Wednesday, December 11, 2024
முகப்புபோலி ஜனநாயகம்நீதிமன்றம்காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !

காட்டு வேட்டை: சோனி சோரி மீதான பொய் வழக்குகள் !

-

“நீங்கள் எங்களோடு இல்லையென்றால், அவர்களோடு இருக்கிறீர்கள்!” – இப்படியொரு எச்சரிக்கையை, தீவிரவாதத்துக்கு எதிரான போர் என்ற பெயரில் ஆக்கிரமிப்பு போர்களைத் தொடங்கி வைத்த பொழுது அமெரிக்க முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் அறிவித்தார். அமெரிக்க மேலாதிக்க வல்லரசால் ஆப்கானியர்களுக்கும், இராக் மக்களுக்கும் எதிராக விடப்பட்ட இந்த மிரட்டலை, இந்திய அரசு சத்தீஸ்கரிலும் ஜார்கண்டிலும் வாழ்ந்து வரும் பழங்குடியின மக்களுக்கு எதிராக விடுத்து வருகிறது. இதனை, சத்தீஸ்கர் மாநிலம் – தண்டேவாடா மாவட்டத்திலுள்ள சமேலி கிராமத்தைச் சேர்ந்த மூன்று குழந்தைகளுக்குத் தாயான சோனி சோரி என்ற பழங்குடியினப் பெண்ணின் மீதும், அவரது சகோதரனின் மகன் லிங்காராம் கோடோபியின் மீதும் புனையப்பட்ட வழக்குகள் நிரூபிக்கின்றன.

சோனி சோரி
சிறையில் நடந்த சித்திரவதைகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சோனி சோரி (கோப்புப் படம்).

சோனி சோரியையும் லிங்காராமையும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என முத்திரை குத்தி வரும் சத்தீஸ்கர் அரசு, சோனி சோரி மீது எட்டு கிரிமினல் வழக்குகளையும் லிங்காராம் மீது இரண்டு கிரிமினல் வழக்குகளையும் தொடுத்து, அவர்கள் இருவரையும் கடந்த இரண்டு ஆண்டுகளாகச் சிறை வைத்திருக்கிறது. “அவர்கள் இருவரும் சத்தீஸ்கர் மாநிலத்தில் செயல்பட்டு வரும் எஸ்ஸார் என்ற கார்ப்பரேட் நிறுவனத்திடமிருந்து 15 இலட்ச ரூபாயைப் ‘பாதுகாப்புப் பணமாக’ (Protection Money)ப் பெற்று மாவோயிஸ்டுகளிடம் கொடுக்கும் தரகர்களாகச் செயல்பட்டனர்” என்பது இருவர் மீதும் போடப்பட்டுள்ள முக்கிய வழக்காகும். இவ்வழக்கில் தங்களுக்குப் பிணை வழங்கக் கோரி அவர்கள் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம், “குற்றத்தின் கொடிய தன்மை கருதியும் ஆழமான சாட்சியங்களைக் கருதியும்” பிணை வழங்க முடியாதெனக் கூறிவிட்டது.

பழங்குடியினத்தைச் சேர்ந்த சோனி சோரிக்கும் லிங்காராமுக்கும் பிணை மறுத்திருக்கும் உயர் நீதிமன்றம், இதே வழக்கில் இவர்களோடு சேர்த்துக் கைது செய்யப்பட்ட வேறு இருவருக்கு சில மாதங்களுக்கு முன்பு பிணை வழங்கியிருக்கிறது. அவர்களுள் ஒருவர் எஸ்ஸார் நிறுவனத்தின் பொது மேலாளர் வர்மா; மற்றொருவர் அந்நிறுவனத்தின் ஒப்பந்ததாரர் பி.கே.லாலா. அவர்கள் இருவரும்தான் 15 இலட்சரூபாய் பணத்தை சோனி சோரியிடமும் லிங்காராமிடம் கொடுப்பதற்காக எடுத்து வந்தனர் என்றும், பணத்தை அவர்களிடமிருந்துதான் கைப்பற்றியதாகவும் குற்றஞ்சுமத்தியிருந்தது, போலீசு. ‘கையும் களவுமாக’ப் பிடிக்கப்பட்ட அவ்விருவருக்கும் பிணை வழங்கியபோது, நீதிபதிகள் குறிப்பிடும் குற்றத்தின் கொடிய தன்மை எங்கே ஓடி ஒளிந்து கொண்டது? ஆழமான சாட்சியங்களைக் காணவிடாமல் நீதிபதிகளைத் தடுத்தது எது? இப்படி பாரபட்சமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது கார்ப்பரேட் கால மனுநீதி போலும்.

லிங்காராம்
இரண்டு பொய் வழக்குகளின் கீழ் கைது செய்யபட்ட லிங்காராம்.

சோனி சோரி தாக்கல் செய்த பிணை மனு விசாரணைக்கு வருவதற்குச் சற்று முன்னதாகத்தான், அவர் மீது போடப்பட்டிருந்த எட்டு வழக்குகளில் ஆறு வழக்குகளிலிருந்து அவர் அடுத்தடுத்து விடுதலை செய்யப்பட்டார். குறிப்பாக, சத்தீஸ்கர் மாநில போலீசு மீது வெடிகுண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியது மற்றும் எஸ்ஸார் நிறுவனத்தின் வாகனங்களுக்குத் தீயிட்ட வழக்குகளுக்கும் சோனி சோரிக்கும் தொடர்பேயில்லை எனக் கூறி விசாரணை நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. இவ்வழக்குகள் சோடிக்கப்பட்டவை; அவருக்கு எதிராக நிறுத்தப்பட்ட சாட்சியங்கள் போலீசு தயாரித்த பொய் சாட்சியங்கள் என்பது இந்த வழக்குகளில் நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில், சத்தீஸ்கர் உயர் நீதிமன்றம் எஸ்ஸார் நிறுவனத்திடமிருந்து மாவோயிஸ்டுகளுக்காகப் பணம் பெற்றதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், போலீசு காட்டியுள்ள ஆழமான சாட்சியங்களை நம்பி பிணை வழங்க முடியாது எனக் கூறியிருப்பது நகைப்புக்குரியது.

இத்தனை பொய் வழக்குகளை மூன்று குழந்தைகளுக்கான தாயான சோனி சோரி மீது ஏன் போட வேண்டும்? சோனி சோரியும் லிங்காராமும் போலீசின் ஆட்காட்டிகளாகச் செயல்பட மறுத்தனர் என்பது தவிர இதற்கு வேறு காரணம் எதுவும் கிடையாது. மூன்றாண்டுகளுக்கு முன்பு லிங்காராமைக் கடத்திச் சென்ற சத்தீஸ்கர் போலீசு, அவரைச் சட்டவிரோதக் காவலில் அடைத்து வைத்து, சல்வாஜுடும் குண்டர்படையில் சேரச் சொல்லி சித்திரவதை செய்தது. லிங்காராம் போலீசாரால் கடத்தப்பட்டதை அறிந்த சோனி சோரி, சத்தீஸ்கர் மாநில உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு போட்டு, போலீசின் சட்டவிரோதக் காவலில் இருந்து அவரை விடுவித்தார். சத்தீஸ்கர் போலீசு அந்தச் சமயத்தில் லிங்காராமை விடுவித்து விட்டாலும், அவரையும் அவரது குடும்பத்தாரையும் தொடர்ந்து மிரட்டி வந்தது. சத்தீஸ்கர் போலீசிடமிருந்து லிங்காராமைக் காக்க எண்ணிய சோனி சோரி, அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்ததோடு, பத்திரிகையாளர் படிப்பிலும் சேர்த்துவிட்டார்.

இச்சமயத்தில்தான் சத்தீஸ்கர் போலீசும் துணை இராணுவப் படைகளும் இணைந்து தர்மேட்லா, மோர்பள்ளி, திம்மாபுரம் ஆகிய மூன்று கிராமங்கள் மீது 2011-ஆம் ஆண்டு மார்ச் 11 மற்றும் 15 ஆகிய இரு தினங்களில் மிகக் கொடூரமான தாக்குதலைத் தொடுத்தன. மத்திய ரிசர்வ் போலீசு படையைச் சேர்ந்த 76 போலீசாரை மாவோயிஸ்டுகள் கொன்றொழித்ததற்குப் பழி தீர்த்துக் கொள்வதற்காக நடத்தப்பட்ட தாக்குதல் இது. பத்திரிகையாளராகப் பயிற்சி பெற்றிருந்த லிங்காராம் இத்தாக்குதல் குறித்துப் பாதிக்கப்பட்ட மக்களிடம் நேரடியாகப் பேட்டி கண்டு முக்கியமான ஆதாரங்களைத் தொகுத்து வைத்திருந்தார். இத்தாக்குதல் குறித்த விசாரிப்பதற்கு உச்ச நீதிமன்றம் டி.பி.ஷர்மா கமிசனை ஜூன் 11, 2011-இல் நியமித்தது. இக்கமிசனிடம் போலீசு நடத்திய அட்டூழியங்கள் பற்றிய ஆதாரங்களை லிங்காராம் தருவார் எனச் சந்தேகித்த சத்தீஸ்கர் போலீசு, அதனைத் தடுக்கும் முகமாக, அவரையும் அவருக்கு ஆதரவாக இருந்துவரும் சோனி சோரியையும் செப்.2011-இல் கைது செய்து, அவர்கள் இருவரும் மாவோயிஸ்டுகளின் தரகர்களாகச் செயல்படுகிறார்கள் என்பது உள்ளிட்டுப் பல பொய் வழக்குகளை அடுத்தடுத்து அவர்கள் இருவர் மீதும் புனைந்தது.

மாணவர் ஆர்ப்பாட்டம்
சோனி சோரியையும், லிங்காராமையும் விடுதலை செய்யக் கோரி அனைத்திந்திய மாணவர் சங்கம் டெல்லியில் நடத்திய ஆர்ப்பாட்டம் (கோப்புப் படம்).

சிறைச்சாலையில் சோனி சோரிக்கு மின் அதிர்ச்சி கொடுக்கப்பட்டுச் சித்திரவதை செய்யப்பட்டார். அவரது பிறப்புறுப்பில் இரண்டு கற்களும், ஆசன வாயில் பகுதியில் ஒரு கல்லும் திணிக்கப்பட்டு பாலியில்ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டார். உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி டெல்லி-எய்ம்ஸ் மருத்துவர்கள் சோனி சோரியைப் பரிசோதனைக்கு உட்படுத்தியபொழுது, அவர் மீது நடத்தப்பட்ட இம்மனித உரிமை மீறல்கள் அனைத்தும் அம்பலமாகின.

பழங்குடியின மக்களுக்கு எதிராகக் காட்டு வேட்டையை நடத்திவரும் அரசுக்கும் போலீசுக்கும் ஆட்காட்டியாக நடந்துகொள்ள மறுத்துவரும் சோனி சோரியைச் சட்டப்படித் தண்டிக்க முடியாது என்பதால், அவருக்குப் பிணை வழங்க மறுப்பதன் மூலம் சட்டவிரோதமாக, அநீதியான முறையில் தண்டித்து வருகிறது, ஆளுங்கும்பல். இப்படி அநீதியான முறையில் சோனி சோரி மட்டுமல்ல, அவரது மாநிலத்தில் மட்டும் 2,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும், ஜார்கண்டில் 5,000-க்கும் மேற்பட்ட பழங்குடியின மக்களும் மாவோயிஸ்டுகளின் ஆதரவாளர்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அப்பழங்குடியின மக்களுக்கு இந்தி மொழி தெரியாது; தனியாக வக்கீல்களை வைத்து வழக்கை நடத்துமளவிற்கு அவர்களுக்கு வசதி கிடையாது என்பதையெல்லாம் பயன்படுத்திக் கொண்டு, அவர்களுக்குப் பிணைகூட வழங்காமல், காராகிரகத்தில் அடைத்து வைத்துச் சித்திரவதை செய்து வருகிறது, இந்திய அரசு.

ஓட்டுக்கட்சிகள், அதிகார வர்க்கம், போலீசு ஆகியவற்றின் மீதெல்லாம் நம்பிக்கை இழந்துவிட்ட மக்களுக்கு நீதிமன்றங்கள் மட்டும்தான் கடைசிப் புகலிடமாக இருந்து வருகிறது எனத் தேசிய பத்திரிகைகளும், சோ போன்ற பார்ப்பனக் கும்பலும் கூறிவருகின்றனர். இந்த வாதம் மோசடியானது என்பதையும், நீதிமன்றங்களும் ஆளுங்கும்பலின் கைத்தடிகளாகத்தான் செயல்பட்டு வருகின்றன என்பதையும் சோனி சோரி மீதும் அப்பாவி பழங்குடியின மக்கள் மீதும் போடப்பட்டுள்ள வழக்குகளும், விசாரணைகளும் நிரூபித்துக் காட்டவில்லையா?

– குப்பன்
________________________________________________________________________________
புதிய ஜனநாயகம் – ஆகஸ்ட் 2013
________________________________________________________________________________

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க