Thursday, December 12, 2024
முகப்புஉலகம்ஆசியாவைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !

வைரம் வேண்டும் – மாவோயிஸ்டுகளை தீர்த்துக் கட்டு !

-

த்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் பகுதியில் வைர வளம் இருப்பதை பன்னாட்டு நிறுவனங்கள் கண்டறிந்துள்ளன. தாங்கள் மேற்கொண்ட வான்வெளி சர்வேயில், வைர வளம் நிறைந்திருப்பது தெரிய வந்ததையடுத்து ரியோ டிண்டோ மற்றும் பி.எச்.பி. பில்லிடன் ஆகிய நிறுவனங்கள் அங்கு பூர்வாங்க ஆய்வு நடத்த அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளன; மேலும், “மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடும் பழங்குடிமக்களின் எதிர்ப்பை எவ்வளவு காலத்துக்குள் அடக்குவீர்கள்” என சத்தீஸ்கர் அரசை கேட்டுக் கொண்டுள்ளன.

பஸ்தார்
“மாவோயிஸ்டுகளின் தலைமையில் போராடும் பழங்குடிமக்களின் எதிர்ப்பை எவ்வளவு காலத்துக்குள் அடக்குவீர்கள்”

தற்போது பஸ்தாரில் வைர வளம் இருப்பதை கண்டறிந்து சுரங்கம் அமைக்க விண்ணப்பித்திருக்கும் ரியோ டின்டோ என்ற நிறுவனம ஒரு கொலைகார நிறுவனம் ஆகும். இந்நிறுவனத்திற்கு எதிராக பல்வேறு நாடுகளில் மக்கள் போராடி வருகிறார்கள். மொசாம்பிக்கில் சுரங்கம் அமைப்பதற்காக அங்குள்ள பழங்குடி மக்களை வெளியேற்றி அவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருவதற்கு எதிராக மொசாம்பிக்கின் பழங்குடிமக்கள் போராடி வருகிறார்கள். “நான் வெளியேற மாட்டேன். அவர்கள் என்னை கொலை செய்யக் கூடும். ஆனாலும் நான் இந்த நிலத்தை விட்டு வெளியேற மாட்டேன்”, என்று கூறி போராடுகிறார் மொசாம்பிக்கில் பழங்குடி இன ராணி, சோரியா மகஜோ.

இந்தோனேசியாவின் மேற்கு பபூவா பகுதியில் செயல்படும் கிராபெர்க் சுரங்கம் அந்த பகுதியையே சுடுகாடாக்கியுள்ளது. இந்த சுரங்கம் ஃபிபோர்-மெக்மோரெ காப்பர் கோல்ட் நிறுவனத்திற்கு சொந்தமானதாகும். இதில் 40 சதவீத பங்குகளை ரியோ டிண்டோ வைத்துள்ளது.  இந்த சுரங்கம் எப்படி சுற்றுச் சூழலை அழித்தது என்பதையும், அவர்களது மனித உரிமை மீறல்களையும், தொழிலாளர் மீதான அடக்குமுறைகளையும் மறைக்க பல மில்லியன் டாலர்களை இந்தோனேசிய இராணுவ அதிகாரிகளுக்கும், போலீசுக்கும் வழங்கி இருப்பதையும் நியூயார்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவில் 1965-களில்  ஆட்சியை கைப்பற்றி கம்யூனிஸ்ட்  உறுப்பினர்களை வேட்டையாடிக் கொன்ற அமெரிக்க ஆதரவு பாசிசஆட்சியாளர் சுகார்தோவிற்கு நெருக்கமான  இந்நிறுவனம் 1967 முதல் அங்கு செயல்பட ஆரம்பித்தது. இந்நிறுவனம் 90 களின் மத்தியில்  விரிவாக்கப்பட்டு முழுவீச்சில் உற்பத்தியை ஆரம்பித்தது. பழங்குடி மக்களின் வாழ்வாதாரங்கள் அழிக்கப்படுவதைத் தொடர்ந்து 1996 மார்ச்சில் போராட்டம் உச்சமடைந்தது, மக்கள் நிறுவனத்தை முற்றுகையிட்டு சூறையாடினர். மூன்று நாட்கள் உற்பத்தி நடக்காமல் தடுக்கப்பட்டது.

சுரங்கக் கழிவுகள்
பபூவாவில் 100 கோடி டன் சுரங்கக் கழிவுகளால் சாக்கடையாக்கப்பட்ட ஆற்று வடிநிலப்பகுதி (2000-ம் ஆண்டில் எடுக்கப்பட்ட புகைப்படம்)

பழங்குடிமக்கள் தனக்கு எதிராக திருப்புவதை அறிந்த இந்நிறுவனம் இந்தோனேசியாவின் இராணுவம் மற்றும் உளவுத் துறையோடு இணைந்து வேலை செய்ய ஆரம்பித்தது.  அமெரிக்க ஆதரவு இராணுவ ஆட்சிக்கு 3.5 கோடி டாலர் பணம் கொடுக்கப்பட்டது. அடுத்த சில ஆண்டுகளில் 70 லேண்டு ரோவர் மற்றும் லேண்டு குருசர்ஸ் வாகனங்கள் இராணுவ கமாண்டர்களுக்கு வழங்கப்பட்டன. 1998-ல் சுகர்தோ ஆட்சி அகற்றப்பட்ட பிறகும் ஏதும் மாறிவிடவில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையின் செய்திப்படி 1998-க்கும் 2004-க்கும் இடப்பட்ட காலத்தில் மட்டுமே 2 கோடி டாலர் போலீசு ஜெனரல்கள், கர்னல்கள், கேப்டன்கள், சில இராணுவ யூனிட்டுகளுக்கே கூட வழங்கப்பட்டிருக்கிறது. சில கமாண்டர்கள் ஒவ்வொருவருக்கும்  1.5 லட்சம் டாலர் கொடுக்கப்பட்டது..

சி.ஐ.ஏ உளவாளிகளையும், முன்னாள் அமெரிக்க ராணுவ அதிகாரிகளையும் பணிக்கு அமர்த்தியது இந்நிறுவனம். போராடும் மக்கள் கொலை, சித்திரவதை, பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். சுற்றுச்சூழல் தன்னார்வ நிறுவனங்கள் மக்களை காட்டிக் கொடுத்தனர்.

போராட்டம் வன்முறையாக செல்வதால் போராட்டத்தில் இருந்து பின்வாங்குமாறு தன்னார்வ நிறுவனங்கள் தங்கள் சுற்றுச்சூழல் குழுக்களுக்கு உத்தரவிட்ட  மின்னஞ்சல் பறிமாற்றங்கள் வெளியாகியுள்ளன. நமது நாட்டிலும் ஆளும் வர்க்கங்கள் கோரி வரும் ‘கொள்கை முடிவு எடுக்க உறுதியான தலைமை’யும், வளர்த்து வரும் தொண்டு நிறுவனங்களும் எதற்காக என்பதற்கான வகைமாதிரி இது.

அந்தப் பகுதியின் சுற்றுச்சூழல் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. பழங்குடிமக்கள் உணவுக்காக நம்பியிருக்கும் சாக்கோ மரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. பழங்குடிகளின் வசிப்பிடமான கிராகி மலை இப்போது அனேகமாக காணமல் போய் விட்டது. அங்கிருக்கும் ஆறுகள் இரசாயன கழிவுகளின் சாக்கடையாக மாற்றப்பட்டுள்ளன. சுமார் 90 சதுர மைல் பரப்புள்ள சதுப்புநிலம் முழுவதும் சுரங்கக் கழிவுகளால் நிரம்பியுள்ளது.

ரியோ டிண்டோ ஆர்ப்பாட்டம்
2013-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரியோ டிண்டோ பங்குதாரர் கூட்டம் நடக்கும் இடத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம் நடத்தும் நாடு கடத்தப்பட்ட பபூவாவைச் சேர்ந்த பென்னி வென்டா.

“நீங்கள் இந்த நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டால் தாக்கப்படுவீர்கள். பிரிவினைவாதி என்று முத்திரை குத்தப்படுவீர்கள். இந்த சுரங்கங்கள் எங்கள் நிலத்தையும், காடுகளையும், மலைகளையும், எங்கள் வாழ்வியலையும் அழித்து வருகின்றது. இது எங்கள் மக்கள் மீதான் இன அழிப்பு நடவடிக்கை, அப்படிதான் இவைகளை  பார்க்கிறேன்” , என்கிறார் இந்தோனேசியால் ரியோ டின்டொவுக்கு எதிராகவும், மேற்கு பபூவா விடுதலைக்கு போராடி வரும் பென்னி வென்டா.

இதே போன்று மங்கோலியாவின் ஒயூ டோல்கய், அலாஸ்காவின் பீபிள் சுரங்கம், மற்றும் அமெரிக்காவின் அரிசோனா, மிச்சிகன் ஆகிய மாகாணங்களில் செயல்படும் இந்நிறுவனம் மக்களின் எதிர்ப்புக்கு உள்ளாகியுள்ளது.

வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் இந்தியாவின் பஸ்தார் பகுதியிலும் ஏற்கனவே இதுபோன்ற சூழ்நிலையே நிலவி வருகிறது. இங்கு இரும்பு சுரங்கம் அமைப்பத்ற்கு டாடா மற்றும் எஸ்ஸார் நிறுவனங்களுக்கு 2005-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தீஸ்கர் பாஜக  அரசு அனுமதியளித்தது.  மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள். அடுத்த இரண்டு மாதங்களில் சுரங்க நிறுவனங்களின் பணபலம் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசின் ஆயுத பயிற்சியுடன் சல்வா ஜூடும் என்கிற கூலிப்படை ஏற்படுத்தப்பட்டது. ஜூன் 2005-ல் மகேந்திரகர்மா சல்வா ஜூடும் தொடங்கப்பட்டதற்கான அறிவிப்பை வெளியிட்டான். இது மக்களை காடுகளில் இருந்து விரட்டி சாலையோர கேம்ப்களில் போலீஸ் கண்காணிப்பில் இருத்துவதை நோக்கமாக கொண்டிருந்தது. குடிசைகளை கொளுத்துவது, எதிர்ப்பவர்களை கொலை செய்வது, கொள்ளையைடிப்பது, பழங்குடிகளின்  வயல்களை நாசப்படுத்துவது, பெண்களை பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவது என பயங்கரத்தை அரச ஆதரவுடன் கட்டவிழ்த்துவிட்டது. இது 1,50,000 பழங்குடிமக்களை அவர்களின் வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டியுள்ளது.

யார் மாவோயிஸ்டுகள் என்பதற்கு சத்தீஸ்கர் முதல்வர் ரமண்சிங் புது விளக்கம் அளித்தார். பழங்குடிகள் காடுகளை விட்டு வெளியேறி தாங்கள் அமைத்திருக்கும் முள்வேலி முகாமுக்குள் வந்துவிட வேண்டும், அப்படி வராதவர்கள் அனைவரும் மாவோயிஸ்டுகள் என சத்தீஸ்கர் அரசு அறிவித்தது.

பஸ்தார் கிராமம்
“பஸ்தார் எங்களுக்குச் சொந்தம், முதலாளிகளுக்கு அல்ல” முதலாளிகளின் லாப வெறிக்கு எதிராக போராடும் கூடூர் கிராம மக்கள் (கோப்புப் படம்).

கனிம வளத்தை கொள்ளையிடும் தனியார் முதலாளிகளுக்காக மக்களை கொன்று குவிக்க அல்லது அகதியாக அடித்து விரட்ட பல இலட்சம் துணை ராணுவப்படைகள் அந்தப் பகுதியில் குவிக்கப்பட்டன. போர்க்குணமிக்க பாரம்பரியம் கொண்ட பழங்குடி மக்களோ, அரசுக்கு அடிபணியாமல் மாவோயிஸ்டுகளின் தலைமையில், தங்கள் வாழ்வாதாரமான காடுகளையும், தங்கள் கடவுளான மலைகளையும், ஆறுகளையும் காப்பாற்றுவதற்கான போரில் ஈடுபட்டுள்ளார்கள்.

இந்த பின்னணியில் தான், அந்த பகுதியில் வைரக் குவியல்கள் இருப்பதை கொலைகார ரியோ- டின்டோ நிறுவனம்  கண்டுபிடித்திருப்பது முக்கியத்துவம் பெறுகிறது.  சுரங்கம் அமைப்பதற்கு முன்தேவையான ஆய்வுகளை நடத்த விண்ணப்பித்திருந்த ரியோ டின்டோ மற்றும் பி.எச்.பி. பில்லிடன் ஆகிய நிறுவனங்களுக்கு சத்தீஸ்கர் அரசு தற்காலிகமாக அனுமதி மறுத்துள்ளது. பஸ்தார் பகுதியில் தங்களால் போதுமான பாதுகாப்பு அளிக்க முடியாது என தெரிவித்து, வேறு பகுதியை ஒதுக்கித்தர முன்வந்துள்ளது. மாவோயிஸ்டுகளூக்கு எதிரான ஆப்பரேசனை எவ்வளவு காலத்துக்குள் முடித்துத் தருவீர்கள் என்று சத்தீஸ்கர் அரசிடன் ஆலோசனை நடத்திய பிறகு அதுவரை வேறு இடத்திற்கு தங்கள் ஜாகையை மாற்றிக் கொள்ள சம்மதித்திருக்கின்றன இந்த நிறுவனங்கள.

இதன்படி சத்தீஸ்கர் மாநிலத்தில் வடக்கு பகுதியில் அமைந்திருக்கும் கோர்பா குன்றில் சுரங்கம் அமைக்க அனுமதியளித்துள்ளது அரசு. “நாங்கள் பஸ்தார் பகுதியில் தான்  பூர்வாங்க ஆய்வுக்கான அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தோம். ஆனால் அரசு வேறு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள கேட்டுக் கொண்டுள்ளது. கோர்பா பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கான் விண்ணப்பத்தை அங்கீகரித்து மத்திய அமைச்சகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது” என்கிறார் ரியோ டின்டோ வின் இந்திய நிர்வாக் இயக்குநர் நிக் சேனாபதி.

வைர வளம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது முதலாளிகளின் லாப வெறியை மேலும் மூர்க்கமாக்கி இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. எப்படியாவது எதிர்ப்புகளை நசுக்கி தங்கள் லாபத்தை பெருக்கி கொள்ள துடிக்கின்றது ஆளும் வர்க்கம். துணை ராணுவம், விமானப்படை என அனைத்தையும் இறக்கிவிட்டு ஒரு மனிதப் பேரழிவை நிகழ்த்தியாவது தான் விரும்பியதை சாதிக்க ஏற்கனவே ஆளும் வர்க்கம் துடிக்கின்றது. இந்திய கார்ப்பரேட் முதலாளிகளின் நலன்களுக்காக இலங்கையில் ஏற்கனவே ஒரு  இனப்படுகொலை நிகழ்த்திய  இந்திய ஆளும் வர்க்கமும்,. பழங்குடிகளை கொல்வதில் முன்அனுபவம் உள்ள ரியோ-டின்டோ நிறுவனமும் கைகோர்த்துள்ளன. டாடா, ஜின்டால் ஒப்பந்ததிற்கு பின்னர் சல்வா ஜூடும் ஆரம்பிக்கப்பட்டது போல ரியோ டின்டோ ஒப்பந்தத்திற்கு பின் அடுத்த கூலிப்படை ஆரம்பிக்கப்படக் கூடும். அப்படி ஆரம்பிப்பதற்கு உச்சநீதிமன்ற உத்தரவு தடையாக இருந்தால் ராணுவம், சி.ஆர்.பி.எஃப் போன்ற சட்டபூர்வமான கூலிப்படைக்குக்கு ஆள் எடுப்பு நடைபெறும். இரண்டுக்கும் பெரிதாக எந்த வேறுபாடும் இல்லை.

நடப்பது மறுகாலனியாக்கத்திற்கு எதிரான சுதந்திர போராட்டம்.  இந்த போராட்டத்தில் பஸ்தார் பழங்குடிமக்களை ஆதரிப்பது நமது கடமையாகும்.

–    ரவி

  1. கட்டுரையை படித்ததில் மிக பெரிய ஆபத்து இருப்பது தெரிகிறது. ஆனால் கட்டுரையை மிகவும் சாதரணமாக முடித்திருக்கிறீர்கள்.

  2. இந்தியவில் மிண்டும் ஓர் விடுதலை போர் நடத்தவேண்டிய அவசியத்தை இந்த கட்டுரை உணர்த்துகின்றது.

    பஸ்தார் பழங்குடிமக்கள் நடத்தும் உரிமைப் போர் வெற்றிபெற வாழ்த்துக்கள்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க