக்க அறிவிப்பு முடிந்து ஒரு வருடம், ஒன்பது மாதங்களாகிறது. இந்த அறிவிப்பால் அவருடைய அமைச்சரவையே வியப்படைந்தது. 99 % சதவீத பணம் வங்கிக்குத் திரும்பிவிட்டதாக இப்போது ரிசர்வ் வங்கி அறிவித்திருக்கிறது. இங்கிலாந்தின் கார்டியன் பத்திரிகை, இந்த பண மதிப்பழிப்பு நடவடிக்கை நாட்டின் 1 % பொருளாதார வளர்ச்சியை குறைத்ததோடு, 1.5 மில்லியன் வேலையிழப்புகளை ஏற்படுத்தியதாக தெரிவிக்கிறது. அதே நேரத்தில், புதிய பணத்தை அச்சடிக்க பல ஆயிரம் கோடிகள் செலவழிக்கப்பட்டுள்ளது. பண மதிப்பழிப்பு நடவடிக்கைக்குப் பின் ஜி.எஸ்.டி அமலாக்கப்பட்டது. பண மதிப்பழிப்பால் அல்லாடிக்கொண்டிருந்த சிறு மற்றும் குறுந்தொழில்களை அது முற்றிலுமாக அழித்துவிட்டது.
சிறு தொழில்கள், வர்த்தகர்கள் குறிப்பாக ஏழைகள் அதிக அளவில் இதனால் பாதிக்கப்பட்டனர். அதே சமயம், பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்கள் தங்களுடைய சொத்து மதிப்பை பன்மடங்காக உயர்த்திக்கொண்டன. அரசாங்கம் பார்த்துக்கொண்டிருக்க விஜய் மல்லையா, நிரவ் மோடி போன்றோர் பல ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான மக்களின் பணத்தை எடுத்துக்கொண்டு ஓட அனுமதிக்கப்பட்டார்கள்.
எத்தகைய பொறுப்புத்தன்மையை இவர்களிடம் நாம் எதிர்பார்க்க முடியும்? ஒன்றுமில்லை? பூஜ்ஜியம்?
இவற்றின் ஊடாக, 2019-ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகும் வகையில் பாஜக நாட்டிலேயே பணபலம் மிக்க கட்சியாக உருவெடுத்துவிட்டது. அதிர்ச்சியூட்டும் விதமாக, சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நன்கொடைகளை பத்திரங்களாக வாங்கும் முறையிலும் அரசியல் கட்சிகளின் நன்கொடையாளர்கள் குறித்த விவரங்கள் மூடியே பாதுகாக்கப்படுகின்றன.
- 2016-ம் ஆண்டு மும்பையில் ‘மேக் இன் இந்தியா’ நிகழ்ச்சி மோடியால் தொடங்கி வைக்கப்பட்டபோது நடந்த கேலிக்கூத்து நினைவிருக்கலாம். முக்கிய அரங்கின் கலாச்சார நிகழ்வு நடந்த இடத்தில் மிகப்பெரும் தீ விபத்து ஏற்பட்டது. ஆனால், நிஜமான தீப்பிழம்பு, மேக் இன் இந்தியாவின் நோக்கமான ரஃபேல் விமான ஒப்பந்தத்திலிருந்து வெளிப்பட்டது. தன் சொந்த பாதுகாப்புத் துறை அமைச்சருக்குத் தெரியாமலேயே, தன்னிச்சையாக முடிவெடுக்கப்பட்டு பிரதமரால் பாரிசில் ரஃபேல் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது. இது அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் மீறிய செயல்பாடாகும்.
இந்த ஒப்பந்தம் காங்கிரஸ் கூட்டணி அரசில் 2012-ஆம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டு, இந்துஸ்தான் எரோநாடிக்ஸ் லிமிடெட் (HAL) என்ற இந்திய அரசு நிறுவனம் விமானங்களின் பாகங்களை ஒன்றிணைக்கும் பணியை செய்யும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. இது குப்பையில் கிடத்தப்பட்டது. இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனம் குறிவைத்து தாக்கப்பட்டது. காங்கிரஸ் உள்ளிட்ட பலர் மோடியின் ஒப்பந்தத்தில் கற்பனைக்கெட்டாத ஊழல் நடந்திருப்பதையும் ஒரு விமானத்தைக் கூட இதுநாள் வரை உருவாக்கியிராத ரிலையன்ஸ் டிபென்ஸ் நிறுவனத்தின் தலையீடு மற்றும் திரைமறையில் நடந்த பேரங்கள் பற்றியும் கேள்விகள் எழுப்பப்பட்டன.
எதிர்க்கட்சிகள், நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணையைக் கோரின. நாம் ஏதாவது ஒன்றை எதிர்ப்பார்க்க முடியுமா? அல்லது அவை அனைத்தையும் ஒரு மடக்கில் விழுங்கிவிட வேண்டுமா?
- கர்நாடக போலீசார் பத்திரிகையாளர் மற்றும் செயல்பாட்டாளர் கவுரி லங்கேஷ் படுகொலை குறித்து விசாரித்து வருகிறார்கள். அந்த விசாரணையில் பலர் கைது செய்யப்பட்டு, சனாதன் சன்ஸ்தா போன்ற வலதுசாரி இந்துத்துவ அமைப்புகளின் நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன.
நிழல் உலகில் இயங்கும், தீவிரவாத வலைப்பின்னலும் யாரை கொலை செய்யப்போகிறார்கள் என்ற அவர்களுடைய ஹிட் லிஸ்டும் அவர்களுடைய மறைவிடங்கள், மக்களை கொல்லும் ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் விசாரணையில் வெளிவந்தன. இந்த குழுக்களைப் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? எத்தனை பேர் இன்னும் ரகசியமாக வேலை செய்துகொண்டிருக்கிறார்கள்? அதிகாரத்தின் ஆசியுடன், காவல்துறையின் ஒத்துழைப்புடன் அவர்கள் என்ன திட்டங்களை நமக்காக வைத்திருக்கிறார்கள்? தவறான கொடிக்காக தாக்குதல் நடத்தப்படுவது என்பது என்ன? அப்படியெனில் எது உண்மையானது? இது எங்கே நடக்கும்? காஷ்மீரிலா? அயோத்தியிலா? கும்ப மேளாவிலா? எப்படி எளிதாக அனைத்து தாக்குதல்களும் குழையும் ஊடகங்களால் மடைமாற்றம் செய்யப்படுகின்றன? இந்த உண்மையான அச்சுறுத்தல்களிலிருந்து திசை திருப்பத்தான், சமீபத்திய கைதுகளுக்காக நம்மை கண்ணீர் சிந்த வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
- கல்வி நிறுவனங்கள் அழிக்கப்படும் வேகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். மதிப்பிற்குரிய தடம் பதித்த பல்கலைக்கழகங்களின் அழிவையும் பேப்பரில் மட்டுமே உள்ள போலி பல்கலைக்கழகங்களுக்கான உயர்வையும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சொல்லப்போனால் இதுதான் மிகவும் வருத்தத்திற்குரிய விஷயம். இது பல வழிகளில் நிகழ்ந்து வருகிறது. ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் நம் கண்முன்னே சீரழிக்கப்படுவதை பார்க்கிறோம். மாணவர்களும் ஆசிரியர்களும் தொடர்ச்சியான தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள். பல தொலைக்காட்சி சானல்கள் பொய்களை, ஜோடிக்கப்பட்ட வீடியோக்களை பரப்பி மாணவர்களின் வாழ்க்கையை கேள்விக்குள்ளாக்கியிருக்கின்றன. பொய்களால் இரக்கமற்று துரத்தப்பட்ட இளம் ஆய்வாளரான உமர் காலித் மீது படுகொலை முயற்சி நடக்கிறது.
பிறகு, அவர்கள் வரலாற்றை திரிக்கும் வேலைகளையும் பாடத்திட்டங்களை கேலிக்குள்ளாக்கும் வகையில் செயல்படுகிறார்கள். சமீப சில ஆண்டுகளில் ஒருவகையான குணப்படுத்த முடியாத முடத்தன்மையை கல்வி புலத்தில் உண்டாக்கியிருக்கிறார்கள். இறுதியாக, தனியார்மயமாக்கப்பட்ட கல்வி, இடஒதுக்கீடு செய்த சிறு நன்மையைக் கூட செய்யவில்லை. பெருநிறுவனங்களின் முகமூடியோடு கல்வி பார்ப்பனமயமாக்கப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். தலித், பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மக்கள் கட்டணங்களை கட்டத் திணறி கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றப்படுவதைப் பார்க்கிறோம். இது நிகழத் தொடங்கிவிட்டது. இது முழுக்க முழுக்க ஏற்றுக்கொள்ள முடியாதது.
- மிகப்பெரும் துயரத்தில் இருக்கிறது வேளாண் துறை. விவசாயிகளின் தற்கொலைகள் அதிகரித்தபடியே உள்ளன. முசுலீம்கள் அடித்துக் கொல்லப்படுகிறார்கள், தலித்துகள் இரக்கமற்று தாக்கப்படுகிறார்கள். பொதுவெளியில் ஏவப்படும் கும்பல் வன்முறை, உயர்சாதிகளின் தாக்குதலுக்கு எதிராக எழுந்து நின்ற பீம் ஆர்மியின் தலைவரான சந்திரசேகர் ஆசாத் கைது செய்யப்படுகிறார். பட்டியல் இன மற்றும் பழங்குடிகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை நீர்த்துப் போக வைக்கச் செய்யப்பட்ட முயற்சி என சொல்லிக்கொண்டே போகலாம்.
சொல்ல இத்தனை இருக்கின்றன. சமீபத்தில் நடந்த கைது நடவடிக்கைகளுக்கு வருகிறேன்.
நேற்று கைது செய்யப்பட்ட வெர்னான் கோன்சால்ஸ், அருண் ஃபெரைரா, சுதா பரத்வாத், வரவர ராவ், கௌதம் நவ்லாகா ஆகிய ஐவரில் ஒருவர் கூட டிசம்பர் 31-ம் தேதி நடந்த எல்கர் பரிஷத் பேரணியில் கலந்துகொள்ளவில்லை. இந்தப் பேரணியின் முடிவில் கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள், பெரும்பான்மையினர் தலித்துகள், 200-ம் ஆண்டின் பீமா கொரேகான் வெற்றியைக் கொண்டாடுவதற்காக குழுமினார்கள். (தங்களை சுரண்டிக்கொண்டிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக பிரிட்டிஷாருடன் இணைந்து தலித் மக்கள் போராடி வெற்றி கண்டனர். தலித்துகள் பெருமையுடன் கொண்டாடக்கூடிய சில வெற்றிகளில் இதுவும் ஒன்று)
ஓய்வுபெற்ற நீதிபதிகளான P.B.சாவந்த் மற்றும் கோல்சே பட்டீல் ஆகியோரின் தலைமையில் எல்கர் பரிசத் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணியில் பங்கெடுத்தவர்கள் மீது இந்துத்துவ வெறியர்கள் தாக்குதல் நடத்தினர். அதனால் சில நாட்கள் பதற்றம் உண்டானது. மிலிந்த் எக்போடே மற்றும் சம்பாஜி பிடே ஆகியோர் இதில் முதன்மை குற்றவாளிகள். இன்னும் அவர்கள் கைது செய்யப்படவில்லை. அவர்களுடைய ஆதரவாளர் ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு, செயல்பாட்டாளர்கள் ரோமா வில்சன், சுதிர் தாவ்லே, ஷோமா சென், மிஹிர் ராட், அவர்களுடைய வழக்கறிஞர் சுரேந்திர கட்லிங் ஆகியோர் கைது செய்யப்படுகிறார்கள். அவர்கள் மீது பேரணியில் வன்முறையை தூண்டிவிட்டது என்கிற குற்றச்சாட்டோடு மோடியை கொல்ல திட்டம் திட்டினார்கள் என்ற குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. அவர்கள் உஃபா சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு இப்போதும் காவலில்தான் உள்ளார்கள். நல்லவேளையாக, இஷ்ரத் ஜஹான், சொராபுதீன், கவுசர் பீ போன்றோரை போல் அல்லாது அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள். கடந்த காலங்களில் இதே காரணங்களுக்காக குற்றம் சாட்டப்பட்ட அவர்கள், வழக்கு விசாரணையை எதிர்கொள்வதற்குக்கூட உயிருடன் இல்லை.
காங்கிரஸ் அரசாங்கமானாலும் பாஜக அரசானாலும் தங்கள் அரசின் பழங்குடியினர்களுக்கு எதிரான தாக்குதலை மறைக்க, (இப்போதைய அரசு தலித்துகள் மீதும் தாக்குதல் நடத்துகிறது) அவற்றை ‘நக்சல்கள்’ அல்லது ‘மாவோயிஸ்டுகள்’ மீதான தாக்குதலாகக் கூறின. முசுலீம்கள் ஏறக்குறைய வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அனைத்து கட்சிகளும் பழங்குடிகள் மற்றும் தலித் மக்கள் வாழும் தொகுதிகளை முக்கியமான வாக்கு வங்கியாக பார்ப்பதன் விளைவு இது. செயல்பாட்டாளர்களை கைது செய்து ‘மாவோயிஸ்டுகள்’ என அழைப்பதன் மூலம் அரசு , தலித் எழுச்சியை கொச்சைப்படுத்துகிறது; குறைத்து மதிப்பிடுகிறது. அதே சமயம் தலித் தொடர்பான விஷயங்களில் கவனம் செலுத்துவதாகவும் தோற்றத்தை உருவாக்குகிறது. இன்று ஆயிரக்கணக்கான வறிய, பின்தங்கிய மக்கள் தங்களுடைய உறைவிடத்துக்காகவும் நிலத்துக்காகவும் மரியாதைக்காகவும் போராடி சிறையில் இருக்கிறார்கள். தேச விரோத சட்டத்தின் கீழ் குற்றம்சாட்டப்பட்டு, வழக்கு விசாரணைக்குக் கூட ஆட்படுத்தப்படாமல் சிறையில் கும்பலாக அடைக்கப்பட்டுள்ளார்கள்.
கைது செய்யப்பட்ட மூன்று வழக்கறிஞர்களும், நன்றாக அறியப்பட்ட ஏழு செயல்பாட்டாளர்களும் நீதி மறுக்கப்பட்டவர்களாக இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பாக, சல்வா ஜுடும் என்றகூலிப்படை, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தாரில் உருவாக்கப்பட்டது. மக்களை கொல்வது, ஒரு கிராமத்தையே எரிப்பது என வன்முறைகளில் ஈடுபட்டது. பியூசிஎல் அமைப்பின் அப்போதைய பொதுச் செயலாளரான டாக்டர் பினாயக் சென் பாதிக்கப்பட்டவர்களுக்காக பேசினார். பினாயக் சென் சிறையில் அடைக்கப்பட்டபோது, தொழிலாளர் சங்க தலைவராகவும் வழக்கறிஞராகவும் இருந்த சுதா பரத்வாஜ் அவருடைய பணிகளை செய்தார். பஸ்தாரில் துணை ராணுவப்படையின் தாக்குதல்களுக்கு எதிராக அயராது பிரச்சாரம் செய்தார் பேராசிரியர் சாய்பாபா. கைது செய்யப்பட்ட பினாயக் சென்னுக்கு ஆதரவாகவும் அவர் நின்றார். சாய்பாபா கைதுசெய்யப்பட்டபோது ரோனா வில்சன் வந்து நின்றார். சுரேந்திர கட்லிங் சாய்பாபாவின் வழக்கறிஞர். ரோனா வில்சன், சுரேந்திர கட்லிங், சுதா பரத்வாஜ், கவுதம் நவ்லாகா ஆகியோர் கைது செய்யப்பட்டபோது மற்றவர்கள் அவர்களுக்காக நின்றார்கள். இது இப்படியே போய்க்கொண்டிருக்கும்.
அவர்கள் தடுத்து நிறுத்தப்படுவதும் அமைதியாக்கப்படுவதும் கொடூரமானது.
கடவுளே எங்கள் நாட்டை திரும்பப் பெற எங்களுக்கு உதவுங்கள்.
- எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதி த வயரில் வெளியான கட்டுரை
- தமிழாக்கம் : கலைமதி
தேர்தல் அச்சத்தில் தன்னை அம்பலப்படுத்துபவர்களை கைது செய்து பீதியூட்டினால் எதிர்ப்புகள் அடங்கிவிடும் என பகல் கனவு காண்கிறது பாசிச மோடி அரசு.
அவர்களின் பகல் கனவு பாழாய் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை.
மேடம் நீங்கள் நகர்ப்புற கம்யூனிஸ்ட் மக்கள் விரோதி என்று சொல்ல வேண்டும்.
மக்கள் விரோதமாணிக்க மணிகண்டரே அருந்ததிராய் அவர்கள் “தேசவிரோதி”….
கம்யூனிஸ்ட்கள் என்றாலே தேசவிரோதிகள் தான், இந்தியா சீனா போரில் சீனாவை ஆதரிப்பார்களாம், இந்தியா ராணுவத்தை சீனாவிற்கு காட்டி கொடுப்பார்களாம் ஆனாலும் அவர்களை தேசவிரோதிகள் என்று சொல்ல கூடாதாம்.
கம்யூனிஸ்ட் அய்யோக்கியர்களால் இந்த நாட்டிற்கு ஒரு நன்மையையும் நடந்தது இல்லை, மக்களை மேலும் மேலும் ஏழையாக்கி அழிவில் தள்ளியது தான் கம்யூனிஸ்ட்கள் செய்த சாதனை.
இந்த லூச விட்டுறுங்க . . ! யாரும் பொருட்படுத்தாதீங்க . . . !
மேட்டுக்குடிகள் பொழுதுபோக்கு