முனகுவது கூட இனி தேசத்துரோகம்!

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

அருந்ததிராய், சௌகத் உசேன் மீது வழக்குப்பதிவு!
இனி முனகுவது கூட தேசத்துரோகமாக கருதப்படலாம்!

தைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதைப் போல யார் மீதெல்லாம் வழக்கு பதிந்தால் மாற்றுக் கருத்துக்களை ஒழிக்க முடியும் என்று வெறி கொண்டு அலைகிறது ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிச கும்பல்.

தேர்தல் நெருங்க நெருங்க இந்து ராஷ்டிர கனவின் மீது யாரெல்லாம் கல்லெறிவார்கள் என்று எதிர்பார்த்து, எதிர்பார்த்து அவர்களை எல்லாம் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு விதமாக அடக்கியும் ஒடுக்கியும் வருகிறது மோடி அரசு. அதற்கு கடந்த ஒன்பதரை ஆண்டு கால பாசிச மோடி அரசே சாட்சி.

2010-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், சுதந்திரம்; அது மட்டுமே ஒரே வழி (AZADI ; the only way) என்ற தலைப்பிலான கருத்தரங்கம் டெல்லியில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசியதற்காக எழுத்தாளர் அருந்ததிராய் மற்றும் காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகத்தின் மேனாள் பேராசிரியர் சேக் சவுகத் உசேன் ஆகியோர் மீது ஏறத்தாழ 13 ஆண்டுகள் கழித்து இப்போது வழக்கு பதிவு செய்ய டெல்லியின் துணைநிலை ஆளுநர் அனுமதி அளித்திருக்கிறார்.

குஜராத் கலவரத்தை முன் நின்று நடத்தியவர் பிரதமராகவும் பல்வேறு கொலை வழக்குகளில் தொடர்புடையவர் உள்துறை அமைச்சராக இருக்க கூடிய இந்த ஜனநாயக நாட்டில் தான் அருந்ததி ராய் மற்றும் சவுகத் உசேன் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153 A வகுப்பு விரோதத் தூண்டுதல், 153 B தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிரான பேச்சு, 505 வகுப்பு அல்லது சமூகத்துக்கு எதிராக குற்றம் செய்யத் தூண்டும் உட்கருத்துடன் பேசுவது ஆகிய பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.


படிக்க: பீமா கோரேகான் பொய் வழக்கின் ஐந்து ஆண்டுகள் நிறைவு!


இந்திய அரசியலமைப்பின் 19(1) பிரிவானது குடிமக்களுக்கு தங்களின் உணர்வுகளை பேசவும் வெளிப்படுத்தவும் உரிமையை வழங்குகிறது. பாசிச மோடியின் ஆட்சிக்காலத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகளுக்கு எதிராகப் பேசுவதற்கான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டு எப்போது வேண்டுமானாலும் மரணமும் வழக்குகளும் வரலாம் என்ற நிலை வந்து விட்டதையே இச்சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

13 ஆண்டுகளுக்குப் பின் ஏன் இவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதே மையமான கேள்வியாகும்.

2024-இல் எப்படியாவது வென்று பாசிச கனவான இந்துராஷ்டிரம் அமைக்க வேண்டும், அதை எதிர்ப்போரை எல்லாம் இப்போதே ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதே அதற்கான பதில்.

இது போலத்தான் பீமா கோரேகான் வழக்கில் மடிக்கணினி, செல்பேசியை ஹேக் செய்து தகவல்கள் பொய்யாக சொருகப்பட்டது கண்டறியப்பட்டு அம்பலமான பிறக்கும் கூட அவ் வழக்கில் பலர் இன்னும் சிறையில் இருக்கின்றார்கள். நடுக்குவாத நோயால் பாதிக்கப்பட்டு உறிஞ்சி குழல் கேட்டு செத்துப் போனார் பாதிரியார் ஸ்டேன் சாமி.

சுதா பரத்வாஜ், ஆனந்த் தெல்தும்டே, வரவர ராவ் என சிலர் நீண்ட நெடிய ஒரு சட்டப் போராட்டத்திற்கு பிறகு பிணையில் வந்திருந்தாலும் நோய்த் தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டு சாகாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட எடுத்துக்காட்டுகள் மூலம் மாற்றுக் கருத்துக்களை ஒழித்து விடலாம் என கனவு காண்கிறது மோடி – அமித்ஷா பாசிச கும்பல்.

பீமா கோரேகான் முதல் சுற்று என்றால் இப்போது இரண்டாவது சுற்று தொடங்கியிருக்கிறது. சுற்றுகளின் எண்ணிக்கை அதிகம் ஆகலாம். கைதுகளின் எண்ணிக்கை ஒருபோதும் குறையப் போவதில்லை..

முன் தீர்ப்புகளின் அடிப்படையில் நீதிமன்றங்களும் அரசும் செயல்படுவது வழக்கம். பல் வந்த் சிங் எதிர் பஞ்சாப் மாநில அரசு என்ற வழக்கில் காலிஸ்தான் ஜிந்தாபாத் என்று முழக்கமிட்ட ஒருவர் மீது தேசத்துரோக சட்டம் பதியப்பட்டது – இந்த வழக்கின் சாரம்சம். வன்முறை நடவடிக்கைகள் ஏதுமில்லாத முழக்கமிடுதல் என்பது ராஜ துரோக நடவடிக்கை அல்ல என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறது உச்ச நீதிமன்றம்.


படிக்க: பீமா கொரேகான்: ஹேக்கிங் செய்யப்பட்ட ஸ்டான் சுவாமியின் கணினி!


மக்களுக்கு உரிமைகளை கொடுக்க வேண்டும் என்ற முன் தீர்ப்புகளின் அடிப்படையில் செயல்படுவதற்கு ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பிருந்த அரசு அல்ல இது.

இந்து ராஷ்டிரத்தை அமைக்க வேண்டும் என்பதற்காக அனைத்து அரசு கட்டுமானங்களையும் மலைப்பாம்பு போல இறுக்கி, அடக்கி, நொறுக்கி கொண்டிருக்கிற மோடி அமித்ஷா கும்பலின் பாசிச ஆட்சி இது. எந்த சாட்சியும் எந்த சான்றாவணங்களும் இல்லாமல் தான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது, அனைத்து வகை சாட்சிகளும் ஆவணங்களும் இருந்த போதும் மோடியும் அமித்ஷாவும் தப்பித்துக் கொண்டனர். சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டது என்று பொய்யாகச் சொல்லி பிணையில் வெளிவந்த குண்டு வெடிப்பு குற்றவாளி பிரக்யாசிங் தாகூர் நாடாளுமன்ற உறுப்பினராகி இப்பொழுது நடனமாடிக் கொண்டிருக்கிறார். இப்படிப்பட்ட இந்து ராஷ்டிரத்துக்கான முன் தீர்ப்புகளின் அடிப்படையில் தான் அருந்ததிராயின் மீதும் இப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இனி முனகுவதும் கூட தேசத்துரோகமாக கருதப்படலாம், எச்சரிக்கை!


மருது



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க