பீமா கோரேகான் போரில் மராத்திய பேஷ்வா அரச பரம்பரை வீழ்த்தப்பட்டு 2018, ஜனவரி முதல் நாளோடு 200 ஆண்டுகள் ஆகின்றது. ஷானிவார் வாடாவில் நடைபெற்ற நினைவுநாள் கூட்டத்தில் ரோகித் வெமுலாவின் தாயார் இராதிகா வெமுலா, குஜராத் சட்டமன்ற உறுப்பினர் ஜிக்னேஷ் மேவானி மற்றும் ஜெ.என்.யூ மாணவர் அமைப்பு தலைவர் உமர் காலித் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கபீர் கலா மஞ்ச், சம்பாஜி பிரிகேட், முஸ்லிம் முல்னிவாசி, இராஷ்ட்ர சேவா தல் உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்ட தலித் மற்றும் சிறுபான்மையின அமைப்புகள் அதில் பங்கேற்றன.
ஆனால் அகில பாரதிய பிராமண மகாசபா, இராஷ்ட்ரிய ஏகாதமடா இராஷ்டிரிய அபியான் உள்ளிட்ட பல்வேறு இந்துமதவெறி அமைப்புகள் இந்நிகழ்ச்சியை தேச விரோத செயல் என்றும் சாதிகளுக்கிடையே பாகுபாட்டை ஏற்படுத்துகிறது என்றும் குற்றஞ்சாட்டி தடை செய்ய முயற்சி செய்தன.
“இந்தியாவை கைப்பற்றுவதற்காக மகாராஷ்டிரா உட்பட அனைத்து மாநிலங்களின் அரசர்களுக்கு எதிராகவும் ஆங்கிலேயர்கள் போரிடத் தொடங்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மராட்டியத்தை வெல்வதற்காக அதற்கு தலைமையேற்றிருந்த பேஷ்வாக்களுக்கு எதிராக அவர்கள் சண்டையிட்டார்கள். ஆங்கிலேயர்கள் படையில் மகர், மராத்தா மற்றும் பிராமணர்கள் உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். பேஷ்வா படையிலும் மகர், மரத்தா உட்பட அனைத்து சாதியினரும் இருந்தனர். இது பிரிட்டிஷ் மற்றும் இந்திய ஆட்சியாளர்களுக்கு இடையேயான ஒரு போராகும் மாறாக மகர் மற்றும் பேஷ்வாவிற்கு இடையில் இல்லை என்று கூறப்படுகிறது. எனவே அவர்கள் எதைக் கொண்டாடுகிறார்கள்? மராத்தாவை வீழ்த்திய ஆங்கிலேயர்களின் வெற்றியையா?” என்று அகில பாரதீய பிராமண மகாசபாவின் தலைவரான ஆனந்த் தேவ் கூறினார்.
இதன் மூலம், சில அமைப்புகள் பேஷ்வாக்களை தாழ்த்தப்பட்ட மக்களை ஒடுக்கியவர்களாக அவதூறு செய்ய முயற்சிக்கின்றன. அவர்கள் வேண்டுமென்றே பேஷ்வாவின் அரண்மனையாக இருந்த ஷானிவார் வாடாவில் ஒரு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு பா.ஜ.க அரசும் அனுமதியளித்திருப்பதைக் கண்டு நாங்கள் ஏமாற்றம் அடைகிறோம். குறைந்தபட்சம் சமூகத்தில் குறிப்பிட்ட ஒரு சாதியினரை பற்றி பேசி சமூகத்தில் மேலும் பதட்டம் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய புனேவின் காவல்துறை ஆணையாளரை கேட்டிருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.
“சாதி, மதத்தால் மக்களைப் பிரித்து நாட்டின் வளங்களை சில முதலாளிகளின் கைகளுக்கு பா.ஜ.க மற்றும் சங்க பரிவாரங்கள் தாரை வார்க்கின்றன” என்று நினைவு நாள் நிகழ்ச்சியில் கூறிய ஜிக்னேஷ் மேவானி அவர்களை “புதிய பேஷ்வாக்கள்” என்று எல்கார் பரிஷத்தில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்.
ஜனநாயகப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட பா.ஜ.க அரசை “புதிய பேஷ்வாக்கள்” என்று அழைப்பது அரசியலைப்பு சட்டத்திற்கு புறம்பானது என்று புனே நகர் இந்து மகா சபா கூறியிருக்கிறது. எனவே இது ஒரு தேச விரோத செயல் என்றும் குற்றம் சாட்டியிருக்கிறது.
இந்த ஒப்புதல் வாக்குமூலம் ஒருவகையில் ஒடுக்கப்படும் மக்கள் அதற்ககெதிராக ஒன்று கூடுவதை கண்டு ஏற்படும் அச்சம் தான்.
இந்துத்துவ கும்பல்கள் ஏன் அச்சம் கொள்கின்றன?
மராத்திய அரசர் சிவாஜியின் பழம்பெரும் வெற்றிகளில் மராத்திய மண்ணின் மைந்தர்களான மகர் சமூகத்தினர் இன்றியமையாத அங்கமாக இருந்து வந்தனர். ஆனால் சிவாஜிக்கு பின் ஆட்சியைக் கைப்பற்றிய பார்ப்பன பேஷ்வாக்கள் மனு தர்மத்தை நிலைநாட்டினர்.
மனுவின் படி சூத்திரனுக்கு ஆயுதம் தரிக்கும் உரிமை கிடையாது; கல்வி கற்கும் உரிமை கிடையாது; வணிகம் செய்யவும் உரிமை கிடையாது. இது பார்ப்பனர்கள் உள்ளிட்ட ஆதிக்க வருணத்தார் சூத்திர பஞ்சம மக்களை அடக்கியொடுக்க இன்றியமையாத ஒன்று.
இடுப்பில் கட்டிய துடைப்பத்துடனும் கழுத்தில் தொங்கவிடப்பட்ட பானையுடனும் தான் பார்ப்பனர்கள் வாழும் நகரத்திற்குள் மகர் சமூகத்தினர் நுழைய முடியும். அவர்களது கால்களால் தீண்டப்பட்ட தரையைத் துடைப்பத்தைக் கொண்டு துடைத்துக் கொண்டும் எச்சிலை பானையில் துப்பிக் கொண்டும் நகரத்தினுள் அலைந்து திரிய வேண்டும் என்பது தான் பார்ப்பனர்கள் விதித்த மனுதர்மம். மகர் சமூகத்தினர் தங்களது சாதியையும் யாரிடமும் மறைக்கக் கூடாது. மற்றும் அவர்களுக்கு படிப்பறிவும் ஆயுதங்களைத் தூக்கும் உரிமையும் மறுக்கப்பட்டிருந்தது. இந்தக் கட்டுப்பாடுகளை மீறினால் கடுமையான தண்டனைகள் என விலங்குகளை விட மோசமாக மகர் சமூகத்தினர் நடத்தப்பட்டனர்.
வரலாற்றின் இத்தருணத்தில் தான் தலைநகர் புனேவைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் பேஷ்வா பாஜிராவ்-II யை நெருங்கிக் கொண்டிருந்தனர். தமது அரசு – இராணுவ எந்திரத்திற்கு பெரும் எண்ணிக்கையிலான உழைக்கும் மக்கள் தேவைப்பட்டனர் என்பதால் அவர்கள் சாதி பார்க்காமல் தலித் மக்களை இராணுவத்தில் சேர்த்துக் கொண்டனர்.
வரலாறு எப்பொழுதுமே பக்க சார்பு கொண்டது. இந்தியாவில் தேசியம் என்றாலே என்னவென்று தெரிந்திராத நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களா அல்லது பார்ப்பனியமா, சுயமரியாதையா அல்லது அடிமைத்தனமா என்பதில் முன்னதை தெரிவு செய்தனர் மகர் சமூகத்தினர். யுத்தமும் தொடங்கியது.
நூற்றாண்டுகள் கழிந்தும் ஆர்.எஸ்.எஸ்-ன் இதயத்தை குத்தும் முள்ளாக, வரலாற்றின் அழியாத சின்னமாய் பீமா-கோரேகான் நினைவுத் தூணாக பின்னர் இதுவே நிலைத்துவிட்டது.
பீமா-கோரேகான் யுத்தம் :
1818, ஜனவரி முதல் நாள் ஆங்கிலேயப் படைத்தளபதி எப்.எப். ஸ்டாண்டன் தலைமையில் கிழக்கிந்திய நிறுவனத்தின் பாம்பே காலாட்படை அணியின் 500 வீரர்கள் பீமா ஆற்றைக் கடந்து 25,000 வீரர்களைக் கொண்ட மராத்தியப் பெரும்படையை பீமா-கோரேகான் கிராமத்தில் எதிர்கொண்டனர்.
பார்ப்பனிய ஒடுக்குமுறைக்கு எதிராகத் தலித் மக்களின் விடுதலைக்கான ஓர் இன்றியமையாத திருப்பமாக இந்தப் போரை தலித் ஆர்வலர்களில் பலர் கருதுகின்றனர். இந்தப் போரில் 12 ஆங்கிலேய அதிகாரிகளும் மகர் வீரர்கள் உள்ளிட்டு 834 வீரர்களும் பங்கேற்றனர். இதில் பங்கேற்ற வீர்களின் எண்ணிக்கையில் சில கருத்து வேற்றுமைகள் உண்டு. புள்ளிவிவரங்கள் எதுவாக இருப்பினும் இந்தப் போரானது அதுவரை வழக்கத்தில் இல்லாத புதுமையில் திகழ்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை.
இதில் பார்ப்பன பேஷ்வாக்களுக்கு எதிரான தங்களது வீரஞ்செறிந்த போரினால் ஆங்கிலேயர்களுக்கு மகர் வீரர்கள் வெற்றியைத் தேடித் தந்தனர். இதற்கு நன்றிக் கடனாகத் தான் போரில் இறந்த மகர் சமூக வீரர்களுக்கு நினைவுச் சின்னமாக வெற்றித்தூணை எழுப்பி அவர்களை வெள்ளையர்கள் பெருமைப்படுத்தினார்கள்.
இந்த நினைவு நாளை தேச விரோத செயல் என்று கரித்துக்கொட்டும் அதே நேரத்தில் அவர்கள் முன் மொழியும் தேசம் அகண்ட பாரதம்; தேசியம் – இந்து; கலாச்சாரம் – மனுதர்மம்; மொழி – சமஸ்கிருதம். இதை ஆதரிப்பவர்கள் தேச பக்தர்கள். எதிர்பவர்கள் தேச விரோதிகள். இந்த தேசியத்திற்குள் தலைகீழாக எப்படி நின்றாலும் தலித்துக்கள் சுயமரியாதையுடன் வாழவே முடியாது.
உண்மையில் தலித்துக்களையும் உள்ளடக்கி பார்ப்பன வர்ணாஸ்ரம அடிப்படையிலான ஒரு தேசியத்தை கட்டமைப்பதற்கே ஆர்.எஸ்.எஸ் கும்பல் கனவு காண்கிறது. அனால் பீமா கோரேகான் யுத்தமும் அதன் நினைவுச்சின்னமும் ஆர்.எஸ்.எஸ் கும்பல்களின் தொண்டையில் சிக்கிக்கொண்ட முள்ளாக 200 ஆண்டுகள் கழித்தும் இன்னும் உறுத்திக் கொண்டே இருக்கிறது.
கடைசிச் செய்தி: இந்த நினைவுக் கூட்டத்தை அச்சுறுத்தி வந்த இந்துமதவெறி அமைப்புக்கள் இறுதியில் கல்லெறி மூலம் கலவரத்தை துவங்கியது. பல வாகனங்கள் எரிக்கப்பட்டும், உடைக்கப்பட்டும் இருக்கின்றன. ஒரு இளைஞர் கொல்லப்பட்டிருக்கிறார். பா.ஜ.க ஆளும் மாநிலம் என்பதாலும், மோடி அரசின் ஆசியாலும் ஆட்டம் போடும் இந்துமதவெறி அமைப்புக்களை கண்டும் காணாமலும் போலிசார் இருக்கின்றனர். இவைகளை மீறி இந்த பீமா கோரேகான் வெற்றிக் கூட்டம் நடந்தேறியது. இதுதான் இந்துமதவெறியர்களை அச்சுறுத்தும் செய்தி.
மேலும் :
- Right-Wing Outfits Oppose Pune Event Marking Bicentennial of Bhima Koregaon Battle
- Rohith Vemula’s mother to launch event to take on ‘new Peshwas’
- 200th anniversary of Battle of Koregaon: Rohith Vemula’s mother, Jignesh Mevani to address Pune rally, fight against ‘new Peshwas’
- Struggle on streets will defeat ‘new Peshwas’ BJP, says Jignesh Mevani in Pune
சரியாகத்தான் சொல்லியுலள்ளார் ஜிக்னேஸ் மேவானி-“புதிய பேஸ்வாக்கள்” என்று.இன்றைய ஆர்.எஸ்.எஸ் இன் கொடி அன்றைய பேஸ்வாக்களின் காவிக்கொடியே.
ADIPOLI Vinavu!!
//வரலாறு எப்பொழுதுமே பக்க சார்பு கொண்டது. இந்தியாவில் தேசியம் என்றாலே என்னவென்று தெரிந்திராத நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்களா அல்லது பார்ப்பனியமா, சுயமரியாதையா அல்லது அடிமைத்தனமா என்பதில் முன்னதை தெரிவு செய்தனர் மகர் சமூகத்தினர்.