ஜே.என்.யு. மாணவர் தலைவர் உமர் காலித் துப்பாக்கிக் குண்டுக்கு இரையாகாமல் தப்பியிருக்கிறார். டில்லியின் மையப்பகுதியில், நாடாளுமன்றத்துக்கு வெகு அருகில் இருக்கிறது கான்ஸ்டிடியூசன் கிளப் அரங்கம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் பத்திரிகையாளர்களும் வந்து போகும் அந்த அரங்கின் வாயிலில் 13.08.2018 அன்று இந்தக் கொலை முயற்சி நடந்திருக்கிறது.

உமர் காலித்

“அச்சத்திலிருந்து சுதந்திரம்” என்ற தலைப்பில் அங்கு நடைபெறவிருந்த கூட்டத்தின் நோக்கமே  இத்தகைய கொலைகளுக்கு எதிராக குரலெழுப்புவதுதான்.

கூட்டத்தில் பேச வந்திருந்த உமர், கடையில் தேநீர் குடித்து விட்டு நகர்ந்திருக்கறார். அவரை பிடறியில் கைவைத்து கீழே தள்ளி, கைத்துப்பாக்கியால் வயிற்றில் சுட முனைந்திருக்கிறான் கொலையாளி. அவன் கையைப் பிடித்து தள்ளியிருக்கிறார் உமர். உமருடன் வந்திருந்த பனோஜ்யோத்ஸ்னா லாகிரி என்ற இளைஞரும் ஷாரிக் உசேன் என்பவரும் கொலையாளியைப் பிடித்து தள்ளியிருக்கின்றனர். இந்த தள்ளுமுள்ளுக்கு இடையில் ஒரு தோட்டா வெடித்திருக்கிறது. அவன் துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

“நமக்கும் கவுரி லங்கேஷின் தருணம் வந்து விட்டது என்றுதான் அந்தக் கணத்தில் நினைத்தேன். நண்பர்கள் மட்டும் அவனைப் பிடிக்கவில்லையென்றால் நான் உயிர் பிழைத்திருக்க மாட்டேன்” என்று கூறுகிறார் உமர் காலித்.

2016 பிப்ரவரியில் கண்ணையாகுமார், அனிர்பன் பட்டாசார்யா, உமர் காலித் ஆகியோர் மீது போடப்பட்ட தேசத்துரோக வழக்குகளும் தாக்குதல்களும் உலகத்தின் கவனத்தை ஈர்த்தன. மோடி அரசை உலக அரங்கில் அம்பலப்படுத்திய அந்த நிகழ்வுக்குப் பின்னரே, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தையும், அதன் முற்போக்கான மாணவர் சமூகத்தையும் பார்ப்பன பாசிஸ்டுகள் குறிவைக்கத் தொடங்கி விட்டனர்.

துப்பாக்கியை தெருவில் வீசி விட்டு ஓடியிருக்கிறான்.

குறிப்பாக உமர் காலித்துக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தை ஒரு இயக்கமாகவே நடத்தி வருகிறது அர்னாப் கோஸ்வாமியின் ரிபப்ளிக் டிவி. சமூக ஊடகங்களின் வாயிலாக கடந்த இரண்டு ஆண்டுகளாக விதம் விதமான பொய்ப்பிரச்சாரங்கள் சங்கிகளால் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் இந்தக் கொலை முயற்சி. தபோல்கர் முதல் கவுரி லங்கேஷ் வரையிலான அனைவரின் விசயத்திலும் இப்படித்தான் நடந்திருக்கிறது.

உமர் சுடப்பட்ட செய்தி ஊடகங்களில் வரத்தொடங்கிய மறுகணமே, இந்த சம்பவத்தையே மறுக்கின்ற பொய்ப்பிரச்சாரமும் தொடங்கிவிட்டது. “சம்பவம் நடந்த போது நான் அங்கேதான் இருந்தேன். துப்பாக்கி சூடு நடந்தது உண்மை. ஆனால் உமர் காலித் அந்த இடத்தில் இல்லவே இல்லை” என்று தைனிக் பாஸ்கர் (இந்தியில் வெளிவரும் தினமலம்) நாளேட்டின் நிருபர் சந்தோஷ்குமார் ஒரு வீடியோவை சுற்றுக்கு விட்டிருக்கிறார். உடனே இதனை ஏ.பி.பி. நியூஸ் சானலின் நிருபர் விகாஸ் பதவுரியா டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். மோடியை அவதூறு செய்வதற்காக உமர் நடத்தும் நாடகம் என்றும், தாக்கியதே உமர்தான் என்றும் பலவிதமாக இந்தக் கதை சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டுவிட்டது. இதனைப்  பரப்பியவர்களில் பலர் டிவிட்டரில் மோடியால் பின் தொடரப்படுபவர்கள்.

ஒருபுறம், அடையாளம் தெரியாத அந்த கொலையாளிக்கு எதிராக கொலைமுயற்சி வழக்கு பதிவு செய்திருக்கிறது டெல்லி போலீஸ்.  இன்னொரு புறம், பா.ஜ.க. எம்.பி.யும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞருமான மீனாட்சி லேகி “அப்படி ஒரு தாக்குதலே நடக்கவில்லை என்றும் இது உமர் நடத்தும் நாடகம்” என்றும் வாதாடிக் கொண்டிருக்கிறார். அக்லக் கொலை முதல் அனைத்தில் கடைப்பிடிக்கப்படும் உத்தி இதுதான்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

***

டில்லி சம்பவத்துக்கு 3 தினங்களுக்கு முன், கடந்த 10 ஆம் தேதியன்று மகாராட்டிர பயங்கரவாத தடுப்பு போலீசார் காவி பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்த மூன்று பேரைக் கைது செய்திருக்கின்றனர். அவர்களிடமிருந்து பத்து கைத்துப்பாக்கிகள், கையெறி குண்டுகள், ஜெலட்டின் குச்சிகள், டெடனேட்டர்கள் உள்ளிட்ட வெடி பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.

“சுட்டவன் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால் அதிகாரத்தில் அமர்ந்து கொண்டு வெறுப்பையும் அச்சத்தையும் இரத்த வெறியையும் பரப்புவோரும், தண்டிக்கப்படுவோம் என்ற அச்சமே இல்லாத தைரியத்தை கொலைகாரர்களுக்கு வழங்குபவர்களும்தான் உண்மையான குற்றவாளிகள்” என்று கூறியிருக்கிறார் உமர் காலித்.

இரண்டு வார காலம் இவர்களது நடவடிக்கைகளைத் தொடர்ந்து கண்காணித்து அதன் பின்னர்தான் கைது செய்திருப்பதாகவும்,  இவர்கள் அனைவரும் பயங்கரவாத நடவடிக்கைகளில் பயிற்சி பெற்றவர்கள் என்றும் மகாராட்டிர போலீஸ் கூறுகிறது. இவர்களைக் கைது செய்திருக்காவிட்டால், பக்ரீத் மற்றும் சுதந்திர தினத்தையொட்டி பல இடங்களில் இவர்கள் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியிருப்பார்கள் என்றும் அதற்குத் தயார் நிலையில்தான் எல்லா வெடிபொருட்களும் இருந்தன என்றும் கூறுகிறது போலீஸ்.

யார் இந்த மூவர்?

வைபவ் ராவத் (40) ஹிந்து கோவன்ஷ் ரக்ஷா சமிதியின் (பசு பாதுகாப்பு படை) உறுப்பினர். தபோல்கர், பன்சாரே, கல்புர்கி, கவுரி லங்கேஷ் ஆகியோரது கொலைகளில் தொடர்புள்ள “சனாதன் சன்ஸ்தா”வின் ஆதரவாளர்.

சுதன்வா காண்டலேகர் (39) “ஸ்ரீ சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” என்ற அமைப்பின் உறுப்பினர். அந்த அமைப்பின தலைவர்தான் பீமா கோரேகானில் தலித்துகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியதில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் சம்பாஜி பிடே.

சரத் கசால்கர் (25) பசு பாதுகாப்பு குண்டர் படை வைத்துக் கொண்டு இறைச்சிக் கடைகளை சூறையாடுவது,  தாக்குவது போன்ற நடவடிக்கைகளை வழக்கமாக கொண்டவர்.  குண்டுகள் இவரது வீட்டிலிருந்து தான் கைப்பற்றப்பட்டன.

இருப்பினும், இவர்களை “காவி பயங்கரவாதிகள்” என்றோ “இந்துத்துவ பயங்கரவாதிகள்” என்றோ ஊடகங்கள் குறிப்பிடவில்லை. “சுதந்திர தினத்தை சீர்குலைக்க சதி” என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாகவும் வெளியிடப்படவில்லை.

அன்று, மாலேகான் குண்டுவெடிப்புக்கு காரணமான பிரக்யா சிங் தாகூர்உள்ளிட்ட இந்துத்துவ பயங்கரவாதிகளைக் கைது செய்த  போலீசு அதிகாரி,  ஹேமந்த் கர்கரே மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இவர்களைக் கைது செய்த போலீசு அதிகாரிகளுக்கும் அந்த கதி நேரலாம்.

ஏனென்றால், “சிவபிரதிஷ்டான் இந்துஸ்தான்” அமைப்பின் தலைவர் சம்பாஜி பிடே,  மோடியின் குருநாதர். “என் குருநாதர் பிடே இங்கு வருமாறு உத்தரவிட்டார். இதோ நான் வந்திருக்கிறேன்” என்று 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்திலேயே பேசியிருக்கிறார் மோடி.

கைது செய்யப்பட்டிருக்கும் “பிரிஞ்ச் எலிமென்ட்” சுதன்வா காண்டலேகருக்கும் பிடே தான் குருநாதர்.  அதற்காக, பிரதமர் மோடியை பிரிஞ்ச் எலிமென்ட் என்று சொல்லிவிட முடியுமா என்ன?

செங்கோட்டையிலிருந்து கொடியேற்றுபவரை பிரிஞ்ச் எலிமென்ட் என்று கூறுவது உண்மைக்குப் புறம்பானது மட்டுமல்ல, அது அவதூறு அல்லவா?

***

மர் மீதான கொலை முயற்சி நடந்த பின்னரும் திட்டமிட்ட நேரத்தில் அந்தக் கூட்டம் நடைபெற்றிருக்கிறது.

பிரசாந்த் பூஷண், உமர் காலித் உள்ளிட்ட பேச்சாளர்களுடன்,

ஜார்கண்டில் பசுக்குண்டர்களால் கொல்லப்பட்ட அலிமுதீனின் மனைவி மரியம்,

  • சென்ற ஆண்டு டில்லிக்கு அருகில் ரயிலில் கொலை செய்யப்பட்ட 16 வயது இளைஞன் ஜுனைத் -இன் அம்மா மரியம்,
  • மர்மமான முறையில் காணாமல் போன ஜே..என்.யு மாணவர் நஜீப் அகமதுவின் தாயார் பாத்திமா நபீஸ்
  • சமீபத்தில் ராஜஸ்தான், ஆல்வாரில் பசுக்குண்டர்களால் அடித்துக் கொல்லப்பட்ட ரக்பர்கானின் சகோதரன் அக்பர்
  • கோரக்பூர் குழந்தைகள் மரணத்துக்காக பொய்க்குற்றம் சாட்டி தண்டிக்கப்பட்டிருக்கும் டாக்டர் கஃபில் கான்,
  • கடந்த ஜூன் 11 ஆம் தேதியன்று கோரக்பூரில் 3 துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்டு உயிர் தப்பிய டாக்டர் கஃபில் கானின் சகோதர் காஷிப் ஜமீல்

– ஆகியோர் கான்ஸ்டிடியூசன் கிளப்பின் அந்தச் சிறிய அரங்கில் “அச்சத்திலிருந்து சுதந்திரம்” குறித்துப் பேசியிருக்கின்றனர்.  கூட்டம் முடிந்து வீடு திரும்பிய டாக்டர் கஃபில் கானின் கைபேசிக்கு  “அடுத்த இலக்கு – நீ” என்றொரு குறுஞ்செய்தி வந்திருக்கிறது.

நமக்கும் அப்படியொரு குறுஞ்செய்தி வரும் – அதற்குள் விழித்துக் கொள்ளத் தவறினால்!

வினவு செய்திப் பிரிவு

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க